ஏன் வெளியேறினாய்?

நடேசன்

யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த 84ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறாகலை சூரியகாந்தித்தோட்டத்தில் நடந்த சம்பவம் நாட்டை விட்டு வெளியேறக் காரணமாக இருந்தது.

எனது மிருகவைத்திய அலுவலகம் சூரியகாந்தித் தோட்டத்தில் இருந்தாலும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு சற்று விலகியே அமைந்திருந்தது. எனது தங்குமிடம் அந்த கட்டிடத்தின் ஒரு அறையேயாகும். மலையகத்து காலை நேரம் மிகவும் இரம்மியமானது. ஈரமுகில்களால் போரத்தப்பட்டு இரவில் நனைந்த தேயிலைச்செடிகள் கண்ணுக்கெட்டிய தூரம் பரந்திருக்கும். இடைக்கிடையே தொழிலாளர் குடியிருப்புகள், மற்றைய உத்தியோகத்தவர்களது இல்லங்கள் பச்சைவண்ண கம்பளத்தில் புள்ளிகள் போடும். தூரத்து மலைகளில் படிந்திருந்த சோம்பேறியான முகில்கள் மெதுவாக கலைவதும் கண்களுக்கு இதமானவை. தேயிலைத் தொழிற்சாலையில் வறுக்கப்படும் தேயிலைத் துளிர்களில் இருந்து பரவும் நறுமணம் காற்றோடு கலந்து வரும் அந்த காலை வேளையை சிறிது நேரம் இரசித்துவிட்டுத்தான் எனது வேலையைத் தொடங்குவேன்.

காலைப்பொழுது புலரும்வேளையில் எழுந்து பார்த்தால் தொழிலாளர்களது குடியிருப்புகளின் கூரையிலிருந்து எழும் புகை தெரியும். ஆனால் நான் அன்று பார்த்தது அவர்களின் அன்றாட சமையலின்போது வரும் புகையல்ல.

பல காம்பராக்களில் கூரைகளைக் காணவில்லை. விடயத்தை ஆராய ஆவலாக இருந்ததால் எனது உதவியாளரான இரத்தினத்தை எதிர்பார்த்திருந்தேன். இரத்தினம் அந்தத் தோட்டத்தில் வசிப்பது எனக்குத் தெரியும்..

இரத்தினம் கலவரமான முகத்துடன் வந்தான்.

‘இரவு நடந்தது தெரியுமா?’ எனக்கேட்டான்.

‘இல்லையே’

‘நடு இரவில் சிங்களவர்கள் கிராமத்தில் இருந்து வந்து நெருப்பு வைத்துவிட்டார்கள். தொழிலாளர்கள் எல்லாம் குடும்பத்துடன் தேயிலை செடிகளுக்கு மறைவிலும் மலைப்பாறை இடையிலும் பதுங்கி இருந்து விட்டு இப்பதான் வருகிறார்கள்.’

‘என்ன நடந்தது?’

‘சின்னத்துரையை ஒரு தொழிலாளி குத்தியதால், குத்து வாங்கிய சின்னத்துரை சிங்கள கிராமத்தவர்களிடம் போய் சொல்லியதால் இந்த காம்பரா எரிப்பு நடந்தது.’

மேலும் அவனைத் துருவியபோது, தோட்டத்தில் நிர்வாகியாக சுப்பிரிண்டனும் ,உதவியாக இருப்பவரை சின்னத்துரை என அழைப்பார்கள்.  தொழிலாளியின் மனைவியை பாலியல் சேட்டை செய்ததால் சின்னத்துரை, தொழிலாளியால் குத்தப்பட்டான்.

தமிழ்த் தொழிலாளிகள் இரவில் மனைவி குழந்தைகளுடன் சென்று மலைகளிலும் புதர்களிலும் ஒளித்தனர். இந்தத் தோட்டத்தின் மத்தியில் அமைந்தது இறாகலை மிருக வைத்திய சாலை. தொழிலாளிகள் தேயிலைக் கொழுந்துகள் கிள்ளுவதோடு மாடுகள் வளர்த்தும் பால் கறந்து விற்றும் ஜீவனத்தை நடத்தியவர்கள். இவர்கள் எல்லோரும் பால் உற்பத்தியளர் கூட்டுறவு சங்கத்தில் அங்கத்தவர்கள். கிராம பால் கூட்டுறவுசங்கத்திற்கு நான் தலைவரானதால் இவர்களோடு எனக்கு தொடர்பு உள்ளது. இப்படியான தொடர்புகள் இருந்ததால் இரத்தினத்தோடு சென்று தொழிலாளிகளிடம் பேசினேன். அவர்களது துன்பங்களை விசாரித்த போது அவர்களது பயங்களை உணர்ந்தேன்.

