யப்பானில் சில நாட்கள்:16 நாரா

 நாரா யப்பானின் புராதன தலைநகரம் . அதன் பின்பே தலைநகரம் கோயோட்டாவிற்கு மாறியது. இந்தக்காலத்திலே சீனாவிலிருந்து புத்தமதம் இங்கு வந்தது.  இதன் காரணத்தால் இன்னமும் இதுவே யப்பானின் மத சார்பான நகரமாகவும் முக்கிய பௌத்த ஆலயம் உள்ளது . இங்கு எங்கள் பயணத்தில் முக்கிய இடமாக இருந்தது.

ஐந்தாம் நூற்றாண்டுவரை யப்பானில் குறுநில மன்னர்கள்  பல பகுதிகளை பங்குபோட்டு ஆண்டார்கள். அதன் பின்பு நாராவின் அருகில் உள்ள அசுகா என்ற இடத்தில் உள்ள குறுநில மன்னன் அப்போதிருந்த மன்னனைக் கொலை செய்து அந்த பகுதியை அரசாளத் தொடங்கினான்.  அக்காலத்தில் பௌத்தம் யப்பானுக்கு வரும்போது  அப்பகுதியில் முக்கிய மதமாகிறது.  மக்களை ஒன்றாக்க புதிய மதம் உருவாகிறது. ஏழாம் நூற்றாண்டில்  ஆண்டுகளில்  ருடாஜி (Toda-ji)  பௌத்த கோவில் மிகவும் பொருட்செலவில் கட்டப்படுகிறது .  அக்காலத்தில் சீனா (Tang China) நான்கு பகுதியாக இருந்த கொரியாவை ஒன்று படுத்த உதவியது இதனால் யப்பானின் பகுதிகள் முழுவதும் ஒன்றாக அரசாளத் தொடங்குவதற்கு முக்கிய காரணம் சீனா  மேலிலிருந்த  பயமே. 

நாராவில் இறங்கியதும் இங்கு உள்ள பூங்காவில் ஏராளமான மான்கள் உங்களை வரவேற்கும் . வளர்த்த நாய்கள் போல் அருகே வந்து உணவு கேட்கும். மான்களுக்கு நாய்களைப்போல் எங்களது உணவுகள் கொடுக்க முடியாது என்பதால் யப்பானியர்கள் அவற்றுக்கான புல் கலந்த உணவை அரைத்து பிஸ்கட்போல் விற்கிறார்கள். அங்கு வரும் உல்லாச பிரயாணிகள் மற்றும் பக்தர்கள் அந்த பிஸ்கட்டை பணம் கொடுத்து வாங்கி அவைகளுக்கு கொடுப்பார்கள் .

நாரா வரும்போது எங்களுக்கு அதிர்ச்சியான ஒரு தகவல் காத்திருந்தது சிட்னியிலிருந்து வந்த கணவன் , மனைவி இருவரும் நோயால் ஒசாகா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிந்தது. குயின்ஸ்லாந்திலிருந்து வந்த ஒருவர் கொடுத்த வைரஸ் கிட்டத்தட்ட எல்லோரையும் பிடித்தது.  ஆனால், கொண்டு வந்தவர் மயக்கம் போட்டதுடன் தப்பிவிட்டார். ஆனால், மற்றைய இருவரையும் தங்களது விடுமுறையை முடிக்காது யப்பானில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.  அவர்களுக்கு அனுதாபம்  எமது மனதில் அலையாக மோதிய போதிலும் நல்ல வேளை நாம் தப்பி விட்டோம் என்ற எண்ணம் மனதில் மரமாக முளைத்தது.

மனிதர்கள் அடிப்படையில் சுயநலமானவர்கள். இந்த சுயநலமேஅவர்கள் உயிர் தப்பி வாழ்வதற்கு உதவுகிறது. இது அவர்களது பரிணாமத்தில் வந்த இயல்பு. ஒரு வீட்டில் திருடன் சென்றால், தனது  குழந்தையை அந்த பெண் கட்டிலுக்குக் கீழ் தள்ளியோ,  அல்லது அலுமாரியில் வைத்து அடைப்பதும்  ஆண் பொல்லொன்றை எடுத்தபடி உள்ளே வந்தவனைத் தேடுவதும் தப்பிப் பிழைத்தலை  எமது பரிணாமத்தில் வைக்கப்பட்டுள்ளது.   இது பணம்,   உறவு,  உடல் நலம், என பல விதங்களில்  வெளிப்படும். எங்களுக்கு இருமல் தொற்றும் வரையில், அதிக இருமல் வருபவரைத் தவிர்த்தே பஸ்ஸில் உட்கார்ந்தோம்.  பாவம் காள்மாக்சின் கம்யூனிசம் இறுதியில் தோற்றதன் காரணம் மனித இப்படியான மனித மனங்களாலே.

