
நதி பயணத்தில் மிற்றன்பேர்க் என்ற சிறிய நகரம் தரிப்பாக இருந்தது . இதுவும் பவேரியா பகுதியில் உள்ள பழைய நகரம் ஒன்றாகும் இங்கு குடியேற்றம் ரோமர்களது காலத்திற்கு முந்தியதென்றாலும் அதனது எச்சங்கள் இங்கு இல்லை. மத்திய காலத்தின் எச்சங்களே தற்பொழுது காணப்படுகிறது.
நதியின் கரையில் இருப்பதால் எப்போதும் மக்கள் போக்குவரத்து வணிகம் இங்கு செழித்திருந்ததன் விளைவாக நகரம் முழுவதும் அழகிய மரக் கட்டிடங்கள் , கற்கள் பதித்த தெருக்கள் இருந்தன. அத்துடன் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்பு இடிந்த கோட்டை ஒரு மலையில் உச்சியிலிருந்தது . தற்பொழுது அது மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது . நாங்கள் அதில் ஏறாது அண்ணாந்து பார்த்ததோடு திரும்பிவிட்டோம்.
எங்களுக்கு வண்ண வண்ணமாக கிளாஸ் வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்குச் சென்றோம் . அதில் பலர் பல நேரம் செழித்தார்கள். மருந்துகளை அடைக்கும் பல கண்ணாடி போத்தல்கள் அங்கிருந்தது. ஜேர்மனி, கிளாஸ் தயாரிக்கும் தொழிலில் முக்கிய நாடாகப் பல காலம் இருக்கிறது. ஆனால், தற்பொழுது ரஸ்யாவிடமிருந்து கிடைக்கும் எரிவாயு தட்டுப்பாட்டால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன என அறிந்தேன்.
மில்றன்பேர்க் நகரத்தின் பாதையில் நடந்தபோது பல நிர்வாண ஓவியங்கள் கொண்ட ஒரு கட்டிடம் இருந்து . அதை அவுஸ்திரேலியாவில் உள்ளதுபோல் செக்ஸ் டொய்ஸ் (Sex toys) விற்கும் கடையாக இருக்குமோ என ஆவலுடன் எட்டிப்பார்த்தால் அது ஒரு ஓவியக் கண்காட்சி இடமாகத் தெரிந்தது. அதேபோல் ஒரு மருந்தகம் முன்பாக இரண்டு எலும்புக்கூடுகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன .
ஐரோப்பாவில் இருநூறு வருடங்கள் முன்பாக நடந்த நகரங்களின் வளர்ச்சியில் மூச்சுத் திணறி விலகி வந்த பல ஓவிய, சிற்ப, கட்டிடக் கலைஞர்கள் இப்பகுதியில் வந்ததால் இந்த நகரங்களில் தங்களது கைவண்ணத்தைக் காட்ட முடிந்தது என்று சொல்லப்பட்டது. இந்தப் பகுதிகளுக்கு போகும் பாதைக்கு ரோமான்ரிக் ரோட் (Romantic Road) எனப் பெயரிடப்பட்டது.
ருடிசெம் (Rudesheim)
காலையில் நாங்கள் தரித்த இடம் ருடிசெம் என்ற ரைன் நதிக்கரையிலுள்ள பிரசித்தி பெற்ற வைன் பிரதேசம். முக்கியமான இங்கு வெள்ளை வைன் தயாரிக்கப்படுகிறது என்றார்கள். எங்களைத் திரைப்படங்களில் மாயாவியின் கோட்டைபோன்ற ஒரு கட்டிடத்திற்குக் கூட்டிச் சென்றார்கள் அது மெகானிக்கல் மியூசியத்திற்கு சென்றோம் . அங்கு ஆரம்பக்காலத்திலிருந்து உருவாகிய இசைக்கருவிகள் இருந்தன . எனது மனம் அதில் பெரிதாக ஈடுபடவில்லை.

