ஐஸ்லாந்து 5-

ஐஸ்லாந்தின் மேற்கு நோக்கிய பயணத்தில் நாங்கள் போன தார்ப் பாதையிலிருந்து விலகி கற்பாதையில்  எங்களை வாகனத்தில் அழைத்து சென்றபோது என் மனதில் ஏதோ முக்கியமான இடத்திற்கு செல்கிறோம்  என்ற எண்ணம்  ஏற்பட்டது . ஏற்கனவே சொல்லியபடி எங்கள் வழிகாட்டி இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர். மற்றையவர்களைபோல் உல்லாசப் பிரயாணிகள் பார்க்கும் இடங்களை மட்டும்  காட்டுவதுடன் நிற்காது,  ஐஸ்லாந்து போன்ற புதிய குடியேற்ற  நாட்டின்  கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும்  உருவாக்கிய முக்கிய சம்பவங்களைப் பற்றி  சொல்லியும், அவை நடந்த இடங்களை எங்களுக்கு  காட்டியபடியிருந்தார். அவரிடம்  அறிந்த விடயங்கள் பல. எல்லாம்  இங்கு எழுத்தில் எழுத முடியாது.

அவர் காட்டியது   ‘ஐஸ்லாந்தில் கடைசியாக கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்ட இடம் இது’   என இரண்டு கம்பங்கள் காட்டினார் . மேலும் ‘இந்த கம்பங்களில் இருந்து தலைகள் ஒரே நாளில் தலைமறைவாக விட்டது ‘.

டால்ஸ்டாயின் அன்னா கரினா நாவலில்   “மகிழ்வான குடும்பங்களில் மகிழ்வு ஒரே மாதிரி இருக்கும் ஆனால் மகிழ்ச்சியற்ற குடும்பங்களில் சோகம் பல விதமாக இருக்கும்”  என்ற இரண்டு வசனங்களுடன் தொடங்கும் நாவல் போன்று அவர் வார்த்தைகளால் முடிச்சு போட்டு விட்டு எதுவும் சொல்லாமல் எங்களை  விட்டு நகர்ந்தார் 

அதற்கு மேல் நாங்கள் சென்ற,  அந்த மண்  மேட்டை நோக்கி செல்லும் வழியில் செப்புத்  தகடுகள் பதிக்கப்பட்டிருந்தது.  அவற்றில் ஒரு கதை மிகவும் விறுவிறுப்பான நாவலாக  நகர்ந்தது.

மெதுவாக  நடந்தபடி அந்த தகடுகளை படித்து நான்  உள்வாங்கிய ஒரு கதை உங்களுக்கு இங்கு சுருக்கமாகத் தருகிறேன்.

இந்தப்பகுதியில் அக்னஸ்(Agnes Magnúsdótti) என்ற ஏழைப் பெண் வளர்ந்தாள் அவளது தந்தை,  அவளின் சிறுவயதில் குடும்பத்தை விட்டு விலகிவிட்டார்.  தாயால் குடும்பத்திற்கு  உணவளிக்க முடியாது.  இறுதியில் அவளும் அவளது தமையனும் அயலார்கள் இட்ட உணவில் வளர்ந்து,  ஆங்காங்கே விவசாய கூலி வேலை செய்தாள். அவள் பருவமடைந்து, கன்னியாகியபோது அவளை,  நாதன் என்ற விவசாயி: அவன் உள்ளுர் பரியாரியும்(Healer)  கூட  ,அவளைத் தன்னுடன் அழைத்து  பண்ணையில் வைத்துக்கொண்டான்.   அக்னஸ்சுக்கு , அவன் பழகும் முறையால் தன்னை  திருமணம்செய்வான் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது  ஆனால் நாதன் நேர்மை இல்லாதவன் மட்டுமல்ல பெண்ணாசை கொண்டவன் . மீண்டும் சிக்கிரியோர்(Sigriour) என்ற வயது குறைந்த பெண்ணை அழைத்து வந்து அவளுடன் படுக்கைக்கு செல்கிறான் . இதை பார்த்ததும்  அக்னஸ் கொதிப்படைகிறாள்.

இது  முக்கோணமான காதல் கதையல்ல.

