




கரிபியன் பயணத்தில் என் மனத்தில் ஆழமாக பதிந்த தீவுகளில் முக்கியமானது பார்படோஸ். அங்கு உள்ள பிரதமர் (Mia Mottley) பற்றி முன்பே தெரிந்து வைத்திருந்தேன். காலனித்துவத்திற்கும், இன்றைய மேற்கத்திய ஆதிக்க அரசியலுக்கும் எதிராக அவர் பேசும் தீவிரமான ஆங்கில உரைகள் பல இடங்களில் என்னை கவர்ந்தவை. அதனால் எப்போதும் நான் அவரின் ரசிகன் என்று சொல்லிக்கொள்ளலாம்.
பார்படோஸுக்கு சென்ற பிறகே, அந்தத் தீவில் பெண்களே பிரதமர், ஜனாதிபதி, சபாநாயகர் ஆகிய முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
அதற்கு மேலாக, உலகக் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் ஒருவரான Garfield Sobers பிறந்த நாடு இதுவென்ற பெருமையும் உண்டு. அவரைப் பற்றி வழிகாட்டி பெண்ணிடம் கேட்டபோது, அவர் சுமார் 90 வயதில் இருப்பதாக கூறினார்கள்.
ஆரம்பத்தில் பார்படோஸ் ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் பிரித்தானியர்கள் கைப்பற்றி, சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய ஆப்பிரிக்க அடிமைகள் இங்கு கொண்டு வரப்பட்டனர். இது, இலங்கையில் கோப்பித் தோட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து தமிழர்கள் கொண்டு வரப்பட்ட வரலாறை நினைவூட்டியது.
ஒரு நாள் எங்களை அக்கால வெள்ளை முதலாளியின் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். மற்றவர்களுக்கு அது புதுமையாக இருந்தாலும், அந்த மாளிகையின் தளபாடங்கள், சமையலறை, உணவறை, குழந்தைகள் அறை, படுக்கையறை அனைத்தும் எனக்கு மலையகத் தோட்டங்களில் நான் ஏற்கனவே பார்த்த காட்சிகளின் பிரதியாகவே தோன்றின.
பார்படோஸில் உள்ள ஒரு அழகிய தாவரவியல் பூந்தோட்டம் பேராதனையை நினைவூட்டியது. அந்தத் தோட்டத்தை கடக்கும் போது, காய்களுடன் நிற்கும் ஒரு முருங்கை மரம் என் கவனத்தை ஈர்த்தது. அதை படம் எடுத்து வழிகாட்டியிடம் காட்டி, “இதை இங்கே சாப்பிடுவார்களா?” என்று கேட்டபோது, “இல்லை” என்ற பதில் வந்தது.
ஆப்பிரிக்காவில் முருங்கை பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று படித்த நினைவு இருந்தது. அதேபோல் கரிபியனிலும் அவர்கள் முருங்கையை உண்பதில்லை என்பதையும் அப்போது தெரிந்து கொண்டேன்.
சென்ட் மார்ட்டின் (Saint Martin)
இந்த தீவு அரசியல் ரீதியாகவே ஒரு விசித்திரம். தீவின் மூன்றில் இரண்டு பங்குகளை பிரான்ஸ், மீதியை நெதர்லாந்து ஆளுகிறது. இது எப்படி நடந்தது என்று கேட்டபோது, வழிகாட்டி சொன்ன கதை சுவாரசியமானது.
இரு நாடுகளின் கப்டின்கள் செய்த ஒப்பந்தத்தின் படி, “யார் அதிகமான நிலப்பரப்பை நடந்து கடக்கிறார்களோ, அந்தப் பகுதி அவர்களுக்குச் சொந்தம்” என்ற உடன்பாடு ஏற்பட்டதாம். பிரான்சியர் நிதானமாக நடந்தார்கள்; டச்சுக்காரர்கள் குடித்துவிட்டு நடந்ததால் குறைந்த தூரமே சென்றார்கள் — அதனால் அவர்களுக்குக் கிடைத்தது சிறிய பகுதி!
இந்தக் கதை உண்மையா இல்லையா என்றாலும், ஐரோப்பியர்கள் கரிபியன் தீவுகளை எவ்வளவு அலட்சியமாக கைப்பற்றினார்கள் என்பதை அழகாக விளக்குகிறது.
