செருக்கு

அலெக்ஸ் பரந்தாமன்.

    ” ஐயோ… என்ர அண்ணற்ர பிள்ளையள் எங்கையெண்டு ஒருக்காச் சொல்லுங்கோவன். நான் அதுகளோடையெண்டாலும்போய் இருக்கப்போறன்…”

    ஊர்மத்தியிலுள்ள ஒழுங்கை ஒன்றிலிருந்து ஒலிக்கிறதுது அக்குரல்! அதுவொரு பெண்ணின் குரல்! ஆறுமாத காலத்திற்கும்மேலாக ஊரின் ஒழுங்கைகள் எங்கும் அந்தப்பெண் புலம்பியபடி… திரிகிறாள். காலம் கடந்த ஞானோதயத்தின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள்… ஒழுங்கைகளில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தன. 

    ஆயினும், அந்த வார்த்தைகளில் உள்ள வேண்டுதல்கள் குறித்து  ஊர்ச்சனங்கள் எவரும் தங்கள் தங்கள் கவனத்தில் கொள்வதுமில்லை. கவலைப்படுவதுமில்லை. மாறாக, அக்குரல் ஒலிக்கும் பொழுதிலெல்லாம் அவர்களிடமிருந்து சாபவார்த்தைகள் எழத்தொடங்கும் எரிச்சலாக… ஏளனமாக…

    ” உந்தச் செருக்குப்பிடிச்சவள் இஞ்சால எங்கட ஒழுங்கைப்பக்கம் வந்திட்டாளே…? அடிச்சுக் கலையுங்கோடா உந்தச்சனியனை… அங்காலை எங்கையெண்டாலும் போய்துலையட்டும்…”

    அவள் புலம்பும்பொழுதில் அவ்விடத்தில் உள்ள வீட்டு முற்றத்திலிருந்து எழும் அவளது வார்த்தைகளின் தாக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவளாக அவளது கால்கள் வேறொரு இடத்தைநோக்கி  நகரத்தொடங்கும். 

    அங்கேயும் அவள் புலம்ப ஆரம்பிப்பாள்.

    ” ஐயோ… என்ர அண்ணை நான் உனக்குச் செய்த அநியாயத்துக்கு இப்ப கிடந்து அழுந்துறன்… அலையுறன்… என்ர ராசா நீ இப்ப எங்கை இருக்கிறாய்? நான் உன்ர பிள்ளையளோடைதன்னும் வந்திருக்கப்போறன். என்னை ஆராவது அண்ணையிட்டைக் கூட்டிக்கொண்டு போங்கோ…”

    ” இப்பதான் நாச்சியாருக்கு சுடலைஞானம் பிறந்திருக்கு. அந்தநேரம்… அவளின்ரை அண்ணன்காரன் அந்த ஒருதுண்டுகாணிக்காக எத்தனைதரம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டு திரிஞ்சவன். அப்ப அதை அவனுக்குக் குடுத்திருந்தால், இப்பிடி ஒழுங்கை முழுக்க விசர்பிடிச்சுத் திரியவேண்டிய அவசியம் வந்திருக்காது. எல்லாம் பணச்செருக்கு…”

    அவள் புலம்பும் இடத்திலிருந்து இன்னொரு குரல் கேட்கும். உடனே அவள் அந்த இடத்தைவிட்டு நகருவாள் மேலும் புலம்பல்களோடு…

    அந்த ஊரில வாழுகின்ற யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் அவளுக்கு இப்படியானதொரு நிலை வருமென்று. அதேசமயம் அவளது வாழ்க்கை குறித்து அங்கு வாழுகின்றவர்களும் தமக்கு ஒரு பாடமாக அமைந்து விட்டிருப்பதைக் கண்டுணர்ந்து கொண்டார்கள். 

    அவளின் அகஅறிவை மறைத்த மேட்டிமை உணர்வுகள், செய்கை காரியங்கள் இப்போது அவளிடத்தில் எதுவுமே இல்லை. அநாதரவான நிலையில் அவள். அவளது இன்றைய நிலைகண்டு ஊரில் உள்ள எவரும் பரிதாபப்படுவதற்குப் பதிலாக அருக்களிப்பும் ஆனந்தம் கொள்வதுமே வழமையாகி விட்டிருந்தது. 