மன்னரால்  (Emperor Shomu) பெரும் பொருட்செலவில் நாராவில் உள்ள ருடாஜி (Toda-ji) எனப்படும். புத்த கோவில் யப்பானிய அரசரால் சீன வடிவமைப்பில் 738 கட்டப்பட்டது. 50,000 மரத்தச்சர்களும் 2 இலட்சம் தொழிலாளர்களும் கொண்டு கட்டியதாகச் சொல்லப்படும் . இந்த கோவில் யப்பானிய வரலாற்றில் முக்கிய விடயம். அதை விட ஆச்சரியமான தகவல்  இந்த கோவிலில் உள்ள  புத்தர் சிலையின் கண் இந்தியாவிலிருந்து வந்த பௌத்த துறவியால் திறக்கப்பட்டது. அக்காலத்தில்  இந்தியாவில் மகாஞான பௌத்தம் செல்வாக்காக இருந்தது. அரசர்கள் கோவிலைக் கட்டுவது தங்களது ஆட்சியின் அதிகாரம் , ஆளுமை என்பவற்றைக் காட்டுவதற்கே. ருடாஜி கோவிலின் முக்கிய நோக்கம் சீனாவை நோக்கியதாகவே அக்காலத்திலிருந்தது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இந்த கோவிலே உலகத்தில் மரத்தாலான பெரிய கோவில் எனக் கருதப்பட்டு யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. பல முறை அழிந்து புதிப்பிக்கப்பட்ட போதும், பழமையான வடிவம் பேணப்படுகிறது.  உள்ளே மிகப் பெரிய வெண்கலப் புத்தர் சிலை உண்டு . இது கவுதம புத்தரல்ல. மகாஞான பௌத்தத்தில் வந்த சூரிய புத்தர் (Vairocana) எனலாம் – அவரும் பல காலத்துக்கு முன்பு முக்தியடைந்த போதிசத்துவர் எனலாம். பிற்காலத்தில் யப்பானில் அமிடா புத்தர் முக்கியத்துவம் பெறுகிறார் .

நாராவில் அதை விட பல கோயில்கள் உண்டு. ஒரு விதத்தில் இந்தியாவின் காசிக்கு ஒப்பிடலாம். அடுத்த நாள் எங்கள் பயணம் ( Narai-Juku Edo-  Period) 18 ஆம் நூற்றாண்டில் உருவாகிய மலைக் கிராமம் சென்றோம்.  யப்பானில் பல இடங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி செல்வதால் கிராமங்கள் வெறுமையாகிறது. இந்த கிராமத்தை   வரலாற்றுப் பதிவாக  வைத்துள்ளார்கள்.   இந்த கிராமத்தின்  பாதைகள் கற்கள் பதித்த பாதைகள். இங்குள்ள வீடுகள்  மரத்தாலானவை.

கற்பதித்த பாதையில் ஒரு கிலோமீட்டர் நடந்தபோது வரலாற்றில் 300-400  வருடங்கள் பின்பாக பயணம் செய்வது போன்ற நினைவு ஏற்படும்.  மரத்தாலான வீடுகள், கடைகள் என அவற்றை  இன்னமும் பராமரிக்கிறார்கள்  அவைகளைப் பார்த்தபோது,  அமெரிக்க வெஸ்ரேண் படங்களில் வரும் கட்டிடங்கள் போல் தெரிந்தன.

வித்தியாசம்: இங்கு துப்பாக்கியோ குதிரையோ இருக்கவில்லை  – சில மாடி வீடுகளையும் காணலாம். அத்துடன் வணக்கஸ்த்தலங்கள் வழியில் கருங்கல் விக்கிரகங்கள் போல்  இருந்தன  ஒரு வீட்டின் உள்ளே பார்த்தபோது நெசவு செய்த அடையாளங்கள் தெரிந்தன. பாதை அருகில் தபால் பெட்டியும் தெரிந்தது .

