
-அனுபவ பகிர்வு —நடேசன்
மெல்பனில் புறநகரான டண்டினொங்கில் இருந்து எனது மிருக வைத்திய நிலயத்திற்கு வந்த இந்திய இளைஞனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். ஆறு அடி உயரமான அவனுக்கு முகத்தில் சிறிய தாடி. பெயரைக் கேட்ட போது பஞ்சாபி இனத்தவன் போல் இருந்தது. அவன் இந்து பஞ்சாபியாக இருக்கலாம் அல்லது தலைப்பா கட்டாத சீக்கியனாக இருக்கலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அவன் ஜக் ரஸ்ஸல் இனத்தைச் சேர்ந்த அந்த சிறிய நாயை தூக்கிக் கொண்டு வைத்திருந்த முறை வித்தியாசமாக இருந்தது. ஆண்கள் சிறிய நாயை தூக்கினால் இடுப்புக்கு அருகில் அணைத்து வைத்திருப்பார்கள். பெண்கள் மட்டுமே மார்பில் அணைத்து வைத்திருப்பார்கள். இடது பக்க மார்போடு அணைத்து வைத்திருப்பது தாய்மையோடு சம்பந்தப்பட்டதால் பெண்களுக்குரியது என நான் பலமுறை நினைத்திருந்தேன் .இந்த இளைஞன் பெண்கள் போல் வைத்திருப்பது சிறிது வியப்பைத்தந்தது. சிறு பெண் குழந்தைகள் தங்கள் பொம்மைகளை இப்படி அணைத்து வைத்திருப்பார்கள்.
“நாய்க்கு என்ன நடந்தது?”- என்று கேட்டேன்.
“பின்னங்காலை நொண்டுகிறது . உங்களிடம் சாலின் அனுப்பினாள்.”- என்றான்.
சாலின் சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் வேலை செய்த நேர்ஸ். திருமணமாகியபின் நைட் கிளப்பொன்றில் வேலை செய்வதாகச் சொன்னாள். அவளது நாயை இப்பொழுதும் என்னிடம்தான் கொண்டு வருகிறாள.
‘எப்படி சாலினைத் தெரியும்’?
சாலின் எனது மனேஜர். நான் அவள் வேலை செய்யும் கிளப்பில் பவுன்சராக வேலை செய்கிறேன்.
மெல்பனில் பல நைட் கிளப்புகளில் வாசலில் இரவு நேரத்தில் பல இளைஞர்கள் குடிவெறியில் செய்யும் கலாட்டாவையும் அதனால் உருவாகும் பிரச்சினைகளையும் சமாளிக்க பவுன்சர்களை வைத்திருப்பார்கள். சில வருடங்களாக வாட்ட சாட்டமாக இருக்கும் பஞ்சாபி இளைஞர்கள் இந்த வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள்.
எனது பரிசோதனை மேசையில் நாய் குட்டியை அவன் வளர்த்திவிட்டான். அதனது இடது கால் முறிந்து விட்டது என்பது எனக்கு உடனே புரிந்து விட்டது. ஆனால் உடனே விடயத்தை புட்டு வைத்து அவனுக்கு அதிர்ச்சியை கொடுக்காமல்’ பெரிய பிரச்சினை போல இருக்கிறது’. என்றேன்.
‘நான் டன்டினொங்கில் உள்ள மிருக வைத்தியசாலைக்கு சென்ற போது நாயை பார்க்காமல் கால் எலும்பை ஒன்றாக்குவதற்கு இரண்டாயிரம் டொலர்கள் என்றார்கள்; எனக்கு அவர்களின் போக்கு பிடிக்கவில்லை. அத்துடன் என்னால் அந்தளவு பணத்தை உடனே பெயர்க்க முடியாது..எனக்கு வாரச் சம்பளம் ஐநுறு டொலர்தான்.’
