நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கடந்த 30-11-2010 திகதி கொழும்பில் கொடுத்த வாக்குமூலம்

நோயல் நடேசன் அவுஸ்திரேலியா

கடந்த காலத்தை புரிந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு எனது வணக்கங்கள்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் எனது கதையில் இலங்கை நாட்டில் முப்பது வருடங்கள் நடந்த ஓய்திருக்கும் யுத்தத்தின்; நிழல் பின்னிப் படர்ந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த நாட்டின் நடந்த முக்கிய சம்பவங்களை உள்ளிருந்தும் வெளியிருந்தும் பார்க கூடிய வாய்பு எனக்கு கிடைத்தது எனது அதிஸ்டமாகும்.

1980ல்  ஆணடுகளில் மிருகவைத்தியராக பட்டம் பெற்றபின் மதவாச்சியில்  வேலை செய்து கொண்டிருந்தேன். வாரத்தில் மதவாச்சியும் வார இறுதியில் யாழ்ப்பாணமுமாக எனது ஆரம்பகாலம் சந்தோசமாக பறந்து சென்றது;.

1983ல் நடந்த கலவர நிகழ்வுகள் என்னை நேரடியாக பாதிக்க வில்லை என்றாலும் மனிதர்கள் தமது சக மனிதர்கள் மேல் நடத்திய கண்மூடித்தனமான வன்முறை கண்கூடாக பார்த்தது என்னை உலுக்கியது. நான் இருந்த மதவாச்சி பிரதேசம் எல்லைப் பிரதேசமாக இருந்ததால் மனத்தில் அச்சத்தை ஊட்டியது.இதனால் மலையத்தில் நூவரலியாவுக்கு அருகில் உள்ள பிரதேசமான இராகலைகக்கு வேலைமாற்றம் எடுத்தேன்.

எனது மிருகவைத்திய நிலயம் சூரியகாந்தி தோட்டம் எனக்கூறப்படும் தேயிலைத் தோட்டத்தின் மத்தியில் அமைந்திருந்தது. நான் சென்ற சிலகாலத்தில் ஏப்பிரல் 84ல் அந்த தோட்டத்தில் சின்னத்துரைக்கும் அங்கு வேலையில் இருக்கும் தேயிலைத் தோட்டதொழிலாளிக்கும் இடையே நடந்த தனிப்பட்ட பிணக்கில் அந்த அதிகாரி கத்தியால் குத்தப்பட்டார். அந்த விடயம் தமிழ்- சிங்கள இனப்பிரச்சனையாக மாறியது;. சிங்களவரான சின்னத்துரை தோட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழனால் குத்தப்பட்டதாக கூறியதும் சிங்கள கிராம மக்கள் கிளர்ந்து சூரிய காந்தி தோட்டத்தில் தொழிலாளர் வாழும் காம்பராக்களை எரித்தாரகள். வீடு இழந்த பல தொழிலாளர்கள் எனக்கு ஏற்கனவே அறிமுகமானதால் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்ல சென்றேன். அவர்கள் மேல் நான்காட்டிய அனுதாபத்தால் நான் பலரால் சந்தேக கண்ணுடன் பார்க்கப்பட்டேன்.

இந்த நிலையில் நான தொடந்து இராகலையில் இருக்கமுடியாது. அதே போல் யாழ்பாணத்திலும் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன. சிறிது காலம் தமிழ்நாட்டில் போய்த் தங்குவதுதான் சிறிந்த முடிவாக பட்டதால் இந்தியாவுக்கு சென்றேன். அங்கு சென்றபோது தமிழ் நாட்டில் வாழும் இலங்கை அகதிகளின் நிலை கண்டு நணபர்கள் பலருடன் சேர்ந்து மருத்துவ அமைப்பை உருவாக்கி அதில் மருத்துவராக இருந்த என் மனைவியுடன் சேர்ந்து வேலை செய்தேன். ஒருசில வருடத்தில் தமிழ் இளைஞர் குழுக்குளுக்குள் நடந்த சண்டையில் அங்கு இருப்பதோ தொடர்ந்து அகதிகள் தொடர்பான வேலையில் ஈடுபடுவதோ சாத்தியபடாததால் அவுஸ்திரேலியாவுக்கு தயக்கத்ததுடன் குடிபெயர்ந்தேன்.

