மத்தியப் பிரதேசத்தின் யபல்பூரில் (Jabalpur) நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நர்மதா நதி ஓடிக்கொண்டிருந்தது. வழிகாட்டி கூறியபடி, இந்த நதி இந்திய உபகண்டத்தின் பழமையான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைக் கேட்டு நான் ஆச்சரியத்துடன் சிந்திக்கத் தொடங்கினேன்.



கங்கை, யமுனா, பிரமபுத்திரா போன்ற இந்தியாவின் பிரசித்தி பெற்ற நதிகள் அனைத்தும் இமயமலையிலிருந்து தோன்றியவை. இமயம் உருவானதே இந்திய உபகண்டம் தெற்கிலிருந்து நகர்ந்து ஆசியப் கண்டத்துடன் மோதியதில் ஏற்பட்ட புவியியல் விளைவாகும். இந்த மோதல் சுமார் 50 மில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. அதன் விளைவாக இமயமலை மற்றும் திபெத்தியப் பீடபூமி உருவாயின. பின்னரே இந்தியாவின் முக்கிய நதிகள் தோன்றின. ஆனால் நர்மதா பாயும் பகுதிகள், இதைவிடச் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்பே நிலமிருந்த பாறைத்தட்டுகளில் அமைந்தவையாகும். அங்கு கிடைக்கும் தொல்லியல் (fossil) எச்சங்களும் பாறைகளும் இதற்குச் சாட்சியாய் உள்ளன என்று வழிகாட்டி விளக்கினார்.
இதனை விளக்குவதற்காக அவர் நர்மதா நதிக்கரையிலுள்ள( Narmada Marble Valley) ஒரு இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு புறத்தில் கறுப்பு கற்கள், மற்றொரு புறத்தில் சுண்ணாம்பு படிவ பாறைகள் காணப்பட்டன. சுமார் ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு, நர்மதா நதியின் இரு கரைகளிலும் உயரமாக பளிங்குப் பாறைகள் உயர்ந்து தெரிந்தன. வழிகாட்டி, முழுநிலவின் ஒளியில் இக்கற்கள் பளிச்சிடும் எனக் கூறினார். நாங்கள் சென்றது மதிய நேரம். எழுத்தாளரானதால் நிலவை கற்பனையில் பார்த்தேன். நடுப்பகலான போதிலும் வள்ளத்தில் அரைமணி நேரம் பயணித்தபோது பாறைகளின் இயற்கை அமைப்பு கண்கவர் அழகாக இருந்தது.
நர்மதா நதி ஓடும் வழியில் ஒரு இடத்தில் நதி அருவியாக விழுகிறது. அருவி விழும் உயரம் அதிகமாக இல்லை. இருந்தாலும் கண்களுக்கு நேராகப் பார்க்கும் போது அதன் அழகு அபூர்வமாகத் தோன்றியது. என்னை மிகவும் கவர்ந்தது – நதிக்கரை மிகவும் சுத்தமாக இருந்தது. “இந்தியாவில் மிகச் சுத்தமான நதி நர்மதாதான்,” என்று எங்களிடம் கூறினர். கங்கை, யமுனா போன்று இந்தியாவின் அழுக்குகளைச் சுமந்தபடி பாயும் நதிகளை முன்னர் கண்டிருந்த எனக்குப் நர்மதா, ஒரு காலையில் எழுந்து ஆற்றில் நீராடி வெளியே வரும் கிராமப் பெண்ணைப் போல் தோன்றியது.
பெண்களின் பெயரை நதிகளுக்கு வைத்தால் மட்டும் போதுமா? அவற்றைச் சுத்தமாக பராமரிக்க வேண்டாமா? என்ற சிந்தனை எழுந்தது.
இந்தியாவின் பெரும்பாலான நதிகள் மேற்கிலிருந்து கிழக்கே பாய்கின்றன. ஆனால் நர்மதா கிழக்கிலிருந்து மேற்கே பாய்கிறது. இது, வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலைத்தொடரில் தோன்றுகிறது. இந்த மலைத்தொடர், மேற்குத் தொடர்மலை போல நீளமான தொடர்ச்சியான மலை அல்ல; இடையிடையே மலைகளும் பள்ளத்தாக்குகளும் கொண்ட அமைப்பாகும்.