‘இது பெரிய ஒப்பரேசன். எப்படியும் அதிக பணம் செலவாகும’;
‘நான் கொஞ்சம் கொஞ்சமாக காசு தருவேன். எனது பெற்றேர் இந்தியாவில். இந்த நாய்தான் தற்போது எனது ஒரே உறவு.
எனது மனிதாபிமானத்தை அந்த வார்த்தை மெதுவாக கிளறிவிட்டது.
‘ஒபரேசனின் பின் நாயை பராமரித்த அனுபவம் இருக்கிறதா? இல்லாவிடில் நான் ஒபரேசன் செய்த பின் திருப்பவும் ஏதாவது நடந்தால் எனது நேரமும் உமது பணமும் விரயமாகி விடும்’.
‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என பத்திரத்தில் ஒப்பந்தம் வைத்தபின் ‘உமது நாய்க்காக இன்று சனிக்கிழமை நான் ஒபரேசன் தியேட்டருக்கு சென்று வேலை செய்கிறேன்” என சொல்லிவிட்டு எனது நேர்சான சரனுக்கு ஒபிரேசன் தியேட்டரை தயார் படுத்தும்படி சொன்னேன். அப்பொழுது என்னுடன் வேலை செய்து கொண்டிருந்த சக மிருக வைத்தியர் ஜுலியா,
‘எனக்கு எலும்பு முறிவு வைத்தியத்தை பார்க்க விருப்பம். . ஆனாலும் எனது வீட்டில் ஒரு மனித உயிரை பராமரிக்கவேண்டும்” என்று சொல்லி விட்டு வெளியேறினாள்;.
-தியேட்டரில் வேலை செய்து கொண்டிருந்த சரன் வந்து மெதுவான குரலில் ‘ஜுலியா ஏன் அவ்வளவு அவசரமாக போகிறார் தெரியுமா ?” என்றாள்
“தெரியும். ஜுலியாவின் பாட்னரான லிசாவுக்கு உடம்பு முடியவில்லை என்று காலையில் எனக்கு ஜுலியா சொன்னாள். இதைவிட லிசா உடம்பை கவனிப்பது இல்லை. ஏற்கனவே நீரழிவு வியாதி உண்டு என அவளைக் குறித்து என்னிடம் பச்சாதாபப்பட்டாள்.
உண்மையில் இவர்கள் உறவில் இவ்வளவு அன்னியோன்னியம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தொலைபேசியில் ஒருவரை ஒருவர் விசாரித்து அக்கறையாக பேசுவார்கள் என்றாள்.
உனக்கு பொறாமையாக இருக்கிறது. இல்லையா? உனது கணவன் கேவின் இதிலை பாதியாவது உன்னில் அக்கறையாக இருக்கலாமே? என சரனை சிறிது சீண்டினேன்.
‘என்ன செய்வது பதினைந்து வருடமாக ஒன்றாக இருந்து மூன்று பிள்ளைகளையும் பெற்று இருக்கிறேன்.ஆனால் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறான். தனது வேலை பிடிக்கவில்லை என்று சமீபத்தில் அதை தூக்கி எறிந்து விட்டு வீட்டில் இருக்கிறான். வேலையில் விருப்பம் இல்லையென்றால் அதில் இருந்து விலக முதல் என்னிடம் சொல்லியிருக்கலாம்.என தனது கணவனைப் பற்றி என்னிடம் சொல்லி பொருமினாள்.