எனது அனுபவத்தில் தழிழர்கள் சிங்களவர் மத்தியல் மட்டுமல்ல தமிழர் மத்தியிலும் பாதுகாப்புடன் இருக்கவில்லை.. இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கூட இந்த பாதுகாப்பு எனக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தமிழர்கள் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

சமீபத்தில்தீராநதி என்ற சஞ்சிகையில பேராசிரியர் சிவத்தம்பி கூறியது என் மனத்துக்கு பிடித்திருந்தது. “நான் இங்கையனாகவும் தமிழனாகவும் ஒரே காலத்தில் இருக்க விரும்புகிறேன். இலங்கையனாக இருப்பதற்காக தமிழ் அடையாளத்தையோ அல்லது தமிழனாக இருப்பதற்காக இலங்கையன் என்ற அடையாளத்தையோ இழக்க விருப்பவில்லை.”

இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆண்டில் இருந்து தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகள் என்ற தோற்றத்தை தழிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மனங்களில் விதைத்திருந்தார்கள். இதற்கு சிங்கள அரசியல் வாதிகளும் சிங்கள மக்களும் காரணமென்ற விடயம் தமிழர்களில் மனத்தில் ஆழமாக வேர்விட்டு இருந்தது. இது விவாதத்துக்குரியதாக இருந்தாலும் இந்த கருத்தியலின் தாக்கம் கடைசி முப்பது வருடத்தில் யுத்தத்தில் முடிந்தது.

இலங்கை அரசியல் அமைப்பில் வெளிபபடையாக தமிழர்களை இரண்டாம்தர பிரஜையாக்கும் சட்டபதிவுகள் எதுவும் இருக்கவில்லை. சிங்களவர் தமிழர் முஸலீம்கள் சம உரிமை உள்ளவர்களாகவே அரசியலமைப்பில் காணப்படுகிறது.

எங்கே குறைபாடு உள்ளது?

ஏன் தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள மக்களால் புரிநது கொள்ளமுடியவில்லை?

எனக்குப் புரிந்தவரை தமிழர் பிரச்சனை இரண்டாக வகுக்கலாம்

1)உண்மையான பிரச்சனைகள்

2)மனத்தளவில் பரிந்து கொண்ட பிரச்சனைகள்1)உண்மையான பிரச்சனையாக நான் கருதுவது முதலாவதாக

1956ல் இலங்கையில் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக கொண்டுவரப்பட்டது. பின்னர் தமிழர் எதிர்புகளை எதிர்கொண்டதன் விளைவாக தமிழ் பாவிப்பு மொழியாக திருத்தப்பட்டாலும் இதுவரையில் திருப்திகரமாக தமிழ்மொழி அமூல் நடத்தப்படவில்லை. இதனால் 24 வீதமான தமிழ் மொழி பேசும் மக்கள்(வடகிழக்கு தமிழர் மலையகத் தமிழர் இஸலாமியத்தமிழர்கள்) தங்கள் தாய் மொழியில் அரச கருமமாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

2) மொழிவாரியான தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதிமறுக்கப்பட்தாகும்.

மனத்தளவில் புரிந்து கொண்ட பிரச்சனைகள்.

1)சிங்களக்குடியேற்றம்

இலங்கை போன்ற சிறிய நாட்டில் மருத்துவ வசதிகள் முன்னேறி மலேரியா போன்ற நோய்கள ஒழிக்கப்படும் போது மக்கள் தொகை பெருகியது.

இந்த நிலையில் எந்த அரசாங்கமும் அரசகாணிகளை மக்கள் குடியேற்றத்துக்கு கொடுப்து தவிற்க முடியாது. வடமாகாணத்தில் பல காணிகள் நிலமற்ற யாழ்ப்பாண மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல் கிழக்கு மகாணத்தில் அரச காணிகள் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு வளங்கப்பட்டது.

2) 1958 1977 1983 என நடந்த கலவர நிகழ்வுகள்.

இந்த நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களுக்கிடையே நடக்கவில்லை. அரசாங்கங்கள் தனது குற்ற ஒழுங்கை தடுக்கும் கடமையை செய்யாத படியால் ஏற்பட்டவை. நான் நேரில் பார்த்த 1983; கலவரநிகழ்வு அரசாங்கத்தாலும் ஆயுதப்படையினராலும் நடத்தப்பட்டது.1983ன் பின் கடந்த 27 வருடங்கள் இப்படி ஒரு கலவரம் நிகளாதது அரசாங்கத்தால் இப்படி ஒன்று நடக்க முடியாமல் தடுக்கமுடியும் என்பதை எடுத்து காட்டுகிறது.

