
ஒரு காலத்தில் நான் சந்தித்த அந்த சீனப் பெண்ணுக்கு என்ன நடந்திருக்கும்?
சிட்னியின் தென் மேற்குப் புறநகரில் உள்ள விவசாய ஆய்வு நிலையத்தை காரில் கடந்தபோது வசந்தன் நினைத்தான்.
பல காலத்தின் பின்பு சிட்னியில் நடக்கும் நண்பனது மகனது திருமண நிகழ்விற்குப் போகிறான். ஏற்கனவே பல தடவை சிட்னி போயிருந்தாலும் அவை எல்லாம் விமானப் பயணங்கள். போனோமா, விடயத்தை முடித்தமா என வந்து விடுவான்.
சிட்னியில்இருந்த ஆரம்ப காலத்தை அதிகம் நினைப்பதில்லை . அதற்கு முக்கியகாரணம்: அக்காலத்தில் அவன் வேலையற்று திரிந்த நாட்கள்.
அவள் சிட்னியில் எங்கு இருப்பாள்?
என்னிலும் பத்து வயதாவது அதிகமாக அவளுக்கு இருந்திருக்கும் என்பதால் நிச்சமாக அவளும் ஓய்வு பெற்றிருப்பாள் அல்லவா?
இப்பொழுது அவளுக்கு எண்பது வயதாக இருந்தால் சில வேளையில் இறந்தும் இருக்கலாம்.
இல்லை ,இல்லை , பெண்கள் அதிக நாட்கள் வாழும் நாடு இது .
ஏதாவது முதுமை இல்லத்தில் இருப்பாளோ ?
இப்படிப் பல நினைவுகள்!
நெடுஞ்சாலையில் எதிர் திசையில் நூறு கிலோ மீட்டரில் அவனைக் கடந்து போகும் வாகனங்களாக பறந்துகொண்டிருந்தன. நண்பன் காரை செலுத்தப் பயணிகள் இருக்கையில் இருந்தபடி தொலைபேசியில் இருந்து வரும் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் பாடல்கள் தாலாட்ட, அவனது கடந்தகாலம் அரும்பாகி, மொட்டாகி, முகையாகி நெஞ்சில் மலர்ந்தது.
வசந்தனுக்கு வேலையை விட்டு இளைப்பாறியபின் பழைய நினைவுகளை அசை போடுவது வழக்கம். வேலை செய்யும்போது நினைவுகள் விலைமதிப்புள்ள , ஆனால் உடைந்த பீங்கான் துண்டுகளாக வந்து போனாலும் அவற்றை ஒன்றாக இணைத்து அசைபோட நேரம் இருக்கவில்லை. ஆனால் ஓய்வின்பின் பழைய நினைவுகளே தோள் கொடுக்கும் தோழனாக உள்ளது. பலருக்கும் இப்படியே!
நாற்பது வருடங்கள் முன்பு , இலங்கையிலிருந்து தனது மிருக வைத்திய வேலையை உதறிவிட்டு, அவுஸ்திரேலிய கனவுகளை தோள்களில் சுமந்தபடி குடிபெயர்ந்த காலத்தில் அவனுக்கு ஏற்பட்ட விசித்திரமான ஒரு கனவு அவனது வாழ்க்கைப் பாதையை மாற்றிவிட்டது.
எப்படித் தெரியுமா?
பல கிலோமீட்டரில் உள்ள புதிய இடத்திற்கு நீங்கள் காரில் செல்லும்போது யாராவது ஒருவர் தடுத்து, இந்த வழியாக போகாதே, பாதை சரியில்லை என சொல்லி உங்கள் காரின் பாதையை மாற்றிவிட்டால் ஆரம்பத்தில் ஏற்படும் மனபிராந்தி போன்றது அந்த கனவு. ஆனாலும் கனவு என அதை உதாசீனம் செய்யாது பாதையை மாற்றினான். அந்த பாதையில் அவன் வெற்றிகரமாக பயணித்தான் என்றே சொல்ல வேண்டும்.
