நினைவில் விடை கொடுக்க முடியாத அரவிந்தன்.

நேற்று மதியம் அரவிந்தன் இறந்ததாக வந்த முகநூல் செய்தி என்னை மிகவும் பாதித்தது. பத்து ஆண்டுகளாக தொடர்பில் இருந்தாலும், இந்த ஆண்டு ஜனவரியில் காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சிக்கு சென்றபோதுதான் அவரை நேரில் சந்தித்தேன். காலச்சுவடு கண்ணன் அருகில் இருந்த அவர், எனக்கு அமர இடம் தந்தார்.

அவரை நெருக்கமாக கவனித்தபோது, மிகவும் இளமையானவராகத் தோன்றினார். சில காலத்திற்கு முன் அவரது சிறுகதையை நான் பாராட்டியிருந்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன் கண்ணன் மூலம் அறிமுகமான பிறகு, எனது “மிருக வைத்தியக் கதைகள் தான் வாழும் சுவடுகள்” என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு (Veterinary Vignette)வெளிவர அவரே உதவினார். அதன் பின்னர் “கானல் தேசம்” நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து( Odyssey of war ) வெளியிட அவர் துணை நின்றார்.

தொலைபேசியில் பேசும்போது, சொற்களை அளந்து பேசுவார். சமீபத்தில் காலச்சுவடிலிருந்து வெளிவரவிருந்த எனது “நாலுகால் சுவடுகள்” நூலின் வடிவம் மற்றும் முன்னுரை குறித்து என்னுடன் பேசினார்.

தனிப்பட்ட முறையில் அதிகம் அறிமுகம் இல்லாவிட்டாலும், என் வாழ்நாளில் சந்தித்த, நான் கடமைப்பட்ட கண்ணியமான மனிதர்களில் ஒருவராக அவரை நினைக்கிறேன். மனத்தில் இருந்து விடை கொடுக்க முடியாதவராக இருந்த அவரின் மறைவு என்னை ஆழமாக பாதிக்கிறது. அவரது குடும்பத்தினரின் துயரில் நான் பங்குகொள்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.