    அறுபதுகளின் ஆரம்பத்தில் கண்மணி தனது கணவன் துரைசிங்கத்துடன் துயரறியா வாழ்வில், தனது ஒரேயொரு பெண்பிள்ளையுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். கணவன் சிங்கப்பூரில் தொழில் புரிந்துவந்த நிலையில், மகளின் திருமணத்தோடு ஊருக்குவந்து நிரந்தரமாகிவிட, மகள் தனது கணவனுடன் வெளிநாடொன்றில் வதிவிட உரிமைபெற்று அங்கு நிரந்தரமாகி விட்டாள்.

    வளம்நிறைந்த வாழ்வின் பூரிப்பு… ஊரிலே வறுமைப்பட்ட ; சிறுமைப்பட்ட மனிதர்கள்மீது கண்மணியை நிமிர்ந்து நோக்க விடவில்லை.  தனது அந்தஸ்துக்கேற்றவர்கள் சிலருடன் மட்டுமே நன்மை – தீமையான காரியங்களில் பங்கு கொள்வதோடு, மற்றையவர்களைக் கண்மணி புறமொதிக்கித் தள்ளிவிட்டிருந்தாள். இதன்நிமித்தம் இவள்மீது வன்மம் கொண்டிருந்தன ஊராரின் முகங்கள். 

   இந்நிலையில், கண்மணியின் மூத்த அண்ணன் முத்தையாவின் பெண்பிள்ளைக்கு திருமணம் ஒப்பேறிய நிலையில், மாப்பிளை பெண்வீட்டாரோடு தங்கியிருந்து வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

    முத்தையாவின் வீடோ ஓர் அறை மற்றும் குசினி சேர்ந்த சிறிய வீடு. வயதுவந்த இரு பெண் பிள்ளைகள். அவர்களோடு படித்துக்கொண்டிருக்கும் ஆண்பிள்ளைகள் மேலும் இருவர். 

    முத்தையாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இறுதியாக தனது தங்கை கண்மணியிடம் சென்றார்.

    ” பிள்ளை கண்மணி… உனக்கொரு காணி கல்வீட்டுவளவோடை வடக்குப்பக்கத்தில வெறுமையாய் கிடக்குதுதானே. அதை எனக்குத் தாவன். மூத்தவளும் மருமோனும் அதில இருக்கட்டும். எங்கட வீடும் பெரிசா வசதியில்லை. உனக்குத் தெரியும்தானே…”

     கருமையடைந்து கொண்டது கண்மணியின் முகம். கூடவே அதில் சின உணர்வுகள் பிரதிபலித்தன. 

    ” என்ன கதை கதைக்கிறியள் நீங்கள்…? அது சும்மா கிடக்குதெண்டாப்போல கேட்க வாறியளோ?   அது என்ர பிள்ளைக்கெண்டு வைச்சிருக்கிற காணியல்லோ… அது தரேலாது…”

    முத்தையாவிற்கு நம்பிக்கைகள் தவிடுபொடியாகின. இருப்பினும், மனம் தளராத விக்கிரமாதித்தன்போன்று மீண்டும் தங்கையோடு கதைக்க ஆரம்பித்தார்.

    ” உனக்கிருக்கிறது ஒரேயொரு பொம்புளைப்பிள்ளை. அவளோ வெளியில நிரந்தரமாகி விட்டாள். இனி இஞ்சாலை வந்து குடியிருக்கிறமாதிரி உன்ர மகளும் இல்லை. மச்சானும் நீயும் இருக்கிறதுக்கு இப்ப இருக்கிற வீடே போதுமான வசதியாய் இருக்கேக்கை, அந்த வடக்குக் காணிவீட்டை என்ர புள்ளைக்குத் தாவன்.”

    முத்தையா கூறியதைக் கேட்டு, கனல் தெறித்தது கண்மணியின் கண்களில்.