 நாங்கள் மீண்டும் டோக்கியோ திரும்பும் வழியில் யப்பானின் இரண்டாவது பெரிய நகரமாகிய யொக்கஹமாவில தங்கவேண்டும் அப்பொழுது மீண்டும் எங்களுக்கு ஃபுஜி மலையின் தரிசனம் கிடைத்தது. இந்த மலை  யப்பானியர்களுக்கு புனிதமானது மட்டுமல்ல அவர்களது தேசிய அடையாளம் . தற்போது வியாபாரத்திற்கு   பொருட்கள் தயாரிக்கப்படுகிறது ஃபுஜிமலையின் பேரில்-  விஸ்கி வைன்  உட்பட . நேபாளத்தில், விமான நிலையம் தொடக்கம் உணவுகள் கடைகள் என   மற்றும் எல்லா வியாபாரத்தை முன்னேற்றும் நோக்கத்தில் சித்தார்த்த கௌதம புத்தரின் பெயர் இருக்கும் . வியாபாரத்தின்  மனேஜராக புத்தரை நியமித்து விடுவார்கள்.  பொறுப்பைப் புத்தரிடம் விட்டுவிட்டு  நிம்மதியாகி விடுவார்கள் என நினைத்தேன்.

ஆரம்பத்தில் ஃபுஜி மலையை முக்கிய புள்ளியில் நின்று பார்த்தபோது சிறிது நேரம் பார்க்க முடிந்தது. நான் மற்றவர்களை மலையின் பின்னணியில் விட்டுப் போட்டோ எடுத்து விட்டு என்னை எடுக்கத் தயாரானபோது மேகங்கள் வந்து மலையின் சிகரத்தை மூடிக்கொண்டன. எவ்வளவு நேரம் காத்திருப்பது என்பது கேள்விக்குறியாகும். இந்த ஃபுஜி மலைக்கு ஏறுவதை தங்கள்  கடமையைச் செய்யும் போது மலையின்  உயரத்தை ஒரு பெட்டி – இரு பெட்டி எனக் கணக்கிடுவார்கள் காரணம் அக்காலத்தில் கையில்  பெட்டி  எண்ணெய் விளக்குடன் மலை  ஏற்றுவதால்  அதற்கேற்ப எண்ணெய் வேண்டும்.

ஒரு பெட்டி எண்ணெய் கொண்டு 1,400 மீட்டர்கள் ஏற முடியும் . மேலே போகும்போது எண்ணெய் வேகமாக எரிந்து விடும்   ‘ஒவ்வொரு இடத்திலும் ஸ்டேசன் உள்ளது’  என்றார் வழிகாட்டி. உடல் திடமும் பயிற்சியும் இருந்தால்   ஒரே நாளில் ஏறலாம்.  பெரும்பாலானவர்கள் பல நாட்கள் எடுத்து ஏறுவதே வழக்கம்.  இதனால் உள்ளூர் மக்களிடையே இந்த கணக்குள்ளது எப்படியும் வருடத்திற்கு 2 லட்சம் பேர் இந்த ஃபுஜி மலை ஏறுவார்கள் என்றார்.

யப்பானின் ஒரு பகுதி மலைத்தொடர் என்றால் மறுபகுதி சமுத்திரம்  உள்ளது. ஃபுஜி மலையைத் தெளிவாகப் பார்க்க முடியும் என ஒரு படகில் கடலில் அழைத்துச் சென்றார்கள் . ஆனால், அன்றும் அதிக அளவு மேக மூட்டத்தில்   சூரியன் தெளிவாக இல்லை . நாங்கள் எல்லாம் ஃபுஜி மலையைப்  விளம்பரப் படங்களில் பார்ப்பது போல் தெளிவாக இருக்கும், அதைப் படம்  எடுக்கலாம் என நினைத்தால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும் .