சரன் ,நான், ஜுலியா மூவரும் மெல்பனின் பெரிய மிருக வைத்திய சாலையில பதினைந்து வருடத்துக்கு முன் ஒன்றாக வேலை செய்தவர்கள். அக்காலத்தில் ஜுலியா முப்பது வயது இளம் பெண்;. பொன்னிறத் தலை மயிர்களும் ஈரமான பெரிய உதடுகளில் தவழ்ந்து வரும் மழலை ஆங்கிலமும் மற்றவர்களோடு பழகும் விதமும் அவளை எவர் பாலும் ஈர்க்கும். கிட்டார் இசைக்கவும் அழகாக பாடவும் தெரிந்த ஜுலியா எங்கள் விருந்துகளில் பிரதான நட்சத்திரம். பலர் ஜுலியாவோடு நட்பாக இருப்பதையே பெரிய விடயமாக நினைத்து கொள்வார்கள். இதைவிட ஜுலியாவின் தாய் தந்தையினர் பணக்கார குடும்பத்தினர். ஒரு விதத்தில் வாயில் வெள்ளிக்கரண்டியோடு பிறந்தவள் எனப் பொறாமைப்படத் தோன்றும். இப்படிப்பட்ட அவளுக்கு எந்த ஆண் நண்பர்களும் இருக்கவில்லை. சில வருடத்தின் பின் அந்த வைத்திய சாலையில் இருந்து நான் விலகி எனக்காக புதிய தொழில் பார்த்ததால் அவளுடன் தொடர்புகள் அற்றுப் போய்விட்டது. இதேபோல் சரனும் திருமணமாகி அடுத்தடுத்து மூன்று குழந்தைகளைப் பெற்று குடும்பமாகிவிட்டாள்.சில வருடங்களுக்கு முன்பாக ஜுலியா தாய் தந்தையர் வீட்டை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் ஒரு நாள் நடு இரவில் மெல்பனில் உள்ள வீதியால் நடந்து சென்ற போது பொலிசாரால் விபசாரி என சந்தேகத்தில கைது செய்யப்பட்டு பின்பு மனநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அறிந்தேன். அவளுக்கு மனோ வியாதி என்பது அறிந்தவர்கள் எல்லோரையும் அதிர வைத்தது. என்னால் மனதில் அவளுக்காக அனுதாபப்படத்தான் முடிந்தது.சில காலத்தில் குணமாகி வேறு இடத்தில் மிருக வைத்தியராக பணியாற்றுகிறாள் என்றதும் கொஞ்சம் ஆறுதலை அளித்தது.
மீண்டும் சில காலத்தில் அந்த இடத்தில் புதிய முகாமைத்துவம் அதிக வேலையை ஜுலியாவின் மேல் ஏற்றியதால் வேலையின் அழுத்தத்தை தாங்க முடியாமல் இருந்தாள். இறுதியில் ஜுலியாவுக்கு வேலை பறிக்கப்பட்டது.அந்த நாட்களில் கிழமையில் ஒரு நாள் வேலை செய்வதற்காக ஒருவரை தேடிக்கொண்டிருந்த எனக்கு ஜுலியாவின் பெயர் எனது நண்பி ஒருவரால் சிபார்சு செய்யப்பட்டது. அவளை வேலைக்கு எடுப்பதை இட்டு என்னுடன் வேலை செய்யும் நண்பனிடம் பேசிய போது அவன் அதை ஆட்சேபித்தான். ஜுலியா இப்பொழுது ஒரு லெஸ்பியன். அதைவிட அவள் தனது மனோவியாதிக்கு மருந்துகளை எடுத்துக்கொண்டு இருக்கிறாள். இவர்கள் பொறுப்பாக வேலை செய்யமாட்டார்கள். அவளை எடுத்ததற்கு நீ கவலைப்பட நேரும் என பெரிதாக எச்சரிக்கை செய்தான்.
‘நாங்கள் எல்லோரும் ஒரே இடத்தில் வேலை செய்தவர்கள். நாங்களே அவளை வேலைக்கு எடுக்காவிட்டால் வேறு எவர்தான் வேலைக்கு எடுப்பார்கள். லெஸ்பியனாக இருப்பது அவர்களது தனிப்பட்ட விடயம். வேலைக்கும் அவர்களது பாலியல் விருப்புக்கும் நாங்கள் முடிச்சுப்போட முடியாது.’