அந்த கனவும் அது தொடர்பான சம்பவமும் இப்பொழுது நினைத்தாலும் அமைதியான ஒரு குளத்தில் எறிந்த கல்லாக பல அலைகளை ஏற்படுத்துவதுடன் முகத்தில் துளிகளைத் தெளித்துதான் ஓய்கிறது.
இரண்டு குழந்தைகள், வேலையற்ற மனைவி என அவளது அண்ணன் வீட்டில் ஒரு அறையில் ஒண்டுக் குடித்தனம் நடத்திய காலமது. அவனது மிருக வைத்திய அனுபவத்தில் அவுஸ்திரேலியாவில் எந்த வேலையும் கிடையாது என்பது அவனுக்குத் தெரியும் ஆனாலும் அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, வைத்தியர் நேர்சு வேலையைத் தேடுவதுபோல், அல்லது சிவில் எஞ்ஜீனியர், மேசன் வேலை தேடுவதுபோல் படிப்போடு தொடர்புடைய பல வேலையிடங்கள் ஏறி இறங்கினான். அக்காலத்தில் வசந்தனுடன் யாழ்ப்பாணத்தில் படித்த நண்பன் இங்கு மருத்துவ பரீட்சைக்காக படிக்கிறான். அவனை தற்செயலாக சந்தித்தபோது ‘சிட்னியின் புறநகரில் ஒரு விவசாய ஆய்வு நிலையம் உள்ளது அங்கு உள்ள பரிசோதனைசாலையில் உள்ள எலிகள் , கினி பன்றிகள், முயல்களை பராமரிக்க ஒருவர் தேவை என்ன பத்திரிகையில் விளம்பரம் பார்த்தேன் அங்கு நீ வேலைக்கு விண்ணப்பம் செய்தால் என்ன’ ஆலோசனை சொன்னான்.
அவனது வார்த்தையில் நகைசுவையின் ஈரம் இருந்த போதிலும் அதைக் கண்டு கொள்ளாது ஊரில் ஆடு, மாடுகள் வைத்தியம் பார்த்த அனுபவம் இருக்கு, அத்தோடு படிக்கும்போது முயல்களை பற்றி கொஞ்சம் அறிவும் உள்ளது. எலி தானே அவை தானாக சீவிப்பவை என்பதால் , அதை பராமரிப்பது கடினமா?
அலட்சியத்துடன் வசந்தன் விண்ணப்பித்தான். சில நாட்களில் அவனை நேர்முகத்திற்கு வரும்படி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கார் வைத்திராத காலம், இரண்டு ரயில்கள் எடுத்து காலை பத்து மணிக்கு அந்த இடத்திற்கு சென்றான். ரயிலில் இருந்து இறங்கியபோது ஏதோ கிராமப்புறம் போல்த் தெரிந்தது. சிட்னி நகரம் முடிந்துவிட்டது போல் புற்தரைகள் கொண்ட பிரதேசம் . அங்காங்கு நகரும் புள்ளிகளாக செம்மறிகளும் தெரிந்தன . அந்தப் பகுதியில் பிரதானமாக தெரிந்த கட்டிடத்தின் முன்பு விவசாய ஆய்வு நிலையம் என்ற பெயர்ப் பலகை தெரிந்தது.
அங்கே இருந்த கட்டிடத்தின் உள்ளே சென்று வரவேற்பில் இருந்த இளம் பெண்ணிடம் கேட்டபோது அவள் பக்கவாட்டிலிருந்த வேறு கட்டிடத்தைக் காட்டி, அங்கு போக சொன்னாள்.அந்த கட்டிடம் தனியாக இருந்தாலும், பிரதான கட்டிடத்தைவிட பெரியது. கட்டிடத்தின் முன்பகுதியில் விவசாய பூச்சிகள் புழுக்கள் ஆய்வு (Agriculture Entomology) என்ற பெயரில் ஒரு அறிவிப்பு இருந்தது.
