யப்பானில் சில நாட்கள்: 10 ஜென்தங்கக்கோவில்( Kinkaku-ji( Zen Golden -Pavilion) in Kyoto)

ஜென் தங்கக்  கோவில் எனது கோயாட்டாவில் உள்ள மூன்றடுக்கு  கட்டிடம் யூனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் அந்த ஜென் கோவில்  1399ல்  கட்டப்பட்டது.  அதில் இரண்டு அடுக்குகள் தங்கத்தால் ஆனவை .  தூரத்தில் இருந்து பார்த்தபோது  ஏற்கனவே நான் பார்த்த அமிர்தசரஸ் பொற்கோவிலை நினைவு படுத்தியது.   இங்கும் கட்டிடத்தின் முன்பகுதியில்   பெரிய தடாகம் உள்ளதால் சூரிய ஒளியில்,  கட்டிடத்தின் நிழல்  அழகான பிம்பமாக நீரில் தெரியும்.  இந்த கோவிலின் கூரையின் உச்சத்தில் தங்கத்தாலான கருடன் ஒளிர்ந்தபடியே பறந்துகொண்டிருந்தது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து இமாலயத்தை கடந்து  சென்ற  பௌத்தம்,  சீனாவில்  விரிவடைந்து  மகாஜான பௌத்தம் ஆகி ,  அதிலிருந்து  பூத்தது இந்த ஜென் பிரிவு.  இந்த பௌத்த கோவில் ஜென் பிரிவுக்கானது.

நமது மகாவிஷ்ணுவின் கருடன் எப்படி கொயாட்டோவின் தங்கக் கோவிலின் கூரையில்  பறந்து வந்துள்ளார்  என்ற கேள்வியுடன் அந்த இடத்தை சுற்றி வந்தேன். ஒவ்வொரு திசையில் பார்க்கும்போது அந்த மாலை நேரத்து வெயிலில் கட்டிடத்தின் அழகு கண்களை நிறைத்தது.

இந்த கோவில்  அமிடா புத்தருடன் கருணைக்கான  பெண் தெய்வத்திற்கு உரியது . இந்த கட்டிடத்தின் உள்ளே செல்ல நாங்கள்  அனுமதிக்கப்படவில்லை : காரணம் 1950 இல் அங்கிருந்து புத்த குருவாகப்  பயிற்சிபெற்ற மாணவர் ஒருவரால் இந்த  ஜென் தங்கக்  கோவில்  முற்றாக எரிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்ட கட்டிடமே நாம் இப்பொழுது பார்ப்பது.

ஏற்கனவே கூறியபடி இந்த அழகிய  ஜென் புத்த கோவிலில் மாணவராக இருந்த இளம் பிக்கு  ஏன் எரித்தார் என்ற கேள்விக்குப்  பைத்தியகாரன் எனப் பதில் கிடைக்கிறது .

ஜென் பௌத்த கொள்கையின் அடிப்படையைப் பார்ப்போம்

இங்கே உலகத்தில் நாம் காணும்  இரட்டைத்தன்மை (Duality) நிராகரிக்கப்படுகிறது. அதாவது நல்லது- கெட்டது, தெய்வம் -சாத்தான், சொர்க்கம் -நரகம், சுத்தம்- அசுத்தம்  என மற்றைய மதங்களிலுள்ளது போன்றது அல்லாது எல்லாம் ஒன்றுடன்  தொடர்புடையது என்கிறது இந்த ஜென் தத்துவம். அப்படியான ஒரு தொடர்பு எங்களுக்கு உள்ளே உள்ளது அதை நாங்கள் காண்பதே  எமது நோக்கம் என்கிறது.

இந்த ஜென் பௌத்த  கொள்கையின் ஆரம்பம் இந்தியா,   அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த போதிதர்மர் என்கிறார்கள் . மேலும் ஜென் என்பது தியானம் என்ற சமஸ்கிருத மொழியின்  வார்த்தையிலிருந்து  வந்ததாகக் குறிக்கிறார்கள்.

சீனாவில்  மகாஜன பௌத்தத்தில் உருவாக்கத்தில் வந்த ஜென் தத்துவம் . இது யப்பானிற்கு  12ஆம் நூற்றாண்டில் சென்று அல்லித்தடாகத்தில் மலர்வதுபோல்  பாடசாலைகள், கோயில்கள் என யப்பான் முழுவதும் மலர்ந்தது.  இந்த ஜெனமதத்தின் ஆதார சுருதியான தன்மையே தியானமாகும்.  தியானத்தின்  மூலம் எமது உள்மனத்தையும்  உடலையும்  ஒன்றிணைப்பதாகும் . இதற்குப் பல விதமான ஆசன வழிமுறைகளுள்ளன. இவற்றைப் பயிற்றக் குருக்கள் அல்லது ஆசிரியர்கள் இருப்பார்கள் . இந்த ஆசிரியர்களைப் போதனையின் மார்க்கம் புத்தரின் வழி வந்ததாக இருக்கும்.  அதை ஜென் பயிற்சி என்பார்கள். அதாவது எங்கள் ஒவ்வொருவரிடம் புத்தர் இருக்கிறார்.  அதை நாம் தியானத்தின் மூலம் காண வேண்டும் என்கிறது. எங்கள் மனத்தில் உள்ளவைகளை வெளியேற்றிய பின் தியானிக்க வேண்டும் என்கிறது.