இலங்கையில் நடந்த வன்செயல்கள் எல்லாம் அரசியல்தன்மை கொண்டவை. உயர்மட்டங்களில் இருந்து கீழ் நோக்கி நடத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட இருதரப்பினரும் மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட கொடுமையான வன்செயல்களை செய்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாண நூல்நிலயத்தை எரித்தல்

சிறைக்கைதிகளை கொலைசெய்தல்

அப்பாவிமக்களை கொலை செய்தல்

வணக்கத்தலங்களுகளுக்கு குண்டு வைத்தல்

பொதுமக்களை கொல்லுதல்

அரசியல்வாதிகளை சமூகத் தலைவர்களை கொலைசெய்தல்

மேற்கொண்ட செயல்களில் சாதாரண சிங்களமக்கள் அல்லது தமிழ் மக்கள் ஈடுபடவில்லை.இதனால் இவை இனங்களுக்கிடையில் ஏற்ப்பட்ட முரண்பாடுகளின் விளைவாக பார்க்க முடியாது. இவை அரசியல் நோக்கங்கொண்ட பயங்கரவாத செயல்களாகும்

தற்போது சுதந்திரமான தனிநாடு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மண்ணில் புதைக்கப்பட்டுவிட்டது.கனவுகளில் இனியும் தமிழ் மக்கள் வாழமுடியாது. மேலும் இந்தக் கனவை தொடருபவர்கள் மீந்திருக்கும் அப்பாவி தமிழ் மக்களை மரணபடுகுழியில் தள்ள முயல்கிறார்கள்.இதைத் புறக்கணித்துப் புதுப்பாதை அமைக்கவேண்டும்.

இலங்கைத் தமிழரகளது புதிய பாதை எது?

வடகிழக்கு மக்களினது அதிகாரப்பரவலாக்கம் மாகாண சபைகளாலும் சமஷ்டி அமைப்பாலும் உருவாகுவதற்கு சிங்களமக்கள் மட்டும் விரும்பவில்லை. தற்போது கிழக்கு மாகாணத்தில் அறுபத்து மூன்று வீதத்துக்கு மேற்பட்டவர்கள் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்ககள். 52 வீதமான
தமிழர்கள் வட- கிழக்கு மாகாணத்துக்கு வெளியே வசிக்கிறார்கள்.

13 ம் திருத்த சட்ட மூலம் வந்த மகாணசபையை சிங்கள மக்கள் கணக்கெடுப்பது இல்லை. இந்திய அழுத்தத்தால் இலங்கையின் மீது திணிக்கப்பட்ட ஒரு சுமையாகவும் இலங்கையின் தன்னாதிக்கத்தின் மேல் ஏற்பட்ட அவமானமாகவும் .இந்த மாகாணசபைகள் பார்க்கப்படுகிறது.இந்த மாகாண சபைகள் மக்களுக்கு சில சேவைகளை செய்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.தேவையில்லாமல் புதிதாக அரசியல்வாதிகளை உருவாக்கி மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கிறார்கள். ஏற்கனவே மக்களுக்கு சேவை செய்து வந்த மாநகர நகர மற்றும் கிராம சபைகளின் அதிகாரத்திலும் ஒரு நெருக்கடியை உருவாக்கிpயது தான் இந்த மாகாண சபைகளால் ஏற்பட்ட இலாபமாகும்.

சிறுபான்மை இனத்து மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு பெரும்பான்மை மக்களும் அரசாங்கமும் முழு மனதாக ஆதரவளிக்கவேண்டும் . தற்போதய நிலையில் அதிகாரப் பரவலாக்கத்திற்கு சிங்களமக்களிடம் ஆதரவு இல்லை.இந்தியாவின் ஆதரவை பெற்று சிறுபான்மைமக்கள் அதிகாரத்தை பெறமுயற்சிப்பது நடைமுறையில் பலனைத்தராது தற்போது நாட்டை பிரிப்பதற்கான போரில் தோற்கடிக்கப்பட்ட பலவீனமான தமிழ்மக்கள் இப்படியான முயற்சியில் மீண்டும் ஈடுபடுவது எவ்வளவு புத்திசாலித்தனமான நடவடிக்கை என்பதை தமிழ் அரசியல் வாதிகள் சிந்திக்கவேண்டும். சிந்தனையில் பழமை தவிர்த்து புதிதான நோக்கு வேண்டும்

