கிளிநொச்சியில் எல்லா நாளும் ஒரு நாளே

நடேசன்

எண்பதுகளில் மதவாச்சியில் நான் வேலை செய்த காலத்தில் வார இறுதியில் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் செல்லும் போது கிளிநொச்சி நகரத்தை தாண்டிச் செல்வேன். அக்காலத்தில் கிளிநொச்சியில் எனக்கு வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்வேன். மதவாச்சியில் மிருக வைத்திய சாலை பால்சேகரிக்கும் நிலையம் என்பன என் காலத்தில் என் முயற்சியாலும் உருவாக்கப்பட்டவை. அவை பலன் தரும் முன்பு நான் அந்த ஊரை விட்டு விலகிவிட்டேன். கிளிசொச்சியில் கறவை மாடுகள் ஏராளம். அதிக பால் சேகரிக்கப்படும் நிலையமும் வசதியான வைத்திய சாலையும் உண்டு. எனவே அரசாங்க ஊழியனாகிய நான் வேலை பயணத்தில் யாழ்ப்பாணம் பாதி தூரத்தில் இருப்பதால் ஆசைப்பட்டதற்கு நியாயம் உண்டு.

இப்படியாக நான் ஆசைப்பட்ட கிளிநொச்சி 83 இற்குப்பின் தொடங்கிய போர் நடவடிக்கையால் காசநோய் பீடித்தவன் போல் மெலிந்து வந்தது. இதன் பிறகு 95களில் விடுதலைப்புலிகள் வன்னிக்குச் சென்றதும் மிகவும் பாரதூரமான எயிட்ஸ் நோயாக மாறியது.

விடுதலைப்புலிகள் கோலோச்சிய காலம் சங்க காலத்து பூம்புகாராகவும் கோவலன் மாதவி புனல் விளையாட்டு விளையாடிய இடமாகவும் வெளிநாட்டில் இருந்து சென்ற எனது உறவினர் நண்பர்களால் வர்ணிக்கப்பட்டது. திருட்டுகள் கொலைகள் நடைபெறாத இராம இராச்சியம் என்றார்கள். அவர்கள் பார்த்தது தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நீதிமன்றம், செஞ்சோலை என இராம இரச்சியத்தின் கருணை வெளிப்பாடுகளைத்தான். ஆனால் எனது துரதிஷ்டம் நான் கேள்விப்பட்டது காந்தியின் சிறைச்சாலை, பின்பு மாதவன் மாஸ்டரின் நாய்க்கூடுகள், துணுக்காய் இறைச்சிக்கடை என்பனவே

ஓமந்தையில் என் படம் இருந்ததால் என்னால் அக்கால கிளிநொச்சி தரிசிக்க முடியாத இடமாகிவிட்டது..

இப்படியான இடத்தில் வானவில் என்ற பெயரில் நானும் எனது நண்பர்களுமாக சுவிகாரம் செய்து மாதம் 2000 இலங்கை ரூபாய்கள் உதவி செய்யும் ஐந்து குடும்பங்களை பார்ப்பதற்காக அண்மையில் கிளிநொச்சிக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்குவதற்கு எண்ணினேன். அங்கே போயச் சேர்ந்த பின்புதான் எனது தொலைபேசியில் மெல்பனில் நடக்க இருக்கும் மாவீரர் தின நிகழ்ச்சிக்கான அழைப்பு குறும் செய்தியாக வந்தது. அப்பொழுதுதான் நினைத்தேன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாளிலும் மாவீரர்தின நாளிலும் கிளிநொச்சியில் இருப்பதற்கு கொடுப்பினை இருந்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.

 இப்பொழுது கிளிநோச்சியில் எல்லா நாட்களும ஒரு நாளாகவே தோற்றமளிக்கிறது.

நிச்சயமாக சங்ககாலத்து பூம்புகாரையும் இராம இராச்சியத்தையும் பார்க்காத எனக்கு, அதை கிளிநொச்சியில் அழிந்த மாவீரர் துயிலும் இல்லங்களையும் தளபதிகளின் இடிந்த வீடுகளையும் பார்க்க நேர்ந்தது. தமிழ் சினிமா முக்கியஸ்தர்களாகிய மகேந்திரன் சீமான் போன்றவர்கள் தங்கிய இடங்களை இடிந்த நிலையில் பார்க்க முடிந்தது ஆனால் தற்போதைய காட்சிகள் எல்லாம் மனதிற்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. விவசாயம் உற்பத்தி தொடங்கிவிட்டது. பாடசாலைகளுக்கு பிள்ளைகள் போய்வருகிறார்கள். இளவயது பெண் பிள்ளைகளை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு இளவட்டங்கள் வீதி வலம்வரத் தொடங்கிவிட்டார்கள். பெரிய அரசாங்க கட்டிடவேலைகள் நடக்கின்றன. கடைகளில் வியாபாரம் நடக்கிறது. போர்க்காலத்தில் பெரும்பாலான மாடுகள் உணவாகிவிட்டதால் அரசாங்கத்தால் புதிதாக வழங்கப்பட்ட மாடுகள் ஒழுங்கைகள் நிறைந்து வலம் வருகின்றன

இளமைக்கல்வி, காதல், காமம் போன்ற அடிப்படையான தேவைகளை ஒறுத்து ஒரு சமூகத்தை உருவாக்க முனைபவர்கள் சரித்திரத்தில் எப்பொழுதும் தோல்வியைத் தழுவுவார்கள். அது மட்டுமல்ல பாடசாலையில் மாணவர்களை பாதுகாக்கும் ஆசிரியர்கள், பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிய பெற்றோர், ஆத்ம ரீதியான இறைவழிபாடு என எல்லா விழுமியங்களையும் போராட்டம் என்ற ஒன்றுக்குள் நசுக்க முயன்ற இயக்கம் தோல்வியடைந்தது என்ற உண்மையை கம்போடியாவில் கடந்த வருடம் பார்த்தேன். இந்த வருடம் கிளிநொச்சியில் பார்த்தேன். பாடசாலைக்கு வந்த பிள்ளைகளை விடுதலைப்புலிகளிடம் பிடித்துக் கொடுத்த மத குருமாரும், பாடசாலை அதிபர்களும் இருந்த கிளிநொச்சியில், தங்கள் மாணவர்களுக்கு பண உதவி செய்ய அக்கறையுடன் கேட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் சந்தித்தேன். பிள்ளைகளை நிலத்துக்கு அடியில் குழி வெட்டி பாதுகாத்த பெற்றோர், இப்பொழுது தமது பிள்ளைகள் டொக்டராகவும் எஞ்ஜினியராகவும் வருவார்கள் என கனவு காணுகிறார்கள். சாதாரண பஸ் வண்டியில் பயணம் செய்த போது மக்களின் முகங்களில் களிப்பைக் கண்டேன். அதனால் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்பது அர்த்தமல்ல. குறைந்த பட்சம் வண்ண வண்ண கனவுகளை காண்பதற்கு சுதந்திரம் இருக்கிறது. குழந்தைகளுடன் நிம்மதிகாக வீட்டில் உறங்க முடிகிறது. இராணுவத்தினரையோ இலங்கை அரசாங்கத்தையோ எதிர்ப்பதற்கான சுதந்திரம் விடுதலைப்புலிகள் காலத்தில் மறுக்கப்பட்ட கொடுமை 86 ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப்புலிகள் தவிர்ந்த தமிழருக்கு இருந்ததை மறக்கமுடியுமா?

நான் நண்பர்களுடன் உதவியளிக்கும் ஐந்து குடுப்பங்களைப் பார்த்தேன்; ஒவ்வொரு வீட்டிலும் ஒருமணித்தியாலம் செலவு செய்து அவர்கள் தேவையை விசாரித்தேன். இதில் ஒரு பெண் விடுதலைப் புலியாக இருந்த கணவரை இழந்தவர். மூன்று குழந்தைகளின் தாய். அரசாங்கம் மற்றும் கொண்டர்தாபன உதவியுடன் மூன்று குடும்பங்கள் நிரந்தர வீடுகளையும் மற்ற இரண்டு குடும்பங்கள் தற்காலிக வீடுகளையும் பெற்றுள்ளார்கள். முன்அறிவித்தல் இன்றி போன போதும் மலர்ச்சியுடன் வரவேற்றார்கள். எல்லோரது வீடுகளும் சுத்தமாகவும் அத்துடன் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருந்தார்கள். பெண்களின் கல்வியின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. இலங்கை அரசாங்கத்தை குறைகூறுபவர்கள் கூட இலங்கையில் பாடசாலை கல்விமுறை மற்றும் சுகாதார வைத்திய நடவடிக்கைகளை பாராட்டுகிறார்கள்.

