தமிழ் அகதிகள் கழக நினைவுகள்:3.

நன்றி. அபத்தம் கனடா.

இலங்கைத் தமிழ் அகதிகள் கழகமாக, அவுஸ்திரேலியாவில்  நாங்கள் வேலை செய்த போது, அரசிற்கும் அகதிகளுக்குமிடையே நாம் தொடர்பாடலாக இருந்தது மட்டுமல்லாமல்,  அகதிகளுக்குத்  தனிப்பட்ட ரீதியாக உதவுல், அரசின் கொள்கையை அகதிகள் சார்பாக  மாற்றுதல் என்பனவும் எமது வேலையாக இருந்தன. (Lobbying and advocating) ) இவை பற்றிய  தெளிவான நோக்கம் அப்போது எமக்கு இருந்தது. இந்த விஷயத்தில், அரசு பற்றிய அறிவைப் பெற நாங்கள் அரசு பிரதிநிதிகளுடனும், ஏனைய அரசாங்கத்தின் திணைக் களத்திலுள்ளவர்களுடனும் சேர்ந்து நாம் வேலை செய்யவேண்டும்.

அரச இயந்திரத்தில் பல பகுதிகள் உண்டு. அத்துடன் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆலோசகர்களுக்கும் இதில் பங்குண்டு.  அவுஸ்திரேலிய அரசின் வெளி விவகாரக் கொள்கையில்  வணிகம், பாதுகாப்பு என்பன முக்கிய பங்கு வகிக்கும். இவற்றுக்குப் பங்கம் வராமலே ஜனநாயக அரசின் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் தொடர்பு உள்ளது. கொழும்புத் திட்டம் மற்றும் பொது நலவாய அமைப்பு என்பன நிரந்தரமான இணைப்புக்கள். இதனால் அவுஸ்திரேலிய அரசு, இலங்கையிலிருந்து வருபவர்களை ஒட்டுமொத்தமாக அரசியல் அகதிகள் எனப் பிரகடனப்படுத்தி, அகதி அந்தஸ்து வழங்கினால், இரு நாட்டுகளுக்குமான அரச தொடர்புகள் பாதிக்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கிறோம் அல்லது ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களது உறவினர்களுக்கு விசேட கவனிப்பு கொடுக்கிறோம் என்று பல கோணத்தில் செயல்ப்படுவார்கள்.

இப்படியான வகைகளில் அரச உறவுகள் பேணப்படும்போது,  பிற்காலத்தில் அவை பல வழிகளில் எமக்கு உதவும். உதாரணமாக அவுஸ்திரேலியாவில் இருந்து சென்று விடுதலைப்புலிகளோடு வாழ்ந்து,  பல வழிகளில் அவர்களுக்கு  உதவிய அவுஸ்திரேலிய தமிழ் குடிமக்களை வெகு இலகுவாக வவுனியா அகதி முகாங்களிளிருந்து போர் முடிந்தபின் எந்த அரவமுமின்றி மீட்டதுடன், அவுஸ்திரேலியாவுக்கும் கொண்டுவந்து சேர்த்தார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை மனத்தில் வைத்தே கானல் தேசத்தின் கதாநாயகி ஜெனி செய்ததாக எழுதினேன். 

அரச கொள்கைகளை மாற்றுவதென்பது, ராட்சத எண்ணைக் கப்பலை, போனபாதையில் நேர் கோட்டில் (180 பாகையில்) மீண்டும்  திருப்புவது போன்ற விடயமாகும்.   இதற்கு ஒழுங்காகத் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டும். இதை நாங்கள் சேவையாகச் செய்த போதும் பலர் பணம் பெற்றும் செய்தார்கள். இவர்களே பெரிய தொழில் நிறுவனங்களுக்காக லொபியிஸ்ட்டுகளாக (Lobbyist) வேலை செய்பவர்கள்.    

