மொன்யூமென்ட் வாலி (Monument Valley) எனப்படும் பகுதி உத்தா, அரிசோனா என்ற இரு மாகாணங்கள் இடையே உள்ள பிரதேசமாகும். தற்போது இந்தப் பிரதேசம் அமெரிக்க ஆதிகுடிகளின் வசம் உள்ளது. அவர்களில் முக்கியமாக நவகோ (Navajo Nation) என்ற ஆதிகுடிகளின் ஆட்சியிலும் தன்னாட்சியிலும் உள்ளது. தற்போது இவர்களே இப்பேகுதியில் வாழும் பெரிய இனக்கூட்டமாகியுள்ளனர். அவர்களது அனுமதியுடனே மொன்யூமென்ட் வாலிக்கு நாம் செல்ல முடியும்.



இந்த மொன்யூமென்ட் வாலி என்பது மிகவும் பெரிதான கற்கள், சிறிய குன்றுகள் போல் பல வடிவங்களில் அமைந்திருக்கும் இடமாகும். ஒவ்வொன்றின் வடிவத்திற்கும் பெயரிட்டு, அவற்றில் அவர்களது தெய்வங்கள் குடியிருப்பதாக நவகோ மக்கள் நம்புகிறார்கள். இதனால் இந்த இடங்கள் புனிதமானவை.
இந்த இடங்களே பல ஹாலிவுட் கவ்போய் படங்களில் வரும் இடங்களாகும். சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ள இந்த பாறைகளில் செப்பு, இரும்பு, யுரேனியம் போன்ற கனிப்பொருட்கள் உள்ளன. அமெரிக்காவில் யுரேனியம் இருந்தும், வருடாவரும் 800 மில்லியன் டாலருக்கு ரஸ்சியாவிலிருந்து யுரேனியம் வாங்குவதன் காரணம் என்ன தெரியுமா? இந்த இடம் புனித பிரதேசமாக இருப்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
பல உருவங்களில் உயர்ந்து நிற்கும் இந்தப் பாறைகள் ஒருவித உயிருள்ள உருவங்களைப் போன்றே தோன்றுகின்றன. இந்தப் பகுதியின் மேற்பார்வை நவகோ ஆதிவாசிகளிடம் இருப்பதால், அவர்கள் தங்கள் ஜீப்புகளில் எங்களை அழைத்துச் சென்றனர். பல இடங்களை அவர்கள் தங்கள் மூதாதையர்களின் தெய்வ வடிவங்களாகவும், வாழ்க்கையின் வழிகாட்டிகளாகவும் கருதுகிறார்கள் என்றும் கூறினர். அவர்களின் நம்பிக்கைகள், இன்னும் நிறுவனப்படுத்தப்படாதது வரவேற்கத்தக்கதாய் இருந்தது. நிறுவனமயப்பட்டால் அதை வைத்து ஒரு வர்க்கம் உருவாகி இருக்கும். அதே வேளையில் இவர்களது இந்த நம்பிக்கையே, அவர்களுக்கு அரசிடமிருந்து நில உரிமையைப் பெறவும் அதன் பொருளாதாரத்தில் பயன்பெறவும் உதவியுள்ளது.
அவர்கள் தங்கள் நிலத்தின் மீது பெற்றுள்ள தற்காலத் தன்னாட்சி, அவர்களுக்கு இலகுவாக கிடைத்ததல்ல: வேர்வை, இரத்தம், மரணம் ஆகியவற்றின் பலனாக மலர்ந்த கனிகள். 1864ல் அமெரிக்க அரசுப் படையினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நவகோ ஆதிகுடிகளை இந்தப் பகுதியிலிருந்து வளைத்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரையும் 300 மைல்கள் தூரம் கால் நடையாக தற்போதைய நியூ மெக்சிக்கோவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் திறந்த சிறையில் வைக்கப்பட்டனர். அவர்களை பிற இனத்தாருடன் பலவந்தமாக கலப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது. அதேசமயம் பசி, படடினி , நோய்கள் ஆகியவற்றால் 3500 ஆதிவாசிகள் அக்காலத்தில் இறந்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், 1868ல், அமரிக்க அரசாங்கம் தங்கள் தவறை உணர்ந்து, அவர்களை மீண்டும் தங்களது சொந்த இடமான மொன்யூமென்ட் வாலிக்குத் திருப்பி அனுப்பி, நிலத்தின் மீது அவர்களின் பாரம்பரிய உரிமையை அங்கீகரித்தது.