சிக்கிரியோருக்கு ஏற்கனவே  காதலன் உண்டு. அவனது பெயர்  பெடரிக் (Fridrik).  அவன் தனது காதலியை கைப்பற்றி சென்ற நாதனின் செய்கையால் ஆத்திரமடைகிறான். தற்போது பாதிக்கப்பட்ட மூவரும் ஒன்று சேர்ந்து  நாதனை கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களுக்கு நாதனின் சொத்தின் மேலும்  கண்ணுள்ளது.  இறுதியில் நாதன் தனது விருந்தாளியுடன் இரவில் படுத்திருக்கும் போது,   (1828 ) மூவரும் சேர்ந்து கொலை செய்வதுடன்,  வீட்டையும் எரித்து விடுகிறார்கள்.  விடயம் விசாரணைக்கு வந்து அக்னஸ் மற்றும் பெடரிக் இருவருக்கும் தண்டனையாக கழுத்து வெட்டி மரணம் உடனே நிறைவேறுகிறது. சிக்கிரியோருக்கு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு டென்மார்க் சிறைக்கு  அனுப்பப்படுகிறாள் . முதல் பெடரிக் பின்பு அக்னஸ் என  இருவரது தலைகளும் ஒன்றின் பின் ஒன்றாக இந்த மேட்டில் வெட்டப்பட்டு, பின்பு கம்பத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இரவோடு இரவாக தலைகளை காணவில்லை .

தலைகளை பற்றிய செய்திகள் 100 வருடங்கள் எவருக்கும் தெரியவில்லை ஆனால் 1930ல் ஒரு குடும்பப்பெண் இருவரது தலைகளையும் எடுத்து அடக்கம்  செய்ததாக சொல்லப்பட்டு,  மீண்டும் அந்த தலைகள் கண்டெடுக்கப்பட்டது.

வாசித்து முடிய கனத்த மனத்துடன் எல்லோரும் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தோம்.இந்த கதை அவுஸ்திரேலிய எழுத்தாளரால்  நாவலாக்கப்பட்டது. (Burial Rites (2013) is a novel by Australian author Hannah Kent),.

அன்று மாலை ஒரு விவசாயின் பண்ணையில்  எங்களுக்கு  உணவு தரப்பட்டது . ஐஸ்லாந்தியர்களின் முக்கிய உணவு மீன் அத்துடன் இங்கு உல்லாசப் பயணத்துறை,  பெரிய நட்சத்திர விடுதிகள்,  பயணக் கம்பனிகள் என்று இல்லாது சாதாரண மக்களுடன் இணைந்து நடத்துவதால் , அவர்கள் நேரடியாக பயன் பெறுகிறார்கள்.  இந்த விவசாயின் பண்ணையில் ஐஸ்லாந்து குதிரைகள் பலவற்றை  பார்க்க  முடிந்தது. இக்குதிரைகள்  கலப்பினப்படுத்துவதை அரசு தடை செய்துள்ளதன் காரணமாக தொடர்சியான உள்ளக விருத்தியால் அவை பெரிதான வளர்ச்சியற்று  நெடுந்தீவு மட்டக் குதிரைகள்போல் தெரிந்தன. உல்லாசப்பயணிகள் அவைகளில் சவாரி செய்யவும் முடியும்.

 எங்கள் பயணத்தின் இறுதிப்பகுதியாக ஐஸ்லாந்தின்  மேற்குப்பகுதியின்        (Snaefellsnes Peninsula ,Iceland)  வளைகுடாப் பகுதியில் இருந்தது. இந்தப் பகுதி ஐஸ்லாந்தின் சிறிய மாதிரித் துண்டுப் போன்றது . இங்கு எரிமலைகள் , எரிமலை தள்ளிய  குழம்புகள், , பனி மூடிய எரிமலைச்  சிகரங்கள்,  அழகான கடற்கரைகள்,  பண்ணைகள் என பல விடயங்கள் உள்ளன .

 நாங்கள் அங்குள்ள கடற்கரைக்கு சென்றபோது (beach at Djupalonssandur) இரும்புப் படகின் பல துண்டுகள் கடல் மணலில் கறல் பிடித்து சிதறி   கிடந்தன.  ‘எதையும் அங்கிருந்து நகர்த்த வேண்டாம். இது ஒரு நிலனைவாலயம்போல் புனிதமானது’ என்றார் எங்கள் வழிகாட்டி

எழுபத்தைந்து  வருடங்கள்மேல் ‘(13 March in 1948) பிரிதானிய மீன்பிடிப் படகு (English trawler Epine GY-7) வந்து அப்போது அடித்த புயலில் சிக்கி 14 பேர். இறந்தார்கள்.  ஐந்து பேர் மட்டும்தப்பினார்கள் . பல இடங்களில் இருந்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தாலும் அந்த நேரத்து ராட்சத அலைகளை மீறி எவரும் நெருங்க முடியவில்லை . தற்பொழுது  அந்த இடம் ஒரு நினைவிடமாக பாதுகாக்கப்படுகிறது கடற்கரையில்உள்ள பாறைகளும் மணலும்   கறுப்பானவை . அந்த இடத்தில் சாதாரணமாக வீசும் காற்றே மிகவும் பலமானது.

