தொன்ம வாக்கியமும் புனைவும்

பேராசிரியர் அ ராமசாமி.

பைபிளில் புகழ் பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. “தேவனுக்கு உரியதைத் தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்..” என்ற அந்த வாக்கியத்திற்குப் பின்னால் தனிமனித ஒழுக்கங்கள் குறித்த விசாரணைகள் இருக்கின்றன. தனிமனிதர்களது ஒழுக்க விதிகள் -குறிப்பாகப் பாவம் X புண்ணியம் போன்ற எதிரிணைகள் குறித்த எண்ண ஓட்டங்கள் அமைப்புகள் சார்ந்த முரண்பாடுகளில் சுலபமாகப் பிரக்ஞையின்றி மீறலைச் செய்கின்றன. தாங்கள் செய்யும் குற்றங்களுக்குப் பாவமன்னிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தவறிழைத்துக்கொண்டே இருக்கிறது என்பதைப் பலரது புனைவுகளில் நாம் வாசித்திருக்கிறோம். கிறித்தவப் பின்னணியில் இது ஒரு தொன்ம முடிச்சாகவே இருக்கிறது. இந்த முடிச்சை உரிப்பொருளாக்கி/உள்ளடக்கமாகக் கொண்டு இம்மாத அம்ருதாவில் நோயல் நடேசன் ஒரு கதை எழுதியுள்ளார். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசிக்கும் ரவிக்குமாரை மடுமாதா சந்தித்து உரையாடுவதாக அமைந்துள்ள இந்தக் கதையின் தலைப்பு இராயனுடையது ராயனுக்கே. பிரான்சின் டி.கேபா நதிக்கரையில் இருக்கும் லூர்து மாதா ஆலயத்திற்கு, இலங்கையில் மன்னாருக்குப் போகும் வழியில் உள்ள மடுமாதா வருகிறாள். புலம்பெயர்ந்து போன பக்தன் ரவிக்குமாரைக் குற்றச் செயலிலிருந்து மீட்கும் நோக்கத்தோடு மடுமாதாவும் புலம்பெயர்ந்து வருகிறாள். இந்தக் கதையைப் படித்தபோது நுகம் தொகுப்பும் அத்தொகுப்பின் ஆசிரியரான எக்பர்ட் சச்சிதானந்தம் எழுதிய அந்தக் கதையும் நினைவில் வந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய அந்தக் கதையின் தலைப்பு வேதாகமத்தின் அதே வாக்கியத்தை – தேவனுக்குரியதைத் தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்.. -என நீண்ட தலைப்பாகக் கொண்டது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் குடும்பச் சிக்கலைப் பேசுவது போலத் தோன்றினாலும், சமய நம்பிக்கையைப் பயன்படுத்திச் சுயநலத்தோடு இயங்கும் ஒரு கும்பலுக்கெதிராக இளைய சமுதாயம் கிளர்ந்தெழும் சித்திரத்தையே முன் வைக்கிறது. அதன் மூலம் சச்சிதானந்தம் அமைப்பை விசாரிக்கிறார். ஆனால் நோயல் நடேசனின் கதையில் அந்த விமரிசனம் இல்லை. தனிமனிதர்களின் பொறுப்பை வலியுறுத்துகிறது. அமைப்பின் விதிகளுக்கு உடன்பட்டு நிற்கவேண்டியதை வலியுறுத்துகிறது. கிறித்தவத் தொன்ம முடிச்சை உரிப்பொருளாக்கிய இரண்டு கதைகளும் வாசிக்க வேண்டிய கதைகள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.