இலங்கையில் தமிழ் மக்கள் தங்களுக்கு எந்த இடத்தை எந்த வழியில் பெறவிரும்புகிறார்கள் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும். அரசியல்வாதிகள் தங்களது பதவிகளை தக்கவைப்பது மட்டும் தான் நோக்கமா? இல்லை. தமிழ் மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை பெற்று உயர்ந்த இடத்தில் வாழ்வதற்கு உதவி செய்யபோகிறார்களா?. சமீபத்திய சரித்திரத்தில் தனிநாட்டை பெற முயற்சித்து அதனது பாரிய விளைவுகளுக்கு மக்கள் முகம் கொடுத்திருக்கிறார்கள். அரசியலில் இவர்களின் தவறுகள் மக்களை மிகவும் கீழ்தரத்தில் கொண்டு சென்றிருக்கிறது. கடந்த முப்பது வருட அரசியல் மற்றும் வன்செயல்கள் மக்களை நந்திக்கடலுக்கு தான் அழைத்து சென்றிருக்கிறது. தமிழர்கள் மற்றய சமூகத்தினரைப்போல் இந்த வன்முறை அரசியலை வெறுக்கிறார்கள் என அரசியல் தலைமைகள் உணரவேண்டும்.;

புதிய வழியை தமிழர்கள் பெறுவதற்கு மனத்தில் புதிய வழிகளை வகுத்து கொள்ளவேண்டும். வன்முறையற்ற அரசியலை மற்றய சமுகத்துடன் இணைந்து நடத்தவேண்டும். இதில் மலையகத்தமிழர்களும் இலங்கை முஸலீம் மக்களும் சிறந்த முன்னுதாரணமாக நடந்திருக்கிறார்கள். அவர்கள் சிங்கள மக்களோடு இணைந்து தென்பகுதியில் வாழ்ந்த போதும் தங்களது கலை கலாசாரத்தை இழந்து விடாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வட்டுக்கோட்டைத் தீர்மனத்தை எடுத்த காலமோ அல்லது 1983கலவர காலமோ இப்பொழுது இருக்கவில்லை . தற்போதைய 2010 வருடத்தில் சிங்கள சமூகத்துடன் மட்டும் அல்ல மலையகத் தமிழ்மக்கள் முஸலீம் மக்களுடன் இணைந்து எமதுநாட்டில் எமக்குரிய இடத்தை பெறவேண்டும். சுழல்பந்து வீச்சாளரான முரளிதரன்போல் குழுவுடன் இணைந்து எமது இடத்தை பெறவேண்டும்

நமக்குரிய இடத்தை எப்படி பெறுவது?

தமிழர்கள் கொடிய போரின் பாதிப்பில் இருந்து விடுதலைபெறவேண்டும். தனிமனிதர்கள் உரிமைகள் சொத்துகள் பாதுகாக்கபடவேண்டும். சமஉரிமை சம அந்தஸத்;து பேணப்படவேண்டும். மொழி கலாச்சார உரிமைகள் பேணப்படவேண்டும்.வடகிழக்கு மாகாணங்கள் அவிபிரித்தி அடைந்து அங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் பெறுவதற்கு வாய்பளிக்கவேண்டும்.

இந்த விடயங்களை விட வேறு என்ன வேண்டும்?
மொழி கலசாரம் சமயம் அரசியல உயர்வான சமூக குறியீடுகள்தான். ஆனால் உண்ண உணவற்று இருக்க இடமற்று வாழ்வதற்கு ஆதாரம் இல்லாது நோய்க்கு மருந்தற்று தவிப்பவர்களது மனத்திற்கு எட்டாத சிந்தனைகள். அரசியல் அதிகாரத்திற்கு தவிக்கும் அரசியல் வாதிகளுக்க இப்படியான சிந்தனை மனத்தில் நிறைந்து இருக்கலாம்..

பேராசிரியர் சிவத்தப்பியின் கூற்றுப்படி 90 வீதமானஇலங்கை தமிழ் மக்களுக்கு ஈழத்தில் ஈடுபாடு இருக்கவில்லை. உணவையும் உறைவிடத்தையும் மற்றும் மருத்துவ தேவைகளை மக்களுக்கு தரக்கூடிய தொழில்த் திறமை பணம் ஆட்பலம் மற்றும் அரசியல் தீர்கதரிசனம் மகாண சபைகளுக்கு இருக்கவில்லை. தற்போதைய நிலையில் மத்திய அரசாங்கத்துக்கே இந்த தகமையுண்டு.

