மேற்கு அமெரிக்கா – 4

நம்மைப்போல் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற மூவர், தங்களின் நண்பரான ஒரு மில்லியனரின் திருமண அழைப்பை ஏற்று அமெரிக்காவின் கிழக்கு நகரங்களிலிருந்து லாஸ் வேகாஸ் நகருக்குச் செல்கிறார்கள். அந்த நண்பர் தன்னைவிட முப்பது வயது குறைவான பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறார்.

அவர்கள் அங்கே செய்யும் அட்டகாசங்களை நகைச்சுவையாக எடுத்த படமே “லாஸ்ட் வேகாஸ்” திரைப்படம்.

இந்தப் படத்தில் மில்லியனராக வரும் பாத்திரத்தில் மைக்கேல் டக்ளஸ் நடித்துள்ளார். அவருக்குப் மிகவும் பொருத்தமான பாத்திரம். அவரது நண்பர்களில் ஒருவர் மோர்கன் ஃப்ரீமன். அவர் ஏற்கனவே பாரிசவாதநோயிலிருந்து(Stroke) தப்பி, மருந்துகளிலும் மகனின் கவனிப்பிலும் இருப்பவர்.தன் மகனுக்குத் தெரியாமல் பல பொய்களைச் சொல்லி நண்பரின் திருமணத்திற்காக லாஸ் வேகாஸ் செல்வது அட்டகாசமாக உள்ளது. மற்றொரு நண்பரான ராபர்ட் டி நீரோவை விமான நிலையத்தில் வழியனுப்பும் போது, அவரது மனைவி ஒரு வயாக்ரா மாத்திரையும் ஒரு கொண்டமும் கொடுத்து அனுப்பும் காட்சி என் மனதில் நீங்காத ஒன்றாக உள்ளது.

இந்தப் படத்தின் கதையில் வயதான நான்கு நண்பர்கள் லாஸ் வேகாஸில் சூதாடுவதும், அதில் கிடைக்கும் பணத்தில் சில நாட்கள் அட்டகாசமாக வாழ்வதும், இறுதியில் அது முடிவுக்கு வருவதும் காட்டப்படுகிறது. கதைக்கப்பால், லாஸ் வேகாஸ் நகரமே இப்படியான சம்பவங்களின் மூலம் மறக்க முடியாத இடமாகச் சித்தரிக்கப்படுகிறது.

லாஸ் வேகாஸ் நகரை படத்தில் பார்த்த பின், நேரடியாகப் பார்த்தபோது அதே நினைவே எனக்குள் எழுந்தது.

லாஸ் ஏஞ்சலிலிருந்து புறப்பட்ட எங்களது பஸ்சின் இறுதி இடம் லாஸ் வேகாஸ். அங்குள்ள மிகப் பெரிய காசினோ அமைந்த ஹோட்டலில் நாங்கள் தங்கினோம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கொலராடோ நதிக்கரையில் ஐந்தாயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்த சிறிய நகரம். இன்று 175 சிறியதும் பெரியதுமான காசினோக்கள் உள்ள நகரமாக ஒளிர்கிறது.

ஆறு லட்சம் மக்கள் வாழும் நகரமென்றாலும், கடந்த ஆண்டு மட்டும் நாற்பது மில்லியன் மக்கள் வந்துபோனதாக ஒரு கணக்கீடு கூறுகிறது.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள காசினோவை கடந்து எங்கள் அறைக்குச் செல்லவே பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எடுத்தது. பலமுறை காசினோ இயந்திரங்களைப் பார்த்தபோது அவை வெறுமனே அழுது வழிந்தன. அதிகமான மக்களை காணவில்லை. இருந்தவர்களும் மில்லியன் டாலர்களைத் தூக்கி வந்து சூதாடும் செல்வந்தர்களாகத் தெரியவில்லை. கசங்கிய சட்டைகள், காய்ந்த முகங்கள், கலைந்த தலைமுடிகள்—அப்படியே தோன்றினார்கள்.

இதற்கு காரணம் என்ன என்று வழிகாட்டியிடம் கேட்டபோது, தற்போது சூதாட வருபவர்களின் வருகை குறைந்துவிட்டதாகச் சொன்னார்கள். அதேபோல் விமான நிலையங்களிலும் பயணிகளின் வருகை முப்பது விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறினார்கள். வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகச் சொன்னார்.

அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு அரசின் செயல்பாடுகளே காரணம் என்று பலர் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்கள்.

லாஸ் வேகாஸின் பிற காசினோக்கள், ஷாப்பிங் சென்டர்கள் ஆகியவற்றிற்குச் சென்றபோதும் அங்கும் பெரிதாக மக்களைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் தங்கியிருந்த இரண்டு நாட்களில் நான் கவனித்த முக்கியமான ஒன்று—அங்கங்கு வெள்ளை நிறத்தில், சிறியதும் பெரியதுமான பல தேவாலயங்கள் இருந்தன.

அதைப் பற்றி கேட்டபோது, திருமணத்திற்காக அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வருவார்கள் என்றார்கள். வந்தவர்கள் சில நிமிடங்களில் திருமணம் செய்து கொண்டு வெளியேறுவார்கள் என்றும் சொன்னார்கள்.

அடுத்த நாள் எங்களுள் சிலரின் பயணம் 37 மைல் தொலைவில் உள்ள ஹூவர் அணை நோக்கி இருந்தது.

பல ஆண்டுகள் வரை இது உலகின் முக்கியமான அணையாகக் கருதப்பட்டது. நெவாடா – அரிசோனா மாநிலங்களின் எல்லையில் கொலராடோ நதியின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1922ஆம் ஆண்டில், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியான காலத்தில் கட்டப்பட்டது. அதனால் பலருக்கு வேலை கிடைத்தது.

அதே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அணை கட்டுமானப் பணியில் உயிரிழந்தார்கள். அக்காலத்தில் 49 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவாகியதாகவும், இன்று இதே அணையை கட்ட வேண்டுமானால் பில்லியன் டாலர்கள் தேவைப்படுமெனவும் கூறினார்கள்.

பொறியியல் அறிவு அதிகம் இல்லாவிட்டாலும், அங்கு எழுதப்பட்டிருந்த தகவல்களைப் பார்த்தபோது அது பிரமாண்டமாகத் தோன்றியது.

இந்த அணையால் 1.5 மில்லியன் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம், 16 மில்லியன் மக்களுக்கு குடிநீர், அரை மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கிறது. மொத்தத்தில், இந்த அணையின் பயன், ஏழு மாநிலங்களுக்கு சென்றடைகிறது. இங்கு மிகப் பெரிய நீர்த்தேக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. அணைக்குள் சென்று மின்சார ஜெனரேட்டர்களை மிக அருகிலிருந்து பார்க்க அனுமதி அளித்தார்கள். பாலம் போன்ற பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றார்கள்.

அமெரிக்காவில் தியோடர் ரூஸ்வெல்ட், பனாமா கால்வாயைக் கட்டினார். அதேபோல், ஹூவர் அமைச்சராக இருந்த காலத்தில் திட்டமிடப்பட்ட இந்த அணை, அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. நமக்குத் தெரிந்த ஏபிரகாம் லிங்கன், ஜான் கென்னடி போன்றவர்களுக்குப் பிறகு வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் அழிவுத் தொழில்களில் ருத்துரமூர்த்திகளாக ஈடுபடுவதாகவே தோன்றுகிறது.

இந்த முறை அமெரிக்காவில் நான் கவனித்த முக்கியமான ஒன்று—பணம் கையிலிருந்து நீராக ஓடிவிடுகிறது. ஓடிய பின்னும் கணக்குப் போட முடியவில்லை.

சில நேரங்களில் நானும் சியாமளாவும் ஒரே காப்பியைப் பகிர்ந்து குடிப்பதும், ஒரே உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. உதாரணமாக, ஒரு சாதாரண காப்பி 6–9 அமெரிக்க டாலர்கள். ஆஸ்திரேலியாவில் அதே காப்பி 3 அமெரிக்க டாலர்கள் (4.5 ஆஸ்திரேலிய டாலர்கள்) மட்டுமே.  அமெரிக்காவில் சாதாரண மக்களின் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே தோன்றியது.

வறுமையான நாட்டில் வறுமையில் வாழ்வது பெரிய அதிர்ச்சியல்ல. ஆனால் அமெரிக்கா போன்ற நாட்டில் தெருக்களில் மனிதர்கள் பிச்சை எடுப்பதைப் பார்ப்பது, கண்களையே மட்டும் அல்ல—இதயத்தையும் உறுத்தியது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.