எங்களது ஜீப் சாரதி இந்தக் கதையை சொல்லும்போது, ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் கதைகள் எனது மனதில் நிழலாடின. எந்த காலத்திலும், உலகின் எந்தப் பகுதியில் மனிதர்கள் சகமனிதர்களை கொன்று துன்புறுத்தும் நிகழ்வுகள் நடக்கின்றன. பேசும் மொழி, மதம், நிறம் ஆகிய வேறுபாடுகளே இங்கு பெரிதாகும் காரணங்களாகின்றன.
மொன்யூமென்ட் வாலி கடல் மட்டத்திலிருந்து 5000–6000 அடி உயரத்தில் உள்ளது. குளிர்காலத்தில் பனி படரும்; ஆனால் நாங்கள் சென்றது கோடை என்பதால் அதிக வெப்பம் இருந்தது. இந்தப் பகுதி திரைப்படப் படப்பிடிப்பாளர்கள், புகைப்படக்காரர்கள் மிகவும் விரும்பும் இடம்.
அன்டிலோப் கேன்யன் (Antelope Canyon)
அடுத்த நாள் சென்ற இடம் அரிசோனா மாநிலத்தில் உள்ள அன்டிலோப் கேன்யன். இங்கு பாறைகள் குகை வடிவில் கோர்வையாக உள்ளன. வெளியிலிருந்து வரும் சூரிய ஒளி இந்தப் பாறைகளின் அழகை பல மடங்கு அதிகரிப்பதால், புகைப்படக்காரர்களின் சொர்க்கம் எனப்படும் இடமிது. பாறைகளின் மீது நடப்பது வழுக்கலாக இருக்கும் என்பதால் சியாமளாவை விட்டுவிட்டு நான் மட்டும் சென்றேன்.



நாங்கள் போவதற்கு சில நாட்களுக்கு முன்பு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல குகைகளில் மண் மேடாக மணல் படிந்திருந்தது. வழிகாட்டியாக வந்த ஆதிவாசி பெண் — “சில நாட்களுக்கு முன்பு வெள்ளம் பாய்ந்ததால் எவரும் வர முடியவில்லை; இப்போது தண்ணீர் வடிந்துவிட்டது, நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று தரையில் இருந்த மணலைக் கைத்தடியால் காட்டினார்.
அவர் படங்கள் எடுக்கவும் உதவினார். ஒருவர் வீடியோ எடுப்பதைத் தடுத்து, “இது எங்களது தெய்வங்கள் இருப்பிடம்; அதனால் வீடியோ எடுக்க அனுமதி இல்லை” என்றார்.
“சமீபத்தில் இந்த குகைகளில் எடுத்த ஒரு படத்தை ஒருவர் ஐந்து லட்சம் டாலருக்கு விற்றார். அதைத் தெரிந்த நாங்கள் நெகட்டிவ் தராவிட்டால் எங்கள் பாரம்பரிய நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கடிதம் எழுதியோம். அவர் நெகட்டிவ் கொடுத்தார்.”
“பணம் கேட்டீர்களா?” என்றேன்.
“அவர் பெற்ற பணத்தைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை,” என்றார்.
அது ஆதிவாசிகளின் பணத்திற்கு மதிபற்ற நாகரிகப் பார்வையை எனக்கு தெளிவாக்கியது. நான் ஆரம்பத்தில பணிபுரிந்த ஆஸ்திரேலிய புறநகரில், அபோரிஜினல் மக்கள் வியாழக்கிழமை சம்பளம் பெற்றதும் பெரும்பகுதியை அன்றே செலவழித்து விடுவார்கள் என்பதை நேரடியாகப் பார்த்தது நினைவுக்கு வந்தது.