அந்தகாலத்தில் ஜென் தியானம் படைவீரர்களுக்கு முக்கியமானதாக கருதப்பட்டு பயிற்றபட்டது. தற்காலத்தில் பலர் தங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஆற்றலை அதிகரிக்க என எழுத்தாளரகள்கள் கலைஞர்கள்,  வைத்தியர்கள் என இந்த பலரும் ஜென் தியானத்தை  கைக்கொள்கிறார்கள்.

இப்படியான கால நிலையில் யப்பானிய  தந்தை தனது மகனை ஜென் பௌத்தத்தைச் சொல்லி வளர்க்கிறார்.  அவன் வளர்ந்தபின் அவனை ஜென் தங்கக்   கோவிலில் சேர்கிறார். அவனும் மிகவும் ஆர்வத்துடன் இங்கு வந்து மற்றைய மாணவ பிக்குகளும் சேர்ந்து படிக்கும்போது ,அவன் மற்றைய மாணவ பிக்குகளை பார்க்கிறான் . அவர்கள் எல்லோரும் தங்கள் வறுமையிலிருந்து விலகி உணவு,  உறைவிடம், பாதுகாப்பு  பெறுவதற்காக இங்கு வந்து சேர்ந்தவர்கள் . அவர்கள்  மாணவப் பருவத்தை  மிகவும் ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள்.

இந்த தங்கக்  கோவில் அக்காலத்தில் உலகத்திலே அழகானதாக   பேசப்படுகிறது. அப்படி  அழகான ஜென் தங்கக்  கோவில்  இப்படியான  என்னை அறியும் ஒரு தியான மார்க்கத்திற்கு தேவையா எனச் சிந்திக்கிறான்.  அவனது சிந்தனை,  கேள்விகள் மற்றும் தர்க்கங்கள்  மற்ற மாணவர்களால் எள்ளி நகையாடப்படுகிறது . இந்த மாணவன் இதையிட்டு  தனது மனதை அடக்க முடியாது அந்த தங்கக் கோவில் கொழுத்திவிட்டு தானும் தற்கொலை செய்ய முனைந்தான். தங்கக்  கோவில் முற்றாக எரிந்துவிட்டது போதிலும்  அவன் இறுதியில் காப்பாற்றப்பட்டு குற்றவாளியாக நீதி மன்றத்தில் சென்றபோது, அவனது மனநிலை பாதிக்கப்பட்டவன் என அவன் விடுதலையடைகிறான்.

இந்தக்கதை   வழிகாட்டி சொல்லியதிலிருந்துதான் நான் பொறுக்கி கோர்த்தவை.

ஆழமாக சில விடயங்களையும் யோசித்தால் மனதில் அங்கலாய்ப்பு,  மன அழுத்தம்  உருவாகுவது உண்மைதான். ஆனால்  அது மனதை ஒருங்கிணைத்து தியானம் பழகச் சென்றவனுக்கு எப்படி உருவாகியது என்பதே எனது கேள்வியாக இருந்தது.

தங்கக்  கோவில்  உயரமான இடத்தில்,  ஒரு தடாகத்தில்  பல தீவுகளாக பிரிந்திருக்க அமைந்திருந்தது  அதைச் சுற்றி  யப்பானிய பூங்காவில்  அமைந்திருந்தது.   அந்த    இடத்தை சுற்றிப் பார்த்த போது ஜப்பானியர்கள் செய்கை எதிலும் ஒரு நிறைவு தெரிந்தது .

அறிஷியாமா மூங்கில் புதர் (Arashiyama Bamboo Grove) கோயட்டோவின்   முக்கிய ஒரு இடமாக இருப்பது அங்குள்ள மூங்கில் காடு. இந்த மூங்கில் காட்டின் வழியாக நடப்பதும் அங்கு படம் எடுப்பதும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதைச் சுற்றி  அழகான  பூங்கா உள்ளது. ஏற்கனவே இதை அறிந்ததால் எனக்குப் பெரிய கவர்ச்சியாக இல்லாது இருந்தது . ஆனால் ஏராளமானவர்கள் வந்துபோகும் இந்த இடம் கழுவித் துடைத்து  வைத்த குத்துவிளக்காக பளிச்சென்று இருந்தது .தொடரும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.