நஞ்சு காவும் சிவில்சமூகம்

தன்னைத்தானே பகைத்துக் கொள்ளும் பகிஷ்கரிப்பு வாதம்

நடேசன்

யாழ்ப்பாண சிவில் சமூகம் என கூறிக்கொண்டு வெளியிட்ட அறிக்கையை படித்தபோது அக்கால விடுதலைப் புலிகளுக்கு அறிக்கைகள் எழுதியவர்களின் எழுத்துப் போல் இருந்தது. இந்த அறிக்கையிலிருந்து ஒரு வார்த்தையில் இவர்கள் யார் என என்னால் கூற முடியும்.
பாம்புக்கு தலையில் மட்டும் நஞ்சு உள்ளது. தமிழ் அரசியல் சமூகத்தின் மனிதர்களுக்கு நினைப்பிலும் எழுத்தில் நஞ்சு வடிகிறது. இவர்களது இந்த நஞ்சு நிச்சயமாக போரில் தப்பிப் பிழைத்து இருக்கும் சாதாரண தமிழ் மக்களை கொல்லப் போகிறது என்ற பயத்தில் இந்த பத்தியை எழுதுகிறேன்.
அந்த அறிக்கையில் இரண்டு பந்திகளிலிருந்து, இவர்களும் விடுதலைப்புலிகளைப் போல் ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு ஜனநாயக சமூகத்தில் உதிரிக்கட்சி என ஒன்று இல்லை. ஒவ்வொரு மனிதனின் கருத்தும் கணக்கெடுக்கப்பட வேண்டியது. மேலும் ஒரு இனம் தனது உரிமையை கேட்கும் போது மத்திய வகுப்பினர் விவசாயிகள் முதலாளிகள் தொழிலாளிகள் என்ற வர்க்கங்கள் மட்டுமல்ல பிரதேச ரீதியாக மக்கள் தேவைகள் ஆராய்ந்து கணக்கெடுக்கப்பட வேண்டும். யாழ்ப்பாண மக்களது தேவைகள் மட்டக்களப்பு வன்னி மாவட்ட மக்களது தேவைகளில் இருந்து மாறுபட்டது. தமிழ்ப் பேசும் மக்கள் என்னும் போது மலையக இஸ்லாமிய ஏன் தற்பொழுது கொழும்பில் வாழும் மக்களையும் அனுசரித்து அவர்கள் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டே தமிழ் உரிமைகள் பற்றி பேசப்படவேண்டும். 6,40,000 யாழ் குடாநாட்டு மக்கள் மட்டுமோ அல்லது அவர்களது தலைவர்கள் மட்டுமோ ஏனைய தமிழர்களின் தலைவிதியை பேசிய காலம் இறந்தகாலம். நாங்கள் பார்க்கும் நிகழ்காலம் தமிழ்மக்கள் அதாவது 4 சதவீதமானோர் வாழ்வது இலங்கையின் 9.5 வீத நிலப்பரப்பைக் கொண்ட வடக்கு மாகாணம்.
தற்போதைய அரசியல் நிலையை கருத்தில் கொள்ளாமல் வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழ் தேசியம், காணி, பொலிஸ் என கடந்த கால கனவுகளில் வாழ்ந்து வரும் வெளி நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் போல கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேல் எதுவித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இந்த அறிக்கை மூலம் தமிழ்கூட்டமைப்பினரை ஆட்டிப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட முனைகிறார்கள். இந்த சிவில் சமூகத்தில் யாழ் மேலாதிக்க தன்மையின் அசலான கருத்தியல் வடிவம் தெரிகிறது. இவர்களில் பலர் முக்கிய புலி ஆதரவாளர்கள். மடுவில் விடுதலைப் புலிகளால் ஷெல் அடித்து பொது மக்கள் கொல்லப்பட்டபோது அதனைக்கண்டிக்காமல் மௌனம் காத்தார் மன்னார் ஆயர். இவரது நடத்தை நேர்மையானது அல்ல. மற்றொரு ஆயர் மக்களுக்காக கொடுக்கப்பட்ட மில்லியன் டொலர் பணத்தை விடுதலைப்புலிகளின் கைகளில் தூக்கிக் கொடுத்தவர். இவர்கள் யார் என்பது அவர்கள் சேவை செய்யும் கர்த்தருக்குத் தெரியும். இவர்களை தமிழர் கூட்டமைப்புக்கும் தெரியும். இலங்கையில்லாத மேற்கு நாடாக இருந்தால் இவர்களுக்கு பயங்கரவாதத்திற்கு துணை போனதற்காக 25 வருடங்கள் சிறைவாசம் கிடைத்திருக்கும் .
இவர்களது அறிக்கை மீண்டும் ஒரு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணத்தால்தான் இதை கடுமையாக விமர்சிக்க விரும்புகிறேன்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழர் விடுதலைக்கூட்டணியின் வைத்த போது எனக்கு 17 வயது .அதன் பின் விளைவு தெரியாமல் போய்விட்டது. ஆனால் 77 இல் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இராசலிங்கம் அவர்களுக்காக பாhரளுமன்ற தேர்தலில் பத்து பல்கலைக்கழக நண்பர்களுடன் சென்று வேலை செய்து விட்டு ‘உங்கள் தனிநாட்டில் நம்பிக்கை இல்லை’ என அக்காலத் தலைவர் உடுப்பிட்டி சிவசிதம்பரம் அவர்களிடம் சொல்லிவிட்டு அத்தேர்தலில் வாக்குப் போடாமல் மீண்டும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு திரும்பினேன்.

