by Arafath Sahwi
கடந்த ஆண்டின் துவக்கத்தில் மட்டக்களப்பு செல்லும் வழியில் தோழர் கருணாகரன்


நோயல் நடேசனின்
கரையில் மோதும் நினைவலைகள் நூலை தந்து விட்டுப் போன ஞாபகம்.
இதனை வாசிக்காமல் ஓராண்டு கடத்தியிருக்கிறேன் .
மூன்று தினங்களுக்கு முன் ஓய்வாக வீட்டிலிருந்த தருணம் நோயல் நடேசனின் நூலின் ஒரு ஓரிரு பக்கங்களை வாசித்தவுடன் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை அது கிளறி விட்டது.
மிகுந்த பணிகளுக்கிடையில் தொடராக வாசித்து விட்டு மனதில் பட்டதை எழுதுகின்றேன்.
நோயல் நடேசனின் “கரையில் மோதும் நினைவுகள் “
27 தலைப்புகள் 312 பக்கங்கள் கொண்ட சுயசரிதை தொகுப்பு.
வாழ்ந்து தீர்ந்து விட்ட வரலாற்றுத் தடயங்களை ஆதார சுருதியாக எழுத்துக்கள் ஊடாக வலு சேர்த்திருக்கின்றார்.
நடேசன் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்.
நாவல், சிறுகதை, பத்திரிகையாளர். என பல் பரிமாணங்களுடன் தீவிர இலக்கியப் பணியில் இயங்கியவர்.
நடேசன் தொழில் ரீதியாக மிருக வைத்தியர். அவரின் அனுபவங்களை அவ்வப்போது முகநூலில் படித்ததுண்டு. ஒரு சேர கரையில் மோதும் நினைவுகளை படித்த போது சொல்லில் அடங்காத கொந்தளிப்புகள் மனதில் எழுந்து அடங்க மறுக்கிறது.
கடலளவு வாழ்வனுபவங்களைக் கொண்ட அவரின் நினைவுகளை உள்ளங்கை அளவு தான் எழுதி இருக்கின்றார்.
ஈழப் போராட்ட காலத்தில் ஓர்மத்துடன் ஒலித்த நடேசனின் குரல் மன சாட்சியின் ஆங்காரம்.
அவுஸ்ரேலிய சூழலில் தனது குடும்பம் , தொழில் போன்ற மனச்சுமைகளுடன், உதயம், பத்திரிகையை இரு தசாப்தங்களாக நடாத்தி வந்திருக்கின்றார்.
பலரின் ஒவ்வாமைக்கு அக்காலத்தில் உதயம் சிம்ம சொப்பணமாக திகழ்ந்திருக்கிறது.
மிலேச்சதிகாரத்திற்கு அடிபணியாத திமிர்க்குரலாக உதயத்தின் பிரசன்னம் நடேசனின் குரலாக ஓங்கி ஒலித்தது மறுக்கவியலா நிஜம்.
கரையில் மோதும் நினைவுகளில் அவரின் இளமைக்காலம், பல்கலைக்கழக வாழ்வு, தொழில் ரீதியான போராட்டம், தமிழ் இயக்கங்களை ஒருங்கிணைத்து செயற்பட அவர் எடுத்துக் கொண்ட கடின உழைப்பு,இந்தியா அவுஸ்திரேலியா அலைந்துழல்கள், தமிழ் மக்களுக்கான தன்னார்வுத் தொண்டு சேவைகள் அதனால் அடைந்த திருப்தியும், துரோகமும் என அத்தியாயங்களை விரித்துக் கொண்டே செல்கிறார்.
மனித குலத்துக்கெதிரான மிலேச்சத்தனங்களை அங்கீகரிக்காத போர்க்குணம், சர்வதிகார பாசிசத்திற்கு அடிபணியாத ராஜ கம்பீரம் என அவரின் எழுத்துக்களில் அனல் பொரியை அடுக்கிக் கொண்டே போகலாம்.
வரலாற்று நாவல் போல் ஒவ்வொரு அத்தியாயங்களையும் துல்லியமான தகவல்களுடன் சொல்லிக் கொண்டே நகருகின்றார்.
சில சுய குறிப்புகள் தன்னை மிகைப்படுத்தி வாசகனை முட்டாளாக்கி கதாநாயக அந்தஸ்தினை எழுத்தாளனுக்கு வழங்கி விடுவதுண்டு. அதனை இலக்கு வைத்தே எழுதுவதுமுண்டு.
கரையில் மோதும் நினைவுகளில் தன்னை ஒரு கண்ணாடியாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
நடேசனின் குறிப்புகள் வரலாற்று தகவல்களையும், அதனோடு இணைந்த காலங்களையும், நபர்களையும் துல்லியமாக குறிப்பிடுபவை.
மனசாட்சிக்கு எதிராக இயங்குபவர்களுடன் இணங்கி போகாத அவர் ஓர்மம் அவரை ஒரு கலகக்காரனாக பிறருக்கு அடை யாளப்படுத்தினாலும் ,அநீதிக்கெதிரான திமிர்த்தனம் தான் அவரின் எழுத்தின் வெற்றி எனலாம்.
அரசியல் படுகொலைகளை நியாயப்படுத்தாத அவரின் குணவியல்பும், மொழி மதம் கடந்த நேசிப்பும் பலரின் கனவு ஈழத்தினை கண்டடைய உதவவில்லை என்பது எதார்த்தம்.
நடேசனைப் பொருத்தவரையில் இது முற்றுப்பெறாத நினைவு குறிப்புகள்,
வாழ்வின் பள்ள மேடுகளையும், படுகுழிகளையும் எதிர்நீச்சல் போட்டு தாண்டியவர்.
வாழ்வின் மகா கடலில் எஞ்சியிருக்கும் நினைவுகளையும் எழுதித்தீர்த்திட வேண்டும்.
ஏனெனில் உண்மைக்காக, மனு தர்மத்திற்காக போராடிய ஒரு போராளியுடன் சமகாலத்தில் பயணித்த அனுபவத்தை உங்கள் கரையில் மோதும் நினைவலைகள்
எமக்குள் ஏற்படுத்துகிறது.
பின்னூட்டமொன்றை இடுக