கட்டிடத்தின் உள்ளே சென்றதும், முன் அறையின் கதவில் டாக்டர் சூசன் சென் (Doctor Susan Chen) என்ற பெயர்ப்பலகை இருந்தது. அந்தக் கட்டிடத்தின் பின்பகுதி ஒரு ட வடிவில் செல்கிறது. சில சிறிய அறைகள் அதன்பின் நீளமான பகுதியில் பரிசோதனைச்சாலை , அதன் முடிவில் மிருக வளர்ப்பு நடக்கவேண்டும் என்ற ஊகம் வசந்தனுக்கு வந்ததன் காரணம் அங்கிருந்து வந்த மொச்சை மணம் நாசியில் அவசரமாக ஏறியது. அதில் முயல்களின் மணத்திற்கு அவன் பரீச்சையமாயிருந்தான்.
முன்பகுதியில் உள்ள அறைக்கு முன்பு இருந்த வசதியான ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்தான். அதிக நேரம் இருக்கவில்லை. ஒரு சீனப் பெண் கதவை திறந்து சிரித்தபடி வந்தாள்:அவளுக்கு நாற்பது வயது இருக்கும். உதட்டுசாயம், கண் மை போட்டு தலைமயிர் விரித்தபடி இருந்தாள். அவள் வெள்ளை பிளாஸ்டிக் பாண்டை தலையில் போட்டிருந்தது அவளை பாடசாலை சிறுமியாக காட்டியது, ஆனாலும் அப்பொழுது பரிசோதனைக்கூடத்தில் போடும் வெள்ளை மேல் சட்டை போட்டிருந்தாள் அதுவே ஒரு விஞ்ஞானியாக நினைக்க வைத்தது. ஆனாலும் தலையில் வெள்ளைப் பாண்ட் அவளுக்குப் பொருத்தமில்லையென நினைவுகள் நெஞ்சில் முளைத்தபோதிலும், வெள்ளைப் பாண்ட் அவளது கூந்தலை ஒதுக்கமாக வைக்கிறதே என்ற நினைப்பில் ஆரம்பத்தில் ஏற்பட்ட நினைவுகளை மென்று விழுங்கிய படி அவளைப் பார்த்து சிரித்தான் வசந்தன்.
‘வசந்தனா?’ என்றபடி கையை தந்துவிட்டு திரும்பி பெரிய கொரிடோரில், கருமையான ஹை ஹீல்கள் சத்தமிட நடந்தாள். தன்னைப் பின் தொடரும்படி சொல்லிவிட்டு அவசரமாக செல்லும் போது, அவளது பொருந்தாத வெள்ளைத் தலை பாண்டையும் கறுப்பு லெதராலான ஹை ஹீல்களும் அவனது மனத்தை உறுத்த, அவளின் பின்பகுதியின் அசைவுகளில் கண்களை செலுத்தியபடி அவளைத் தொடர்ந்தான்.
உண்மையில் அழகானவள், பத்து பதினைந்து வருடங்கள் முன்பு இன்னும் நன்றாக இருந்திருப்பாள் என்ற ஆணுக்குரிய சிந்தனை அவனது மனதில் அலைக்கழித்தது. பரிசோதனைசாலையுள் அழைத்து சென்று அங்குள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து வசந்தனையும் அமர சொல்லிவிட்டு ‘ உனது சகல விடயங்களையும் ஏற்கனவே படித்தேன். ஒரு மிருக வைத்தியம் படித்து சில வருடங்கள் வேலையும் பார்த்த உன்னை பரிசோதனைச்சாலையில் முயல் எலி பராமரிக்கும் வேலையில் அமர்த்துவது வீணான செயல் என நினைக்கிறேன். எனது ஆய்வில் உதவியாளராக இருக்க உனக்கு சம்மதமா’ என்றாள்.
பசியில் ஏதாவது உணவு கொஞ்சமாவது கிடைக்குமா என உள்ளே எட்டிப் பார்த்த அவனுக்கு அழைத்து வடை பாயசத்துடன் விருந்தா என மனதில் சந்தோசப்பட்டு ஒப்புக்கொண்டு தலையாட்டினான்.
