மேற்கு அமரிக்கா: 1

முன்பு இரண்டு முறை அமெரிக்கா வந்திருந்தபோதும், அமெரிக்காவின் பிரதான நகரங்களான போஸ்டன், நியூயோர்க், பிலடெல்பியா போன்ற, உறவினர்கள் வாழும் கிழக்குப் பகுதிகளிலேயே தங்கி விருந்தோம்பலை அனுபவித்து  பயணம் முடிந்துவிடும். அதுவே அமரிக்க பயணமாகிவிடும்.   வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி எக்காலத்திலும் பார்க்காத பகுதியென என் மனத்தில் எப்போதும் இருந்தது  எனலாம்.

யரழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதியில் இருந்த காலத்தில் மனோகரா றீகல் என்ற இரு தியேட்டர்களிலும் பாடங்களை பகிஸ்கரித்து நான்  பார்த்த கவ்பாய் படங்களாலும்,  பின்னர் வயது வந்தபின் பார்த்த  ஹாலிவுட் படங்களாலும், கலிஃபோர்னியாவின் நகரங்கள் மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சலஸின் புறநகரங்களான சாண்டா மோனிக்கா, பெவர்லி ஹில்ஸ் போன்ற பெயர்கள் எப்போதும் நினைவில் நிழலாக ஆடும்.

அமெரிக்க அரசின் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றைய நாடுகளில்  அரசுகளை மாற்றுவதிலும் ராணுவப் புரட்சிகளை உருவாக்குவதிலும் ஈடுபட்டிருப்பதால் ஹாலிவுட் திரைப்படங்களே  அமெரிக்காவின் முக்கிய கலாச்சார நல்லெண்ணத்த தூதுவர்கள் என்பது எனது நிலைப்பாடு. இதற்கப்பால்  அமரிக்க பல்கலைக்கழகங்கள் என் மதிப்புக்குரியன. பல முறை, நான் மேல்ப்படிப்பு கற்க்க முயன்றும் நமக்கு அதிஸ்டமிருக்கவில்லை.

இம்முறை அமெரிக்கப் பயணத்தில், ஒரு வாரம்  மேற்குப் பகுதியில் செலவழிப்பது எனது குறிக்கோளாக இருந்தது. அதற்கான ஆயத்தமும் ஏற்கனவே செய்து வைத்திருந்தேன். புதிதாக வந்த அரசியல் மாற்றத்தால் விசா கிடையாது என பலர் பயமுறுத்தினாலும், முன்னிட்ட காலையைப் பின்வைக்க விரும்பவில்லை. விசா வழங்குவதற்கு முன்பு முகநூலைப் பார்த்தே முடிவு செய்வார்கள் என பலர் சொல்லியிருந்தனர். மற்றவர்களின் சொல்லைக் கேட்காத என் பழக்கம் எப்போதும் உதவும் என்பது எனது நம்பிக்கை. நான் விண்ணப்பித்த சில மணிநேரங்களிலேயே விசாவும் கிடைத்தது.

நாங்கள் எதிர்பாராத வகையில், இம்முறை எங்கள் அமெரிக்கப் பயணம் நிலவிற்குப் போய் வரும் பயணத்தைப் போலவே இருந்தது. மெல்போர்னில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு பிரிஸ்பேனிற்கு  சென்று அங்கே கனடா செல்லும் விமானம் எடுப்பதே எங்கள் திட்டம். ஆனால் கனடா விமானம் அரைமணி நேரமோ, ஒரு மணிநேரமோ அல்ல — பத்துமணி நேரம் தாமதமானது. கனேடிய ஏர்லைன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்று அறிவித்தார்கள். இதேபோல் 10 வருடங்களுக்கு முன்பு சிட்னியில் 24 மணிநேரம் தாமதமடைந்த அனுபவமும் உண்டு. அப்போது இரவு தங்க ஹோட்டல் தந்தார்கள். இம்முறை 13 மணிநேரம் விமான நிலையத்திலேயே கழிந்தது; நல்லவேளை உணவு வழங்கப்பட்டது.

மனத்தளராமல் பசிபிக் சமுத்திரத்தை 14 மணிநேரம் பறந்து அதே கனேடிய ஏர்லைனில் வான்கூவர் சென்றோம். அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்ல புதிய ரிக்கட் பதிந்திருந்தார்கள் . ஆனால் அங்கிருந்து லாஸ் ஏஞ்சலஸுக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த விமானமும் தாமதம். எனவே புதிய டிக்கெட் எடுத்து, சான் பிரான்சிஸ்கோவில் இரவு தங்கி, மறுநாள் காலையில் ஏஞ்சலஸுக்கு சென்றோம். கிட்டத்தட்ட இரண்டு நாள் வானத்தில் பறக்கும் நீண்ட பயணத்தை அளித்ததற்கு வட அமெரிக்காவின் சிறந்த விமான நிறுவனமான கனேடிய ஏர்லைனுக்கு நன்றி தெரிவித்தோம்.

இரு நாட்கள் பயணித்துவிட்டு லாஸ் ஏஞ்சலஸில் இறங்கியபோது உடலும் உளமும் கல்லில் அடித்து தோய்த்த நூல் சீலையாக நைந்து  போயிருந்தோம். எனது  மனம் தளராதிருக்க விட்டமின் ஊட்டச்சத்தாக,  அக்காலத்தில் தூரதேசப் பயணங்கள் செய்த மார்க்கோ போலோ, இப்னு பட்டூத்தா போன்றவர்களின் பயணங்கள் வரிசையாக நினைவுக்கு  வந்தன.