    ” என்ன சொல்லுறியள்…? ஆரோடை என்ன கதைக்கிறியள்…? நாங்கள் வசதிவாய்ப்போடை இருக்கிறதெண்டாப்போல, இதென்ன கோயில் சொத்தே உடன எழுதித் தந்துபோட்டுப் போறதுக்கு? அது தரேலாது…”

    ” சரி… அதை நீ எழுதித் தர வேண்டாம். கொஞ்ச நாளைக்கு வாடகைக்கெண்டாலும், இருக்கத்தாவன்…”

     வந்தகாரியத்தை எப்படியாவது ஒப்பேற்றிச் சென்றுவிட வேண்டும்… என்ற பெருவிருப்போடு, தனது தங்கையிடம் பவ்வியமாக தனது இறுதி வேண்டுகோளை விடுத்தார். 

    தங்கையின் முகத்தில் அருக்களிப்பஉ உணர்வு தோன்றி மறைகிறது. முத்தையா அதைக் கவனிக்கத் தவறவில்லை. 

    இதற்குமேலும்  அவ்விடத்தில் நிற்பது மதிப்பில்லை… என்பதை உணர்ந்தார் அவர். திரும்பி வீட்டின் நடு விறாந்தையைப் பார்த்தார். அங்கே தங்கையின் கணவன் சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி… வாயில் சுங்கான் புகையுடன்… ஆங்கிலத் தினசரியொன்றைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

    மெதுவாக அந்த இடத்தைவிட்டு விலகி, ஒழுங்கைக் கேற்றைத் திறந்துகொண்டு, வெளியே சில அடி நகர்கையில், அக்கேற்றைப் பலமாக இழுத்து… அடித்து, அதன் மேலேயுள்ள தகட்டுக் கொளுக்கியை மாட்டும் சத்தம் கேட்கிறது அவருக்கு.

    மனது வலி எடுத்த நிலையில், அவருக்குள் ஆயிரம் சிந்தனைகள்…

    வாழ்க்கையில் எல்லாம் நிறைவாக இருக்கும்போது, இல்லாதவர்களின் இயலாமைகள் நிறைவானவர்களால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. அக்கிரமங்கள் மிகுதி கொள்கையில், விதி சிரிக்க முற்படுமானால் நிறைவான யாவும் குறைவாகவே செல்ல ஆரம்பித்துவிடும். 

    தனது தங்கை கண்மணியிடம் இருக்கும் பணச்செருக்கும் அகந்தையுணர்வும் ஒருகாலம் அவளை எல்லோரிடத்திலுமிருந்து அவளை அந்நியப்படுத்தி, தனிமையாக்கி விடக்கூடும் என்பதை நினைக்க, அண்ணன் முத்தையாவிற்குக் கவலையாக இருந்தது. 

    வடக்குக் காணி கேட்டு, தங்கை இல்லையென்று கூறித் திருப்பிவிட்ட நாளிலிருந்து அவளுடன் எந்தவிதமான தொடர்புகளும் பேச்சு வார்த்தைகளும் வைத்துக்கொள்ளக் கூடாது… என முத்தையாவிற்கு அவரது மனைவி தீர்க்கமான கட்டளை ஒன்றைப் போட்டிருந்தாள். தப்பித்தவறி வழிதெருவுகளில் அவளோடு கதைக்க முற்பட்டால், என்னைப் பிணமாகத்தான் பார்க்க வேண்டிவரும்… என்று என்று அழுதபடி கூறியதை, முத்தையா அடிக்கடி நினைத்துப் பார்த்தபடி… தங்கையுடனான தொடர்பாடலை மெல்ல விலக்கிக்கொண்டு வாழ ஆரம்பித்தார்.

    அண்ணனுக்குத் தங்கை காணி கொடுக்க மறுத்த  விடயம் ஊர்முழுதும் புகைய ஆரம்பித்திருந்தது. முத்தையாவின் மனைவியே இத்தகவலை ஊர்முழுக்கக் கசி விட்டிருந்தாள்.

    விடயமறிந்த ஊரவர் சிலர், முத்தையாவை விசாரித்தார்கள். அவர் நடந்தவற்றைக் கூறினார். விசாரித்தவர்கள் அவருக்காகப் பரிதாபப் பட்டார்கள்.