பாறைகளின் இடத்திலிருந்து திரும்பும்போது, அருகிலுள்ள ஒரு கோயிலைச் சுட்டி வழிகாட்டி, “அந்தக் கிராமம் தான் கோபால்பூர்” என்றார். அங்கு “உடன்கட்டை ஏறுதல்” எனப்படும் சதி நடைமுறை நடைபெற்றதாகவும், அதைப் பற்றி பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி (William Henry Sleeman) எழுதியிருப்பதாகவும் கூறினார்.
வங்காளத்தில் 1829-இல் உடன்கட்டை ஏறுதல் என்ற இந்த நடைமுறை சட்டத்தால் தடைசெய்யப்பட்டதை நான் முன்பே அறிந்திருந்தேன். அதில் முக்கிய பங்காற்றியவர் சமூக சீர்திருத்தவாதி ராஜா ராம்மோகன் ராய் என்பதும் தெரியும். எனவே வழிகாட்டியின் குறிப்பில் ஆர்வம் கொண்டு மேலும் விசாரித்தேன்.
சிலீமன், அந்நேரம் 60 வயதான ஒரு பெண் தனது கணவனின் சிதையில் ஏறத் தயாராக இருப்பதை அறிந்ததும், ஏழு கிலோமீட்டர் குதிரையில், மேலும் மூன்று கிலோமீட்டர் நடந்து அந்தக் கிராமத்தை அடைந்தார். கணவன் இறந்த நிலையில், பசி மற்றும் நோயால் வாடியிருந்த அந்தப் பெண், “என் கணவன் ஏற்கனவே சூரியனிடம் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து நானும் செல்லத் தயாராக இருக்கிறேன்” என்று கூறினாள். சட்டத்தால் தடை இருந்தும், அதிகாரிகள் தடுத்தும், சிலீமன் அவளுக்குப் அனுமதி அளித்தார். அனுமதி கிடைத்தவுடன் அவள் வெற்றிலை வாயில் வைத்து, உதடுகளை சிவப்பாக்கிக் கொண்டு தீயில் குதித்தாள்.
அந்தச் சிலீமனே மத்தியப் பிரதேசத்தில் குண்டர்கள் (thugs) ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தவர். 1836-இல் அவர் கொண்டு வந்த “Thuggee and Dacoity Suppression Act” அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்தவர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதும், மறைந்திருந்த குண்டர்கள் தாங்களே வெளியில் வந்து சரணடைந்தனர். இதன் மூலம் பலருக்கு மரணதண்டனையும் வழங்கப்பட்டது. அக்காலத்தில் தான் இந்திய உளவுத்துறை மற்றும் குற்றவியல் தகவல் தொடர்பு அமைப்புகள் உருவாகின. இன்றும் ஆங்கிலச் சொல் Thug என்பது இந்திச்சொல்லான Thag என்பதிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
யபல்பூரில் உள்ள சிறை வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் (Sepoy Mutiny) ஈடுபட்ட பலர் இச்சிறையில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். அதேபோல், இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைவரான சுபாஸ் சந்திரபோசும் இச்சிறையில் சிறை வைக்கப்பட்டார்.
சிலீமனின் பங்களிப்பு பலவகையானது. 1828-இல் நர்மதா பள்ளத்தாக்கில் டைனோசர் எச்சங்களை முதலில் கண்டுபிடித்ததும் இவரே. தற்போது அந்த இடம் தொல்பொருள் பூங்காவாக உள்ளது. மேலும், ஓநாய்கள் வளர்த்த காட்டு பிள்ளைகள் பற்றியும் அவர் எழுதியுள்ளார். பின்னர் அந்தக் கதைகள் பல புத்தகங்கள், திரைப்படங்களுக்கு ஆதாரமாக அமைந்தன.
இவரது நினைவாக, மத்தியப் பிரதேசத்தில் “Sleemanabad” என்ற கிராமமுண்டு. இத்தகைய பெருமை வாய்ந்தவர், இலங்கைக்கு அருகே கடலில் கப்பலில் இறந்துபோது , அக்காலத்தின் வழக்கப்படி கடலில் அடக்கம் செய்யப்பட்டார்.
பின்னூட்டமொன்றை இடுக