பத்மநாபாவின் நினைவுகள்

எனது மகளின் முதலாவது பிறந்த தினம் 18- 6-1985- இடம் கோடம்பாக்கம் சர்காரியா கொலனி

செம்மறிகள் கூட நல்ல மேய்பனை தேடுகின்றன. அதேபோல பல வருடங்களாக பத்மநாபாவின் தகுதியில் தமிழ் இனத்தில் ஒரு தலைவரை தேடும் ஆவலில் இந்த கட்டுரை மீண்டும்  ஜுன் 19 ம் திகதி மீண்டும் பிரசுரமாகிறது.
நடேசன்

என் எஸ் நடேசன்

நமது வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமானவர்களை சந்திக்கிறோம்.பழகுகிறோம்.  பிற்காலத்தில் ஒவ்வொருவரும் வேறு வழிகளில் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். இவ்வாறு பழகியவர்களில் பலரது நினைவுகளை நினைவு கூருகிறோம். சிலரது நினைவுகளை நண்பர்களுடன் பரிமாறுகிறோம். சொற்பமானவர்களைப் பற்றி பலர் கூடும் நிகழ்வுகளில் பேசுகிறோம். ஒரு சிலரின் நினைவுகளை புத்தகங்களில் பதிப்பித்து பாதுகாக்கின்றோம். காரணம் வருங்கால சமூகத்திற்கும் இவர்களது எண்ணங்கள், சிந்தனைகள் தேவையானது என கருதிய காரணத்தால்.

சமீபத்தில் இப்படி ஒரு பணியை திறம்பட செய்தவர் நண்பர் புஸ்பராஜா. பிரான்ஸில் வசிக்கும் இவர் “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற தனது நனைவோடை நினைவுகளைப் புத்தகமாக்கி இருக்கிறார். இவர் தனது நண்பன் பத்மநாபாவுடைய தொடர்புகளையும் செயல்களை 70ம் ஆண்டு காலத்திலிருந்து பதிவு செய்துள்ளார்.

சென்னையில் பத்மநாபாவுடன் பழகிய அந்த மூன்று வருடங்கள் மறக்க முடியாதவை. நான், நானாக இருப்பதற்கு அஸ்திவாரம் இட்ட காலங்கள். அந்தக் காலங்களில் பத்மநாபாவை ரஞ்சன் என்றே அழைப்பேன். மற்றைய EPRLF இனர் இருக்கும் போது ரஞசன் தோழர் என்பேன். தோழர் என்ற வார்த்தை சங்கடத்துடன்தான் வெளியே வரும். காரணம் நான் EPRLF அங்கத்தவனல்ல. அதே வேளை இடதுசாரி இயக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவனோ இல்லை.

என்னைப்போல் இலங்கை, இந்தியாவில் ஏராளமானவர்கள் பத்மநாபாவின் நண்பர்கள். சிங்களவர், மலையகத்தமிழர், தமிழ்நாட்டினர், இஸ்லாமியர் என இன, மத, மொழி வேறுபாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களுடன் நட்புறவு கொண்டவர். எனது பார்வை, வாசிப்புகளுக்கு உட்பட தமிழ்நாட்டில் இரண்டு பேர் LEGENDS என என்னால் பார்க்கப்படுவார்கள். பத்திரிகையாளர் சோ ராமசாமி, எழுத்தாளர் ஜெயகாந்தன். இவர்கள் இருவரும் கொள்கைகளிலும், வாழ்க்கைகளிலும் எதிரும், புதிருமானவர்கள் கடந்த ஜம்பது வருடத்தில் இவர்கள் இன்றி தமிழ்நாட்டு சரித்திரம் எழுதமுடியாது. இப்படியான இருவரும் பத்மநாபாவின் நண்பர்கள்.

தனிப்பட்ட முறையில் பத்மநாபாவுடனான பல சம்பவங்களை நான் நினைவு கூறமுடியும். இதில் முக்கியபாக நான் கருதும் சமபவம் ஒன்று பத்மநாபாவின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டுவது.

86ம் ஆண்டு மே மாதம் இருபத்தியாறாம் திகதி ரெலோ சிறிசபாரட்ணம் இறந்த நாளாகும். இதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது.

இரவு பத்து மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள EPIC தகவல் நிலையத்தருகே TVS 50 இல் சென்று கொண்டிருந்த போது பத்மநாபாவைக் கண்டதும் வண்டியை நிறுத்தினேன். தனிமனிதராக நடந்து வந்து கொண்டிருந்தார்.

“ரஞ்சன், ரெலோவிற்குள் பிரச்சனை போலிருக்கு, தாஸிற்கும் பொபிக்கும் நல்லா இல்லை போலிருக்கு? (ரெலோவின் ராணுவ பொறுப்பாளர் இருவரும்).

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” வருகிறீர்களா சிறியிடம் போவோம்?

“ஓம்” என தலையசைத்ததும் உடனே எனது TVS 50 இல் ஏறிவிட்டார் பத்மநாபா. எங்கள் TVS 50 மெதுவாக சென்றது. போகிற வழியில் கேட்டேன் பாதுகாப்புக்கு ஏதாவது ஆயுதம் உள்ளதா?

