கல்விக் கண் திறத்தல்

கல்வி என்பது ஒரு செயல் முறை, வாழ்க்கை அனுபவம் என இருந்து, தற்போது  உலகைத் தெளிவாகக் காணவும், உண்மையைத் தேடவும், பார்வையை விரிவுபடுத்திக் கொள்ளவும், நாம் மற்றோரில் தங்கியிராது  சுயாதீனமடையவும்  உதவுகிறது.  இப்படியான கல்வியையே  நாம் பெற்றோர்களாக, நம் குழந்தைகளுக்கு அளிக்க விரும்புகிறோம்.

ஆனால் ஏழைக் குடும்பம் ஒன்றில் தந்தை இறந்து விட்டால் என்ன நடக்கும்?

குறிப்பாக போரின் காலத்தில்?

அத்தகைய குழந்தைகளுக்கு, ஒரு இருண்ட உலகமே காத்திருக்கிறது.

துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு இலங்கையர்கள் எப்போதும் ஆழ்ந்த அனுதாபத்தைக் காட்டி வந்துள்ளனர். 75 ஆண்டுகளுக்கும் மேலாக, நாடு முழுவதும் உள்ள மக்கள், இன்னலுக்குட்பட்டவர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டியும், அயராது உழைத்தும் வந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடூரமான உள்நாட்டுப் போரையும், அதைத் தொடர்ந்து சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளையும், தொடர் வெள்ளப் பாதிப்புகளையும் நாம் அனுபவித்துள்ளோம்.

சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. ஒரு அளவுக்குமேல் , அவற்றின் அழிவைத் தவிர்ப்பது கடினம். ஆனால் போர் வித்தியாசமானது. போர் என்பது அரசியல் தோல்வியின் விளைவு. அரசியல்வாதிகள் நாட்டை ஆள்கிறார்கள், நாட்டை வறுமைப்படுத்துகிறார்கள், தங்களைச் செல்வந்தர்களாக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் நாம், அதாவது இலங்கை மக்கள், அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். மீண்டும் மீண்டும், பெரும்பாலும் தயக்கமின்றி.

நாம் அரசியல்வாதிகளை மட்டுமே குறை கூறலாமா?

இது, ஒருவர் தம் வீட்டுக் கதவைத் திறந்து வைத்து விட்டு, திருட்டு நடந்த பிறகு, திருடனைக் குறை கூறுவது போன்றது.

இக்கட்டுரை எனது நண்பரின் கதையைச் சொல்கிறது. போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக 12ஆம் வகுப்பு வரை, “சிலோன் மாணவர் கல்வி நிதி” என்ற குறிப்பிடத்தக்க முயற்சியை அவர் துவக்கினார்.

1988ஆம் ஆண்டு, நான் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலம். என் நண்பர் எல். முருகப்பூபதி, சில ஒரே எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து, சிலோன் மாணவர் கல்வி நிதியை நிறுவினார். அதன் நோக்கம் எளிமையானது; ஆனால் ஆழமானது: போரினால் தந்தையை இழந்து அனாதையான குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதே நோக்கமாகும் . நான் பின்னர் இந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றினேன். ஆனால், அதன் முதன்மை உந்து சக்தி முருகப்பூபதி அவர்களே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அமைப்பை உருவாக்கிய அந்த நேரத்தில், அவரே இலங்கையில் உள்ள தன் குடும்பத்தைப் பிரிந்து ஆஸ்திரேலியாவில் ஒரு அகதியாக இருந்தார். பலர் தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்த காலம். ஆனால் அவர் செயல்ப்பாட்டாளராக தன்னைத்  தேர்வு செய்தார். முதலில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களுக்குப் பின்னர் மலையகத்  தோட்டப் பகுதிகளுக்கும் ஆதரவு அளிக்கும்  அமைப்பாக  மாற்றினார். இந்தஅமைப்பு  37 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கி வந்துள்ளது.

முருகபூபதி அவர்கள் இப்போது நோயினால் செயல்பட முடியாத நிலையில் இருந்தாலும், அவர் நமக்கு விட்டுச்செல்லும் அவரது இயக்கம்  விசேடமானது. அடுத்த தலைமுறை அறிய வேண்டியது. இந்தத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 5,000 மாணவர்கள் கல்வி உதவி பெற்றனர். பலர் பல்கலைக்கழகப் பட்டங்கள் பெற்று, இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மதிக்கத்தக்க பதவிகளை வகிக்கின்றனர்.

தற்போதய முடிவுகளின் படி  , மீதமுள்ள நிதி முழுவதும் வழங்கப்பட்ட பின், இந்த அமைப்பு அடுத்த ஆண்டு மூடப்படும். ஒரு வருடத்திற்கு கொடுத்த  தொகைகள் கணிசமானவை. எடுத்துக்காட்டாக, 2025ல் , கல்வி உதவிக்காக மட்டும் AUD 30,000க்கும்  செலவிடப்பட்டது. இந்த அமைப்பை நிறுத்துதல் நண்பர் முருகபூபதிக்கு நிச்சயமாக ஏமாற்றம் தரும் விடயமாகும். ஆனால், “நமது நோக்கம் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பதுதான். போர் 16 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. நீங்கள் ஆரம்பித்த நோக்கம் நிறைவேறிவிட்டது , இப்போது இந்தத் திட்டத்தை முடிப்பது பொருத்தமானது” என்று நான் அவருக்கு நினைவூட்டினேன்.

இந்த அமைப்பு அடைந்த சாதனைகளில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். பல குறுகிய காலத் உதவிகள்  போல் அல்லாமல், மாணவர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதன் மூலம், அவர்களே தங்களுக்குத் தாங்கள் உதவும் வகையில் இந்த நிறுவனம் உதவியது.  பெரும்பாலான தமிழர்கள் போர் ஆயுதங்களுக்காக நிதி திரட்டிக் கொண்டிருந்த காலத்தில், நண்பர் முருகப்பூபதி மாணவர்கள்  கல்விக்கான நிதியைத் திரட்டத் தேர்வு செய்தார் எனும்போது அவரது இந்தத் தூரப்பார்வை குறிப்பிடத்தக்கது.  கல்வியே சமூக மாற்றத்தின் மிகவும் சக்தி வாய்ந்த கருவி என்ற நம்பிக்கையில்,  சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் கல்லுரிகளை   நிறுவியது போன்ற செயலாகும் .

 ஒவ்வொரு துறையிலும் இலங்கை முழுவதும் பணியாற்றும் ஏராளமானவர்கள் , நண்பர் முருகப்பூபதி அவர்களின் அமைதியான ஆனால் ஆழமான பங்களிப்புக்கு சான்றாக நிற்கிறார்கள்.

இந்த அமைப்பு முடிவுக்கு வந்தாலும், அது மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைத்த முறை, எதிர்கால தலைமுறைகளுக்கு சீரிய  உதாரணமாகும்  இந்த அமைப்பின்   வெற்றி தொடர்ந்து  சமூகத்தில் பேசுபொருளாக நீடிக்கும். ஒரு தனிநபர், தெளிவான நோக்கத்துடனும், சிந்தனையுடன்  சீரிய செயல்பாட்டுடனும், இந்த உலகில் அர்த்தமுள்ள மாற்றத்தை உண்மையிலேயே கொண்டு வர முடியும் என்பதை நண்பர் முருகபூபதி  நிரூபித்துக் காட்டியுள்ளார்.

நண்பர் முருகபூபதி சாதாரண மனிதனாக வாழ்ந்து  பல விடயங்களை சாதிக்க முடியும் என்பதை நமக்கு காட்டியுள்ளார்.  

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.