கரிபியன் கடற்பயணம்

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற்  பயணம்.

அடிமனத்தில் முதல் பயணமாதலால்  எப்படி பயணம் இருக்கும்?

போரடிக்குமா?

புத்தகங்கள் மற்றும் கம்பியூட்டர் இருந்தால் எனது பொழுது போகும் ஆனால் சியாமளாவின நிலைவேறு.

கடல் குருஸ் என்பது இதுவரை வயதானவர்களுக்கு உள்ள பயணம் என்ற நினைவே மனதில் இருந்தது.

பல நினைவுகளை சுமந்தபடி பொதிகளுடன் கப்பலில் ஏறினோம். ஆரம்பத்தில் கப்பலில் ஏறுவது, விமானத்தில் ஏறுவது போல் பாஸ்போர்ட், விசா மற்றும் பல சோதனைகள் இருந்தன.

கப்பலில் எந்த குடிப்பானங்களும் கொண்டு செல்ல முடியாது என்று விதி இருப்பது நான் அறிந்ததே. ஆனாலும், சான் பிரான்சிஸ்கோ ஹோட்டலில் தங்கியபோது வருபவர்களுக்கு இரண்டு இலவசமாக குடிப்பானம் உள்ளது – அதை “வெல்கம் ரிங்” என்று சொல்லலாம். நான் அதைக் குடிக்கவில்லை, பிறகு மறந்தே போய்விட்டேன்.

இரண்டாவது நாள் அதை அங்குள்ள வரவேற்பில் உள்ள இளம் பெண்ணிடம் வெல்கம் ரிங்கை  நினைவுபடுத்திபோது, அவள் சிரித்துவிட்டு  ‘அது காலாவதியாகிவிட்டது’  என்று சொல்லிவிட்டு, பின்பு உள்ளே போய் ஒரு புதிய வைன் கொண்டு தனது அன்பளிப்பாக வழங்கினாள். இளம் பெண்கள் நம்மை சட்டை செய்யும் வயது கடந்த போதிலும், ‘என்ன செய்கிறாய்?’ என்று கேட்டேன். படிப்பதாக கூறினதும், அவளது கையில் பத்து அமெரிக்க டாலர்கள் வைத்தேன். அன்று இரவு ஒரு கிளாஸ் குடித்து, முக்கால் போத்தல் மீதி இருந்தது.

அந்த கலிபோர்னியா சிவப்பு வைன் போத்தலை எனது கைபையுள் வைத்துக்கொண்டு சென்றேன். இறுதியில் அந்த வைன் போத்தல்  எந்த சேதாரமும் இல்லாமல் எல்லா பரிசோதனைகளும் கடந்து எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தது.  

நாங்கள் நினைத்ததுபோல் கடல்பயணம் அலுப்படையவில்லை. கடலில் செல்லும் நாட்களில் காலை முதல் இரவு வரை ஏதாவது நிகழ்வுகள் இருக்கும். அதைக் விட ஜிம்னாசியம், லைப்ரெரி, தியேட்டர், இரவு சங்கீத நிகழ்வு, ஓபரா, சங்கீதம், காமெடி நாடகம் ஆகியவை இடம் பெறும், எனவே நாங்கள் அலுப்படையாமல் ஒரு மாதம் இருந்தோம்.

விசேஷ வருகை அளித்த முக்கியமான பேச்சாளர்கள் பலர் வந்து போனார்கள்: எழுத்தாளர்கள், முன்னாள் அமெரிக்க தூதுவர், மற்றும் பல துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் பேசினார்கள். இவற்றை விட யோகா, நடனம் போன்ற பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன; பல இலவசமாகவும், சிலவற்றுக்கு பணம் மேலதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உணவைப் பொறுத்தவரை எந்த கட்டுப்பாடும் இல்லை; பலர் கப்பலின் எடையை அதிகரித்தனர்.

சியாமளா பொறாமைப்படும் வகையில் எனக்கு  கப்பலில் எடை  அதிகரிக்கவில்லை, அதே நிறையில் வெளிவந்தேன்.