18 நாள் பயணத்தில்  யப்பானிய மொழியை அறிய முடியாது நாங்கள் அறிந்த ஒரே சொல் ஓகாயோ கொசாய்முசு  (Ohayo Gozaimasu: Good morning)

இந்த வார்த்தையைக் காலையில் மட்டும் பயன்படுத்தலாம் . மற்றப்படி  ஏலாது . யப்பானிய வார்த்தைகள்  இடத்துக்கிடம் மாறுபடும். நண்பர்களுடன்  பேசுவதைக்  கல்லூரிகளில் பேச முடியாது. அதேபோல்,  ஆசிரியர் கண்டோம் என்பதை  வேறு விதமாகச் சொற்களைப் பார்க்க வேண்டும். ஆசிரியரைப் பார்த்து நீங்கள் களைப்படைந்துள்ளீர்  எனச் சொல்ல முடியாது . மதிப்புக்குரியவரே நீங்கள் களைப்படைந்துள்ளீர்கள் என்று சொல்ல வேண்டும்.

யப்பானில் நேரடியாக இல்லை என்ற பதில்   கிடையாது . நீங்கள் ஒரு பொருளைக் கேட்டால் அதை எடுத்துத் தர முயற்ச்சிக்கிறோம் அல்லது பற்றி யோசிக்கிறோம் என்றால்    இல்லை  என்பது அர்த்தமாகும் .

யப்பானிய மொழியில் வார்த்தைகள்  யப்பானுக்கு சொந்தமானதான போதிலும் எழுத்துகள் 5-6 நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து வந்தது .  நமது தமிழ் மொழியில் தனியாகப் பேசும்போது பாவிக்கும் சொற்களும்  நண்பரை பொது இடத்தில் அழைப்பது வித்தியாசமானதுதான். இப்படியான வித்தியாசங்கள் ஆங்கிலத்தால் நமது மொழிகளில்  அழிந்து விட்டது. யப்பானிய சமூகத்தின் வளர்ச்சிப்  படிநிலைகள் வந்ததாலும், அவர்கள் காலனி ஆதிக்கத்தில் இல்லாததால் அவர்கள் தனித்தன்மையை வைத்திருக்க முடிகிறது .

எங்களது பயணத்தின் இறுதியில் கேள்விப்பட்ட விடயம் இது வரையும் யப்பானியர் அமைதியானாவர்கள் என நினைப்பைச்  சிதறடித்தது .

டோக்கியோ விமான நிலையம் என்பது  ஹனிடா விமான தளம்  (Haneda Airport) ஆனால், யப்பானிய அரசு இரண்டாவது விமான தளம்  கட்ட,  நிலம் வாங்கி கட்டியது அதுவே நாங்கள் வந்தபோது, இறங்கிய  நாரிட்டா  விமான தளம்   (Narita International Airport) – ஆனால், நிலத்துக்கு உரிமையாளர்களிடம் பணத்தை வாங்கி காணிகளைக் கொடுத்தபோதும் அருகிலிருந்த மக்கள் தங்கள் விமான நிலயத்தால் பாதிப்படைவதாகப்   பல காலமாகப் போராடினார்கள். இதில் பொலிஸ் பொதுமக்கள் என உயிரிழந்தார்கள்.

அரசின் சட்டப்படி வாங்கிய காணியில்  விமான நிலையம் அமைத்துவிட்டார்கள்: இப்பொழுது அகற்ற முடியாது . மக்கள் சிலர் விமான ஓடுதளம் அருகே தங்கள் காணிகளை வைத்திருப்பது மட்டுமல்ல ஓடுதளத்தில் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதால் அரசு இந்த விமானத்தளத்தை இரவில் பாவிப்பதில்லை. பகலில் மட்டுமே பாவிக்கிறார்கள். ஒலிம்பிக் காலத்தில் கூட இந்த விதியை அரசால் மீற முடியவில்லை : மக்கள் போராட்டம் இன்னமும் தொடர்கிறது.  நிச்சயமாக எதிர்த்தரப்பு  அரசியல்வாதிகளது மற்றும் மாணவர்களின் ஆதரவுடன் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் தொடர்கிறது என்ற செய்தியை வழிகாட்டி சொல்லி எங்கள் பயணம் இரவு என்பதால் எங்களை ஹனிடா விமான தளத்தில் இறக்கிவிட்டார்.

இதுவரை சென்ற நாடுகளில்,  முக்கியமாக யப்பானியர்களிடமிருந்து , எல்லோரும் கற்றுக்கொள்ள ஏராளமான விடயங்கள் உள்ளது என்ற எண்ணத்துடன் மெல்பேனுக்கு  விமானம் ஏறினேன்.

நிறைவடைகிறது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.