நான் அங்கு சந்தித்த ஓவ்வொரு பெண்ணிடமும் நான்கேட்டஒரு கேள்வி, இராணுவத்தால் ஏதாவது துன்பங்களைச்சந்திக்கிறீர்களா என்பதுதான். அவர்கள் எல்லோரும் அழுத்தம் திருத்தமாக இல்லையென்றார்கள். இலங்கையின் தமிழ் ஊடகங்களும் புலம்பெயர்ந்த ஊடகங்களும் இதைக்கேட்டு மிகவும் கவலைப்படுவார்கள்

வெளிநாட்டு அவுஸ்திரேலிய தமிழர்கள் டொக்டர்கள் பலரது அன்பளிப்பில் உருவான தமிழர் புனர்வாழ்வு கட்டிடத்தில் நிலைகொண்டிருந்த 57 ஆவது படைப்பிரிவு கொமாண்டரை சந்தித்தேன். கட்டிடத்தை பார்த்ததும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தலைவர்களான ஜோய் மகேஸ் டொக்டர் கணபதிப்பிள்ளை ஆகியோரது சேவையை நினைத்துப் பார்த்து பாராட்டிக்கொண்டேன். தெரிந்தோ தெரியாமலோ, நான் எழுவைதீவில் வைத்தியசாலையைக் கட்டி அரசாங்கத்திடம் கொடுத்தது போல் அவர்களும் ஒரு நல்ல கட்டிடத்தைக் கட்டி இராணுவத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்

பிரிகேடியர் ரேனுகா ரோவெலின் தகவல்களின் படி 133501 அதாவது 42430 குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது குடியேறி இருக்கிறார்கள். இதைவிட 2185 விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்தவர்களும் இவர்களில் அடங்குவர். இராணுவத்தினர் தாங்கள் மட்டும் 3708 வீடுகளை மக்களுக்கு இதுவரையில் கட்டிக் கொடுத்தாக கூறினார்கள். இதை விட பல வேலைகளை மக்களுக்காக இராணுவத்தினர் வலிந்து செய்கிறார்கள் .யுத்தத்தின்போது அழிக்கப்பட்ட இடம். எனவே இந்த அழிவில்தங்களுக்கும் பங்கு உண்டு என ஏற்றுக்கொண்டு பலவிடயங்களைச் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மக்கள் இராணுவத்தினரை நண்பர்களாக ஏற்றுக் கொள்வது முடியாத காரியம். எவ்வளவு சிறந்த இராணுவமாக இருந்தாலும் அவர்களது உடை, ஆயுதம் அதிகாரத்தை வெளிப்படுத்தும். இது சமதன்மையற்ற உறவை உருவாக்குகிறது. இதே வேளையில் இலங்கையில் இராணுவமும் மருத்துவர்களும்தான் குறைந்த பட்ச மனிதாபிமானத்துடன் இயங்குபவர்கள். மேலும் குறைந்தது ஐந்து வருடத்திற்கு இராணுவத்தினர் தமிழ் பகுதியில் செறிந்து இருப்பது தவிர்க்க முடியாதது. இதற்கு மேலும் இருப்பதை தீர்மானிப்பது சிதறுண்டுபோன பொறுப்பற்ற அரசியல்வாதிகளும் வெளிநாட்டு புலி சார்பு தமிழர்களும்தான்.

கோடை காலத்தில் காட்டுத் தீ உருவாகும் என்ற காரணத்தால் அவுஸ்திரேலியவில் சில நாட்களில் வெளியே தீ கொழுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. அது போல் இவர்களது பொறுப்பற்றதன்மைக்கு ஒரு கட்டுப்பாடு வந்தால் தமிழ்மக்களுக்குத்தான் நல்லது.

இலங்கையில் மருத்தவர்களும் இராணுவத்தினரும் குறைந்த பட்ச நேர்மை கொண்டவர்கள் என நான் சொல்லும்போது மிக மோசமானவர்கள் என நான் கருதுவது இலங்கை அரசியல்வாதிகளையும் ஊடகவியலாளர்களையும்தான். பலர் தெரியாமல் செய்கிறார்கள். சிலர் தெரிந்து செய்கிறார்கள்.

ஆண்டவன் இவர்களை மன்னிப்பாராக என இந்த கர்த்தர் பூமிக்கு வந்த நாட்களில் வேண்டுவதை விட வேறு என்னதான் செய்யமுடியும்?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.