


இம்முறை கரிபியன் கடலில் உள்ள நெதர்லாந்துக்குச் சொந்தமான Curacao (குரோசா) தீவில் நடந்த ஒரு சம்பவம், என் வாழ்வில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு அனுபவத்தை நினைவூட்டியது.
கடற்கரை அருகே அமைந்திருந்த ஒரு சிறிய குகைக்குச் சென்றபோது அந்த நினைவு எழுந்தது.
நான் கூறப்போகும் அந்த பழைய சம்பவம் 1980-களின் ஆரம்ப காலத்தில் நடந்ததாக நினைக்கிறேன். அப்போது நான் மதவாச்சியில் மிருகவைத்தியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எங்கள் ஊரான எழுவைதீவில் உள்ள முருகன் கோயிலின் மூலஸ்தான வேலில், முருகனின் முகம் தெரிகிறது என்ற செய்தி பரவியதும், யாழ்ப்பாணத்திலிருந்து ஏராளமான மக்கள் வள்ளங்களில் ஏறி எழுவைதீவுக்கு வந்தார்கள். எழுவைதீவின் வரலாற்றில், அவ்வளவு மனித பாதங்கள் மணலில் பதிந்த காலம் அதுவே எனலாம்.
அந்த நேரத்தில் நான் மதவாச்சியில் பணியில் இருந்தாலும், ஊர்காரனான நான் போகாமல் இருக்க முடியுமா? அது அடுக்குமா?
என் பாடசாலை நண்பன் ஜெயகுமாருடன் சேர்ந்து நான் எழுவைதீவுக்குச் சென்றேன். கோயிலின் கர்ப்பகிரகத்தில் இருந்த வேலைப் பார்ப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். கண்ணிலும் கைகளிலும் ஒற்றி வணங்கினர்.
அவர்களுடன் நானும் வரிசையில் நின்று பார்த்தபோது, எனக்குத் தெரிந்தது வெண்கலத்தில் ஒளிவிடும் வேல் மட்டுமே. அதுவரை என் மனத்தில் முருகன் என்றால், கந்தன் கருணையில் நடித்த நடிகர் சிவகுமாரது முகமே.
மற்றவர்களுக்கு முருகன் எந்த முகத்துடன் அறிமுகமாகியிருந்தாரோ எனக்குத் தெரியாது. இந்தியாவுக்கு தலயாத்திரை சென்ற என் தந்தை கொண்டு வந்த சிவகாசி காலண்டரில், சோபகிருது வருடம் முழுவதும் குழந்தை முருகன் உருவம் எங்கள் வீட்டில் தொங்கிக் கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் பார்த்துவிட்டு, நான் வரிசையில் நின்றபடியே
“எனக்கு ஒரு முகமும் தெரியவில்லை”
என்று சொன்னேன்.
அப்போது என்னைப் பின்னால் நின்ற ஒரு அக்கா முறையானவர், என் முதுகில் பலமாக குத்தி,
“நம்பிக்கை இல்லாத உனக்கு எப்படித் தெரியும்?”
என்று சொல்லி, என்னை வரிசையிலிருந்து தள்ளிவிட்டார்.
அன்று நான் நண்பனுக்கு எழுவைதீவைச் சுற்றிக் காட்டிவிட்டு, யாழ்ப்பாணம் திரும்பிவந்தேன்.
அதேபோன்ற ஒரு அனுபவம் இம்முறை கரிபியன் கடலில் உள்ள குரசா(Curaçao) தீவிலும் நடந்தது.
கடற்கரை அருகே உள்ள அந்தக் குகைக்குச் செல்ல சுமார் 60 படிகள் மேலே ஏறவேண்டும். உள்ளே சென்றபோது பல சிறு குகைகள், அங்குமிங்கும் பறந்த வவ்வால்கள்—எல்லாம் சேர்ந்து ஒரு மர்மமான சூழல்.
ஒருகாலத்தில் அந்தக் குகை கடலுக்குள் இருந்ததாம். பவளப்பாறைகளிலிருந்து சுண்ணாம்பு ஒழுகி, தூண்களாக உறைந்திருந்தது. இப்படிப் பல குகைகளை நான் வேறு இடங்களிலும் பார்த்துள்ளேன்.
எங்களை அழைத்துச் சென்ற இளைஞன் விளக்கங்களைச் சொல்லிவிட்டு, இறுதியில்: “இந்தக் குகையைப் பார்க்க உங்களுக்கு கற்பனை வேண்டும்”என்றான்.
அந்த வார்த்தைகளின் பொருள் எனக்கு உடனே புரியாவிட்டாலும், நாவல்–சிறுகதை எழுதிய நான் அறியாத கற்பனையா? என்று நினைத்தபடி குகைக்குள் சென்றேன்.
அப்போது ஒரு இடத்தில் லைட்டை அடித்துக் காட்டி,
“இங்கு கன்னி மரியாள் உருவம் தெரியிறதா?”
என்று கேட்டார்.
அதிசயமாக, எனக்கும் சுண்ணாம்பு படிவத்தில் ஒளிவிழும்போது அது தெரிந்தது.