“இல்லை. தோழர். நாம் ஏன் பயப்பட வேண்டும்?

அப்பொழுது எனது இதயத்துடிப்பு இரு மடங்காகியது. ஏற்கனவே இயக்கங்கள் இந்திய மண்ணில் சகோதர கொலைகள் செய்து விட்டிருந்தார்கள். இந்த மனிதன் தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை, இதில் நானும் மாட்டிக் கொண்டேனே என உள்ளே எண்ணிக் கொண்டு, ரெலோ அலுவலகம் இருந்த சாலிக்கிராமம் சென்றோம்.

இரவு பத்தரை மணியிலிருந்து விடியற்காலை நான்கு மணிவரையும் பத்மநாபாவும் சிறிசபாரத்தினமும் பேசினார்கள். பேசியதில் முக்கியபாக பத்மநாபா சிறியிடம் “உங்கள் உட்பிரச்சனையை பேசி தீருங்கள்” என்பதுதான். அமைதியாக தலையாட்டியபடி கேட்ட சிறிசபாரத்தினம் அன்று விடியற்காலையில் வேதாரணியம் கரைக்கு சென்றார்.

யாழ்ப்பாணம் சென்ற சிறிசபாரத்தினம் தாசை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கொலை செய்ததும் பின்பு சிறியுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களை புலிகள் சுட்டுக் கொன்றதும் சரித்திரமான சம்பவங்களாகும்.

இதே போல இராணுவப் பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் தேவானந்தா பிரிந்து செல்லும் போது EPRLF அங்கத்தினருக்குள் கொதிப்பு உணர்வுகள் உருவாகியது. இரண்டு பகுதியிலும் ஏற்பட்ட மனக்கசப்புகளை நேரில் பார்த்தேன். எந்த ஒரு சிறிய வன்முறையும் ஏற்படாது பிரிவு ஏற்பட்டதை நான் பார்க்க முடிந்தது.

இப்படி மற்ற இயக்க பிரிவுகளில் மட்டும் அல்ல, தனது இயக்கத்தில் பிரிவுகள் ஏற்பட்ட போது வன்முறை ஏற்க மறுத்தவர் பத்மநாபா.

சிட்னியில் நான் இருந்தபோது பத்மநாபாவின் கொலை சம்பவம் தெரிந்து கண்ணீர் விட்டு அழுதேன். பத்மநாபாவோடு கொலை செய்யப்பட்ட கிருபாகரன், யோகசங்கரி என்பவர்கள் எனது கல்லூரித்தோழர்கள் என்பதும் காரணமானது.

கடந்த இருபதாம் நூற்றாணடில் உலக அரசியலில் நான் மதிக்கும் மூவர் இந்தியாவில் மோகனதாஸ்காந்தி, தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, கியூபாவில் (ஆஐன்ரீனாவில் பிறந்த) ஏனெஸ்ரோ சேகுவரா போன்றவர்கள். வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியான இந்த மூவர் எமது மட்டக்களப்பிலோ, யாழ்ப்பாணத்திலோ பிறந்திருந்தால் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிட்சயமாக கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.வன்முறைக்கு பலியாகியிருப்பார்கள். இப்படியான சிந்தனையின் பின் என் மனம் ஆறுதலடைந்தது.

நான் பழகிய நாட்களில் அவதானித்த முக்கிய ஒரு விடயம் பத்மநாபா ஒரு தூய ஜனநாயகவாதி. நான் பல தமிழ் அரசியல்வாதிகள், இயக்கத்தை சேர்ந்தவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத்தில் பல தரப்பட்டவர்களுடன் பழகி வந்துள்ளேன். ஜனநாயகத்தில் பத்மநாபா போல நம்பிக்கை கொண்ட ஈழத்தமிழர் ஒருவரைக் காணவில்லை இக்காரணங்களுடன் சமூகத்தின் சார்பாக பல வருட முன்னோக்கிய சிந்தனையும், முடிவெடுத்த தன்மையும் பத்மநாபாவின் தவறுகளாக அமைந்தது. கற்களும், முட்களும் நிறைந்த சதுப்பு நிலத்தில் ரோஜாவாக பூத்த காரணத்தால் அழிக்கப்பட்டிருக்கலாம் என ஆறுதலடைகிறேன்.

புத்மநாபா இறந்த பதினைந்து வருட நினைவுக்கூட்டம் மெல்பேணில் யூலை 25ம் திகதி நடைபெற்ற போது பேசிய உரையின் சாரம்.

நன்றி உதயம் அஸ்திரேலியா

July 2005

“பத்மநாபாவின் நினைவுகள்” அதற்கு 3 மறுமொழிகள்

  1. பத்மநாபாவின் இரங்கல் கூட்டத்தில் ஜே கே புலிகளுக்கும் அன்றே இரங்கல் கூறுவதை நினைத்து பார்கிறேன்

  2. தோழர் நாபாவைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அவரது நற் செயல்களைப்பற்றி எழுதுவதை பார்க்கும் போது மகிழ்சியாக உள்ளது அத்தோடு பழைய நினவுகளையும் மீட்டுப்பார்க்கின்றேன் நன்றிகள் திரு.நடேசன் அவர்கட்கு

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.