80 களில் இளைஞர்கள் ஆயுதம் எடுத்ததற்கு நியாயமான காரணம் உள்ளது. 83 இல் தமிழர் மேல் திணிக்கப்பட்ட வன்முறை, வெலிக்கடை படுகொலைகளின் பின்பு சிறையில் கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக ஏந்திய ஆயுதத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இந்தியா மேற்கு உலகம் ஏன் ஏராளமான சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதன் பின் 86 இல் அப்பாவி சிங்கள மக்களின் மேல் பயங்கரவாதத்தை திணித்து சகோதர கொலைகள் மூலம் தற்பாதுகாப்பு போரட்டம் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றப்பட்டது. இதில் ஒரு விந்தையான விடயம் இக்காலத்தில் கூட பிரபாகரனோ புலிகளோ தமிழத்தேசியம் என்ற பதத்தைப் பாவிக்கவில்லை
வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொறுத்தவரை மிகவும் இலகுவான கருத்தியல் “சிங்களவர் தமிழர் மேல் வன்முறையை திணித்தார்கள். நான் இவர்களுக்கு அதே மருந்தை கொடுக்கிறேன். மற்ற இயக்கங்கள் இதற்கு தேவை இல்லாமல் அரசியல் மாக்சிசம் எனப் பேசி இவர்கள் சிங்களவரையோ ஆமியையோ கொல்லவும் போவதில்லை. அத்தோடு எனக்கும் அரசியல் அது இது என்ற சொல்லி கரச்சல் படுத்துகிறாரகள்;. இவர்களைத் தட்டிப்போட்டு நான் சிங்களவரைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்பதுதான்.
இந்த சிம்பிள்டனுக்கு 92 – 95 ஆண்டுவரையும் தமிழ் ஈழம் என்று போரிட்டாலும் தமிழ்த்தேசியம் என்ற கோட்பாடு இருக்கவில்லை. வெளிநாட்டில் விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்தவர்களுக்கும், மதியுரைஞர், டாக்டர் என பல பட்டங்கள் வைத்திருந்த பாலசிங்கத்தாருக்கும் இந்த நினைப்பு இல்லை.

92-95 இற்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில “புத்திஜீவிகளும்”‘ மற்றும் கொழும்பில் பத்திரிகை நடத்திய சில இடதுசாரி சிந்தனையினரும் சேர்ந்து புலிப் பயங்கரவாதத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசி பின்பு வேலுப்பிள்ளையின் மகன் தேசியத் தலைவராக்கப்பட்டார். நடிகர் இராமச்சந்திரன், கிருஷ்ணசாமி என்பவரால் புரட்சித் தலைவராகியது போல் இதுவும் அமைந்துவிட்டது.

இந்தத் தமிழ் தேசியம் யாழ்ப்பாண மையவாதத்தால் உருவாக்கப்பட்ட கருத்தியலாகியதால் இது மாற்றுக்கருத்தோ ஜனநாயகமோ அற்ற இயக்கத்துக்கு பொருந்தியது. யாழ்ப்பாண சாதி அமைப்பில் அதாவது குடிமை – அடிமை அமைப்பில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மேல் காலம் காலமாக பாவிக்கப்பட்ட குருரமான வன்முறை கூராக்கிய ஈட்டி வடிவம் பெற்று இந்த இயக்கத்திற்குள் சென்றது. எதிரானவர்கள் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் எனவும் சிறு நிழல் போன்ற எதிர்ப்பும் கருவிலேயே அழிக்கப்படவேண்டும் என்ற கருத்தியலாக மாறியது. சிங்களமக்களுடன் ஒப்பீட்டு ரீதியில் தாழ்வு மனப்பான்மையுடன் மற்றவர்கள் துன்பப்பட நாம் நாட்டைவிட்டு விட்டு ஓடினோம் என்ற குற்ற மனப்பான்மை கொண்ட புலம் பெயர்ந்தவர்களால் அளிக்கப்பட்ட பணத்துடன் இந்த தமிழ்த் தேசியம் வளர்க்கப்பட்டது.
“தேசியத் தலைவர்”என்ற முள்முடியும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்படாமல் இருந்தால் சிலவேளையில் சமாதான ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஒருவர் மூலமாவது சமாதானத்திற்கான வாய்ப்பு உருவாகி இருக்கலாம். பாரிய மனித அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.

நரமாமிசம் உண்டு உடலை வளர்த்தாலும் மூளை வளர்ச்சி பெறாத இராட்சதன் தன்னைத் தானே அழிப்பது போல் சுவரில் மோதி இந்த இயக்கம் அழிந்தது. ஜனநாயகம் அற்ற இந்த அமைப்பு தலை போன பின்பு எச்ச சொச்சமில்லாமல் உலகம் எங்கும் சிதறியது. இதனது கூறுகள் தங்களைத் தாங்களே போட்டி போட்டுக்கொண்டு அழிக்கும்.. அது பற்றிய சந்தேகம் எவருக்கும் இருக்க வேண்டியது இல்லை

பிரச்சினையான விடயம் என்னவெனில் வீட்டுத் தோட்டத்தில் நஞ்சு போட்டு நத்தை இறந்த பின்பு கழற்றி விடப்பட்ட கூடு போல் இந்தத் தமிழ்த்தேசியம் இப்பொழுது கிடக்கிறது. இந்த நத்தை ஓட்டுக்குள் மாக்சிசம் பேசிய சுரேஸ் பிரேமசந்திரன், முற்றாக இராணுவ வாதம் பேசிய ரெலேவில் இருந்த செல்வம் அடைக்கலநாதன் என எல்லோருமே குடியேறி விட்டார்கள். இதைவிட அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமாரன் தனது காலையும் விநாயகம் நெடியவன் கோஷ்டிகள் தங்கள் தலைகளையும் இந்த நத்தைக்கூட்டுக்குள் நுழைக்கப் பார்க்கிறார்கள். இது மட்டுமா சில இந்திய சக்திகளும் மேற்கு நாட்டினரும் இந்த நத்தையை உசுப்பி விடப்பார்க்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தா கூட பிரபாகரன் கெட்ட கொலஸ்ரோல் தான் நல்ல கொலஸ்ரோல் எனக் கூறுவது இந்த நத்தை ஓட்டை முற்றாக கை விட மனமில்லாமல்தான்.
என்னைப் பொறுத்தவரையில் இந்தத் தமிழ்த்தேசிய கருத்தியலை சிம்மாசனம் ஏற்றியவர்கள் ஜுலை 2009 இற்குப்பின் அந்தரத்தில் தொங்கவிட்டு மீண்டும் இரண்டரை வருடத்தின்பின் மீண்டுவந்து தங்கள் யாழ்ப்பாண ஆதிக்கத்தை முருங்கை மரத்தில் ஏற்ற முனைகிறார்கள்.

சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவுகாலமும் எங்கே இருந்தார்கள்?

முள்ளிவாய்க்காலுக்கு அப்பாவிப் பொதுமக்களை கால்வாய் கட்டி கொண்டு சென்ற போது இவர்கள் எங்கு போனார்கள்?
பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி, தப்பியோடியவர்களை சுட்டும் ,வாள் கொண்டு துரத்திய போதும் நமது மத குருமார்கள் மவுனித்தது ஏன்?

வலயர்மடத்து தேவாலயத்தில் இருந்து பெண்குழந்தைகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போது நீங்கள் கர்த்தரின் பேரால் என்ன அறிக்கைவிட்டீர்கள்?

எந்த ஒரு சமுதாயத்திலும் சிவில் சமூகம் மதிப்புக்குரியது. இந்த மூன்று இலட்சம் மக்கள் அகதியாக அல்லல்பட்ட இரண்டரை வருடத்தில் உங்களது செயல்பாடுகள் என்ன என்பதை மக்கள் முன்னால் வைத்து விட்டு அறிக்கையை விட்டிருக்கலாம்.