தற்போதைய நிலையில் சிங்கள மக்கள் தாங்கள் தெற்காசியாவில் ஒரு சிறுபான்பையாக நினைக்கும் தன்மை மாறிவிட்டது. மேலும் சிங்கள தீவிரவாத சக்திகள் தற்போதய நிலையில் நலிவடைந்துள்ளார்கள். இவர்களால் எதுவும் செய்து இனகலவரங்களை உருவாக்கமுடியாது. சிங்களமக்கள் பொருளாதார வளர்சியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் . நாட்டில் அமைதி நிலவாவிட்டால் பொருளாதாரம வளராது என தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தை படிப்பதன் மூலம் முன்னேற்றத்தை அடையமுடியும் என புரிந்து வைத்திருக்கிறார்கள். 1956இருந்து 2010 காலப்பகுதியில் பல சிங்களவர்கள் தமிழர்களின் குறைபாடுகளை தீர்த்தல் அவசியம் எனப் உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.

மகிந்த இராஜபக்ச அவர்கள் நம்நாட்டிற்;கு உட்பட்ட தீர்வு எனக் கூறும்போது எல்லா மக்களுக்கும் அமைவான தீரவைத்தான் சொல்லியிருக்கிறார் என நான நம்புகிறேன்.தற்போது உள்ள நிலைமைக்கேற்ற அரசியலை வடிவமைத்து அதில் எமது முன்காலை வைத்து நடக்கவேண்டும.; அதிகம் பாய்ந்து பள்ளத்தில் விழுவதிலும் பார்க்க மெதுவாக கால்வைத்து முன்னே செல்லவேண்டும். தற்போது பள்ளத்தில் கிடக்கும் தமிழர்கள மெதுவாக கைகொடுத்து ஏற்றிவிடவேண்டும்.

சரித்திர வீர வசனங்கள் சுதந்திரத் தமிழாட்சி போன்ற சொல்லாடல்களில் இருந்து வெளியே வந்து தமிழர்கள் யதார்த்தமான இணக்க அரசியலில் ஈடுபடவேண்டும். சிங்கள மக்களால் ஏற்க்கக்கூடிய ஒரு தீர்வை குறைந்த பட்சம் சிலகாலத்துகாவது ஏற்று கொள்ளவேண்டும் இதைவிட சிறந்த வழி தற்போது இல்லை

இந்தவழிகளில் செல்வதற்து சகலமக்களுக்கும் ஏற்க வழிகள் ஏற்படுத்தவேண்டும்.

எல்லா மக்களும் சமம் என்ற சம உரிமைப் பிரகடனம் (Social contract)அது கீழ்வருவனவற்றை அடக்கி இருக்கவேண்டும்

1)இலங்கையின் சகலபகுதியிலும் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம்;

2)கல்வி தொழில் சம்பந்மானவற்றில் சம உரிமை

3)தமது மொழி(சிங்களம் தமிழ் ஆங்கிலம்) மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழும் உரிமை

4) சட்டத்தில் அரசியலில் அரசாங்க நிர்வாகத்தில் நிர்வாகத்தில் அனைவரும் சம பங்குபெற உரிமை

5)எந்த பாகுபாடற்ற படி மொழி மதம் நம்பிக்கை அரசியல் சார்பு மற்றும் குடி இருக்கும் இடத்தை தேர்ந்து எடுக்கும் உரிமை அவசியமாகிறது

6) தமக்குரிய அடையாளங்களை தேர்ந்தெடுக்க அவற்றோடு சேர்ந்திருக்கம் உரிமை

7) அரசாங்கத்துடன தாம் விரும்பும சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற ஏதாவது ஒரு மொழியில் தொடர்பு கொள்ள முடிதல்

கடந்த காலங்களில் தமிழர்கள் தற்கொலை செய்தலுக்கு ஒப்பான போராட்டவழி முறையில் தமிழ்த்தலைவரகளால் வழி நடத்தப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழர்கள் மிகவும் துன்பப்பட்டு உள்ளார்கள். இனிமேல் உன்னதமான தலைமையொன்று தமிழ் மக்களை இலங்கையில் அரசில் மைய நீரோட்டத்தில் இணைத்து வழிநடத்தவேண்டும் இதுவரலாற்றறின் கட்டாயம். இதை செய்ய தவறுவார்களாயின் நந்திகடலின் முடிவிலும் பார்க்க இன்னும் பாரதுரமான முடிவு தமிழர்களுக்கு ஏற்படுவது தவிர்கமுடியாது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: