


எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் வடக்குப் பகுதியூடாக இருந்தது . பஞ்சபூதத்தில் ஆகாயத்தைத் தவிர, (அதுவும் பனி கொட்டும்) மற்றவை நாலும் தொடர்ந்து ஆக்கிரோசமாக பொங்கும் பிரதேசம் இது. இந்தப் பகுதியில் புவியின் கீழே எப்போதும் அதிர்ந்தபடி உள்ளது. நிலத்துக்குக் கீழே தொடர்ச்சியாக எரிமலைகள் இயங்கியபடி உள்ளன . சில இடங்களில் அவை ஏரிகளாக மாறியும் மற்றைய இடங்களில் புகைந்தபடியும் நீர் குமிழி விட்டபடியும் இருக்கின்ற பிரதேசமாகும்.
முழு இடத்தையும் மைவரன்( Land of Myvatn) பிரதேசம் என்பார்கள் இந்த (Hverirgeothermal area) பிரதேசத்தில் இறங்கி நடக்கும்போது ஆயிரம் அழுகிய முட்டையின் மணம் எமது மூக்கை அடையும். அதையும் மீறியபடி மற்றவர்களை பின் தொடர்ந்தபோது, நிலத்தில் புல் மட்டுமல்ல பாசி கூட இல்லாத பழுப்பு நிறமாக இருந்தது . கந்தகம் மற்றும் இரும்பின் கலவை அந்த நிறத்தைக் கொடுப்பது எனப் புரிந்து கொண்டேன். சில இடங்களில் நாங்கள் நடப்பதற்கு பாதை, வயலுக்குள் நடப்பதுபோல் சிறிய பாதை இருந்தது. பாதையை விலகினால், அருகே நிலம் புகைத்தபடி இருந்தது. சில இடங்களில் தண்ணீர் புகைவிட்டு குமிழியாக வெளிவந்தது. சில இடங்களில் சேறுப் பள்ளங்கள் போல் காட்சி தந்தவை, ஆயிரம் மீட்டார்கள் ஆழமானதாகவும் அங்கு 200 சென்டிகிரேட் வெப்பம் உள்ளதாகவும் அறிந்தேன்.
நிலத்தின் கீழ் உள்ள பகுதி மிக வெப்பமாக இருப்பதால் இங்கு நிலத்தடி நீர் உள்ளே சென்று கொதித்தபடி மீண்டும் வெளியே வருகிறது . அதை விடப் பல கனிப்பொருட்கள் நிறைந்த இடம். இந்த இடத்தில் நாசா நிறுவனத்தினர் சில விடயங்களுக்கு பயிற்சி செய்ததாகக் கேள்விப்பட்டேன்.
செவ்வாய்க் கிரகத்தின் ஒரு பகுதியாக நினைத்தார்களோ?
கந்தக மணத்தால் அதிக நேரம் அங்கு நிற்க முடியாது . இந்த பிரதேசத்தில் அருகே மின்சாரம் Geothermal electricity- 3MW of geothermal energy.) எடுக்கிறார்கள். அதே மாவரன் பிரதேசத்தில் பெரிய ஏரி உள்ளது இந்த ஏரி, ஐரோப்பா அமெரிக்கா என்ற இரு கண்டங்கள் சந்திக்கும் இடத்தில் உள்ளது . இந்த ஏரியைச் சுற்றி சிலர் வருவார்கள் . நாங்க உயரமான இடத்தில் இருந்து பார்த்தோம் . அருகே சென்றால் பாதத்தின் கீழ் புவி அதிர்வை உணர முடியும் என்றார்கள். எவ்வளவு உண்மை பொய் என்பதை பரிச்சித்துப் பார்க்கவா முடியும்?
மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அந்த ஏரியை சுற்றவருவார்கள்என அறிந்தேன்.
இது தனியான ஏரியல்ல பல தீவுகளை கொண்டது இந்த ஏரியைச் சுற்றி மரங்கள், ஏரியில் மின்கள் உள்ளதால் பறவைகள் வருகின்றன.. நாங்கள் ஒரு உயரத்தில் நின்று அந்த ஏரியைப் பார்த்தபோது எனதருகே ஒருவர் சத்தமாக மூச்சு விட்டது கேட்டது. திரும்பி பார்த்தபோது என்னிலும் இளமையான ஆண் ஓருவரின் வயிற்றில் ஓட்சிசன் உருவாக்கும் மெஷின் தொங்கியது. சுவாசத்திற்கு ஓட்சிசன் போகும் குளாய்கள் அவரது மூக்குக்குள் இரண்டாக செல்கின்றன. அவரது கையில் பெரிய நிக்கோன் கமரா இருந்தது.
