


அமரிக்காவின் மேற்கு மாநிலங்களில் எங்கள் பஸ் பயணத்தின் அடுத்த பகுதி கிராண்ட் கனியன் எனப்படும் பிரசித்தி பெற்ற புவியில் ஏற்பட்ட நீண்ட பிளவாகும். கிட்டத்தட்ட ஒரு மைல் ஆழத்திலும், பல மைல் அகலத்திலும் செங்குத்தாக அமைந்த பாறைகளின் பள்ளத்தாக்காக இது உள்ளது. இந்தப் பாறைகளின் வடிவமைப்பு பல மில்லியன் ஆண்டுகளாக கொலராடோ நதி என்ற சிற்பியால் செதுக்கப்பட்டது என்பதை அறியும்போது, மனிதர்களின் கலையின் ஆரம்ப ஊற்று இயற்கையே அதிலும் நீரும் காற்றும் ஆரம்ப காட்சியின் பிரதான இயக்குநர்கள் என நினைத்தேன்.
கிராண்ட் கனியன் அமைந்துள்ள பகுதி மிகவும் வரண்ட பிரதேசம். அதிக மரங்களற்று வெளியாக பாறைகள் அமைந்த பிரதேசமாக கண்ணுக்கெட்டியவரையில் தெரிந்தது. கிராண்ட் கனியன் மேல் ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்க்கும் ஒரு பயணம் இருந்தது. சியாமளா பயந்தபோது ஒரு மாதிரி தைரியம் கொடுத்து ஹெலிகாப்டரில் ஏற்றி சென்றேன். நல்ல வேளையாக பைலட்டேடு ஆறு பேர் அமரும் அந்த ஹெலிகாப்டரில் எங்களை முன் இருக்கையில் உட்கார வைத்தனர். முழுப் பகுதிகளையும் இலகுவாக பார்க்க படம் எடுக்க முடிந்தது. நாங்கள் கேட்காமலே அந்த வசதி கிடைத்தது.மேற்கு நாடுகளில் குறிப்பாக வயதிற்கு கிடைக்கும் மரியாதையை எம்மால் உணர முடிந்தது.
கிராண்ட் கனியன் பல மாநிலங்களில் விரிந்து பரவி இருந்தாலும் பெரும் பகுதி அமைந்திருப்பது அரிசோனா மாநிலத்தில் தான். மிகச் சிறிய பகுதிகள் யூட்டா மற்றும் நெவாடா மாநிலங்களில் உள்ளன. இந்த கிராண்ட் கனியன் 447 கிலோமீட்டர் நீளமானது.
கிராண்ட் கனியன் அமைந்துள்ள பகுதியை வடக்கு–தெற்கு என பிரிக்கிறார்கள். கிராண்ட் கனியன் வடக்குப் பகுதி சமீபத்தில் காட்டுத்தீயால் அழிந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாம் சென்றது தென் பகுதி. கிராண்ட் கனியன் யுனெஸ்கோவால் பாதுகாக்கப் படவேண்டிய பரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கிராண்ட் கனியன் அமைப்பை பல காலம் கேள்விப்பட்டிருந்த போதிலும், மேலிருந்து பார்ப்பது ஒரு வரப்பிரசாதம் என நினைத்தேன். இது அமரிக்காவின் முக்கிய தேசியப் பூங்காவாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதிசயமான நில அமைப்பு, பல நிறங்களிலான கற்பாறைகளின் மேல் பாய்ந்து, தழுவி, உராய்ந்து தேர்ந்த சிற்பியைப் போல ஆறு மில்லியன் ஆண்டுகள் அமைதியாக செதுக்கி உருவாக்கிய கொலராடோ நதி, இப்போது சிறு வயதில் நான் கட்டியிருந்த வெள்ளி அரை நார்க்கொடி போல் ஹெலிகாப்டரில் இருந்து பார்க்க தெளிவாக தெரிந்தது.
