கிட்டத்தட்ட ஐம்பது வருடத்திற்கு முன்பாக எழுதப்பட்ட இந்த நான்கு நாவல்களும் அந்தந்த மொழிகளில் சிறந்தவை என்பதுடன் அழகான மொழிபெயர்ப்பைக் கொண்டவை. இவைகளை வாசிப்பது மிகவும் சுகமான அனுபவம்.இந்த நான்கு கதைகளும் எடுத்துக்கொண்ட கருக்கள் இந்தியாவின் கலாச்சாரத்திற்குள் இருப்பவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்திய பாரம்பரியத்தை புரியாத ஒருவரால் நீலகண்டப்பறவையைத்தேடியில் வரும் மாலதியின் அவலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.செம்மீனில் கற்புடன் பெண்கள் இருந்தால்தான் மீன்பிடிக்கச் சென்ற மீனவக் கணவன்கள் உயிருடன் திரும்புவார்கள் என்பது அர்த்தமில்லாத விடயமாகத் தெரியும்.யு . ஆர். ஆனந்தமூர்த்தியே அக்கிகாரத்தவர்களது மூடநம்பிக்கைகளை நகைச்சுவையாக்கும்போது, மற்ற அன்னியர்களால் எப்படி இது வலுவான சிக்கல் என புரிந்து கொள்ளமுடியும்?அன்னியன் ஒருவனுடன் உறவுகொண்டு குழந்தைகளைப் பெற்று வாழ்ந்த பாவத்தை தனது மகனில் – அவன் வேதம் படிப்பதால் தீர்க்கமுடியும் என்ற அசட்டுத்தனமான முடிச்சை இந்திய நாவலில் மட்டுமே பார்க்கமுடியும்.இதை நாம் கூட ஏற்போமா?நவீன இந்திய இலக்கியங்களில் இருக்கும் பலமின்மை பண்டைய இந்திய இலக்கியங்களில் இருக்கவில்லையே?சகுந்தலையினதோ, பாஞ்சாலியினதோ அல்லது சீதையின் பாத்திரத்தையோ புரிந்துகொள்ள இந்திய கலச்சாரம் தெரியத் தேவையில்லை .அதேபோல் இராவணனது தன்மை, அருச்சுனனது வீரம் , மற்றும் திருதராட்டினனது புத்திர பாசம் மனித குலத்திற்குப் பொதுவானவை.மனித சமூகத்தின் மாறாத அடிப்படை விழுமியங்களான பொறாமை , ஆசை காமம், அதிகாரம் , நட்பு என்பவை எக்காலத்திற்கும் பொதுவானவை. மாறாதவை. அவைகளே காலத்தை கடந்து நிற்கும். ஆனால், பிற்காலத்தில் வந்த நம்பிக்கைகள், சாதி, சம்பிரதாயங்கள், மற்றும் மதச் சடங்குகளுடன் கலந்து முரண்பாடுகளை நாவலில் கட்டமைக்கும்போது முழு நாவலே பலமற்றுப் போகிறது.இப்படியான போக்கு தொடர்ந்தும் வருகிறது. காரணம்?அக்காலத்தின் வீரியத்தை இழந்து, இக்காலத்தில் சோடையாகி நிற்கிறோமா?
பின்னூட்டமொன்றை இடுக