


போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள் மற்றும் அசோக மன்னரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கல்லில் காவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
ஒரு சிற்பத்தில், சுத்தோதன மன்னருக்கு வாரிசு கிடையாது என்ற எண்ணத்தில் அவரது மனைவி மாயாதேவி, தங்கையான கவுதமியை மணம் செய்யுமாறு வற்புறுத்துகிறாள். மன்னர் சம்மதிக்காமலிருந்தாலும், பட்டத்துக்கு வாரிசு தேவை என்பதாலேயே அந்த திருமணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மாயாதேவியின் கனவில் வெள்ளை யானை தோன்றியதும் , ஜோதிடர்கள் அதனை நல்ல அறிகுறியாக அரசனிடம் கூறுகிறார்கள். இத்தகைய பல புராணக் கூறுகள் தூபியில் சிற்பமாகக் காணப்படுகின்றன.
இந்த தூபியின் வாசல் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் புத்தரின் முற்பிறவிக் கதைகள் பிரதானமாக இடம் பெற்றுள்ளன. இவை இந்தியச் சிற்பக் கலையின் தொடக்கமாகவே கருதப்படுகின்றன. அதாவது மாமல்லபுரத்து சிற்பங்களிலும் 900 வருடங்கள் தொன்மையானது.
தூபியின் சில தூண்களில் அசோக சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிற்பங்களில் இந்தியரல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் உடைகள் மற்றும் பாத அணிகளிலிருந்து அவர்கள் கிரேக்கர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இது கிரேக்கர்களும் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டிருப்பதை காட்டுகிறது. இவற்றின் மூலம், ஒரு கால கட்டத்தில் மவுரியச் சாம்ராஜ்யம் எப்படி இயங்கியது என்ற வரலாற்றைச் சிற்பங்களினாலேயே நமக்கு அறிய முடிகிறது.
இந்த தூபிகள் பாடலிபுத்திரத்திலிருந்து வெகு தொலைவில் ஏன் கட்டப்பட்டன என்ற கேள்வி எனக்கு எழுந்தது. பின்னர் எனக்குத் தெரிந்தது, இது அசோகனின் பட்டத்து மனைவி விதுசாவின் பிறந்த ஊர் என்பது. இவரையே சில சமயங்களில் “விதுசா தேவி” என்றும் அழைப்பர். அசோகன் இப்பகுதியில் ஆளுநர்போல் பணியாற்றிய பின்னரே மவுரியச் சாம்ராஜ்யத்தின் பேரரசராக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அசோகனின் மகன் மகேந்திரர் இலங்கைக்குப் பௌத்தத்தை பரப்பச் செல்லும் முன் தாயாரை இங்கு வந்து சந்தித்தார் என்றும் வரலாறு கூறுகிறது.
நான் பேராதனையில் படித்த காலத்தில் பல சிங்களப் பெண்களுக்கு “விதுசா” என்ற பெயர் இருந்தது. என் மனைவியிடம் இது பற்றிச் சொல்லியபோது, பலர் தங்கள் பெயர்களின் வரலாற்று அர்த்தங்களை அறியாமல் வைத்திருப்பதைப்பற்றிச் சிந்தித்தேன்.
இந்த தூபிகள் யுனெஸ்கோவால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன. புத்த தூபியின் சுற்றிலும் பிற்காலத்தில் கட்டப்பட்ட பல தூபிகள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை, புத்தரின் இரண்டு பிரதான சீடர்களான சாரிபுத்திரர் (Śāriputra) (உபதிஸ்ச) மற்றும் மகாமோகலானர் (மௌத்கல்யாயனன் (Maudgalyayana )) ஆகியோரின் எச்சங்கள் கொண்டவை. தேரவாத பௌத்தத்தில் இவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. இருவரும் சிறுவயது நண்பர்கள் மட்டுமல்ல, புத்தரின் இறப்பைக் காண விரும்பால் அவர் முன்பே இறந்தவர்கள்.
இந்த தூபிகளிலிருந்த அந்த எச்சங்களைப் பிற்காலத்தில் பிரிட்டிஷ் தொல்லியல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் கனிங்காம் (Alexander Cunningham) பிரித்தானிய அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்றார். பின்னர், இந்த எச்சங்களை ஜவஹர்லால் நேரு மீட்டுக்கொண்டு வந்தபோது, ஒரு பகுதியை இலங்கைக்கும் பர்மாவிற்கும் வழங்கினார். இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட எச்சங்கள் தற்போது அனுராதபுர மகாபோதியில் இருக்கின்றன.
வழிகாட்டியின் தகவலின்படி, இங்கு ஒரு பௌத்த கோவிலும் மடமும் இலங்கையர்களால் கட்டப்பட்டதாகும். முன்னே ஓங்கி வளர்ந்திருக்கும் அரச மரம் அனுராதபுரத்திலிருக்கும் போதிமரக் கிளை இங்கு கொண்டு வந்து வந்து நடப்பட்டதாக அறிந்தேன். ஒவ்வொரு ஆண்டும் 10,000-க்கும் மேற்பட்ட இலங்கை யாத்திரிகர்கள் சாஞ்சிக்கு யாத்திரிகர்களாக வருகிறார்கள்.
—
விதுசா மாவட்டத்தில் உள்ள உதயகிரி பகுதியில் 4ம்நூற்றாண்டு குப்தரகளில் அதுவும் இரண்டாவது சந்திர குப்தன் காலத்து குகைகள் பல இருந்தன. இந்த குகைகள் ஆரம்ப இந்து மதத்தின் வடிவங்கள் போல் தெரிந்தன . 20 குகைகளில் 19 இந்து மத குகைகளும் ஒன்று ஜைன மத என்றார் வழிகாட்டி.
எவரும் இல்லாது வெறிசோடி கிடந்தது அந்த இடம். அந்கு குகைகளில் என்று கல்லால் செதுக்கப்பட்ட கோவில் வாசல் அழகானது ஆனால் இடிந்து போய்விட்டது . உள்ளே போக முடியாது இரும்பு கதவு இருந்தது. அதன் கம்பியூடாக பார்த்தபோது சிவலிங்கம் தெரிந்தது . அந்த சிவலிங்கத்தில் முகம் அழகாகத் செதுக்கப்பட்டிருந்தது. அந்த முகத்தின் தடையில் தாடிபோன்று தெரிந்தது. அதைவிட தலையில் சுருளான தலைமயிர் போன்றும் தெரிந்தது. இதை முக லிங்கம் என்பார்கள் ஆனால் சிறுவயதில் நல்ல தலைமயிருடன் பார்த்த நண்பனை பிற்காலத்தில் வழுக்கைத் தலையுடன் பார்பதுபோல், தாடியுடன் சிவனைப் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.



குகை 5ல் மிகவும் பெரிதான காட்சி வராக உருவத்தில் மகாவிவிஷ்ணு இரண்ணியனிடமிருந்து பூமாதேவியை காப்பாற்றும் காட்சி மிகவும் அழகாக செதுக்கப்பட்ருந்தது . இந்த குகையில் சிவா பிரம்மா நாரதர் என்ற தேவலோகத்தினரை விட பூலோகத்தவரான இரண்டாவது சந்திரகுப்தனது அமைச்சர் உருவம் என ஒரு நாடக காட்சியாக செதுக்கப்பட்டிருந்தது.
ஒரு குகையின் வாசலில் இரண்டாவது சந்திரகுப்தன், இந்த உதயகிரியின் குகைக்கு வீரசேன என்ற மந்திரியுடன் வந்ததாக பிரமியில் எழுதப்பட்டதாக அங்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது .
கிரிக்க கதைகளில் தெய்வங்களும் மனிதர்களும் ஒன்றாக கலந்ததிருப்பதை நாம் கேட்டும் படித்திருக்கிறோம் அல்லவா?.
பின்னூட்டமொன்றை இடுக