நான் சியாமளாவிடம் கேட்டேன் ‘ இப்படி ஒரு நிலையில் எங்களால் வீட்டை மட்டுமல்ல கட்டிலை விட்டாவது அசைவோமா?
இந்தப் பகுதியில்ஒரு அழகான ஒரு அருவி (Godafoss)உள்ளது. அது அதிக உயரமில்லை 12 மீட்டர் உயரம் மட்டுமே. இது நயகராவின் அமைப்பாக வளைவாக உள்ளது . அதிகமான நீர் அகலமாக விழுகிறது. ,இதனது பெயரின் அர்த்தம் தேவனின் அருவி என்பதாகும். இதையே ஐரோப்பாவின் பெரிய அருவி என்கிறார்கள் . பல அருவியில் உயரத்திலோ அல்லது சமீபத்தில் செல்ல முடியாது இருக்கும் இதைப் பார்ப்பது இலகுவானது. உயரம் குறைந்தபடியால் எமது கண்ணெதிரே நீலமாக நீர் கொட்டுவது தெரியும். அருவியின் பின்னால் பனிபடர்ந்த மலைச் சிகரம் தெரியும்.
ரிச்சிவிக்கை விட்டு புறப்பட்டதும், மூன்று இரவுகள் சிறிய மரத்தால் ஆன கபின் எனப்படும் இடங்களில் தங்கிய பின், நாங்கள் வந்து சேர்ந்த நகரம் அகுயுறிறி(Akureyri) . இங்கு 20,000 மக்கள் உள்ள இரண்டாவது பெரிய நகரம். ஐஸ்லாந்தின் வட பகுதியில் இருப்பதால் ஆட்டிக் வளையத்துள் உள்ளது.
இது ஒரு துறைமுக நகரமானதால் பெருமளவு மீன்பிடி இங்கு நடக்கிறது. இத்துடன் பயணிகளைக் கொண்டு வரும் பெரிய கப்பல்களும் ஒரு நாள் தங்கி செல்லும். இங்குள்ள துறைமுகம் நமது திருகோணமலைபோல் மலைகளால் சூழ்ந்திருப்பதால் ஆட்டிக்கில் இருந்து வீசும் குளிர் காற்று தடுக்கப்படுகிறது. அத்துடன் பாதுகாப்பாக கப்பல்கள் வந்து நின்று போவதற்கு ஏற்ற பிரதேசம். இதனால் இரண்டாம் உலகப் போர் காலத்தில் நோர்வே பிரித்தானிய கடற்படை தங்கியிருந்தது. ஜேர்மனி ஐஸ்லாந்தை இரண்டாவது மாகா யுத்த காலத்தில் நிரந்தரமாக தனக்குள் வைத்திருக்க முனைந்தது.
அன்று மாலையில் நாங்கள் தனியாக பல இடத்தை சுற்ற முடிந்தது . துறைமுகம் மற்றும் கடைகள் என அதிகமில்லை . 97 வீதமானவர்கள் ஐஸ்லாந்து மக்கள் மிகுதி மூன்று வீதம் யார் நினைத்தபோது அங்கு இந்திய கடை ,லெபனானிய கடை இருந்தது . அத்துடன் இங்கு ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது, அங்கும் வெளிநாட்டவர்கள் படிக்கிறார்கள் என அறிந்தேன் அதை விட என்னால் பெரிய புத்தகக் கடை ஒன்றைப் பார்க்க முடிந்தது. எல்லா நாடுகளிலும் புத்தகக் கடைகள் மெலிந்து வரும் காலத்தில் இங்கு இப்படி என என வியந்தபடி ஏராளமான ஆங்கில புத்தகங்கள் என்னால் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்க்க முடிந்தது .
