டாக்டர் சச்சிதானந்தன் பழனிசாமி -மறைவுக்கு அஞ்சலி

1988ஆம் ஆண்டளவில், நாங்கள் உற்சாகத்துடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளுக்காக மருத்துவத் தொண்டு செய்து கொண்டிருந்தோம். அந்தக் காலத்தில், தமிழர் மருத்துவ நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர் டாக்டர் சியாமளா மட்டுமே. அப்போது, ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் பத்மநாபா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் டாக்டர் சச்சிதானந்தன் பழனிசாமி, அன்பாக டாக்டர் போஸ் என்று அழைக்கப்பட்டவர். மலையகப் பகுதிகளில் வைத்திய அதிகாரியாக பணியாற்றியிருந்த இவர், 1983 கலவரங்களில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர்; இரு குழந்தைகளின் தந்தை.

“எங்களால் அதிகளவு சம்பளம் வழங்க முடியாது. சிறிதளவு உதவித்தொகை மட்டுமே தர முடியும். அதை உங்களுக்கான சம்பளமாக எண்ண வேண்டாம். ஆனால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்,” என்று நான் கூறினேன். அதற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் இணங்கி, அவர் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.

டாக்டர் போஸும்,  நண்பரான டாக்டர் சிவநாதனும், இரவு பகல் பாராமல், பேரார்வத்துடன் பணியாற்றிய காலம் அது. வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, சேவையே இலக்காகக் கொண்டு வாழ்ந்த அந்த நாட்கள் இன்னும் மனதில் பசுமையாக நிலைத்திருக்கின்றன.

டாக்டர் போஸை நினைக்கும் போது, ஒரு சிறிய விஷயம்  மனதில் தெளிவாக நிற்கிறது. நான் மற்றும் சிவநாதன் போன்றோர் சென்னை வெயிலும் புழுதியும் மத்தியில் அரைச்சட்டையும், பெனியனும். ரப்பர் செருப்பும் அணிந்து இருந்த காலத்தில், டாக்டர் போஸ் மட்டும் எப்போதும் சீராக மடிப்புக் கலையாத முழுக்கை சட்டையுடன், அதையும் முழு நீளமாக அணிந்திருந்தார். அது எங்களுக்கு ஒரு விதமான பொறாமையை உண்டாக்கியது. மலையகத்தின் குளிரான சீதோஷ்ணத்தில் பழகியிருந்த போதிலும், சென்னை வெயிலிலும் சிரித்த முகத்துடனும், கண்ணியமான தோற்றத்துடனும் எம்மிடையே அவர் நடமாடிய விதம் மறக்க முடியாதது.

காலம் எங்களை பல திசைகளில் சிதறடித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, மரினா கடற்கரையில் எனது பிள்ளைகளுடன் எடுத்த புகைப்படத்தை எனக்கு அனுப்பியிருந்தார். இன்று, அவரது மறைவை வெறும் இழப்பாக மட்டும் நினைக்கவில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கையும் செய்த பணிகளும் என்றும் எங்கள் நினைவுகளில் நிலைத்திருக்கின்றன அவரது குடும்பத்தினரின் துயரில் நான் பங்கெடுக்கிறேன். இந்தச் செய்தியை என்னிடம் தெரிவிக்கத் தொடர்பு கொண்ட கல்யாணந்திக்கு என் அன்பும் நன்றியும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.