அவள் மீண்டும் ‘ஆரம்ப நாட்களில் உனக்கு சம்பளம் தர முடியாது. எனது புராஜெக்ட் இப்பொழுது மேலிடத்தில் அங்கீகாரத்துக்காக உள்ளது. மேலும் ஒரு கிழமை அல்லது இரு கிழமைகளில் அங்கீகரிக்கப்படும். அதுவரையும் வேலையை பார்க்க வேண்டும். ப்ராஜெக்ட் எல்லாம் சரியானால் இந்த விடயத்தில் உன்னால் கலாநிதி பட்டம் செய்யலாம் என்றாள்.
ஏற்கனவே அரசின் ‘சோஷல் அலவன்ஸ்’ எனப்படும் வேலை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உதவி பணத்தில்தான் குடும்ப வண்டி இழுத்தபடி ஓடுகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் சமாளிப்பது பெரிய விடயம் அல்லவே. அதைவிட மேல் படிப்பு, டாக்டர் பட்டம் எனப் பல தகமைகள் தேடி வருகிறது. படிப்பதற்கு தரப்படும் உதவிப் பணம் எப்படியும் குடும்பத்தை பராமரிக்க போதுமானதாக இருக்கும் என்ற எண்ணத்தில் வசந்தனது மனத்தில் இப்பொழுது அவன் வெள்ளை கோட்டை அணிந்தபடி விஞ்ஞானியாக வலம்வரும் கனவுகள் அவனை சுற்றி தலையிலும் தோளிலும் பட்டாம்பூச்சிகளாக சிறகடித்தன.
அதற்கு ‘சரி’ ‘ என்றதும் இருவரும் பரிசோதனை சாலையை சுற்றி வந்தனர் . அங்கு பலர் கம்ப்யூட்டரிலும் பரிசோதனை மேசையிலும் வேலை செய்தபடி அவர்களை நோக்கி கைகளை அசைத்தபோது, நானும்அவர்கள் மத்தியில் அமர்ந்து வேலை செய்வேனா? இதுவரை ஓடியாடி மிருகவைத்தியம் செய்த எனக்கு பொறுமையாக ஒன்றை திருப்பி திருப்பி ஒன்றையே ஆய்வு செய்வது பொருந்துமா என்ற அங்கலாய்ப்பு நினைவுகள் மனதிலே குமிழியிடாது இருக்கவில்லை. அதையும் மீறி நமது தலையில் எது எழுதியுள்ளதோ அதுவே நடக்கும் என்ற நினைவு மனத்தில் அணைபோட அவன் அமைதி அடைந்தான்.
பரிசோதனைச்சாலையை சுற்றி வந்தபின் ஒரு இடத்தில் கதிரை, மேசை. அதன்மேல் ஒரு ஆப்பிள் கம்பியுட்டர் எனவந்ததும் ‘இதுவே இப்போதைக்கு உனது வேலை செய்யும் இடம். எனது ஆய்வில் செம்மறிகளை தாக்கும் ஒரு வகை பூச்சிகள், அவை இலையான்போல் மழைக்காலத்தில் நனைந்த செம்மறிகளின் ரோமங்களில் முட்டை போடும். அவை முக்கியமாக வாலுக்கு அருகிலோ அல்லது குதப்பக்கத்தில் இந்த முட்டைகள் பொரித்து புழுவாகும்போது அந்தப் புழுக்கள் செம்மறியின் உடலைத் தாக்கி உணவு எடுக்க, செம்மறிகளது தோல் காயமடைகிறது . அப்போது அந்தப்பகுதி ரோமங்கள் சிதைந்துவிடும். இதனால் அந்த கம்பளிகள் தரமற்றதாகவும், செம்மறியின் உடல் மெலிந்து விடும். இவற்றால் விவசாயிக்கு இறைச்சி ரோமம் என பெரிய பொருளாதார நட்டம் ஏற்படும் என்றாள்.