ஐஸ்லாந்தில் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள் ஆனால் மிகவும் கவனமாக அவர்களது ஐஸ்லாந்து மொழியை பாதுகாக்கிறார்கள். வெளிநாட்டவரகள் வேலை வாய்ப்பு பெற நிச்சயமாக மொழி படிக்க வேண்டும். வழக்கமாக குழுவாக உணவுண்ணும் நாங்கள் அன்று தனியாக லெபனிய கடையில் அன்று இரவு உணவருந்தினோம்.
நாங்கள் தங்கிய அந்த இரவு, அங்கு முற்றாக சூரியன் அஸ்தமிக்காத நாள் காலை என்பது இல்லாதபோதிலும், எழுந்து மிகுதி நகரத்தையும் சுற்றி பார்க்க முடிந்தது .
அழகான சுத்தமான நகர் . அத்துடன் ஒரு புதுமையான அமைப்பில் தேவாலம் இருந்தது. தேவாலயங்களுக்கு திருமணம் அல்லது இறப்புக்கு மட்டும் போவதாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் தற்பொழுதும் கிறிஸ்துவ லூதரன் பிரிவை சேர்ந்தவரகளே.
ஜெர்மனியில் மாட்டின் லூதர் கொள்கைகள் 1517ல் இருந்து வட ஐரோப்பா முழுவதும் புயலாக பரவியது. அந்த கொள்கைளை ஜேர்மன் வியாபாரிகள் பல இடங்களுக்கு கொண்டு போனதுபோல் ஐஸ்லாந்துக்கும் கொண்டு சென்றார்கள் . இக்காலத்தில் அவர்களது ஆளுமையால் கத்தோலிக்க மதத்தில் இருந்தவர்கள் பிற்காலத்தில் டென்மார்க் அரசின் உத்தரவுப்படி புரட்டஸ்தாந்து மதத்திற்கு 1547ல் மாறினார்கள்.
டென்மாரக் அரசர்(King Christian III of Denmark) சிலரை புரட்டஸ்தாந்து குருமாராக படிப்பித்து ஐஸ்லாந்தில் மக்களை மாற்றுவதற்கு அனுப்பினார்.ஆனால் மதமாற்றம் இலகுவாக நடக்கவில்லை. இரத்தம் சிந்தவேண்டி இருந்தது .ஐஸ்லாந்தில் உள்ள கத்தோலிக்க பிஷப்கள் பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்கவில்லை காரணம் அவர்கள் ரோமாபுரியில் இருந்து மிகவும் தூரத்தில் இருப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்துவது இலகுவானதல்ல. பாதிரிகள் மணம் முடிப்பது ஏற்கப்பட்டது- அல்லது சகிக்கப்பட்டது.
கத்தோலிக்க மதத்திலுள்ள லுதரனுக்கு மாறுவதை ஐஸ்லாந்தில் இரண்டு பிஷப்புகள் இறுதிவரையிலும் எதிர்த்தனர். அதில் ஒருவர் சிறைப் பிடிக்கப்பட்டு டென்மார்க் சிறையில் இறந்துவிட்டார் .ஆனால் நாங்கள் சென்ற வடக்கு பகுதியில் உள்ள பிஷப் யோன் (Jon)) லூதரன்களை எதிர்த்து தனது இரு மகன்களுடன் இறுதிவரை போரிட்டார் . கடைசியாக அவர்கள் பிடிபட்டதும், அவர்களை ராஜத்துரோகிகளாக விசாரணைக்கு டென்மார்க்கு கப்பலில் அனுப்பி அரசனின் முன்பாக விசாரிக்கப்பட்டு தண்டனை கிடைப்பது வழக்கம் ஆனால், குளிர்காலத்திற்கு முன்பு டென்மார்க் செல்ல இருந்த கப்பல் படகு புறப்பட்டுவிட்டது.பிடித்தது வைத்திருந்த அரசனின் ஆட்களுக்கு யோனையும் மகன்களையும் அடுத்த கப்பல், டென்மாரக்கில் குளிர்காலம் முடிந்து வரும்வரை வைத்திருப்பது கடினம் -காரணம் யோனுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அப்போது லூதரன் பாதிரி ஒருவர் ‘கோடாரியும் நிலமும் இவர்களுக்கு பாதுகாப்பு’ என்றதும் முதலில் இரு மகன்களும் கொல்லப்படுகிறார்கள். யோனை கொல்லத் தயங்கியபோது ‘நானும் மகன்களுடன் இறக்க விரும்புகிறேன்’ என்றார் பிஷப் யோன். அவர் கோடாரியால் (on 06 Nov 1550. ) கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்.