இதில் முக்கியமானது,  அரச மற்றும்  எதிர்க்கட்சி  பாராளுமன்ற அங்கத்தினர் என இரண்டு பகுதியோடும்  வேலை செய்ய வேண்டும்.  தனிப்பட்டவர்கள், கட்சிகள் என ஜனநாயக அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை.  நான் அகதிகள் கழகத்தில் வேலை செய்த காலத்தில்  அவுஸ்திரேலிய அரசில், தொழிற்கட்சியினர் பதவியிலிருந்தார்கள்.  அவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்கு நானும் தொழிற்கட்சி அங்கத்தவர் ஆனேன்.

எனக்கு  அரசியலில்  எந்தப் பதவியையும் அடையும் நோக்கம் இருக்கவில்லை, என்பதுடன் எந்த ஒரு அரசியல் கட்சியிலுமிருந்து  விலகி இருப்பது நல்லது எனவும் நினைப்பவன். ஆனாலும் இந்த அகதிகள் கழக வேலைக்காக நான் தொழிற்கட்சியில் சேர்ந்து  தொடர்ந்து அங்கத்தவராக பதினைந்து வருடங்கள் இருந்தேன். தொழிற்கட்சி அங்கத்துவம் ஆரம்ப காலத்தில் அகதிகளுக்கான பிரசார  வேலைக்கு உதவியதுடன் பிற்காலத்தில் உதயம் நடத்தும் போது கர்ணனின் கவச குண்டலம்போல ஒரு பாதுகாப்புக் கவசமாக  இருந்ததென்பதுவும் உண்மை. உதயம் பத்திரிகையை நிறுத்திய பிற்காலத்தில் தொழிற்கட்சிக்கு, அங்கத்துப் பணத்தை நான் செலுத்தவில்லை.

இதேவேளை என்னைத் துரோகி என விடுதலைப்புலிகள் தங்கள் ஈழநாடு  பத்திரிகையில் எழுதினார்கள். அவர்கள் என்னைத் துரோகி என முத்திரை குத்தியபோது, ‘துரோகி’ என முத்திரை குத்தியவர்களை புலிகள் பிற்காலத்தில் கொலை செய்வது வழக்கம், என்று அவர்களுக்கு ஒரு ஆட்சேபக் கடிதமொன்றை, இலங்கையைச் சேராத வழக்குரைஞர் மூலம் எழுதியதுடன், அந்தக் கடிதத்தின் பிரதியை அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருக்கும் அனுப்புவேன் எனவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரைப் பயமுறுத்தியபோது, அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.  தொழிற்கட்சி அங்கத்தினராக இருந்ததால் எனது அரசியல் கருத்துக்கு மதிப்பு அதிகம் என்பது அவர்களது குறைந்தபட்ச அறிவுக்கு அக்காலத்தில் தெரிந்திருந்தது.

இப்பொழுது நான் எழுத வந்த விடயம் அதுவல்ல.  அகதிகளுக்காக  வேலை செய்யும் போது அவர்களுக்கு வேலை செய்யும்   வழக்குரைஞர்களோடு  பழக்கம் ஏற்படுவது தவிர்க முடியாது. அப்படிப் பலர் எனக்குப் பரிட்சியமானார்கள். சிலர் நண்பர்களானார்கள்.

அக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கவே இதை எழுதுகிறேன்.

அமைப்பின் செயலாளராக நான் இருந்த காலத்திலே, பொக்சில் நகரமண்பத்தில் ஒரு இரவு விருந்தை நடத்தி, அதற்கு அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை  அழைக்கவேண்டுமென செயற்குழு முடிவு செய்தது. இதற்காக ஒரு மலர் அடிப்பதென முடிவுசெய்யப்பட்டு அதற்கு விளம்பரம் சேர்க்கும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது.

இதற்காக நாங்கள், எங்கு போகமுடியும்?

தமிழர்கள் வைத்திருக்கும் கடை முதலாளிகளிடமும் அவர்களுக்கு விண்ணப்பங்கள் தயாரிக்கும் தமிழ்  வழக்குரைஞர்களிடமும் போனோம்.