    காலப்போக்கில் முத்தையாவின் மூத்தமகன் தனது சாதாரணதரப் படிப்பை முடித்துவிட்டு, நண்பன் ஒருவனுடன் வன்னிக்குச் சென்று, காடழித்து தோட்டம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதோடு, பின்பு அம்மண்ணிலே நிரந்தர விவசாயி  ஆகியும் விட்டான்.

    வன்னியில் தன்மகன் தனியே இருந்து விவசாயம் செய்வதை விரும்பாத முத்தையா, தான் இருந்த வீடுவளவு, தோட்டக்காணி யாவற்றையும் விற்றுவிட்டு, அந்தப் பணத்தில் தனது இரண்டாவது மகளுக்கு நாட்டின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்த அரசாங்க எழுதுவினைஞர் ஒருவருக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தபின், தன்குடும்பத்தோடு வன்னிக்குப் பயணப்பட ஆயத்தமானார். 

    முத்தையா ஊரைவிட்டு வெளிக்கிடுவதை அறிந்த ஊர்விவசாயிகள் பெரிதும் கவலைப்பட்டார்கள். அதிலும், அவரது தம்பி தவராசா அவர்முன் அழுதே விட்டார். தங்கை கண்மணியோ இதுகுறித்து எதுவித கவலையும் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

    வன்னிக்குச் சென்ற முத்தையா மகனோடு சேர்ந்து தோட்டத்தில் நன்கு பாடுபட்டார். நாளடைவில், அவரது குடும்பம் ஒரு மேன்மைநிலையை அடைந்து கொண்டது. வலிகாமத்தில் கண்மணியின் கணவர் திடீரென மாரடைப்பினால் இறந்துவிட்ட செய்தியை அறிந்தபோதும், அக்குடும்பத்தில் உள்ள எவரும் குறிப்பாக, முத்தையா அது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மைத்துனரின் மரணச்செய்தியை அவரது தம்பியே தந்திமூலம் அறிவித்திருந்தார்.

    காலநகர்வில் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களோடு, பாதைத்தடைகளும் நிரந்தரமாகின. குடும்பங்களுக்குள்ளும் தகவல் பரிமாற்றங்கள் நின்றுபோயின. முத்தையாவின் இரு ஆண்பிள்ளைகளும் தங்களுக்கான வாழ்க்கையை வன்னியிலே அமைத்துக் கொண்டபின், முத்தையாவும் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். 

    தன்கணவன் இறந்த நாளிலிருந்து தனிமைப்பட்டுப்போன கண்மணி, மன அழுத்தத்திற்கு உள்ளானாள். தனிமைநிலை அவளைப் பெரிதும் மன அந்தரிப்புக்கு ஆளாக்கியிருந்தது.  பணத்தைக் கொண்டு எதையும் செய்யலாம்… என்றிருந்தவளுக்கு, ஊராரின் உதாசினம் அவள் மனநிலையைப் பாதிக்கத் தொடங்கியது. 

    அவளது நிலையை அறிந்துகொண்ட தம்பி தவராசா, அவளது வடக்குக் காணியையும் அவள் இருந்த கல்வீட்டு வளவினையும் தனது பிள்ளைகளின் பெயருக்கு மாற்றிக்கொண்டு, அவளைத் தன்னுடன் அழைத்து வந்து விட்டார்.

    ஆரம்பத்தில் எல்லாமே சுமுகமாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தன. தவராசாவின் மனைவியோ கண்மணியின் குணமறிந்து பெரிதும் விலகியே நடந்தாள். ஆனால், கண்மணியோ அவரின் பிள்ளைகளை அடக்கவும் அதிகாரம் செய்யவும் முற்பட்டபோது, குடும்பத்துக்குள் எழத் தொடங்கின குழப்பங்கள். 

    ” இஞ்சை பார் கிழவி… கதைக்கிறதை மரியாதையாக் கதை. ஏதோ தாறதைத் திண்டுபோட்டு, பேசாமல் ஒரு மூலேக்கை கிட. எங்கட விசயத்தில அநாவசியமாத் தலையிடாதை…”

    தவராசாவின் மூத்தமகன் கண்மணியை எச்சரிக்கும் தொனியில்கூற, அக்கணமே அந்தவீடு இரண்டுபடத் தொடங்கியது. 