‘இதையேதான் ஃபுளோ ஃபிளையின் தாக்கம் எனப் படித்துள்ளேன்’
‘அதுவேதான், அதற்காக நாங்கள் அந்த புழுக்களுக்கு எதிராக தடை மருந்து ஒன்றைத் தயாரிக்க விரும்புகிறேன் அதுவும் இந்த தோலைத் தாக்கும் புழுக்கள் உருவாக்கும் ஒரு நொதியத்தின் மூலத்தை தயாரிக்கும் நிற முகூர்த்தத்தை எடுத்து அதிலிருந்து தடை மருந்து தயாரிக்க விரும்புகிறேன். அதற்கான டி என் ஏயை (DNA) அந்த புழுக்களின் தலையில் அதிகம் இருக்கிறது எண்ணுவதால் அதை எடுத்துப் பரிசோதனைக்காக பாக்டீரியாவின் உள்ளே வளர்த்து அதை தடை மருந்தாக செம்மறிகளுக்கு ஏற்றவேண்டும்’
‘எனக்கு இப்பொழுது புரிந்தது என்றான்.
‘நல்லது, இப்பொது புழுக்கள் எங்களிடம் திரவ நைட்ரஜனில் உள்ளது’ என்று சொன்னாள்.
சொல்லியதோடு நிறுத்தாது பெரிய பால் தகரம் போலிருந்த ஒன்றைத் திறந்தவுடன் அங்கிருந்து புகைந்து. . அதற்குள் இருந்து அகப்பை போன்ற ஒன்றினால் சிறிய தேமாஸ்பிளாஸ்கை எடுத்து காட்டி, இதற்குள் புழுக்கள் உள்ளன இவற்றின் புழுக்களை எடுத்து அவற்றின் தலையை மட்டும் வெட்டி எடுக்க வேண்டும்.. கையுறை போட்டு இதை எடுக்க வேண்டும்’
அந்த பிளாஸ்கை தந்து ஒரு சிறிய கத்தியுடன் ‘ தலையை வெட்டி சேமித்து மீண்டும் ஒரு சிறிய தெமாஸ்பிளாஸ் உள்ளே போடவேண்டும். இப்பொழுது செய்து பார் ‘ என்று சொல்லி ஒரு வெள்ளை அங்கியும் தந்தாள்.
அது நைட்ரஜன் திரவம் என்பது வசந்தனுக்கு ஏற்கனவே தெரியும் இலங்கையில் மாடுகளின் விந்துக்களை அதில் சேமித்தே பல இடங்களுக்கு செயற்கை கருக்கட்டலுக்கு அனுப்புவார்கள் என்பதால் பழக்கமானவை. .
கிட்டத்தட்டஒரு மணி நேரம் அந்த புழுக்களை தலைகளை சிரச்சேதம் செய்து, முண்டங்களை கிண்ணத்தில் போட்டான். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஐநூறு புழுக்களின் தலைகளை வெட்டிவிட்டான். மதியம் ஆகிவிட்டது மீண்டும் வசந்தனிடம் வந்து ‘வேலை எப்படி?’ என்றாள்
‘பிரச்சனை இல்லை வெட்டிய புழுக்களின் முண்டங்களை என்ன செய்வது?’ என்றான்.
அந்த முண்டங்களைக் கொண்ட கண்ணாடி ஜாரை கையில் எடுத்து பரிசோதனைசாலையின் பின் கதவை திறந்து அங்குள்ள புல் தரையில் வீசி எறிந்தாள் ‘புல்லுக்கு உரமாகட்டும்’ என சிரித்து விட்டு ‘உணவு கொண்டு வந்திருக்கமாட்டாய். நாளை வா.’ என்றாள்.
வசந்தனுக்குத் தெரியும் அப்படி எறிவது தவறு, இப்படியானவைகள் எரிக்கப்பட வேண்டும்.
வீடு வந்ததும் மனைவியுடன் அன்று நடந்தவைகளை பகிர்ந்து கொண்டான் வசந்தன்.
