யப்பானில் சில நாட்கள்: 8 யப்பானிய நிஞ்ஜாசா, சமுராய் வீரர்கள்.

நாங்கள் சென்ற அடுத்த சிறிய நகரம் ஒன்றில்(Town of Iga)  அங்கு நிஞ்ஜா   வீடும், நிஞ்ஜா உடைகளும்,  போர்க் கருவிகளும் வைக்கப்பட்ட அருங்காட்சியகம்  உள்ளது . அத்துடன் ஆணும் பெண்ணும் ஒரு மணி நேரம் நிஞ்ஜா ஆயுதங்களையும் போர் புரிவதையும்  எங்களுக்குக் காட்டினார்கள். பெரும்பாலான விடயங்கள் சீனாவிலிருந்து வந்து கும்ஃபு போர்க்கலையைச் சார்ந்தது இருந்த போதிலும் அதிரடியான தாக்குதல் , தாக்கிவிட்டு மறைவது , கரந்துறைதல்  என்பன முக்கிய அம்சங்களாகும் . யப்பானிய  நிலவுடைமை சமூகத்திலிருந்த போட்டிகளால்  அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக   இந்த மாதிரியான இராணுவ பயிற்சிகள் உள்ளவர்களின் தேவைகள் அங்கிருந்தது. ஆனால் , அவை எல்லாம் மீஜி மன்னரின் சீர்த்திருத்தத்தின் பின்பு மறைந்துவிட்டன .  இவைகள் தற்போது பழைமை பேணுவோர்களால் உல்லாச பிரயாணிகளுக்காக காட்சிப்படுத்துகிறார்கள் .

எமது வழிகாட்டி  ரிச்சாட்டின் கூற்றுப்படி யப்பானில் பச்சை குத்தியவர்கள் வேலைகளிலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள் யப்பானில் பாதாள உலகம் எனப்படும் பணத்திற்காகக் கடத்தல், கொலை செய்பவர்கள் இல்லை. என்றபோது யக்குசா என்ன பாதாளலோக குழுவிற்கு (Yakuza) என்ன நடந்தது என்று நான் கேட்டபோது இப்பொழுது வெளிநாடுகளில் இயங்கலாம், உள்நாட்டில் அவர்கள் மிகவும் குறைவு என்றார் – அவர்கள் இருந்தாலும்,  அவர்கள் ஆரம்ப தொழில்கள் இப்போது குறைவு.  சூதாடுதல் , அதிக வட்டிக்குப் பணம் கொடுத்தல்  என்பவை சாத்தியமில்லை . இப்பொழுது ஓரளவு சூதாடுதல்( Poker and sports) யப்பானில்  உள்ளது. மிக குறைந்த வட்டிக்கு அல்லது வட்டி இல்லாது யப்பானில் கடன் பெறமுடியும். இப்படியானவற்றால் யக்குசாவில் அங்கத்தினர்   குறைந்துள்ளார்கள் என்றார்.

நான் சென்ற நாடுகளில் சட்டத்தையும் அரசையும் மதித்து நடப்பவர்கள் யப்பானியர்கள்  முதல் நிலையில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்..

யப்பான் 1800களில் கிட்டத்தட்ட இந்தியாபோல் இருந்தது அங்கு நில உடைமையாளர்கள் , விவசாயிகள்,  வியாபாரிகள் கைத்தொழிலாளர்கள் என்ற இறுக்கமான பிரிவு இருந்தது . ஒரு பிரிவிலிருந்து வேறு பிரிவுக்குப் போவது நினைக்க முடியாத காரியம் . மத்திய அரசில் அரசன் இருந்தாலும் அவர்களுக்குக் கீழே ஷோகன் இராணுவ கவர்னர்  இருப்பார்கள். இப்படியான நிலை 18ம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை இருந்தது. இதை மீஜி மன்னரின் சீர்திருத்தம்  ( Meiji Restoration) என்பார்கள். இதனால் தற்போதைய நவீன யப்பான் உருவாகிறது. 7ம் நூற்றாண்டின் பின் மன்னர் தனது இராணுவப் படைகளை அகற்றிவிட அக்காலத்தில்  குறிப்பிட்ட வகுப்பினர் படைவீரர்களாக பணியேற்கிறார்கள்.  இவர்களே சமுராய்கள். இவர்கள் ஆயிரம் வருடங்கள்மேல் யப்பனின் போர் வீரர்களாக இருந்தார்கள். 1800 களில்   மீஜி மன்னரின் சீர்திருத்தத்தின் பிரகாரம் இக்காலத்தில் இதுவரையும் போர்வீரர்களாக இருந்த சாமுராய்கள் என்ற அமைப்பு ஒழிக்கப்பட்டு மற்றைய இராணுவத்தினர் போல் சகல மட்டத்திலுமிருந்து போர்வீரர்களை உள்வாங்கி இராணுவ அமைப்பு முறை உருவாகிறது.