    கண்மணியின் குணமறிந்த ஊரவர்கள் இது குறித்து தங்களுக்குள்ளே கருத்துக்களைப் பரிமாறிவிட்டுப் பேசாமல் இருந்தார்கள். 

    ” கிழவி வாழ்விழந்தும், அவவின்ர வயதுபோயும்  இன்னமும் செருக்கும் தடிப்பும் குறையேல்லைப் பாருங்கோ…”

    கூடப்பிறந்த சகோதரி என்ற முறையில், தன்னோடு இருக்கும்படி கூட்டிவந்தது எவ்வளவு தப்பான காரியம் என்பது தவராசாவுக்கு நாள்கள் நகரநகரப் புரிந்து கொண்டது. வயதுவந்த பிள்ளைகளின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது, கண்மணி தனது இளமைக்கால வீம்புத்தனத்தை பிரயோகிக்க முற்படும்போதிலெல்லாம், வீட்டிற்குள் குழப்பமும் கூச்சல்களும் அதிகரிக்கத் தொடங்கின. 

    ‘ மூதேசி… சனியன். செத்துத்துலையுதுமில்லை…’ என மனதுக்குள் திட்டியபடியே… ஒருநாள் தவராசாவும் செத்துப் போய்விட்டார்.

    இப்போது எவர் தயவிலும் தங்கிநிற்க முடியாத நிலை கண்மணிக்கு ஏற்பட்டு விட்டது. கண்மணியின் வடக்குக் காணி வீட்டிலும் அவள் நிரந்தரமாக வாழ்ந்த கல்வீட்டிலும் தவராசாவின் பெண்பிள்ளைகள் உரிமையுடன் குடியிருந்தார்கள். அவர்கள் இருவரினதும் கணவர்மார் கண்மணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. வெளிநாட்டில் வதியும் மகள்கூட  தாயின் தொடர்புகளைத் துண்டித்த நிலையில், அவளுக்காக நியாயம் கதைக்க ஊரில் எவரும் முன்வரவில்லை.

    பணச்செருக்கின் உச்சத்தில் ஊர்மக்களையும் உதிரத்து உறவுகளையும் உதாசினம் செய்ததின் பலன்… கண்மணி இப்போது நடுத்தெருவுக்கு விரட்டப்பட்டு, நாதியற்றவளாகி நின்றாள். 

    ” ஐயோ… என்ர அண்ணை  நீ எங்கை இருக்கிறாய்…? உன்ர பிள்ளையள் எங்கயணை? என்னை ஒருக்கா கூட்டிக்கொண்டு போ  ராசா…”

    மீண்டும்… கண்மணியின் குரல் ஒலிக்கிறது. கூடவே, இன்னொரு குரல்… அவளது வார்த்தைகளுக்குப் பதிலாக!

    ” உந்த அறுதலி பேந்து இஞ்சாலை வந்திட்டாளே… துரத்துங்கோடி அங்காலை. அந்தநேரம் கஷ்டப்பட்டதுகளை முட்டுப்பட்டதுகளை எவ்வளவு கேவலமாப் பார்த்தவள். பரிகசித்தவள் தெரியுமே!

சிங்கப்பூர்க்காரன்ர பெண்சாதி… எண்ட செருக்கும் தடிப்பும் இப்ப எங்க போட்டுது…?”

    கூறிவிட்டு, நக்கல் சிரிப்புடன் தன்வழியில் நடக்கிறாள் ஒரு முதிர்கிழவி.

    சுமார் இரண்டுமாதங்கள்வரை அந்த ஊரில் கண்மணியில் புலம்பல்கள் ஒழுங்கைகளில் கேட்கவில்லை. ஊர்சனங்களும் அவளை மறந்த நிலையில்… ஒருநாள் ஒரு தகவலை அறிந்தார்கள்.

    “கண்மணி இப்ப முதியோர் இல்லத்தில் இருக்கிறாவாம்…”

( படிகள் : ஆகஸ்ட் – செப்ரெம்பர், 2016)

“செருக்கு” மீது ஒரு மறுமொழி

  1. மிக்க நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.