—
வசந்தகாலத்து இளவெயிலில் கையில் ஊசியுடனும் தோள் பையில் தடைமருந்துடனும் செம்மறிகளுக்கு வக்சினேட் பண்ண ஒரு பண்ணையில் நிற்பது போன்று உணர்ந்தான். சிறிது தூரம் புல்வெளியில் நடந்தபோது பல நூற்றுக்கணக்கான செம்மறிகள் கூட்டமாக மேய்த்து கொண்டிருந்தன. அவன் அவைகளை நெருங்கியபோது அவைகள் மீது இலையானகளாக ஃபுளோ ஃபிளை மொய்த்தபடி இருந்தன . அவை குளவிகள் போல் இரைந்தபடி வசந்தனைக் நோக்கி வந்தபோது அந்த பகுதியில் கருமுகில்போல் படர்ந்து அந்த இடமே இருண்டது. எதிரில் அவைகளைத் தவிர எதுவும் தெரியவில்லை.அவை சிறிய விமானத்தின் ஓசையுடன் இரைந்தபடி அவனை நோக்கி வர அவன் ஓடினான். அவை விடவில்லை இறுதில் தடக்கி புற்கள்மேல் விழுந்தான். அவைகள் அவனை மொய்த்து ஒரு பாம்பின் சீறும் ஓசையுடன் வானத்தில் அவனை இழுத்தபடி பறந்தன. பயத்தின் கண்களை மூடிவிட்டான். எவ்வளவு நேரம் எனத் தெரியவில்லை. அவன் கண்ணைத் திறந்து பார்த்தபோது, மரத்தில் மோதி சிறகொடிந்த பறவையாக நிலத்தில் விழுந்து கிடந்தான்.
கண்களை அகலமாக விரித்தது சுற்றிப் பார்த்தபோது ஒரு வீட்டின் பின்பகுதி, நாலாபக்கமும் பலகை வேலியிருந்தது அவன் நின்ற இடம் உயரமான இடம். சிறிது பதிவான இடத்தில் வேலியோரத்தில் ஒரு கூடாரம். பச்சைக் கண்ணடிக்கூரை, இரும்பு கம்பியுடன் மற்றும் பிளாஸ்ரிக் கதவு என நமது ஊர்களில் கோழிக் கூடுபோல் ஆனால் உள்ளே பச்சை லைட் எரிந்தது. அந்தக் கூட்டைக் கடந்து வீட்டின் முன்பக்கம் சென்றான்.
யாரோ ஒருவர் வீட்டின் பின் பக்கத்தில் அந்தப்பூச்சிகள் அவனை இறக்கி விட்டு சென்று விட்டன என்பது மெதுவாக புரிந்தது. வீட்டின் முன்கதவைத் தட்டினான் அப்பொழுது கதவை திறந்தபடி சூசன் வந்தாள்.
‘எப்படி இருக்கிறாய்? நான் நினைத்தேன், நீ வருவாய் என்று? ,
அவன் பதில் சொல்லாது அவளே பதில் சொன்னாள்.
‘எனது புழுக்கூடு பார்த்தாயா? வா அங்கு கூட்டி செல்கிறேன் ‘என பதிலை எதிர் பார்க்காக்காது வீட்டின் பின்புறம் சென்றாள். அவளது பின் அசைவுகளைப் பார்தபடி அவளைப்பின் தொடர்ந்தான்.ஏற்கனவே அவன் பார்த்த கூட்டின் கதவைத் திறந்து ‘உள்ளே வா’ என்றாள்.
அவனும் அவளைத் தொடர்ந்தான். பச்சை வலைகள் போட்டு பாதுகாப்பான கூட்டின் உள்ளே, கண்ணாடிப் பெட்டிகள், அதன் உள்ளே பச்சை லைட் எரிந்தது. அங்கு பல புழுக்கள் உயிருடன் வெள்ளையாக மிதந்தன. சில அந்த கண்ணாடி உள்பக்கத்தில் ஊர்ந்தன. பெட்டிகளின் கதவைத் திறக்காது, கையால் சுட்டியபடி ‘இந்த புழுக்கள் மிதக்கும் திரவகம், செம்மறிகளின் இரத்தத்திற்கு சமமான, போஷாக்குடன் நான் உருவாக்கியது. இதில் உருவாக்கும் புழுக்களில் அதிகமாக நொதியம் இருக்கும் என நம்புகிறேன். சாதாரணமாக பண்ணையில் செம்மறிகளில் வளரும் புழுக்களோடு ஒப்பிடவேண்டும் ‘என்றாள்.