விடுதலைப்புலிகள் இருக்கும் வரை பொட்டம்மானுக்கு பயந்து பயந்து சீவித்து இப்பொழுதுதான் கூட்டமைப்பினர் சுதந்திரகாற்றை சுவாசிக்கிறார்கள்.அவர்களை சுயமாக நடவடிக்கை எடுக்க விடுங்கள்.

இப்படிச்சொல்வதனால் நான் கூட்டமைப்பின் ஆதரவாளன் என்று கருதவேண்டாம்.
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களை நாடு கடந்த ஈழம் பேசுவோரும் மற்றும் நெடியவன் தலைமையிலான குழுவினரும் கைப்பற்றி தங்கள் அரசியலை நடத்த விரும்புகிறார்கள். அந்த கோஷ்டியில் சிவில் சமூகம் சேர்ந்து விட்டது.. சிங்கள சமூகத்திலும் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் எதிர்ப்போராட்டம் நடத்தினால் இதனால் ஏற்படும் விளைவுகள் மீண்டும் ஒரு வன்முறைப்போராட்டத்தையே உருவாக்கும். மீண்டும் ஒரு புலி இயக்கத்தை உருவாக்கி குளிர்காய முற்பட வேண்டாம். அதனால் அதற்கு பலியாவது நீங்களாகக் கூட இருக்கலாம். 77இல் தலைவர் அமிர்தலிங்கம் தனது செயல்களால் 89 களில் தன்னுயிருக்கு ஆபத்து வரும் என்பதை சிந்தித்திருக்கமாட்டார்.
நீங்கள் சொல்லும் இந்த இந்தப் பகிஷ்கரிப்பு விடயம் புதிகாக உங்கள் மூளையில் மலரும் புதிய சாணக்கியம் என பெருமிதம் கொள்ளவேண்டாம். நான் பிறக்க முன்பிருந்தே இதைத்தான் யாழ்ப்பாணத் தமிழன் செய்து கொண்டிருக்கிறான்.

கொஞ்சம் சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டி பார்ப்போம். தமிழர்களுக்கு பகிஷ்கரிப்பு புதியதில்லை. 1931இல் டொனமூர் கமிசனால் உருவான சபையை பகிஷ்கரித்த சேர். பொன் இரமநாதன் குழுவினர் வெள்ளாளர் அல்லாதோருக்கு வாக்குரிமைகிடைக்கக் கூடாது என்றனர். இளைஞர் காங்கிரஸ், இலங்கைக்கு முழு விடுதலை கிடைக்கவில்லை என பகிஷ்கரித்ததால் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை , பருத்தித்துறை ,ஊர்காவற்றுறை போன்ற இடங்களுக்கு தேர்தல் நடக்கவில்லை. பின்னர் யாழப்பாணமக்கள் தாங்கள் தவறிழைத்து விட்டோம் எனச் சொல்லி தேசாதிபதிக்கும் இங்கிலாந்துக்கும் மகஜர் எழுதினார்கள். ஆனாலும் 1934 ஆண்டில் மீண்டும் நடந்த தேர்தலின்போதுதான் மேற்கண்ட தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இப்படியான முட்டாள்தனமான பகிஷ்கரிப்பு இன்றுவரையும் தொடர்ந்து வருகிறது.

இலங்கையில் தமிழ் அரசியல் என்பது காலம் காலமாக நல்ல கணவனுக்காக காத்திருக்கும் பெண் கடைசியில் கன்னி கழியாமல் கல்லறைக்கு போவது போலாகிவட்டது. இதுதான் கடந்த எண்பது வருட சரித்திரம்.

குப்பை மேட்டு சேவல் அந்தக் குப்பையைச் சுற்றி கொக்கரிப்பது போல்தான் இந்த பகிஷ்கரிப்பு கோஷமும். யாழ்ப்பாணத்தை விட்டு எப்பொழுது இந்த இலங்கைத் தமிழ் அரசியல் வெளிவருகிறதோ அன்றுதான் தமிழர்களுக்கு நல்லகாலம் தொடங்கும்.

—0—

“நஞ்சு காவும் சிவில்சமூகம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. That is a good article. What you said about tamil Christian Fathers is true.This article is a christmas present to fathers.

  2. Think different..Yes! Many opinions shd come out! More discussions/debates/dialogue within Tamils first!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: