யப்பானின் நான்கு பிரதான தீவுகளில் சிறியதான குய்சு தீவிலிருந்து மீண்டும் ஒசாகா நகரை நோக்கி செல்வதற்கு ஹொன்சு (Honshu) யப்பானின் பிரதான தீவை நோக்கி கடலில் கப்பலில் சென்றோம். இது , இரவு முழுவதும் யப்பானின் மேற்கு பகுதியான பசுபிக் சமுத்திரத்தில் செல்லும் பயணம். கப்பலில் அறைகள், ஹொட்டேல் போன்று வசதியாக இருந்தது. இரவு மற்றும் காலை உணவும் அந்த மூன்று தளங்கள் கொண்ட கப்பலிலே கிடைத்தது.


1919ல் யப்பான் முற்றான திமிங்கில வேட்டைத்தடையிலிருந்து விலகிவிட்டது. ஆனால், தனது பொருளாதார கடல் எல்லைக்குள் மட்டும் பிடிப்பதாகவும் மற்றும் குறிப்பிட்ட வரையறைவுள்ளே பிடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . கலாச்சார ரீதியாக திமிங்கில மாமிசம் யப்பானியர்களுக்கு முக்கியமான உணவாகும். ஆனால், தற்காலத்தில் விசேட தினங்களில் அல்லது முக்கியமான நாட்களில் மட்டும் உண்பதற்கானதாக மட்டும் உள்ளது என அறிந்தேன் .
நாங்கள் செல்லும் ஒசாகா நகரம், யப்பானின் தலைநகராகிய டோக்கியோவிலிருந்து கலாசாரம் , தொழில்துறை எனப் பல விதங்களில் மாறுபட்டது என்றார் எமது வழிகாட்டி. முக்கிய தொழில்முறையில் முன்னேற்றமடைந்த நகராகவும் அதேவேளையில் யப்பானிய மொழியை வித்தியாசமான தொனியில் பேசுவார்கள் என்றார். கொயட்டோ என்ற புராதன யப்பானிய தலை நகரத்திற்கு அருகாமையில் ஒசாகா அமைந்திருப்பதால் பல விடயங்களில் ஏற்பட்ட செல்வாக்கு பிற்காலத்தில் டோக்கியோ யப்பானின் தலைநகராக மாறிய பின் சரிந்தது. அத்துடன் யப்பானின் அசுத்தமான நகர் ஒசாகா என்றார். ஆனால், எங்களுக்கு அப்படித் தெரியவில்லை. ஒசாகாவில் உள்ள கோட்டை யப்பானில் பெரியது முக்கியமானது என்பதால் அதை பார்ப்பதே எங்களது முதல் வேலையாக இருந்தது. கோட்டையைச் சுற்றி பெரிய அகழி அத்துடன் பூங்காவும் அமைந்திருந்தது. கோட்டையைப் பார்ப்பதற்கு ஏராளமானவர்கள் அங்கிருந்தார்கள் அத்துடன் அன்று விடுமுறை நாளானபடியால் வரிசையாக மாணவர்கள் வந்தபடியிருந்தார்கள். யப்பானில் மாணவர்கள் அணிவகுத்து போவது மிகவும் வித்தியாசமானது. அவர்கள் பேச்சு நடத்தை எதிலும் ஒரு ஒழுங்கு தெரியும்.
இரண்டாவது உலகப் போரில் யப்பானிய இராணுவத்தினர் தங்கியதால் அமெரிக்கர்களின் குண்டுகளால் கோட்டையின் பல பகுதிகள் அழிக்கப்பட்டபோதும் மீண்டும் புதுப்பித்து கட்டப்பட்டது. கிட்டத்தட்ட மில்லியன் அளவு தொகையான கருங்கற்களால் கட்டப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அங்குள்ள கற்கள் பார்ப்பதற்கு மிகவும் பெரிதானவை. அந்த கோட்டை அமைந்துள்ள இடம் கிட்டத்தட்ட இரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. அந்த நிலப்பகுதியின் நடுவே கோட்டை அமைந்துள்ளது. கோட்டையை சுற்றி வர ஏராளமான செரி மரங்களின் நடுவே கம்பீரமான கட்டிடம் ஐந்து அடுக்குகள் வெளித் தெரிய நிற்கிறது. கோட்டையின் உள்ளே செல்வதற்கு தற்பொழுது உள்ளே மின் தூக்கி உள்ளதால் மற்றைய கோட்டைகள் போல் படிகள் வழியே ஏறவேண்டிய தில்லை . மேல் தளங்களிலிருந்து வெளியே பார்க்கும்போது ஒசாகா நகரம் அழகான காட்சியாக விரியும் .


இந்தக் கோட்டை யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது
ஒசாகா நகரத்தின் மத்தியில் சில மணி நேரங்கள் நடந்தோம். மிகவும் நெருக்கடியான தெருக்கள். உணவு கடைகள் எல்லா இடத்திலும் பார்க்க முடிந்தது. எமது வழிகாட்டியின் கூற்றுப்படி ஒசாகா நகரம் யப்பானிய சமையலறை என்பார்கள் . அதாவது இங்கிருந்தே பல உணவுப் பொருட்கள் தயாராகி யப்பான் எங்கும் செல்கின்றன. அவுஸ்திரேலியவில் பார்த்த கடைகளோடு ஒப்பிட்டால் யப்பானில் கடைகள் மிகவும் சிறியவை காரணம் இடத்தின் விலை அதிகம் . உலகத்தில் அதிகமான விலை உள்ள நகரங்களில் டோக்கியோ முதலாவது இடத்திலும் ஒசாகா இரண்டாவது இடத்திலும் உள்ளது .
நகரத்தின் குறுக்காக நதி ஓடுகிறது. மேலும் ஒவ்வொரு சந்தியிலும் இராச்சத விளம்பரப் பலகைகள் பல வண்ண ஒளியில் தெரிவது இந்த நகரத்தின் அடையாளம் .
வழிகாட்டியின் வார்த்தையில், நிலத்தில் குடித்த சிகரெட் துண்டுகளை ஒசாகாவில் காணலாம் . யப்பானின் மற்றைய இடங்கள் போல் அல்லாது நேரடியாகப் பணிவற்று பேசுவார்கள் . அதிகமான வெளிநாட்டவர்கள் வசிக்கும் நகரம் என்று சொன்ன போதும் அங்கிருந்த சில மணி நேரங்களில் அதை அவதானிக்க முடியவில்லை .
அடுத்த நாள் ஓசாகாவின் கடற்கரையோரம் (Sandanbeki Cave) சென்றோம். அங்கு சமுத்திரம் தனது அலைகளால் வெளிப்புறம் பாறைகளையும் உள்ளே குகைகளை செதுக்கி உள்ளது . உள்ளே மின்தூக்கியில் செல்ல முடியும் . 9ம் நூற்றாண்டில் கடல் கொள்ளையர் தங்களது இடமாக பாவித்தவை. அக்காலத்தில் கொரியா, சீனா போன்ற நாடுகளின் கடல் வாணிகத்தை முற்றாக தடை யப்பானிய கடல் கொள்ளையர் தடைசெய்ததாக வரலாறு உள்ளது. சில குகைகள் பெரிதானவை யப்பானிய கடற்படை கப்பலோடு இங்கு ஒளித்திருந்தது என்றால் நான் அதை விளக்கத் தேவையில்லை. அதை விட இந்த குகைகள் தற்போது புத்த ஷின்டோ மதத்தவரின் வழி பாட்டுத்தலங்களாகவும் உள்ளன. இந்த பகுதியில் தற்போது கடற்கரை விடுமுறை நகரமாகவும் உள்ளது .
பௌத்த மதத்தின் செல்வாக்கால் ஒரு காலத்தில் மாமிச உணவு தடை செய்யப்பட்டிருந்தபோது கரையோர இடங்களில் மீன் பிடித்தலும் உண்ணலும் ஏற்கப்பட்டது . மீன்களை காலம் காலமாக கருவாடு போடுவார்கள் .
இந்தப் பகுதியில்தான் மீன் சந்தைக்கு போய் ரியுனா மீனை அறுப்பதைப் பார்த்தோம். அத்துடன் வித விதமான மீன்கள் பல வகையாக வைத்திருந்தார்கள் . இந்த பிரதேசத்தில் பிளம் விளைவதால் அதிலிருந்து வைன் எடுத்தல் பிரபலமானது. இந்த சந்தையிலே என்னால் திமிங்கில மாமிசத்தை ஒரு கடையில் மட்டுமே பார்க்க முடிந்தது. திமிங்கில மாமிசத்தை பார்த்தபோது மாட்டின் இறைச்சிப்போன்று அதிக சிவப்பாக தெரிந்தது. படம் பிடித்தபோது ஒளித்தே படம் எடுத்தேன் .
பின்னூட்டமொன்றை இடுக