மற்றவர்கள் அங்கு நிற்க நாங்கள் மட்டும் வெளியே வந்து திராட்சைத் தோட்டங்களுமாக சியாமளாவுடன் நடந்தேன். ஆங்காங்கு தொலைவில் வீடுகள் தெரிந்தாலும் பாதைகளில் எவருமில்லை தொடர்ச்சியாகத் திராட்சைத் தோட்டங்களுடாக நடந்து பாதையில் ஏறியபோது வழியைத் தவறவிட்டோம் . இறுதியில் ஆற்றை நோக்கி நடந்தபோது கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டியிருந்தது .
கோபிளன்ஸ் (Koblennz)
படகு மேலும் திராட்சைப் பிரதேசத்தினூடாக சென்று மாலையில் கோபிளன்ஸ் (Koblenz) என்ற முக்கிய நகரத்தில் நின்றது. இந்த பெயரின் ஜெர்மனிய அர்த்தமே ‘நதிகள் ஒன்றாகுவதாகும்’ இந்த நகரம் 2000 வருடங்கள் பழமையானது மட்டுமல்ல. நதிக்கரையில் இருப்பதால் விவசாயம் வணிகம் என்பன நடந்த ரோம காலத்து நகரம் இந்த நகரத்தில் ரைன் நதியும் மோசல் (Moselle) என்ற நதியும் ஒன்றாகிறது. மாலையானதால் வேகமாக இறங்கி நடந்தபோது இரண்டு நதிகளும் சந்திக்கும் இடத்தை ஜெர்மன் மூலை என்பார்கள். இங்கே மிகப் பெரிய (Emperor William) வில்லியம் மன்னரது 37 மீட்டர் சிலை உள்ளது .


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எனது எட்டாம் வகுப்பில் கடைசியாகப் படித்த ‘நம் முன்னோர்கள் அளித்த அரும் செல்வம்’ என்ற வரலாற்றுப் புத்தகத்தில் ஐரோப்பிய வரலாற்றில் நெப்போலியன் தவிர்ந்த நினைவிருக்கும் இரு பெயர்கள்: அவை கைசர் வில்லியம் என்ற ஜெர்மானிய மன்னர், இரண்டாவது பிஸ்மார்க் என்ற அவரது பிரதமர் என்பவர்களே. இந்தியாபோல் பிரிந்திருந்த ஜெர்மனியை இவர்களே ஒரு நாடாக்கியவர்கள். இதில் முக்கியமாக பிஸ்மார்க் பிரதமராக இருந்து அதை நடத்தினார் என்பது நான் படித்த வரலாறு. அந்த வகையில் ஜெர்மனியில் முக்கியமான இடத்தில் கைசர் வில்லியம் மன்னரின் இந்த சிலை இருந்தது என நினைத்தேன்.
இதுவரை நதிகள் இரண்டு ஒன்றாக கலக்குமிடத்தை நான் பார்க்கவில்லை. அதுவும் மங்கிய மாலை நேரத்தில் அந்த இடம் கண்ணைக் கவரக் கூடியதான ஒரு இடமாகத் தெரிந்தது . இந்த நகரமும் யுனெஸ்கோ கலாசாரப் பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட இடம். இந்த இடத்தை சுற்றிப் புகழ் பெற்ற கோட்டைகள் உள்ளன. அத்துடன் இந்த இடம் இரண்டாவது யுத்தத்தில் குண்டு போட்டு அழிக்கப்பட்ட பிரதேசம் அந்த சிலையருகே நடந்தபோது ஓரிடத்தில் பேர்லின் சுவரின் மூன்று பகுதிகளை வைத்திருந்தார்கள் அத்துடன் இந்த பகுதியை ஒரு பூங்காவாக மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
அந்த இடத்தில் அதிக நேரம் செலவளிக்க முடியவில்லை . மாலை மங்கியதால் படகுக்கு வந்து சேர்ந்தோம்.
பின்னூட்டமொன்றை இடுக