கப்பல்,  துறைமுகங்களில் தரிக்கும்போது  வெளிச்செல்ல முடியும். பணம் கொடுத்தால் அவர்கள் நாங்கள் விரும்பிய இடங்களுக்கு போகமுடியும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் என்பது எங்கள் முத்தரிப்பான இடம். அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் 40 சதவீதம் லாற்ரினோ எனப்படும் மக்கள் ஸ்பானிஷ் மொழி பேசுகிறார்கள், 20 சதவீதம் கறுப்பவர்கள், மற்றவர்கள் மிகுதியாக இருப்பர். நான் கப்பலில் சந்தித்த ஒரு ஈகுவேடோரியர் பெண், அமெரிக்கரை திருமணம் செய்து கால்  நூற்றாண்டு மியாமியில்  வாழ்கிறாள், ஆனாலும் அவளால் ஆங்கிலம் பேசமுடியாது. கணவனுக்கு  ஸ்பானிஷ் மொழி தெரியும். பிள்ளைகளுடன் தாய்  ஸ்பானிஷ் மொழியும் தந்தை ஆங்கிலமும் தொலைபேசியில் பேசியதைக்கேட்டேன்    

லாஸ் ஏஞ்சல்ஸில் நாங்கள் சுற்றிய ஒரு நாளில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் கடைகளில் நாம் உணவுத் அருந்தினோம்.

லாஸ் ஏஞ்ஜலஸில் உள்ள ஹோலிவுட், வீனஸ் கடற்கரை போன்ற இடங்களிலும்,சாரதி இல்லாத டாக்ஸியும் பிளாட்பாரத்தில் போகும்  ஒரு சிறிய பச்சை நிறத்தில் ரோபோ வாகனம்   நமக்கு வழிவிட்டு செல்லுவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த டாக்சி இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஜாகுவார் காரில் இருந்து உரிய மென்பொருளைக் கொண்டு இயக்கப்படுகிறது என்று சொன்னார்கள். ஒருக்காவது  ஏறிப் பார்க்கின்றேன் என்று நினைத்தபோது, இணையத்தில் பதிவு செய்ய வேண்டியதாக இருந்ததுடன் டாக்சி வாடகை விலை அதிகம்தான் என்பதால், அந்த ஆசையை மறந்தேன்.

அதன்பின்பு கப்பல் தரித்த இடம் மெக்சிக்கோவில் மேற்கே உள்ள உல்லாச நகரம் (Cabo San Lucas) அவுஸ்திரேலியாவிலுள்ள உள்ள கோல்ட்கோஸ்ட் நகரம் போல் இருந்தது. முக்கியமாக அமெரிக்க செல்வந்தர்கள் தங்கும் இடம் மற்றும் மீன்பிடி துறைமுகம் அங்கு என்னை கவர்ந்தது தூய்மையான கடற்கரை. அங்கு கரையில் எந்த தயக்கமும் அற்று  சீல்கள்( Seal Lions )வருகை தருகின்றன  அங்கு  மெக்சிக்கோவின குடிபானம் மற்றும் கத்தாளை போன்ற தாவரத்திலிருந்து தக்கிலா தயாரிக்கும் இடம் உள்ளது.

 இதற்கப்பால் அங்கு இரண்டு பியர் வாங்கும்போது நான் ஏமாற இருந்தேன். இரண்டு பியர் 60 பெசோ என்றபோது, நான் என் கடன் அட்டை கொடுக்க, அந்த மெஷினில் 60 டாலர் போட்டிருந்தது. அதை பார்த்த உடன் சுதாரித்து , நான் மூன்று டாலர் நோட்டுகள் கொடுத்தேன். இங்கு மெஷின்கள் பெசோவையும் டாலரையும் ஏற்கும் என்பதால், இதைப் பயன்படுத்தி இலகுவாக ஏமாற்ற முடியும் (20 பெசோ ஒரு அமெரிக்க டாலர், கிடைத்தது 57 டாலர்களை இழந்திருப்பேன்). அதைவிட சியாமளாவிடம் வாங்க விரும்பும் பல டாலர் மதிப்புள்ள அறிவுரைகள் தவிர்க்கப்பட்டது மகிழ்சியானது.  

தொடரும் .

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.