அப்போது ஒருவரிடம் ஏற்பட்ட அனுபவத்தையே இங்கு எழுதுகிறேன்.

அந்த வழக்குரைஞரை கறுப்புசாமி என்ற புனைபெயரில் அழைப்போம்.

அவர் பேசும்போது,  கல்லெறிந்து உடைந்த, தேனடையிலிருந்து விழும் துளித்தேனாக வாயிலிருந்து வார்த்தைகள் ஒழுகும்.

‘தம்பி, எங்களை விட்டா உங்களுக்கு யார் உதவுவார்கள்?  நீங்கள் எப்போதும் எங்களிடம் வரலாம்’ என்பார் .

விலங்குகளுக்கே மருத்துவம் செய்யும் எனக்கு அவரது கதையில் உள்ள செயற்கைத் தன்மை தெரிந்தாலும், பரவாயில்லை மனுசன் உதவுவதாகச் சொல்லுகிறார். அதில் மயிர் பிரிப்பது நல்லதல்ல என நினைத்தேன்.

அவரிடம் விளம்பரம் கேட்ட காலத்தில் அவர் சிட்னியில் வேலை செய்தார். எனக்கு விடுமுறையான நாளொன்றில் அவரைத் தொடர்பு கொண்டேன்

‘நாங்கள் அகதிகள் கழகத்தால் விருந்து நடத்துகிறோம், அதன் பொருட்டு ஒரு மலர் வெளியிடுகிறோம். உங்களால் ஒரு விளம்பரம் தரமுடியுமா?’ எனக்கேட்டேன்.

‘ஐயோ தம்பி, உங்களுக்கு இல்லாமலா, நான் நான் வார விடுமுறையில் வந்தபின் வீட்டுக்கு தொலைப்பேசி அழையுங்கள்’ என்றார்.

பின்பு காத்திருந்து, வார விடுமுறையில் அவரது வீட்டுக்குத் தொலை பேசியில் அழைத்தபோது. ‘உங்களுக்குத் தராமல் யாருக்கு தரப்போறம்? அவ கடைக்குப் போய்விட்டா. அவவிட்ட கேட்டு சொல்லுகிறேன்’ என்றார்.

அவரது மனைவியரும் வழக்குரைஞர் என்பதால் அவர் சொல்வது சத்தியமானது  என நினைத்தேன்.  அதன்பின்னர், வேலைப் பழுவில் மீண்டும் தொடர்பு கொள்வோம் என்ற நினைப்பில் கறுப்புசாமியை மறந்துவிட்டேன்.

அந்தக் காலங்களில் அகதிகளுக்காக வேலை செய்ததுடன் அரசியலும் செய்தோம். அந்தக் கூட்டத்திற்குப் பல அமைச்சர்களை அழைத்தோம். அத்துடன் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இருவரையும், செயலாளர் என்ற முறையில் நானே அழைத்தேன் 

இக்காலத்தில் அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சியான நாசனல் கட்சியியின் தலைவர்  ரிம் ஃபிசர் (Timothy Fisher ) வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று பேசியவர். அவரது பேச்சின் தொனிப்போருள் அரசிலுள்ள தொழிற்கட்சிக்கு எதிரானது. அந்த விடயம்  தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டது

பெரும்பாலான விளம்பரங்களைச் சேகரித்து விட்டேன். ஆனாலும் எமது  கறுப்புசாமி அப்பேது நினைவுக்கு வந்ததால், மலர் அச்சுக்குப் போவதற்கு முன்பு ஒரு நாள், அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன்.

அப்பொழுது அவர் ‘மன்னிக்கவும் இந்த முறை எங்களை மிஸ் பண்ணுங்கள். அடுத்தமுறை  கட்டாயம் விளம்பரம் தருவோம்’ எனத் தனது மனக்கவலையை வாக்கியமாக்கி நீட்டி நெளித்து வளைத்தார்.  