சூரியகாந்தி தோட்டத்தை சுற்றிய கிராமங்களில் வசிப்பவர்கள் சிங்கள மக்கள். தமிழ்த்தொழிலாளி, சின்னத்துரை என்ற சிங்களவரை குத்திது என சொன்னதால் தமிழன் சிங்களவனை குத்தியதாக தகவல் பரவி இனப்பகையாகியது.

நான் தமிழ்த்தொழிலாளர்களிடம் சென்று பேசியதால்; கொட்டியா என சிலரால் அழைக்கப்பட்டேன்

இந்த கொட்டியா (புலி) என்ற சொல் பெரும்பாலானவர்களால் தமிழர்களுக்கு எதிராக பாவிக்கப்பட்டது. நான் அதைப்பற்றி ஆரம்பத்தில் பொருட்படுத்தவில்லை. ஆனால் பின்பு என்னை நுவரெலிய பொலிஸ் நிலயத்திற்கு அழைத்து விசாரிக்க இருப்பதாக என்னோடு வேலை செய்த சிங்கள இனத்தவர் ஒருவர் மூலம் தகவல் தெரிந்தது

சித்திரை வருடப்பிறப்பிற்கு யாழ்ப்பாணம் செல்ல நினைத்திருந்தபடியால்  கொழும்பு சென்று இந்திய விசா எடுத்தேன்

சூரியகாந்தி தோட்டத்தில் நடந்த கலவரம் மட்டுமா என்னை வெளியேறத்தூண்டியது?

இலங்கையின் தென்பகுதியில் வேலை செய்து கொண்டு எதிர்கால சரித்திரத்தில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ என்ற பயம் வந்தது

இவ்வளவுக்கும் நான் அரசியலில் பெரிதளவில் ஈடுபட்டவன் அல்ல. யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் படித்து,  பல்கலைக்கழகம் பிரவேசித்தபின் எனது வாழ்க்கை ஒழுங்காக நகர்ந்தது.

நான் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாலாம் உலக தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நடந்தது, அப்போது நடந்த நிகழ்வுகள் மனதில் பசுமரத்தாணியாக பதிந்திருக்கிறது.

பதினொருவர் இறந்த நாளுக்கு முதல் இரவு (2-01-1974)மூவர் இறந்தனர். இவர்களின் இறப்புக்கு நான் சாட்சியாகினேன்.

 இரவு 8 மணியளவில் மீன்களைப் போல் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியால் வந்து கொண்டிருந்தது. வீதிக்கு மேலாக செல்லும் மின்வயரில் ஊர்தி முட்டியவுடன் மின்சாரவயர் அறுந்தது, அந்த இடத்திலே மூவர் இறந்தார்கள். வயர் அறுந்த போது மின் வெளிச்சம் அணைந்தாலும் நான் நின்ற இடத்துக்கு அருகில் தரையில் போட்ட மீன் போல் ஒருவர் துடித்து இறந்ததை என்னால் பார்க்க முடிந்தது. எங்கள் ஊரில் வலையில் சிக்கி மீன் துடிப்பதைப்போல் இருந்து அவரது மரணம். ஏற்கனவே இறந்தவர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் கண்முன்னே நான் பார்த்த முதலாவது இறப்பு என்ற செயல் கோரமாக நிகழ்ந்தது.

அதிர்ச்சியுடன் வீடு சென்றேன்.

அடுத்தநாள் மகாநாட்டின் கடைசிநாள்.  நாங்கள் ஐந்து பேராக மாலைநேரம் மகாநாடு நடக்கும் இடத்துக்குச் செல்ல எண்ணினோம். .

சைக்கிளை மணிக்கூட்டு கோபுரத்தருகே வசிக்கும் எனது நண்பன் இரத்தினகாந்தனின் வீட்டில் விட்டுவிட்டு அவனுடன் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கிச் சென்றோம். மக்கள் கூட்டம் எங்கும் நிறைந்து வழிந்தது, வடமாகாணத்தில் வசிப்பவர்கள் எல்லோரும் அங்கு வந்துவிட்டார்களா என நினைத்தேன்.

முனியப்பர் கோயில், புல்லுக்குளம் போன்ற பகுதிகள் எமக்குத் தண்ணிபட்ட பாடமானதால் விரைவாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்தோம். மண்டபத்தின் முன்னிலையில் மேடைபோடப்பட்டிருந்தது, நாங்கள் அந்த மேடையின் பின்னால் நின்றோம்.

