



பனாமா கால்வாயைக் கடந்து அத்திலாந்திக் பெருங்கடலுக்குள் நுழையும்போது நாம் சந்திப்பது கரிபியன் கடலாகும். நமது இந்து சமுத்திரத்தில் அரபிக் கடல் எவ்வாறு முக்கியமோ, அதுபோலவே இந்தக் கடலும் அமெரிக்கக் கண்டத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றால் வளைக்கப்பட்ட இந்தக் கடல், பவளப் பாறைகள் நிறைந்த பிரதேசமாகவும், பெரிதும் சிறிதுமாக 7,000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. உஷ்ண வலயத்தில் அமைந்துள்ளதால், ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. அதேசமயம், உலகின் முக்கிய உல்லாசப்பயணப் பகுதிகளில் ஒன்றாகவும் கரிபியன் கடல் திகழ்கிறது.
இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரிய தீவு கியூபா ஆகும். அமெரிக்காவிலிருந்து செல்லும் எந்தக் கப்பலும் நேரடியாக கியூபாவிற்குச் செல்வதில்லை. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டிற்கு மிக அருகில் ஒரு சிறிய நாடாக இருப்பதே, கியூபாவுக்கு விடுதலை இல்லாத ஒரு பெரிய சாபமாக அமைந்துள்ளது.
நாங்கள் பனாமா கால்வாயைக் கடந்தவுடன் கப்பலின் முக்கிய தரிப்பிடம் போட்டோ ரிக்கோ. இது ஒரு பெரிய தீவாகவும், தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. சுமார் 3.5 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். கப்பலிலிருந்து இறங்கியவுடன் எங்களை முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். இது கோட்டைகள் நிறைந்த தீவாகும். பல கோட்டைகள் அழிந்துவிட்டாலும், இன்னும் பல அழியாத கோட்டைகள் இங்கு காணப்படுகின்றன.
சான் யுவான் என்ற தலைநகரம், கிறிஸ்டோபர் கொலம்பஸ் கால் வைத்த இடமாகக் கருதப்படுவதால், நகரின் மையத்தில் அவருக்கான சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய விடுமுறை தலங்களில் ஒன்றாக இருப்பதால், ஏராளமான ஹோட்டல்கள் இங்கு காணப்படுகின்றன.
சுத்தமான கடற்கரைகள் செங்கால் நாரைகள் இங்கு முக்கியமானதாக உல்லாசப்பிரயாணிகளைக் கவர்கிறது.
நாங்கள் இறங்கிய பகுதி கரிபியன் கடலை ஒட்டிய மேற்குப் பகுதி. ஆனால் தீவின் கிழக்குப் பகுதி மிகவும் ஆழமான அத்திலாந்திக் பெருங்கடலை நோக்கியது. அந்தப் பகுதிக்கு சென்றபோது, ஆள் உயரத்துக்கு அலைகள் கரையை மோதி வருவதை காண முடிந்தது. இதனால் அந்த இடம் ‘சர்ஃபிங்’ (Surfing) செய்யப் பயன்படுத்தப்படும் முக்கியக் கடற்கரைப் பகுதியாக உள்ளது.
நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தென் அமெரிக்காவின் பெரு, கொலம்பியா போன்ற பகுதிகளிலிருந்து ஸ்பானியர்கள் கொள்ளையடித்த தங்கம், வெள்ளி ஆகியவை இங்கு கொண்டு வந்து சேகரிக்கப்பட்டன. பின்னர் பல கப்பல்கள் ஒன்றாகச் சேர்ந்து, அந்தக் கொள்ளைப் பொருட்களை ஸ்பெயினுக்கு எடுத்துச் சென்றனர். இதனால் மற்றவர்கள் கொள்ளையடிக்க முடியாதபடி, நகரத்தைச் சுற்றி கோட்டைகள் மற்றும் மதில்கள் கட்டப்பட்டன. ஒருமுறை ஆங்கிலேய தளபதிகள் சான் யுவானை கைப்பற்றினாலும், அதை நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
அக்காலத்தில் பிரித்தானியர்கள் பல கடற்கொள்ளையர்களை அரச குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன் செயல்பட வைத்திருந்தனர். பிரித்தானியாவின் சுமார் 500 ஆண்டுகால வரலாற்றில், கடற்கொள்ளை மற்றும் கொலை அவர்களது மறுபக்கமாக விளங்குகிறது.
பிரித்தானியர்களின் கடற்கொள்ளை நடைமுறை மிகவும் திட்டமிட்டதாக இருந்தது. அவர்கள் நேரடியாகக் கொள்ளையில் ஈடுபடவில்லை. அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகள், குறிப்பாக யமேக்கா போன்ற இடங்களில் இருந்த கவர்னர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. அவர்களது ஆசீர்வாதத்துடன் கடற்கொள்ளையர்கள் கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட்டு பெற்ற செல்வம், அந்தக் கவர்னர்களின் மூலம் பிரித்தானியாவுக்கு சென்றது.