விளம்பரம் தருவதோ அல்லது நிராகரிப்பதோ அவரது உரிமை. என்றாலும் என் மனதில் அவரது செய்கை கடுப்பாக  இருந்தது என்ற உண்மையை மறைக்க முடியாது.

இரவு விருந்தும் வந்தது.  

அமைச்சர்கள், பாராளுமன்ற  அங்கத்தினர்,  எதிர்க் கட்சியிருந்தது நான் அழைத்த வேட்பாளர்கள் உட்படப் பலர் வந்தார்கள். அத்துடன் கறுப்புசாமியும் அந்த விருந்துக்கு வந்திருந்தார்

எல்லோரையும் நான் அழைத்ததால், நான் பம்பரமாகச் சுழன்று வரவேற்றேன். அதிலும் முக்கியமாக எதிர்க்கட்சியினரை அக்கறையாகக் கவனித்தேன். காரணம் குறுகிய காலத்தில் வரவிருக்கும் அடுத்த தேர்தலில் அவர்கள் தெரிவானால் எங்களுக்கு அவர்களின் ஆதரவு முக்கியம் என்பதே. இது எனது பச்சையான சுயநலமான நோக்கம்தான்!

அந்த விருந்துக்கு  வழக்குரைஞர் ரவீந்திரன்  வந்திருந்தார். அவர் எங்கள் கழகத்தின்  ஒரு ஆலோசகராக இருந்தார். அவரும் மேடையில் பேசினார்.

பேச்சாளர்கள் பேசி முடிய, விருந்துக்கு முன்பாக ஒரு அதிர்ஷ்டலாபச்  சீட்டை விற்று, அதன் மூலம் பணம் திரட்டவும் எண்ணியிருந்தோம்.   ஏற்கனவே வழக்குரைஞர் ரவீந்திரனுக்கு மேடை கொடுத்தோம் என்ற காரணத்தால் அந்த அதிஷ்ட்ட லாபச் சீட்டை எடுக்க, கருப்பு சாமியை மேடைக்கு அழைத்தேன்.

கறுப்புசாமி சீட்டை எடுத்துவிட்டு மேடை விட்டு இறங்குவதற்குப் பதிலாகத் தொழிற்கட்சித் தலைவர் ரிம் ஃபிசரின் பேச்சைக் கண்டித்தார். ஓரிரு வசனங்கள் பேசிவிட்டுப் போவதற்கு மனிதன் தயாரில்லை. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிபோல, ஆங்கிலத்தில் எதிர்கட்சியினரை தெருவுக்கு இழுத்து, தெருநாய்க்கு ஊரில் அடிப்பதுபோல் வாய் வார்த்தைகளால் மனிதன் கடித்தார்.

பாவம் ரிம் ஃபிசர் என்ற கவலை எனக்குத் தொற்றியது

என்னால் என்ன செய்யமுடியும் ?

எப்பொழுது கருப்புசாமி இறங்குவார் எனக் காத்திருந்து நேரத்தைப் பார்த்தபடியிருந்தேன். அவரது வாயிலும் கையிலும் பசை போட்டதுபோல் அந்த ஒலிவாங்கி ஒட்டிவிட்டதோ என நினைத்தபடி  எனக்கருகே இருந்த எதிர்க் கட்சி அங்கத்தினர் இருவரிடமும் ‘அவரது கருத்து எங்கள் கழகத்தின் கருத்து அல்ல’ என்றேன்.

அவர்கள் நாகரிகமாக ‘உண்மை, அது அவரது கருத்து’ என்றார்கள்.

கடற்கரையில் கஸ்டப்பட்டு சிறுவர்கள் வீடு கட்ட,  ஒருவர் வந்து காலால் உடைத்தால், அந்த சிறுவர்களது மனநிலை எப்படியிருக்கும்?

இதன் பின்னர் கருப்புசாமியை எங்கு கண்டாலும் பலகாத தூரம் சென்று விடுவேன். நேர் எதிரில் வரும்போது மட்டும் சிரிப்புடன் விலகிவிடுவேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.