வசந்தன், அவள் வித்தியாசமாக இருக்கிறாள் என நினைத்தபடி வெளியே வந்தபோது மீண்டும் வீட்டுக்குள் சென்றாள்.
‘இந்த கூண்டுள் சென்றால் நான் உடனே குளிப்பது வழக்கம் ‘ என சொல்லிவிட்டு அறையில் அறையே நோக்கிச் சென்றாள்.
‘நான் குளிக்க தேவையில்லையா? ‘என்றான் வசந்தன்.
அவள் கழுத்தை வெட்டி தன்னைத் சுதாரித்படி ‘ நான் குளித்தபின் பாத்ரூம் காலி. நீ குளி’ என்றாள்.
அவள் சென்றதும் வசந்தன் அவளது முன்னறையை ஆராய்ந்தான். புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களை எடுத்துப் பார்த்தபோது அவை விவசாயம் மற்றும் விலங்கு மருத்துவ புழுக்கள் பற்றிய புத்தகங்கள் இருந்தன. வேறு வகையான எதுவும் இல்லை. அந்த அலுமாரியில் அவளது பட்டம் பெற்ற படம் உள்ளது. அவை சீனா-சாங்காய் பல்கலைக்கழகத்தில்; பின்பு சிட்னி பல்கலைகழகத்தில் பெற்றவையாக தெரிந்தது. விவசாயப்பட்டத்தை சீனாவிலும் பின்பு மேற்படிப்பை சிட்னி பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறாள். அதாவது கலாநிதி பட்டம் பெற்றவள். அத்துடன் ஒரு மகளோடு சில படங்களும் உண்டு .அவளுக்கு மகள் உண்டு ஆனால் கணவருடன் எதுவும் இல்லை. விவாகரத்து பெற்றோ அல்லது கணவனைப் பிரிந்தோ இருப்பவளாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
அவனது ஆய்வை முடித்துவிட்டு, சிறிது நேரம் அங்கு கதிரையில் இருந்தபோது, ஈரமான கேசங்கள் தலையிலும் அவளது வெள்ளை பிஜாமாவில் ஒட்டியபடி இருந்தன. முழங்கால் வரையும் பிஜாமா மறைத்த அவளது மஞ்சள் கால்களின் அழகு, கவர்ச்சியாக இருந்தன.அவளை ரசித்தபடி இருந்த வசந்தனிடம் தலைமயிரை டவலால் துடைத்தபடி முகத்தை திருப்பாது ‘இலங்கையில் முக்கியமாக எந்த விலங்குகளில் மருத்துவம்செய்தாய்?
‘ஆடு,மாடு சில தடவை யானை மட்டுமே. எங்களூரில் செம்மறி கிடையாது ‘என்றான்.
‘யானையோ? என்று ஆமண்ட் கண்களை அகல விரித்தபடி திரும்பினாள்..
‘ஓம் யானை காட்டில் நடக்கும்போது காலில் குத்தும் முள்ளுகள், இக்காலத்தில் போத்தில் உடைந்த கண்ணாடிகள் போன்றவையால் ஏற்படும் காயங்களுக்கு மருந்து போடுவோம் . அவை இலகுவாகவாக குணமடையாது ‘
‘ எப்படி மருந்து கொடுப்பது ? ‘
‘பெரும்பாலும் அன்ரிபயோட்டிக் கலந்த களிம்புகள் தடவுவோம்.அதிக காலம் செல்லும். காயம் குணமடைய,
‘அப்ப நானும் யானைபோல’ என்றாள்
திடுக்கிட்டான். ஆனாலும் வெளிக்காட்டாது ‘ஏன்’ என்றான்.