இத்துடன் கதை முடியவில்லை.
யோனுக்கு ஏழு பிள்ளைகள் அதில் இரண்டு பெண்கள். அதில் ஒரு மகள் தந்தை மற்றும் சகோதரர்களின் கொலைக்கு பழிவாங்க சிலருடன் சேர்ந்து சம்பந்தப்பட்டவர்களை(அதில் முக்கியமானவர்கள்) டென்மார்க்கை சேர்ந்தவர்களை கொலை செய்து விவசாயினது தோட்டத்தில் புதைத்துவிடுகிறார்கள் . இதனால் சீற்றமடைந்த மன்னன் தனது வீரர்களை அனுப்பி அந்த விவசாயியும் மற்றவர்களையும் கொலை செய்கிறான்.
யோன் ஒரு பிஷப் மட்டுமல்ல ஒரு கவிஞரும் ;தற்பொழுது ஒரு தேசிய வீரராக நினைவு கூரப்படுகிறார் . ‘பிஷப்பும் மகன்களும் மூவருமே ஐஸ்லாந்தின் கடைசிக் கத்தோலிக்கர்கள் ஆனால் தற்பொழுது ஐஸ்லாந்து மதச்சார்பற்ற நாடு. கத்தோலிக்கர் மற்றும் யூதர்கள், இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் ‘என்றார் எங்கள் வழிகாட்டி.
இப்பொழுது மட்டும் அல்ல அக்காலத்திலும் மதங்களால் மக்களின் குருதி அடையாளங்கள் போகுமிடமெல்லாம் நிறைந்துள்ளன.
நகரத்தை சுற்றி விட்டு மதியத்தில் நாங்கள் சென்ற இடம் ஐஸ்லாந்தின் புகழ் பெற்ற கவிஞர் ஸ்ரிவன் ஸ்ரிவின்சன் நினைவுக் கோபுரம் . ஐஸ்லாந்தில் பிறந்தாலும் 20 வயதில் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து பின்பு கனடாவில் இறுதி வரையிலும் விவசாயியாக வாழந்தவர். அவரது பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை .2000 பக்கங்களுக்கு மேலாக எழுதியுள்ளார் அவரது புகழ் பெற்ற பாடல் அவர் ஒரு புரட்சியாளராக, நமது பாரதிபோல போர் மற்றும் சுரண்டலை வெறுப்பவர் எனக் காட்டுகிறது . அவரது புகழ் பெற்ற பாடல் இங்கே ஆங்கிலத்திலும் அதன் முடிந்த அளவு எனது தமிழாக்கமும் இங்குள்ளது .
In Wartime
In Europe’s reeking slaughter pen
They mince the flesh of murdered men
While swinish merchants, snout in trough
Drink all the bloody profits off!
போர்க்காலத்தில்
அவர்கள் கொலை செய்யப்பட்ட மனிதர்களின் தசைகளை சக்கையாக,
பன்றி வியாபாரிகள், கழனி தொட்டியில் மூக்கை நுழைத்து,
இரத்தம் தோய்ந்த லாபம் அனைத்தையும் குடிக்கிறார்கள் !
ஐரோப்பாவில் பேனாக்கள் துர்மணம் வீச காகிதத்தில் கீறுகிறார்கள்.—
இந்த கவிதை இன்றைக்கும் பொருத்தமாகத் தோன்றவில்லையா? இக்காலத்தின் பேனைக்கு பதிலாக கம்ப்யூட்டர்கள் தொலைக்காட்சிகள் வேலை செய்கின்றன. இப்பொழுதும் பத்து வீதமானவரகள் பெரும்பகுதி செல்வத்தை மக்கள் இரத்தங்களோடு குடிக்கிறார்கள். கவிஞர் ஸ்ரிவன் ஸ்ரிவின்சன் என்றும் பொருத்தமாக தனது பண்ணை மொழியில் கவிதையை எழுதியுள்ளார்.
தொடரும்.
பின்னூட்டமொன்றை இடுக