



சுமார் 150 முதல் 100 கிலோமீட்டர் நீளமும் அகலமும் கொண்ட இந்தப் பிரதேசத்தில், புற்களை விலக்கிக் கொண்டு வாகனங்கள் செல்லும் காட்சிகளை ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். தற்போது இந்த எவர்கிளேட் பகுதி **UNESCO**வால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரியப் பகுதியாக இருப்பதால், இனி இங்கு பெரிய மாற்றங்கள் வராது என நம்பலாம். நான் பார்த்த அமெரிக்க நகரங்களில் தொடர்ச்சியாகப் பெரும் கட்டிட வேலைகள் நடைபெறும் நகரமாக Florida மாநிலத்தில் உள்ள மியாமியே எனக்குத் தோன்றியது.
மியாமியில் எங்கள் கப்பல் நின்றபோது, நான் விரும்பிப் போன இடம் எவர் கிளேட் தேசியப்பூங்கா(Everglades National Park) ஆகும். இது நன்னீர் சதுப்பு நிலங்களால் ஆன ஒரு விசித்திரமான உலகம். இங்கு தண்ணீரின் மேல் உயர்ந்து நிற்கும் புற்கள், நீரின் மேற்பரப்பை மறைத்தபடி பரந்து விரிந்து காணப்படும். இந்த நீர் அமைப்பு முதலில் ஆறுகளாகத் தோன்றி, பின்னர் விரிந்த சதுப்பு நிலங்களாக மாறி, இறுதியில் தென் Miami பகுதியில் கடலில் கலக்கிறது.
எவர்கிளேட்டில் அலிகேட்டர்களைப் பார்த்த திருப்தியுடன், அங்குள்ள ஒரு சரணாலயத்திற்கும் சென்றோம். வீடுகள், தெருக்கள், மனிதர்கள் வாழும் இடங்களில் நடமாடிய அலிகேட்டர்களை பிடித்து இங்கு பாதுகாத்து பழக்கி வைத்திருந்தனர்.
இந்த இடத்திற்கு நான் போக விரும்பியதற்கான முக்கிய காரணம், இங்கு வாழும் அலிகேட்டர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான். ஃபுளோரிடாவில் அலிகேட்டர்களும் முதலைகளும் வாழ்கின்றன. அலிகேட்டர்கள் அமெரிக்காவைத் தவிர சீனாவில் யாங்சி நதிக்கரையில் மட்டுமே காணப்படுகின்றன. முதலைகளைப் போல அல்லாமல், அலிகேட்டர்கள் நன்னீரில் மட்டுமே வாழ்வவை. வட அமெரிக்காவின் தென் மாநிலங்களான ஃபுளோரிடா, லூசியானா போன்ற இடங்களில், வீட்டு வளவுகளுக்குள்ளேயே அவை வந்து போவதாக செய்திகளில் நாம் படித்திருப்போம்; தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்போம்.
முதலைகளுடன் சகோதர உறவுடையவையாக இருந்தாலும், அலிகேட்டர்கள் அவற்றைப் போல மிகுந்த ஆக்கிரோசமான தன்மை கொண்டவை அல்ல. யானைகளைப் போல உணவு கொடுத்தால் பழக்கப்படுத்த முடியும் என்பதும் ஒரு சுவாரசியமான உண்மை.
இந்த எவர்கிளேட் நீர் நிலைகளில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட அலிகேட்டர்கள் இருப்பதால், ஒன்று இரண்டையாவது காணலாம் என்ற நம்பிக்கையுடன், சுமார் ஒரு மணி நேரம் இயந்திரப் படகில் சுற்றினேன். அந்தப் பயணம் மிகுந்த சந்தோசத்தை அளித்தது—கடலோர சதுப்பு காடுகளின் வழியே பயணம் செய்த அனுபவம் போல இருந்தது.
இந்தச் சுற்றுலாவில் இரண்டு அலிகேட்டர்களை சந்தித்தேன். அவற்றின் தலைகள் மட்டுமே நீரின் மேல் தெரிந்தன. அலிகேட்டர்கள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே மூச்செடுப்பவை. மூச்செடுக்கும்போது மட்டுமே அவை நீரின் மேல் தோன்றும். அவற்றின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 2–3 முறை மட்டுமே இருக்கும்.