எனக்கம் இந்தப் புழுக்கள் கடித்து வந்த காயம் குணமடைகிறதில்லை. தினமும் மருந்து போடுறேன். இப்பொழுது போடவேண்டும் ‘ என்றாள்.
‘நான் அந்த காயத்தைப் பார்க்கலாமா? என்றான்
‘நான் ஆடா மாடா? மனிதப்பிறவி!” என சிரித்தாள்.
‘மன்னிக்கவும் ‘ அவனது தவறை உணர்ந்ததும் உதடுகளை கடித்துக் கொண்டான்
‘பரவாயில்லை மேலே வா எனது படுக்கை அறையில் மருந்து உள்ளது ‘ என்று வேகமாக மாடிப்படிகளில் சென்றாள். அவளைத் தொடர்ந்தான்.
பெரிதாக இருந்த அறையில் சென்று, அங்கிருந்த குளியல் அறையில் உள்ள போய் ஒரு பச்சை ருயூப்பை கொண்டு வந்து படுக்கையில் அமர்ந்தாள்.
‘அருகில் வந்திரு ‘ என படுக்கையை காட்டிய போது வாசலருகே நின்ற வசந்தன் கட்டிலின் ஓரத்தில் இருந்தான்.
சூசன் கையிலிருந்த பச்சை ருயூபை தந்து விட்டு வசதியாக தலையணையில் சாய்ந்தபடி திரும்பி முதுகை காட்டினாள் அவளது கழுத்துக்கு இடுப்பிற்கும் சரியா இடைப்பட்ட தூரத்தில் இடது புறத்தில் சிறிய இரு காயங்கள் ஒன்றின்மேல் ஒன்றாகத் தெரிந்தது. இரண்டு சிவப்பு ரோஜாக்களின் முகைகளை அதிகாலையில் காண்பதுபோல் சிறிது அவிழ்ந்து இருந்தது அந்த ரோஜா முகைகள் நடுவே காலையில் வெட்டிய அதே புழுக்கள் நெளிந்தன.
‘என்ன மருந்து போடுகிறாயா? என்ற குரல் ஆழத்திலிருந்து கேட்டது வசந்தனுக்கு தலை சுற்றி உடல் வியர்த்து கண்ணை விரிக்க முடியாது மயக்கம் வருவது போல் இருந்தது. அப்படியே கட்டிலில் விழுந்தான்.
அவன் கண் விழித்தபோது , இப்பொழுது படுக்கையில்லை. ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான். கீழே வீடுகள், தெருக்கள் கட்டிடங்கள் வாகனங்கள் எனத் தெரிந்தன. இறுதியில் கிரிகட் மைதானம் போலிருந்த புல்வெளி ஒன்றின் மேலே பறந்தபோது வேகம் குறைந்து பூமியே நோக்கி வேகமாக வந்து இறுதியில் தடால் என ஓசையுடன் விழுந்தான்.
விழுந்தவன் அதிர்சியடைந்து சுற்றி பார்த்தபோது அவனுக்கும் மனைவிக்கும் இடையில் இரண்டு பிள்ளைகளும் படுத்திருந்தார்கள்.
—
வசந்தன் கனவு என நம்ப நினைத்தாலும் இப்படி கனவா என்ற சந்தேகத்துடன் மெதுவாக எழுந்து சென்று ஃபிரிஜில் இருந்து தண்ணீரை குடித்துவிட்டு வந்து காலுக்குள் தலையணையை வைத்துக் கொண்டு மனைவியை பார்த்தபோது அவள் மெதுவான குறட்டை விட்டபடி தூக்கத்தில் சிரித்தாள்.
அவளும் என்போல் கனவு கண்டிருப்பாளோ?
. அவளை எழுப்பி கனவை சொல்ல நினைத்தாலும் பிள்ளைகள் தூக்கம் கலைந்தால் அவர்கள் நாளை காலையில் பாடசாலை செல்லவேண்டும் என்ற நினைப்பில் அடுத்த பக்கம் திரும்பி படுத்தான்.
பின்னூட்டமொன்றை இடுக