இங்குள்ள பொருளாதாரம் முழுவதும் உல்லாசப் பயணத்தை நம்பியே உள்ளது. ஒரே நாளில் ஆறு கப்பல்கள் வருமளவுக்கு துறைமுக வசதி உள்ளது.
பிரான்சியப் பகுதியில் பிரெஞ்சு மொழியும், டச்சுப் பகுதியில் டச்சு மொழியும் முக்கியமானவை.
ஆச்சரியமான சில வேறுபாடுகளும் உள்ளன:
பிரான்சியப் பகுதியில் காசினோ அனுமதி இல்லை;
டச்சுப் பகுதியில் காசினோ உள்ளது;
பிரான்சிய கடற்கரைகளில் நிர்வாணமாக நடமாட அனுமதி உண்டு;
டச்சுப் பகுதியில் அதற்கு அனுமதி இல்லை.
செயிண்ட் லூசியா (St Lucia)
சிறிய தீவு தான் — ஆனால் அளவில்லாத அழகு. இங்கு சென்றதும் என் நினைவுக்கு வந்தவர் கிரிக்கெட் வீரர் Darren Sammy. மேற்கிந்திய தீவுகளின் அணித் தலைவராக இருந்தவர்; தற்போது பயிற்சியாளராகவும் செயற்படுகிறார்.
இந்த தீவின் ஒரே சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அவரின் பெயரே வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1000 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகளுக்கு செல்ல முடியாவிட்டாலும், பல இடங்களில் காணப்படும் பசுமையும் செழிப்பும் மனதை நிறைத்தது.
கடற்கரைகள் நிறைந்த இந்தத் தீவில், உல்லாசப் பயணத் துறையே பிரதான வருமானம். சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு இது முக்கிய வாழ்வாதாரம்.
ஒரு சிறிய வாகனத்தில் பயணித்தபோது, ஒருபுறம் அமைதியான கரிபியன் கடல், மறுபுறம் அலைவீசும் அத்திலாந்திக் பெருங்கடல் — இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தது.
பெரும்பாலானோர் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். வூடூ, மந்திரவாதம் போன்ற நம்பிக்கைகள் இன்னும் சில பகுதிகளில் உயிருடன் உள்ளன.
இந்த தீவு பிரான்சும் பிரித்தானியாவும் மாறிமாறி ஆட்சி செய்ததால், இரு நாடுகளின் கலாச்சாரத் தாக்கமும் தெளிவாகப் புலப்படுகிறது. பள்ளிகளில் ஆங்கிலமும் பிரெஞ்சும் கற்பிக்கப்படுகின்றன. மக்கள் பேசுவது பிரெஞ்சு கலந்த கிரேயோல் மொழி. சமீப காலமாக மாண்டரின் மொழியும் கற்பிக்கப்படுகிறது என்று அறிந்தேன்.
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது — இந்தச் சிறிய தீவிலிருந்து இரு நோபல் பரிசு பெற்றவர்கள் உருவானது. அதில் ஒருவர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற Arthur Lewis. அவரின் பெயரில் அமைந்த பள்ளியையும் பார்க்க முடிந்தது.
மழைக்காலம் என்பதால், சில நாட்களில் மழை காரணமாக திட்டமிட்ட இடங்களைப் பார்க்க முடியாமல் போனது.
டோர்டோலா – பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands)
இறுதியாக சென்ற தீவு Tortola — பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் மிகப்பெரிய தீவு. மலைப்பாங்கான சிறிய தீவு இது.


பிரித்தானியருக்குச் சொந்தமான பகுதி என்றாலும், இங்கு அமெரிக்க டாலரே பயன்படுத்தப்படுகிறது.
சுமார் 25,000 பேர் மட்டுமே வசித்தாலும், விடுமுறைக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே இத்தீவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.
இது ஒரு சர்வதேச நிதி மையமாக (offshore / fintech hub) விளங்குவதால், பலர் இங்கு நிரந்தரமாக வாழாதபோதிலும், பணப்பரிவர்த்தனை தொடர்பான காரணங்களுக்காக அடிக்கடி வருகிறார்கள்.
பல உல்லாசப் படகுகளை இங்கு பார்க்க முடிந்தது.
எனக்கு மிகவும் பிடித்தது — இந்த தீவின் வரலாறு சுவரோவியங்களாக வரையப்பட்டிருந்தது. அது சுற்றுலாவை மட்டும் அல்ல, நினைவுகளையும் பேசவைத்தது.
பின்னூட்டமொன்றை இடுக