‘எனது கருத்தை கூறிவிட்டேன். அதன்பின் முடிவு எடுப்புது உனது உரிமை’ எனக் கூறிவிட்டான்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்பு நான் தெரிந்து கொண்ட ஒரு விடயம். இங்கே அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை – ஃபெயடின்கம் (Fair dinkum ) இதனது பொருள் எல்லோருக்கும் சந்தர்ப்பம் அளித்தலாகும். இந்தியாவில் இருந்து இந்த நாட்டிற்கு வந்த போது ஐம்பது டொலர் நோட்டு மட்டும் மேல் சட்டை பக்கட்டில் இருந்தது. வந்த இடத்தில் எந்த பாகுபாடும் இல்லாமல் எனக்கு பிழைக்க வழி செய்த இந்த நாட்டில், இன, மதம் ,பால் வேறுபாடு என பாகுபாடு காட்ட எனக்கு உடன்பாடு இல்லை. இந்த நிலையில்; லெஸ்பியன் என்ற காரணத்தினாலோ அல்லது மனோவியாதிக்கு மருந்தில் இருப்பதனாலோ வேலைக்கு ஒருவரை எடுக்காமல் விடுவது சரியாகப் படவில்லை.
ஜுலியாவை வேலைக்குச் சேர்த்து விட்டு நான் இலங்கைக்கு விடுமுறையில் சென்று விட்டேன்இரண்டு கிழமைகள் வேலை செய்த பின்பு ஜுலியா வேலைக்கு வரவில்லை. மீண்டும் மனோவியாதியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் அந்த நேரத்தில் நான் இலங்கையில் இருந்ததால் எனது நண்பனின் தலையில் ஜுலியாவின் வேலையை செய்யும் பொறுப்பு வந்தது. நான் மீண்டும் வந்தபோது ‘உனக்கு இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்’ எனச் சொல்லிக் காட்டவும் அவன் தவறவில்லை.. சில கிழமைகளின் பின்பு மீண்டும் ஜுலியா, தொலைபேசியில் தான் தனது பாட்னரோடு வெளிநாட்டுக்குச் செல்வதாகவும் அதன் பின் வேலைக்கு வருவதாகவும் கூறிய போது நான் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. சரியாக ஒரு மாதத்தின் பின்பு மீண்டும் வேலைக்கு வருவதாக சொன்ன போது உடனே பதில் சொல்லாமல், இரண்டு கிழமைகளில் பதில் சொல்லுவதாக கூறிவிட்டு மீண்டும் யோசித்தேன்.
அந்த இரண்டு கிழமைகளில்; ஒரு நாள் மாலையில் ஜுலியாவை சந்தித்த போது அவளுடன் அவளது பாட்னர் லீசா இருந்தாள். எனக்கு அறிமுகமான லீசா, தான் ஒரு மன நோய் வைத்தியத்தில் விசேட பயிற்சி பெற்ற நேர்ஸ் எனக் கூறினாள்.இவர்களது உறவுக்கு அப்பாலான விசேட பரிவு இருந்ததில் புதிய அர்த்தம் புரிந்தது.
இரண்டு கிழமைகளில் மீண்டும் ஜுலியா கேட்டபோது அந்த வேலையை அவளுக்கு என்னால் மறுக்க முடியவில்லை.
‘எப்படி ஜுலியாவும் லீசாவும் சந்தித்துக் கொண்டார்கள் தெரியுமா என ஒபரேசன் செய்து கொண்டிருந்த என்னிடம் கேட்டாள் ,சரண்.
எனக்குத் தெரியாது ஏதாவது ஒரு லெஸ்பியன் விருந்திலாக இருக்கலாம்.
‘இல்லை. அது ஒரு நடன நிகழ்ச்சி . அங்கு ஜுலியா பாடச் சென்ற போது லீசா தன்னுடன் வந்து ஆடும்படி கேட்டாள் . அன்றில் இருந்து அவர்கள் உறவு தொடர்கிறது.