இதை வைத்து அமெரிக்கர்கள் எடுத்த  சினிமா  ரொம் குரூஸ் நடித்த  (The last samurai) உண்மை கலந்த படம் . அத்துடன் இந்த படம் அமெரிக்காவில் மட்டுமல்ல ஜப்பானிலும் வெற்றிப்படம் . இந்த கதையில் ரொம் குருஸ் அமரிக்க இராணுவ கப்டனாக நடிக்கிறார்.  அவர் புதிதாக அமைக்கப்பட இருந்த யப்பானிய ராணுவத்தினருக்கு   நவீன போர் பயிற்சி முறைகளை பயிற்றுவிக்க அனுப்பப்படுகிறான். இப்படியான இராணுவம் அமைக்கப்படுவதற்கு எதிராக இதுவரையும் மன்னரின் படைவீரர்களாக இருந்த சமுராய்கள் கலகம் உண்டாக்குகிறார்கள்.  அதில் நடந்த சண்டையில்  அமெரிக்காவின் கப்டன் பங்குபற்றியபோது,   சமுராய்களால் கைப்பற்றப்பட்டு சமுராய் தலைவரது குடும்பத்தில் ஒருவனாக வாழ்கிறான். அவன் யப்பானிய பாரம்பரியத்தை நோக்கி கவரப்பட்டு சமுராய்களோடு சேர்ந்து போரிடுவதாக கதை செல்கிறது. இந்த படம் நடந்த சில உண்மை சம்பவங்களைக் கலந்து உருவாக்கியது.  சமுராய் முறை யப்பானில் அழிக்கப்படுவதற்கான பல காரணங்கள் உள்ளது.  சாமுராய் வகுப்பினர் சாதிபோல் தொழிற்பட்டு,  முக்கியமானவர்களாகவும்,  நிலத்திற்கு உரிமையான  போர் சமூகமாக இருக்கிறார்கள். அவர்களைப் பராமரிப்பது செலவானது . இந்தியாவில்  சில போர் சாதியினர் பிற்காலத்தில்  ஆங்கிலேயர்களால் குற்றசாதியாக பிரகடனப்படுத்தப்படுவதுபோல் இங்கும் சமுராய்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

சமுராய்கள் , நிஞ்ஜாக்கள் என்ற இரண்டு போர் செய்பவர்களும் மேற்கு நாடுகளில் அதிகம்  பயன்படுத்தப்பட்டவர்கள். சிறுவர் கதைப் புத்தகங்களிலிருந்து சினிமா,  தற்போது கம்பியூட்டர்  விளையாட்டு என அமெரிக்கர்களும் ஓரளவு யப்பானியர்களும் வியாபார பொருளாகவுள்ளார்கள்.

இவர்களது வித்தியாசங்களைப் பார்ப்போம்.   சமுராய்கள், பிரபுக்கள் போன்றவர்கள். அவர்கள் வார்த்தைகள்,   செயல்கள் தங்களது தலைவனுக்கு  அல்லது அரசனுக்கு நன்றியுடையதாக நடப்பார்கள்.  8ம் நூற்றாண்டளவில் அரசனுக்கே சேவை செய்பவர்கள் என தொடங்கியவர்கள் சமூகத்தில்,  6வது இடத்தில் இருந்தார்கள். சமுராய் என்பதன் அர்த்தம் சேவைக்காக என்பதே . பிற்காலங்களில் இராணுவ கவர்னர்கள்போல் செயல்பட்ட  ஷோகன்களுக்கு  இவர்கள் சேவை செய்யும்போது  தனிப்பட்ட இராணுவமாகவும் செயற்பட்டார்கள் . இவர்கள் தங்களது ஆயுதங்கள், பாதுகாப்பு கருவிகளை இவர்களே வைத்திருக்க வேண்டும். அத்துடன் இவர்களிடம் அரசு வரி வசூலிப்பதில்லை .சீனாவை ஆண்ட மங்கோலியர்கள்,  யப்பான் மீது  படை எடுத்தபோது சமுராய்களே அவர்களைத் தோற்கடித்தாரகள்.