நமக்கு நாகராஜன் (A. P. Nagarajan), சிவாஜி கணேசனை சிவனாக்கியதுபோல், கன்னி மரியாளை உலகமெங்கும் பிரபலமாக்கியது லியனடா டாவின்சி(Leonardo da Vinci) உருவாக்கிய சிற்பங்களே.
கடந்த வருடம் பெல்ஜியத்தின் புருஜ்(Bruges) நகரில், இயேசுவை பாலகனாகச் சுமந்த மேரியின் பளிங்குச் சிற்பத்தை நான் நேரில் பார்த்தேன். அந்தச் சிற்பத்தின் அழகு என்னை மெய்மறக்கச் செய்தது.
அதே பெத்தலேகத்தில் அறிமுகமான மேரியே என எண்ணி, சுண்ணாம்பில் இயற்கை பல மில்லியன் ஆண்டுகள் முன்பே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த மேரியைச் செதுக்கியிருப்பதாக நான் அதிசயித்தேன்.
குகையை விட்டு வெளியே வந்த அனைவரும், பெத்தலேகத்தில் யோசப்–மேரியின் பக்கத்து வீட்டார்கள் போல,“ஆமாம்” என்று தலையாட்டினார்கள்.
கடவுளை மனித உருவில் காணும் மகிழ்ச்சியை, சிற்பிகள், ஓவியர்கள், சினிமாக்காரர்கள் மட்டுமல்ல; உல்லாசப் பயணத் துறையும் நன்கு பயன்படுத்துகிறது. நமது நடு மூளையின் உணர்வுகளை அவர்கள் சுரண்டுகிறார்கள். நாமும் ஆடு-மாடுகளைத் தடவும்போது அடையும் இன்பத்தைப் போல, அதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்தக் குகையைவிட, குரோசாவின் அருங்காட்சியகத்தில் இருந்த கரிலியோன் (Carillon) என்ற சங்கீதக் கருவி என்னை அதிகமாக வியக்க வைத்தது. உலகில் தற்போது சுமார் 500 மட்டுமே உள்ள இந்தக் கருவியை, எங்கள் வழிகாட்டிப் பெண் இசைத்தபோது, எந்த சங்கீத அறிவும் இல்லாத என்னையும் அது மெய்மறக்கச் செய்தது.
அதில் மூன்று விதமான ஒலிகள்—
மேலே உள்ள மணிகள் முழங்கும் வலிமையான ஓசை,
கையால் இசைக்கப்படும் பியானோ போன்ற ஒலி,
காலால் உருவாகும் இடைநிலை இசை.
நாங்கள் சென்ற அடுத்த தீவு அரூபா(Aruba) என்பதும் டச்சுக்காரர்களின் இன்னொரு கரிபியன் தீவு.



அங்கு எங்களைச் சுற்றுலா அழைத்துச் சென்ற பஸ் ஓட்டுநர் சொன்ன கதை என்னை உண்மையிலேயே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரின் 22 வயது மகன் மியாமியில் படிக்கும் போது, ஒரு கண் பார்வை மங்கியது. பரிசோதனையில், கண் விழியத்தின் பின்புறம் கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது. உடனடி சிகிச்சை தேவைப்பட்டது.
சிகிச்சைச் செலவு 80,000 அமெரிக்க டாலராக உயர்ந்தது. அருபாவிற்கு திரும்பியதும் அரசின் சுகாதார சபையை அணுகினர். அவர்கள் முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டனர்.
“இதற்கு மேல் எங்களுக்கு என்ன வேண்டும்?”
என்று அவர் சொன்னபோது, நான் போன எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட நிகழ்வை கேள்விப்பட்டதே இல்லை என்று உணர்ந்தேன்.
அருபா ஒரு சிறிய தீவு. மூன்றரை மணி நேரத்தில் முழுத் தீவையும் சுற்றிவிடலாம். ஒரு லைட்ஹவுஸ், இரண்டு தேவாலயங்கள், பாறைகள் சூழ்ந்த கடற்கரை—அவ்வளவுதான்.
கிழக்கு பகுதி பாலைவனம் போன்றது; அதனால் ‘கரிபியன் பாலைவனம்’ என அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதி முழுவதும் உல்லாசப் பயணிகளுக்கான பெரிய ஹோட்டல்கள் வரிசையாக உள்ளது .
மாதத்திற்கு சுமார் 45 உல்லாசக் கப்பல்கள் வருமாறு துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. நேரடியாக வருபவர்களையும் சேர்த்து, ஆண்டுக்கு ஒன்றரை மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்—அவர்களும் பெரும்பாலும் கடற்கரைக்காக.
இங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள். நெதர்லாந்தின் ஆட்சியில் இருந்தாலும், தனிப் பாராளுமன்றம், தனிப் பணம், தனி மத்திய வங்கி—எல்லாம் அவர்களுக்கே.
ஒரு நாட்டை ஒழுங்காக நிர்வகித்தால், இயற்கை வளமோ பெரிய உற்பத்தியோ இல்லாமல்கூட வளமாக வாழ முடியும் என்பதை அருபா எனக்கு உறுதியாக உணர்த்தியது.
பின்னூட்டமொன்றை இடுக