‘மிகவும் நல்லது தற்போது லீசாவால் ஜுலியாவுக்கு சுகவீனம் வந்தால் பராமரிக்க முடிவது அவர்கள் உறவில் ஒரு ஒரு போனசாக முடியும் என சொன்னபோது ஏதோ ஒரு படத்தில் டொக்டர்கள் நர்சையும் எஞ்ஜினியர்கள் சித்தாள்களையும மணக்க வேண்டும் எனறு MR ராதா சொன்னது நினைவுக்கு வந்து சிரித்தபோது சரன், என்ன சிரிக்கிறாய் எனக் கேட்டாள்அவளுக்கு இதை ஆங்கிலத்தில் மொழி மாற்றி சொல்லுவது கடினமாக இருந்தது. ஆனாலும் அவளுக்கு அது நகைச்சுவையாக இருக்கவில்லை . நகைச்சுவை, மொழி மாறிய போது மரணித்து விட்டதை உணர்ந்தேன்.
—–
ஒபரேசன் செய்து முடித்ததும் அந்தப் பஞ்சாபி இளைஞன் மீண்டும் வந்தான் . அவனிடம்’ உருக்கு கம்பியை வைத்து உனது நாயின் காலை சரி பண்ணி இருக்கிறேன் இதை கவனமாக பார்துக்கொள்ளவது உனது பொறுப்பு’ என்றேன்.
‘இரவில் நான் வேலைக்கு செல்லும் போதுதான் என்ன செய்வது என்பது தெரியவில்லை.என்றான்.
எரிச்சலுடன் ‘உனக்கு நேரமில்லாத போது ஏன் நாய்குட்டியை வாங்கினாய் ?
‘நான் நாய் குட்டியை வாங்கவில்லை. இது எனது கேர்ள் பிரண்டின் நாய்க்குட்டி. அவள் ஒரு வருடத்தில் என்னைப் பிரிந்து விட்டாள். அப்போழுதே சாலீன் என்னிடம் அவளோடு டேற் செய்யாதே என்று சொன்ன போது நான் கேட்கவில்லை. என்று தனது சோகக் கதையை சொல்லி சுய கழிவிரக்கத்தில் தானும் மூழ்கி எங்களையும் அதில் அமிழ்த்த முயன்றான்.
ஆண்கள் சோகக் கதை சொன்னால் கேட்கும் பொறுமை என்னிடம் இல்லை. அதிலும் காதல் தோல்வியை கேட்க பொறுமை இழந்து நான் ‘ஒரு கூடு தருகிறேன் . அந்தக் கூட்டில் இரவு அடைத்துவிட்டு நீ வேலைக்கு செல்லலாம் . அத்துடன் இந்த முறிந்த எலும்பு பொருந்த அதிக கல்சியம் உள்ள சாப்பாடு வேண்டும்.. இரண்டு கிழமையின் பின்பு வந்து என்னைப்பார்” என்று சொன்னேன்.
—-
சரன் நீ கெவினுக்கு பிறந்த நாள் என்று சொன்னாயே எப்பொழுது?நாளைக்கு பரிசுகள் வேண்டிவிட்டாயா?
ஏற்கனவே பரிசை வேண்டிவைத்து விட்டேன்
‘அதைக் கொடுத்து உறவை மீண்டும் பெற்றுக்கொள்.’
‘அந்தப் பரிசை எனது பிள்ளைகள் மூலம் கொடுக்கப் போகிறேன்’ .
‘தயவு செய்து உறவைப் புதுப்பித்துக்கொள். சிறிய விடயங்களை பெரிதாக்காதே. கணவன் மனைவி உறவு என்பது எவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொள்ளவேணடியது. வீடுவாங்கியதும் வீட்டுப்பத்திரத்தை பெட்டியில் போட்டு விட்டு பல வருடங்களாக மறந்தும் கூட விடலாம். வாழ்க்கை அப்படி அல்ல என சொல்லிக் கொண்டு வீட்டுக்குப்புறப்பட்டேன்..
மறுமொழியொன்றை இடுங்கள்