ஐஸ்லாந்தை சுற்றியுள்ள பகுதிகள் கொட்(‘Cod)),   ஹெறிங் (Herring)  மீன்களுக்கு பிரபலமானவை . தொடர்ந்து பிரித்தானிய மீன்பிடி வள்ளங்கள் வருவதை எதிர்த்து ஐஸ்லாந்து பல நடவடிக்கைகளை எடுத்தது.   இதை  பத்திரிகைகள் கொட் போர் (‘Cod War’ ) என்றார்கள்.

நாங்கள் சென்ற அடுத்து இடம் அர்நாஸ்ரபி ( Arnarrstapi)- என்ற மீன்பிடி கிராமம்.  ஹெர்ரிங் மீன்கள் பல வகை இருந்தாலும்  அவை எல்லாம் குளிர் பிரதேசத்துக்குரிய மீன்கள். வடதுருவ நாடுகளில் முக்கியமான மீன்கள்.  இவற்றின்  உடலில் அதிக எண்ணெய் இருப்பதால்  பல வகையாக உணவில்  பயன்படுத்தப்படும்.  ஹெர்ரிங் மீன்களை,  சீல் மற்றும் திமிங்கிலங்களும் கல்யாண விருந்துபோல் விரும்பி உண்பதால் ,  ஹெர்ரிங் இருக்குமிடத்தில் திமிங்கலம்,  சீல்களை  எப்போதும் காணமுடியும். இந்த விருந்தில் பறவைகள் சுற்றம் சூழ பங்குபற்றுவதால் அவைகளும் இங்கு கூட்டமாக காணப்படும். இங்கு  இயற்கையாகவே பாதுகாப்பான மீன்பிடி துறைமுகம் உள்ளது.

ஆரம்பத்தில் டென்மார்க் 18, 19 வது நூற்றாண்டுகளில்இங்கு வந்து மீன் பிடித்தார்கள்.  சுதந்திரத்தின் பின்பாக  அவர்கள் விலகி செல்ல ஐஸ்லாந்தினரே இங்கு அதிகமாக  உள்ளார்கள்.

நாங்கள் சென்றபோது  ஏராளம் மீன்பிடிப் படகுகளை பார்க்க முடிந்தது.  உல்லாச பிராணிகளை அடுத்து மீன்பிடி ஐஸ்லாந்தின்  இரண்டாவது அன்னிய செலாவணியை ஈட்டும் தொழிலாகும்.

ஏற்கனவே இங்குநான் சொன்னது போல் ஏராளம் பறவைகள் வரும் அதில் ஆட்டிக் ரேர்ன் (Arctic Tern) என்ற சிறிய பறவை முக்கியமானது. அவற்றை  ஏராளமாக காண முடிந்தது.

அந்த ஒரு பறவை மட்டும் ஏன் முக்கியம்?

அரைக் கிலோவுடன்,  வெள்ளை நிறமான இந்த பறவை சிவப்பு அலகு கொணடது.  முப்பது வருடங்கள் உயிர் வாழும்  ஆட்டிக் ரேர்ன், இருவாச்சிகள் போல் ஆணும் பெண்ணும் இணையாக வாழ்வன. இவை கற்பொந்துகளில் முட்டையிட்டு அடைகாக்கும் . இவையில் காதல் வாழ்வும் விசித்திரமானது  . இலகுவில் ஆணைத் தேர்ந்தெடுக்காது.  பல நாட்கள்  ஆகாயத்தில் பறந்து பாவலா காட்டி இறுதியில் ஒன்று சேரும். அடைகாக்கும் காலத்தில்  ஆண் உணவளித்து பெண்ணை பாதுகாக்கும். இவை அதிக தூரங்கள் (A journey of more than 22,000 km) பறந்து அன்ராட்டிக்காவுக்கு செல்லும். பிரித்தானியாவில் இருக்கும் பறவைகள் குளிர்காலத்தில் தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியாஎன நம்மில் சில மனிதர்கள்போல் விடுமுறைக்கு  வந்துவிடும்.   அதாவது இவை மட்டுமே இரண்டு கோடை காலங்களை ஒரு வருடத்தில்  அனுபவிக்கும் பறவையாகும்.  ஒரு ஆய்வில்   70 000 கிலோ மீட்டர் பிறந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளார்கள்.                                   30 வருடங்கள் வாழ்வதால்  2-4 மில்லியன்  கிலோமீட்டர் தங்கள் வாழ்நாளில்  பறக்கின்றன என அனுமானிக்கிறார்கள்.