 குப்ளாய்கான்(1274)காலத்தில் இரண்டாவது முறையாக 5000 கப்பல்களுடன்  படையெடுத்தபோது  சாமுராய்கள் போரிட்டாலும் அப்போது கடலில் உருவாகிய பெரும்  புயலால் மங்கோலியர்௧ளின் கப்பல்கள் அழிந்து,  யப்பான் காப்பாற்றப்பட்டது .  இதேபோல்(1592) கொரியா மீது யப்பானியர்கள் படை எடுத்தபோது இறுதியில் கொரிய கப்பல் படையால் தோற்கடித்து பின்வாங்கினால் கொரியா பெருமளவில் அழிக்கப்பட்டது. இந்த படையெடுப்பில் முன்னின்றவர்கள் சமுராய்கள் . இப்படி போர் காலத்தில்  இவர்கள்  தேவையாக இருந்தபோதிலும்   சமாதான காலத்தில் இவர்களைப் பராமரிப்பது பெரும் செலவாக  இருந்தது.

மீஜி மன்னரின் சீர்த்திருத்தம்  (1870) நடந்த காலத்தில் 400,000 சாமுராய்களும் அண்ணளவாக  2 மில்லியன் குடும்ப அங்கத்தவர்கள் இருந்ததால் அரசுக்கு செலவாகியது.  நவீன இராணுவம் அமைக்கும்போது இவர்கள் தேவையில்லை.  அதைவிட போர்முறை,  ஆயுதங்கள் மாறியது போன்ற காரணங்களால் இவர்கள் தடைசெய்யப்படுகிறார்கள்.

நிஞ்ஜாக்கள்  பணத்திற்கு வேலை செய்பவர்கள்.   அத்துடன் பெரும்பாலானவர்கள்  சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து தங்கள் திறமையால் மேலே வருபவர்கள். கொலைகள் செய்வதற்குப் பாவிக்கப்படுபவர்கள்.  தற்போதைய காலத்துப் பணத்திற்காகப் போரில் பங்குகொள்பவர்கள்  (Mercenaries) போல் தொழிற்படுவார்கள். சாமுராய்கள் இதை தங்களது தொழில் செய்வார்கள்.  நிஞ்ஜாக்கள் இரவில் மட்டும் தொழில்படுவார்கள் பகலில் அவர்கள் சாதாரண விவசாயிகள்,  தொழில் செய்பவர்,  இளம் பௌத்த பிக்குவாக மாறுவேடத்தில்  வாழ்ந்து வருவார்கள்.

நிஞ்ஜா கண்காட்சியில் அவர்கள் நீர்நிலைகளைச் சத்தமின்றி கடக்க  உபயோகிக்கும் நீரில் மிதக்கும் காற்றடித்த தோற்பைகள் , நடக்கும்போது சத்தமின்றி  நடக்க  அடியில்  பஞ்சை வைத்து காலணிகள், எந்த பூட்டையும் திறக்கும் கருவிகள்  என்பவற்றுடன்  விவசாயிகள் , புத்த பிக்குகள் போல் மாறு வேடம் அணிவதற்குத் தேவையான உடைகள் எனப் பல உபகரணங்களை எங்களால்  பார்க்கக் கூடியதாக இருந்தது. கிரேக்கத்து  ஸ்பாட்டன்களையும் பாண்டிய மறவர்களையும் எனக்கு நினைக்க வைத்தது. நமது விடுதலைப்புலிகளின்  கரும்புலிகள் இப்படித்தானே என நீங்கள் கேட்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.