பிரித்தானியர்கள் இவ்வாறு கடற்கொள்ளையில் ஈடுபட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவதாக, அவர்களது காலனிகள் தன்னிறைவாக இயங்க வேண்டும் என்பதே. பிரித்தானியாவிலிருந்து நேரடியாக நிதி வழங்க இயலாத நிலை இருந்தது. இரண்டாவதாக, அரசர் சார்ல்ஸ் I அகற்றப்பட்ட பின்பு, பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம். பின்னர் சார்ல்ஸ் II அரசராகிறார். மூன்றாவதாக, ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசியர்களை விட தாமதமாகவே பிரித்தானியர்கள் காலனிகளை கைப்பற்றத் தொடங்கினர். அதனால் அவர்கள் அவசரமாகவும் தீவிரமாகவும் செயல்பட்டனர். நான்காவதாக, “கொள்ளையர்களிடமிருந்து கொள்ளையடிப்பது தவறல்ல” என்ற மனப்போக்கு.
இந்த வகை கடற்கொள்ளையர்கள் ஆங்கிலத்தில் “பக்கனியர்ஸ்” (Buccaneers) என அழைக்கப்பட்டனர். கடற்கொள்ளையருக்கு நாகரிகமான பெயர் சூட்டப்பட்டது போலவே இது அமைந்தது. இவர்களில் பலர் இருந்தாலும், மிக முக்கியமானவர் ஹென்றி மோர்கன் (Henry Morgan). வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், பல கடற்கொள்ளைகளில் ஈடுபட்டதுடன், பெரும் செல்வந்தராகவும் உயர்ந்தார். பின்னாளில் யமேக்காவின் கவர்னராகவும் இருந்தார். அரசர் சார்ல்ஸ் II உடன் சேர்ந்து மது அருந்தும் அளவுக்கு நெருக்கமானவராக இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஸ்பானியர்களின் தங்கத்தை கொள்ளையடிக்க பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் மோர்கன் செயல்பட்டார். இவரால் பனாமா நகரமே தீவைக்கப்பட்டது. ஆங்கில அரசால் இவர் ஒரு கதாநாயகனாகக் கொண்டாடப்பட்டார்.
இறுதியில் அமெரிக்கா–ஸ்பெயின் போருக்குப் பிறகு, போட்டோ ரிக்கோ அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஸ்பெயினிடமிருந்து பெற்ற பிலிப்பைன்சுக்கு சுதந்திரம் வழங்கிய அமெரிக்கா, போட்டோ ரிக்கோவுக்கு மட்டும் சுதந்திரம் வழங்காமல், தனது நிர்வாகத்தின் கீழேயே வைத்திருக்கிறது.
நாங்கள் சென்ற நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல கடைகள் மூடியிருந்தன. இருப்பினும் திறந்திருந்த கடைகளில் பொருட்களின் விலைகள் அமெரிக்காவில் உள்ள விலைகளுக்கு நிகராக இருந்தன. வழிகாட்டியின் கூற்றுப்படி, பல அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு இயங்குவதால், அவை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேசமயம், உல்லாசப்பயணிகளின் வருகையும் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது.
இங்குள்ள துறைமுகங்கள் பல கப்பல்கள் ஒரே நேரத்தில் வந்து நின்று செல்ல ஏற்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க நகரங்களான சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களில் சில நாட்கள் சுற்றியபோது, அதிகமான பிச்சைக்காரர்களை காண முடிந்தது. ஆனால் இங்கு அவ்வளவாகக் காணவில்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்தார்களோ என்னவோ தெரியவில்லை. நாங்கள் சென்றபோது இரண்டு கப்பல்கள் துறைமுகத்தில் நின்றிருந்தாலும், இரண்டு பிச்சைக்காரர்களையே நான் காண முடிந்தது.
பெரிய கோட்டை மிகவும் அழகாக இருந்தது. நகர வீதிகளும் நேர்த்தியாகவும் அழகாகவும் அமைந்திருந்தன. கலப்பின மக்கள் அதிகமாக இருப்பதால், ஆண்களும் பெண்களும் அழகிய தோற்றமுடையவர்களாக இருந்தனர்.
சான் யுவானில் நிற்கும்போது, ஜீன் ஹாக்மன் நடித்த ஹாலிவுட் திரைப்படமான Under Suspicion தொடர்ந்து நினைவில் தட்டிக்கொண்டே இருந்தது.
பின்னூட்டமொன்றை இடுக