இவர்கள் தங்களை எதுவும்  தாக்க வரும்போது  அபாய ஒலி எழுப்பும். நான் படம் எடுப்பதற்கு போனபோது எங்கள் வழிகாட்டி ‘அவை குஞ்சுகளை பாதுகாக்க நெருங்கி வருவோரை தலையில் கொத்தி, குஞ்சுகளை   மிகவும் ஆக்ரோஷமாக பாதுகாக்கும் ‘ என்றார் அவரது வார்த்தைக்காக தூரத்தில் நின்று எடுத்தேன்.ஆணுப் பெண்ணுமாக உணவு கொண்டு  வந்து குஞ்சுகளை பாதுகாக்கும்.

இருவாச்சிகள் போல் இவற்றின் காதல் நடவடிக்கைகள் இருப்பதை அறிந்ததேன். இங்கே இவற்றின் நடவடிக்கைகள் இப்படி இருப்பதன் காரணம் பல காலம் வாழ்வதே என நினைக்கிறேன்( இருவாச்சிகள் 30-40 வருடங்கள் ஆட்டிக் ரேர்ண் 30-35 வருடங்கள்.ஒரு விதத்தில் மனிதர்களது ஆண்- பெண் உறவு அதிக காலங்கள்  நீடிப்பதற்கு இதுவே காரணம்.பிற்காலத்தில் என்ன மாதிரியான பெயர்களை நாம் வைத்த போதிலும் ஆண்- பெண் நீண்ட உறவுக்கு காரணம் நாம்  நெடுங்காலம் வாழ்வதாகும். அதாவது எமது சந்ததிகளுக்கு  மட்டும்  அல்ல  எமக்கும் நெடுங்கால பாதுகாப்பு  தேவை: இருவர் இணைந்திருப்பதால் மட்டும் அது ஏற்படுகிறது.

அருகாமையில் உள்ள கடற்கரை  (tri Tunga) சீல்கள் குழுமங்களாக வாழும் இடம்.  ஒரு காலத்தில் அவை உணவு,தோல்,  எண்ணைய் என பல தேவைகளுக்காக இங்கு வேட்டையாடினார்கள். பெட்ரோல் கண்டுபிடித்த பின் திமிங்கிலம் வேட்டை மட்டும் அல்ல   சீல் வேட்டைகள் நின்று விட்டது.  நாங்கள் சென்ற அந்த கடற்கரையில் பல சீல்களை பார்த்தேன். மதிய நேரம் அவை தூங்கிக் கொண்டிருந்தன. .  சீல்கள் பனிப்பாறைகளில் மட்டுமல்ல நீருக்கு அடியில் தூங்கும். அத்துடன் அவை தூங்கும் போது மூளையின் அரைப்பகுதி விழித்திருக்கும். சீல்கள் ஊனுண்கள். அவர்களுக்கு துருவக் கரடிகள் எதிரிகளாகும்.

சீல்கள், நாய்கள்,கரடிகள் ஒரே முன்னோரை கொண்டவை என்பதால் அவற்றை பார்க்கும்போது நான் வளர்த்த  நாய்களின் நினைவு  வருவதை தவிர்க்க முடியாது.

எங்கள் ஏழுநாள் தொடர் பயணம் முடிந்து மீண்டும் தலைநகரான ரெய்சவிக் வந்து சேர்ந்தோம். நாங்கள் மறுநாள் தங்கி   அங்கிருந்த ரீச்சவிக் அருங்காட்சியகம்  பார்த்தோம். அந்த அது உள்ளேயும் வெளியேயும் அற்புதமான இடம் . முழு ஐஸ்லாந்தையும் சிறிதாக அந்த ரீச்சவிக் அருங்காட்சியகத்துள்   உட்புகுத்தியுள்ளார்கள். எப்படி எரிமலைகள் உருவாகும் என்ற விளக்கங்களுடன்   பனி குகைகளையும் உள்ளே அமைத்துள்ளார்கள். மாலையில் அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றபோது  பெரும்பாலான நேரம்  அவை மூடப்பட்டுள்ளது அறிய முடிந்தது.

ஐஸ்லாந்தில் சாதாரணமாக பிரயாணிப்பதும்  அங்கு இடங்களைப் பார்பதும் சாகசமான விடயம்.  இளம் வயதில் செய்ய வேண்டியது என்ற போதிலும்  ஓரு இடத்தை மட்டும் தவிர்த்து மற்ற இடங்களுக்கு எல்லாம் எங்கள் குழுவை சேர்ந்தவரகளோடு  சென்றோம் என்ற மகிழ்வோடு,  நான் பயணம் செய்த நாடுகளில் ஐஸ்லாந்து மிகவும் பாதுகாப்பானது என்ற உணர்வு ஏற்பட்டது.  

முற்றும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.