குறைந்த இதயத் துடிப்பும் சுவாசமும் கொண்ட உயிரினங்கள் நீண்ட காலம் வாழும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. உயிர்களின் ஆயுள், ஆண்டுகளால் அல்ல; சுவாசத்தின் எண்ணிக்கையால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதே என் எண்ணம். இதற்கு விஞ்ஞான விளக்கம் எனக்குத் தெரியாது. ஆனால் முயல்கள் இரண்டு வருடங்கள் மட்டுமே வாழ்வதும், முதலைகள் 150 ஆண்டுகள் வரை வாழ்வதும், இந்தக் கருத்துக்கு ஆதாரமாகத் தோன்றுகிறது.
எங்களுக்கு இரண்டு அலிகேட்டர்களைக் காட்டியதும், படகோட்டியின் கடமை முடிந்துவிட்டது என்ற திருப்தியில் அவர் எங்களை கரை சேர்த்துவிட்டார்.
இந்த அலிகேட்டர்கள் நீருக்குள் பொந்துகள் அமைத்து வாழ்வதுடன், அங்குள்ள சிறிய உயிரினங்களை உண்பதன் மூலம் இயற்கைச் சூழல் சமநிலையை பாதுகாக்கின்றன. சுமார் 250 கிலோ உடல் எடையைக் கொண்ட இவற்றுக்கு, ஒரு பலாக்கொட்டையளவு மூளை மட்டுமே இருப்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.
பல்வேறு உடல் அளவுகளில் அவை மெதுவாக அசைந்தபடியும், உணவை நோக்கி நகர்ந்தபடியும் இருந்தன. மதியம் என்பதால் சில கண்களை மூடி சயனித்தபடியே இருந்தன. அவை இரண்டு விதமாக நகரும்—சில நேரங்களில் வயிற்றை நிலத்தில் உரசியபடி மெதுவாகச் செல்லும்; தேவையானபோது வயிறு நிலத்தில் படாமல், கால்களால் வேகமாக ஓடும். கோழிகள்போல் இரண்டு வயிறுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது; அதில் முதலாவது வயிறு உணவை அரைக்க உதவுகிறது.
நாங்கள் பார்த்த அலிகேட்டர்கள் மனிதர்களை நோக்கி எந்த ஆக்கிரரோசமான தன்மையும் காட்டவில்லை. ஒருவர் அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதை விளக்கிக் கொண்டிருந்தபோது, மற்றொருவர் ஒரு பெரிய அலிகேட்டரின் வாயை—நாய்களின் வாயைப் பரிசோதிப்பதைப் போல—கைகளால் பிடித்துத் திறந்தார். அந்தக் காட்சி வியப்பை ஏற்படுத்தியது.
முதலைகளுடன் ஒப்பிடும்போது, அலிகேட்டர்கள் அரை வட்டமான முகம், சற்று இருள் கலந்த நிறம், குறைந்த உடல் பருமன் ஆகியவற்றால் வேறுபடுகின்றன. மேலும், இவை நன்னீரில் மட்டுமே வாழ்வதும், மனிதர்களை முதலைகளைப் போல தாக்காமல் தற்காப்பிற்காக மட்டுமே எதிர்வினை காட்டுவதும் குறிப்பிடத்தக்கவை. அலிகேட்டர்களில் 32 நிறமுகூர்த்தங்கள் இருப்பதாகவும், முதலைகளில் 30–34 வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்றபடி முட்டை இடுதல், ஊன் உணவு உண்ணுதல் போன்ற பண்புகளில் இரண்டும் ஒத்தவையே.
முதலைகளைப் போலவே, அலிகேட்டர்களுக்கும் பண்ணைகள் உள்ளன; அவற்றின் தோலும் இறைச்சியும் பயன்பாட்டில் உள்ளன. நான் ஏற்கனவே தென் ஆப்ரிக்காவில் ஒருமுறை முதலையின் இறைச்சியை சுவைத்துள்ளேன்—கோழி இறைச்சியைப் போல இருந்தது. அதுபோலவே அலிகேட்டரின் இறைச்சியும் இருக்கும் என நினைத்தபடியே, மீண்டும் கப்பலுக்குச் செல்ல பஸ்சில் ஏறினோம்.
பின்னூட்டமொன்றை இடுக