மேடையில் பலர் பேசினார்கள். ஆனால் தலைவர் அமிர்தலிங்கம் பேசும்போது மக்கள் ஆர்ப்பரித்தார்கள். அமிர்தலிங்கம் பேசி முடித்தவுடன் ஒருவர் மேடையில் ஏறினார். அவரை ஜனார்த்தனன் என மக்கள் கூறினார்கள்.

இரா. ஜனார்த்தனன் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் விசா கொடுக்கவில்லை என்ற விடயம் எமக்கு முன்பு தெரிந்திருந்தது.

எங்களுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிலர் இவர் வள்ளத்தில் வந்தார் எனக் கூறினார்கள்.

பேராசிரியர் நைனார் முகம்மது பேசிக் கொண்டிருக்கும்பொழுது மக்கள் ஜனார்த்தனன் பேசுகிறார் என ஆர்ப்பரித்தார்கள். அப்போது கண்ணாடிகள் நொருங்கும் சத்தம் கேட்டது. அத்துடன் கண்ணீர் புகை குண்டுகளும் எம்மத்தியில் விழுந்தன. சுடுகிறாங்கள், சுடுகிறாங்கள், நிலத்தில் படுங்கள் என பலர் சத்தமிட்டார்கள்.

எனக்கு மேல் குறைந்தது பத்துப்பேராவது படுத்திருப்பார்கள்.

திடீரென்று லைட்டுகள் அணைந்தன.எங்கும் கூக்குரலும் அலறலும் எதிரொலித்தது, இருட்டில் நடப்பது தெளிவாகத் தெரியவில்லை. எனக்கு மேல் படுத்தவர்கள் எழும்பிய பின்பு நானும் எழும்பி கண்ணீர்ப் புகையில் எரியும் கண்களை கசக்கியபடி பார்த்தேன். மண்டபத்தின் முன்பகுதியில் நான் நின்ற இரும்பு கேட்டால் அமைக்கப்பட்ட பகுதியில் எவரும் இல்லை. கேட்டை கடந்து செல்ல முயற்சிக்கும் போது கேட்டின் மேல் இருவர் சடலங்களாக தொங்குவது தெரிந்தது, ஒருநாள் பார்த்த ஆங்கில சண்டைப்படத்தை நினைவுக்கு வந்தது.

மின்சாரவயர் ஒன்று பக்கத்தில் கிடந்தது,

கேட்டிலும் மின்சாரம் பாயலாம் என்று நினைத்து கேட்டின் மேல் பாய்ந்து யாழ்ப்பாணம் தபால் நிலையம் நோக்கி ஓடினேன்.

தபால் நிலையத்தில் ஒரு தாயும் சிறுமியும் என்னுடைய கையைப் பிடித்தபடி சேர்ந்து கொண்டார்கள். அவர்களையும் இழுத்துக் கொண்டு கொட்டடிப் பக்கமாக ஓடினேன். கொட்டடியில் திறந்து இருந்த ஒரு வீட்டினுள் அவர்களை இருந்துவிட்டுப் போகும்படி கூறிவிட்டு, தட்டாத் தெரு சந்தியை நோக்கி ஓட்டமாக வந்து வீட்டை அடைந்தேன்.

 கண்ணீர்புகை,   ஓட்டம் , பயம் என்பனவற்றால் சாப்பிட முடியவில்லை. பாலை மட்டும் குடித்துவிட்டு படுத்தேன்.

அடுத்தநாள் காலை சைக்கிளை எடுக்க மீண்டும் சென்றபோது எம்மில் சிலரோடு முதல்நாள் இரவுச்சம்பவம் தொடர்பாக உரையாடினேன்.

வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் செருப்புகள் மலைபோல் குவிந்திருந்தது, பலருடன் பேசியதில் கிடைத்த விபரமாவது: பேராசிரியர் நைனார் முகம்மதுவை மேடையில் பார்த்தவுடன், அவரை இரா. ஜனார்த்தனன் என நினைத்து எஸ்.பி சந்திரசேகராவின் கட்டளையின்படி பொலிசார்,  மேடையை நோக்கி வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் பொலிசார் மீது செருப்புகளை வீசினர். இதைத் தொடர்ந்து பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை மக்களுக்கு எறிந்ததோடு, துப்பாக்கியால் மேல்நோக்கியும் சுட்டார்கள். துப்பாக்கிவேட்டு மின்சார வயரை தாக்கியதால் வயர் அறுந்து மின்சாரம் தாக்கி 12 பேர் இறந்தார்கள்.

பிற்காலத்தில் நடந்த பல நிகழ்விற்கு  தமிழ் ஆராய்ச்சி மகாநாடுதான் காரணமாகும்.

——-

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.