நாங்கள் கீழே பார்த்த நிலம் பெரும் பகுதி சிவப்பாகத் தெரிந்தது. அவுஸ்திரேலியாவில் உள்ள இரும்புத் தாது அள்ளும் பகுதிபோல தெரிந்ததால், இங்கு ஏராளமாக இரும்பு இருப்பதாக தெரிகிறது. நல்ல வேளையாக இக்காலத்தில் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பிரதேசம் என்பதால் கனிமப் பொருட்கள் அகழ்தல் செய்ய முடியாது. இந்த கிராண்ட் கனியன் பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குகைகள் உள்ளன. இன்னமும் பல குகைகள் எவரும் செல்லாதவையாகவே உள்ளனவென அறிந்தேன் .
அழகிய இடங்களில் ஆபத்தும் இருப்பது போல, 1956ல் இங்கு 128 பயணிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் மோதியதால், விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தார்கள். அது மட்டுமல்ல, பின்பாக 1986ல் கிராண்ட் கனியன் மீது சென்ற உல்லாசப் பயணிகளை அழைத்து சென்ற விமானமும் ஹெலிகாப்டரும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்து நடந்தது. ஆனால் எனக்குத் தெரிந்த அந்த சம்பவத்தை நான் சியாமளாவிடம் தெரிவிக்கவில்லை. தெரிவித்தால், “ கான்சர், இதய பேஸ்மேக்கர் வைத்தபின் இங்கு வந்து இறக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்பார் என்பதால், அந்த விடயம், வானத்தில் பறந்த 20 நிமிடங்களும் என் மனதை இடைக்கிடை கோடையில் முகத்தை மொய்க்கும் இலையானாக இருந்தது.
நாங்கள் சென்ற ஹெலிகாப்டர் சாரதி சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர். ஏதோ சுவிஸ் நாட்டினர் இந்த வகை தொழில்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என எங்கோ படித்திருந்தேன். மேலும், எந்த மழை, மப்பு இல்லாத தெளிவான காலநிலையும் இருந்ததால் மனத்திற்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தது.
ஒரு கிலோமீட்டர் ஆழமும், 16 கிலோமீட்டர் அகலமும், , பாலைவனம்போல் ஆனால் பாறைகள் மட்டுமே கொண்டு அதிக மரங்களற்ற இந்தப் பகுதியில் 1750 விதமான தாவரங்களும், 90 விதமான விலங்குகளும், 750 வகையான பறவைகளும் உள்ளன எனப் போட்டிருந்த தகவல் ஆச்சரியமளித்தது.
கிராண்ட் கனியன் பகுதிகளில் செய்த அகழாய்வுகளில் 11,000 ஆண்டுகள் முன்பான அம்பின் நுனி கிடைத்ததால், இங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக அமெரிக்க ஆதிவாசிகள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அம்பு நுனியை விட மட்பாண்டத் துண்டுகள் கிடைத்தது மூலம், அவர்கள் வேட்டையாடுபவர்கள் மட்டுமல்லாது, கொலராடோ நதிக்கு அருகே விவசாயமும் செய்திருக்கிறார்கள் என முடிவாயிற்று. கொலராடோ நதியிலிருந்து வந்த மணற்படிவங்கள் அவர்கள் சடங்குகள், வாழ்க்கைமுறை வழிபாடுகள் ஆகியவற்றை அறிய உதவுகின்றன. தற்போது பதினொரு வகையான ஆதிவாசிக் குடிகள் இங்கு தொடர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அன்று முழுநாளும் பஸ்ஸில் நகர்ந்தபடி கிராண்ட் கனியனை பல இடங்களில் நடந்தும் ஏறியும் பார்க்க முடிந்தது. விமான விபத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் வைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லையும் பார்க்க நேர்ந்தது.
கிராண்ட் கனியனின் தென் பகுதியில் அமைந்த ஒரு சிறிய நகரமான துசாயன் (Tusayan) என்ற ஊரில் உள்ள ஹோட்டலில் அன்று இரவு தங்கினோம்.
பின்னூட்டமொன்றை இடுக