வேலாயுதர் செல்லத்துரை மறைவு இரங்கலுரை.

புன்னகையை எப்பொழுதும் தன்னில்  அணிந்தபடி இருக்கும் நண்பன் வேலாயுதர் செல்லத்துரையை நினைவுகூர நாம் இன்று ஒன்று கூடியிருக்கிறோம்  அவர் எனக்கு 50 வருடங்களாகத் தெரிந்த டக்டர் சக்திலெட்சுமியின் கணவர் அத்துடன்   கிசானியின் தந்தையாவார்

அவர் தனது உதட்டு சிரிப்பிற்கு உள்ளே தனது விடயங்களைத் தெளிவாக வகுத்து நடந்தவர் என்பதை அறிவேன். 

நாம் பிறந்த பின்பு, இறப்பு என்ற சம்பவம் வாழ்வில்   தவிர்க்க முடியாது ஆனால் இடைப்பட்ட காலத்தில் எப்படி நடந்தோம் என்பதே இங்கு முக்கியமானது. நண்பர் செல்லத்துரை   தனக்கு விரும்பிய வாழ்வை வாழ்ந்து, 84 வயதில் இறக்குபவரையும்  அவரது  வாழ்வை நாம் கொண்டாடி நினைவு கூரவேண்டும்.

அவர் கோப்பாய் கிறிஸ்தவ பாடசாலையிலும் பின்பு யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் படித்தவர்.  இளமைக் காலத்தை நான் அறிந்தபோது மிகவும் உற்சாகமாக நண்பர்களிடையே வாழ்ந்தார் என அறிந்தேன்.

 காகிதம்  மில் எனப்படும் வாழைச்சேனையில் அவரது வாலிப வயதில் வேலை தொடங்கியவர் . பல வருடங்களாகத் தனது பிறந்த குடும்பத்தையும் சகோதரிகளையும் கவனமாகப் பாதுகாத்தவர். அவரது நண்பர் கூற்றுப்படி எடுத்த சம்பளப் பணத்தை  அப்படியே வீட்டுக்கு அனுப்புவாராம். 

வாழைச்சேனையில் 3 வருடங்கள் கணக்காய்வு வேலையிலும் பின்பு 14 வருடங்களாகக் கொழும்பில்  அதன் தலைமையகத்தில் வேலை செய்தபோது   கணக்காய்வில் சிறந்தவர் எனப் பெயர் எடுத்தவர் அத்துடன்  இலங்கையில் மிகவும் சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்ற கேசி தங்கராஜாவின்  கீழ் வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது வேலைத் திறனை நான் அவரது நண்பர்களிடம் இருந்து அறிந்து கொண்டேன். அத்துடன் தொடர்ச்சியாக மின்சாரம் இல்லாத அவர் வசித்த வாழைச்சேனை வசிப்பிடத்தில்  அரிக்கன் விளக்கில் தொடர்ந்து வாசிப்பவர் என்பதும் தெரியவந்தது.

  1983 இன நெருக்கடி கொழும்பு வாழ்-தமிழர்களை அவர்கள் வாழும் இடங்களிலிருந்து உலுக்கி எடுத்தபோது,  குடும்பத்துடன் அவுஸ்திரேலியா வந்தார்.    நாம் எல்லோர் போல் அவருக்கும் புது இடத்தில் குடும்பம் , குழந்தை,   வேலை என்ற விடயங்களில் கவனம் செலுத்தினார்.

 நான் அவரை சந்திக்கும் ஓரிரு வேளைகளில் சிரித்தபடி அக்காலத்தில் நான் நடத்திய உதயம் பத்திரிகை செய்திகள் பற்றி  சிறிய விமர்சனம் வைப்பார். ஆழமாகப் படித்தவர் எனப்  புரிந்து பதில் சிரிப்புடன் விலகி விடுவேன்.

பல காலமாக எங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும் வார்த்தைகளை அதிகம் செலவழித்காதவர்  நண்பர் செல்லத்துரை .

அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் இழப்பான போதிலும் அவர் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பாக நான் சென்று அவரை பார்த்தேன்  அப்பொழுது மெதுவான  சுவாசம் மட்டுமே வந்தபடி  இருந்தது . நான் அவரைக் கவனிக்கும் நர்சிடம் அவரை பரிசோதிக்கும்படி கேட்டபோது அந்த பெண் தனது மூக்குக் கண்ணாடியை  அவரது வாயருகே வைத்தபோது சிறிதான ஈரலிப்பு தெரிந்தது . அப்போது அவரது பிரயாணம் தொடங்கிவிட்டது என  சக்தியிடம் சொல்லிவிட்டு வந்தேன்.

மீண்டும் எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த  அனுதாபங்கள் உரித்தாக. 

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.