லாஸ் ஏஞ்சலஸில் இறங்கியபோது எனக்கு முக்கியமாக பதிந்த ஒன்று — அமெரிக்காவின் பெரிய ஹோட்டல்களில் தண்ணீர், காபி போன்றவை இலவசமாக இல்லை. காரணம், ஹோட்டலுக்குள் உள்ளே இயங்கும் கடைகளில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. உலகத்தின் பல நாடுகளில் இல்லாத விடயம் இது.

ஒரு காலத்தில் நான் மார்க்சிசத்தை நம்பியவன். அக்காலத்தில் நான் படித்த கார்ல் மார்க்ஸ் தத்துவம் நினைவுக்கு வந்தது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கார்ல் மார்க்ஸின் தாக்கத்தால் முதலாளித்துவம் அதன் ‘கன்னித்தன்மையை’ இழந்துவிட்டது:அதனால் இலவச மருத்துவம், கல்வி, சமூக நலவூதியம் போன்றன உள்ளன. ஆனால் அமெரிக்காவில் முதலாளித்துவம் கன்னித்தன்மை இழக்காத மாதா மேரி போன்றது!

உணவகங்களில் 10 டாலர் மதிப்பில் சாப்பிட்டாலும் 2 டாலர் ‘டிப்ஸ்’, 3 டாலர் ‘டாக்ஸ்’ கொடுக்கவேண்டும். ஆஸ்திரேலியாவில் ‘டிப்ஸ்’ என்ற சொல்லையே கேட்காத எங்களுக்கு, நாங்கள் கொடுக்கும் டிப்ஸ்தான் அங்கே பணிபுரிபவர்களின் வேதனம் என்பது நினைவிற்கு வந்தது.

ஐரோப்பா பயணத்தில் சலம் விடுவதற்கு  எப்போது 1–2 யூரோ சில்லறை வைத்திருப்பேன், அதேபோல் அமெரிக்காவில் ஒரு டாலர் நோட்டுகள் பல வைத்திருக்க வேண்டும். எங்கும் எதற்கும் டிப்ஸ்.  முன்பு கையில் பணம் வைத்து செலவழித்ததால் இலகுவாக இருந்தது; தற்போது கடன் அட்டைகள் பயன்படுத்தும் காலத்தில் டிப்ஸுக்கே தனி கட்டணம் வரும்.

லாஸ் ஏஞ்சலஸில் இரண்டு நாட்கள் ஹோட்டலிலேயே காலை, மாலை நித்திரை செய்து, மூன்றாவது நாள் எங்கள் தென்மேற்கு நோக்கிய பஸ் பயணத்திற்குத் தயாரானோம்.

ஐம்பது பேர் கொண்ட எங்கள் பஸ், லாஸ் ஏஞ்சலஸில் இருந்து லாஸ் வேகஸ் நோக்கி செல்லும் . அதில் எல்லோரும் ஐரோப்பியர்கள். அமெரிக்கா வரும் ஆசியர்களும், கனேடியர்களும் தற்போதைய அமெரிக்கா ஜனாதிபதியின் ‘கருணையால்’ குறைந்துவிட்டதாக அறிந்தேன்.

அமெரிக்காவின் மேற்குப் பகுதி காலநிலை பற்றிய அறிவு எனக்கு அதிகமில்லை — பனி பெய்யும் பாலைவனங்களும் உள்ளன. நாங்கள் லாஸ் ஏஞ்சலஸில் பயணத்தை 40°C வெப்பத்தில் தொடங்கினோம்.

எங்கள்  பயணத்தின் ஆரம்ப இலக்கு  புவியின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றான கிராண்ட் கான்யன் (Grand Canyon)  நோக்கி இருந்தது.

அதிகாலையில் தொடங்கிய பயணம், மதியத்தில் தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள முக்கிய பாலைவன நகரமான பாம் ஸ்பிரிங்கில் (Palm Springs) நின்றது. அங்கு அரைமணிநேரம் தங்கியபோது, இந்தியாவில் இருந்த காலத்தில் நெருப்பு சட்டியைத் தலையில் வைத்துச் சென்றவர்களைப் பார்த்த ஞாபகம் வருமளவு வெப்பமான இடமாக இருந்தது. ஆனாலும் அது நவீன நகரமாகத் தெரிந்தது.

ஹாலிவுட் நடிகர்கள் பலரும் பாம் ஸ்பிரிங்கில் வசித்துள்ளனர். ‘The Seven Year Itch’  திரைப்படத்தில் வரும் 26 அடி உயரமான மேரிலின் மன்றோ சிலையும், அவரது பெயரில் உள்ள கடைகளும் கண்காட்சியாக இருந்தன. நாங்கள் நின்ற பகுதியின் அருகில் மேரிலின் மன்றோ, எல்விஸ் பிரெஸ்லி, லென்னன் ஆகியோர் வசித்தனர்; தற்போது லியோனார்டோ டிகாப்ரியோ போன்றவர்களும் வசிப்பதாகக் கூறினார்கள்.

இந்தப் பகுதிகள்  ஆதி அமெரிக்க மக்கள் ஆரம்பத்தில் வசித்தவை; பின்னர் மெக்சிகோ நாட்டிற்கு ஸ்பானிய காலனி காலத்தில் சொந்தமானது. அமெரிக்க–மெக்சிகன்(1848)  போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கு சேர்ந்தது. 

அந்த விடயம் தற்போதய உக்ரேனிய போர் போன்றது. அக்காலத்தில் ஒரு பழமொழி இருந்ததாம் :  எவ்வளவு தூரம் உனது வாள்முனை செல்லுமோ அதுவரையும் உனது நாடாகும் .

 இந்த இடத்தைச் சுற்றி நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள் ஆகியவை உள்ளதால் சில நாட்கள் சுற்றிப்பார்க்கக் கூடிய இடம். ஆனால் எங்களது பயணம் அங்கு அரைமணி நேரத்திலேயே முடிந்துவிட்டது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.