எனக்கும் அந்த ஆதிவாசிப் பெணுக்கும் நடந்த உரையாடல் முக்கியமானது.
பயணத்தில் வந்தவர்கள் என்னைத் தவிர எல்லோரும் வெள்ளை ஐரோப்பியர்கள். இறுதியில் அந்த ஆதிவாசிப் பெண் என்னிடம்,
“நீ லத்தினோ?” என்று கேட்டார்.
நான் “ஸ்ரீலங்கன்” என்றேன்.
அவரது முகத்தில் மாற்றமில்லை.
பின்பு சிரித்துக்கொண்டே “இந்தியன்” என்றேன்.
“எங்களுக்கும் இந்துக்களுக்கும் ஒற்றுமை உண்டு. இயற்கையை தெய்வமாகக் காண்கிறோம். வேறுபாடு — நீங்கள் அதற்கு உருவம் கொடுக்கிறீர்கள்; நாங்கள் அதை சக்தியாக நினைக்கிறோம்,” என்றார்.
இந்த அளவு தெளிவான மதப் பார்வையை ஒரு ஆதிவாசிப் பெண்ணிடமிருந்து கேட்ட அதிர்வை மறைத்தபடி, “உண்மை” என்றேன்.
அதை கேட்ட அவர் மகிழ்ச்சியுடன் எனது தோளில் கை வைத்தார். என்னருகில் நின்ற ஐரிஷ் பெண் உடனே, “இவர் திருமணமானவர்!” என்று சொல்லி அந்தப் பெண்ணின் முகத்தை சிவக்க வைத்தார்.
இந்த இடமும் அமெரிக்க ஆதிவாசிகளின் ஆட்சியிலேயே உள்ளது. “இது எங்களது நிலம்” என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது.
சியோன் தேசிய பூங்கா (Zion National Park)
லாஸ் வேகாஸ் செல்லும் வழியில் மிகவும் விசித்திரமான பாறை அமைப்புகளைக் கொண்ட பகுதி இது. தண்ணீர் பனியாகுவதால் பாறைகள் புதுவடிவம் பெறுகின்றன. சூரிய ஒளியில் பல வண்ணங்களில் மாறுகின்றன. மழை குறைந்த இடமாக இருந்தாலும், வேர்ஜின் ஆற்றோரத்தில் நிற்கும்போது ஏராளமான உயிரினங்கள் வாழும் நிலம் இதுவென்று உணரலாம். இங்கு கூகர் (Cougar) புலிகள் வாழ்கின்றன. மண்ணில் அதிக அளவு நச்சுத் தன்மை கொண்ட செலேனியம் உள்ளதால் சில குறிப்பிட்ட தாவரங்களே வளருகின்றன. ஆதிகாலத்தில் ஒட்டகம், மம்மோத் போன்ற மிருகங்கள் வாழ்ந்ததாகவும், 8000 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையால் அழிந்ததாகவும் கருதப்படுகிறது. அருகில் சியோன் என்ற சிறிய நகரமும் உள்ளது.



பிரைஸ் கேன்யன் தேசிய பூங்கா (Bryce Canyon National Park)
இந்தப் பகுதியில் பெரிய தூண்கள் போல் பாறைகள் அமைந்துள்ளன. காரணம் — இரவில் பனி உறைந்து காலை உருகும்போது பாறைகளில் ஏற்படும் வெடிப்புகள். சுண்ணாம்பு பாறைகளில் நிகழும் இந்த இயற்கை மாற்றங்கள் புவியின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றை ஒரு புத்தகமாக இங்கு பதித்து வைத்துள்ளன.
நான் எழுதிய இந்த மூன்று பூங்காக்களும் பல காலமாக பார்ப்பதற்காக விரும்பிய இடங்கள். அதிர்ஷ்டவசமாக மூன்று நாட்களில் அனைத்தையும் பார்த்து முடித்தேன்.
பின்னூட்டமொன்றை இடுக