



ஜெர்மனில் வசிக்கும் எனது தம்பியின் வீட்டுக்கு பல வருடங்களுக்கு முன்பதாக சென்றிருந்த போது, அவன் தனது ஊரான வுட்ஸ்பேர்க் அருகே ஓடும் மெயின் நதிக்கரைக்கு கூட்டிச் சென்றான். அப்பொழுது ஓடும் நதியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பயணக் கப்பல் பலரோடு , நிறைகுடம் ஏந்திய கர்ப்பிணிப் பெண்ணாகத் தண்ணீரில் அசைந்து கொண்டிருந்தது. நதியில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேலாக ஓடக்கூடாது என்ற கட்டுப்பாடுள்ளது.
‘அது ஒரு உல்லாசப் பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல், வுட்ஸ்பேர்க்கிலும் ஒரு நாள் தரித்துச்செல்லும் ‘ என்றான் எனது தம்பி. அந்த காட்சி என் மனதிலிருந்தபோதிலும், கப்பல் பயணம் வயதானவர்கள் பயணிப்பது என்ற எண்ணமும் எனக்கு அக்காலத்தில் இருந்தது. பிற்காலத்தில் நைல் நதியில் சென்றபோது தெற்கிலிருந்து வடக்காக சகரா பாலைவனத்தை ஊடறுத்தபடி செல்லும் நைலில் அந்த நதிப்பயணம் இனிதாக இருந்தது. தரையில் ரயிலோ அல்லது வேறு வாகனத்தில் போவதிலும் பார்க்க ஆற்றின் மீது போவது தண்மையானது மட்டுமல்ல, சீசரும் , கிளியோபட்ராவும் சென்ற நதியின் மீது செல்கிறோம் என்ற கிளுகிளுப்பும் கூடவந்தது. நைல் நதியின் நகர்வில் எகிப்த்தின் வரலாறும் பயணித்திருந்தது என்ற செய்தி என்னை மேலும் அதிகளவு எகிப்தின் வரலாற்றைப் படிக்கத் தூண்டியதுடன் ஒரு குட்டி ஆய்வாளராக எகிப்திய வரலாற்றையும் படித்து பயணக்கதையை “நைல் நதிக் கரையோரம்” என்ற பயண நூலை எழுத வைத்தது.
இம்முறை இந்த ஐரோப்பிய நதியில் பயணித்தபோது, ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டை ஆரம்ப இடமாக தேர்ந்தெடுத்துடன்,அங்கு நான்கு நாட்கள் முன்பாக சென்று முடிந்தவரையும் புடாபெஸ்டையும் பார்க்கத் தீர்மானித்திருந்தேன். ஜேர்மனியிலுள்ள அல்ப்ஸ் மலைகளின் வடக்காயுள்ள கருப்பு வனத்தில் ( Black Forest) தொடங்கிப் பல தேசங்களைக் கடந்து டான்யூப் நதி, சேபியா- ருமேனியா எனச் சென்று உக்ரேன் அருகே கருங்கடலில் சங்கமிக்கிறது. இதுவே ஐரோப்பாவில் வால்கா நதிக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய நதியாகும். பல நாடுகளை நனைத்து, இணைத்து, உணவளித்து வருவதால் அக்கால கடவுளின் பெயரில் டான்யுப் எனப் பெயரிடப்பட்டது. எப்படி இந்தியர்களுக்குக் கங்கையோ அதுபோல் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு இந்த டான்யுப் நதியாகும். ஹங்கேரியின் தற்போதைய தலைநகராகிய புடாபெஸ்ட நகரத்தை புடா, பெஸ்ட் என இரண்டாகப் பிரித்தபடி அமைதியாக ஓடுகிறது.
மெல்போனிலிருந்து இருபது மணிநேரத்துக்கு மேலான விமானப் பயணத்தில் புடாபெஸ்ட் விமானத்தளத்தில் இறங்கியதும் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீக்கிங் அல்லது ஷங்காய் நகர விமானத்தளம்போல் சீனர்களால் நிறைந்திருந்தது. பல நூறு சீனர்கள் எங்கள் முன்பாக நின்றார்கள். ஐரோப்பவா இல்லை ஆசியாவா என எனக்குள் வியப்பை உருவாக்கியது.
சமீபத்தில் சீன அதிபர் டெங் சியா பிங், ஹங்கேரிக்கு விஜயம் செய்திருந்தார். மற்றைய ஐரோப்பிய நாடுகள், சீன வெறுப்பை உமிழ்ந்தபடி இருக்கும்போது, ஹங்கேரி, சீன -ருஸ்சிய ஆதரவு நிலையை எடுத்துள்ளது. அதைவிட ஐரோப்பாவில் ஒரு சில சீன நட்பு நாடுகளில் முக்கியமானது ஹங்கேரி. சமீபத்தில் பெல்கிரேட்டுக்கும் புடாபெஸ்டுக்கும் இடையே அதிவேக ரயில் பாதையை மிகக் குறுகிய காலத்தில் சீன நிறுவனங்கள் அமைத்தன.
விமான நிலையத்திலிருந்து புடாபெஸ்ட் சென்றபோது மதியமானது. உடல் களைப்பில் படுத்தபோது இரவில் மட்டுமே எழுந்திருக்க முடிந்தது. காலை மாலையாகியது மட்டுமல்ல, மெல்போனில் குளிர்காலத்தில் சென்ற நாங்கள் அங்கு ஐரோப்பாவின் கோடைக்காலத்தில் நின்றோம்.
காலையில் நாம் ஐரோப்பாவுக்குரிய ரெலிபோன் காட்டை வேண்டுவதற்குக் கடை ஒன்றிற்குச் சென்றபோது, அந்த இடத்தில் இடத்தில் இஸ்ரேலிலிருந்து வந்த ஒரு யூத இளைஞனைச் சந்தித்தேன். அவன் எலக்ரோனிக் பொறியியலாளர். காதலிக்காகக் காத்திருக்கிறான். ஏராளமான இஸ்ரேலியர்கள் ஹங்கேரிக்கு விடுமுறைக்கு வருவதாகச் சொன்னான்.
மதியத்தில் நகரத்தின் பகுதிகளுக்குச் சென்றபோது ஒரு இடத்தில் பலர் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அவர்களது பிரார்த்தனை பார்ப்பதற்கு ஜேகோவாவின் சாட்சிகளது கூட்டுப்பிரார்த்தனைபோல் இருந்தது. அங்கு நின்று அவதானித்தபோது அங்குள்ளவர்கள் எல்லோரும் யூதர்கள். அந்த இடம் இரண்டாம் போரின் காலத்தில் யூதர்கள் வாழ்ந்த இடம் என்றார்கள். அருகில் அவர்களது கோவில் (Synaogogue) இருந்ததைக் காணமுடிந்தது. உள்ளே செல்ல எட்டிப்பார்த்தபோது கட்டணம் என்றார்கள் . நாங்கள் வெற்றிகரமாக பின்வாங்கினோம்.
எட்டு லட்சம் யூதர்கள் இரண்டாம் உலக யுத்தத்தின் முன் ஹங்கேரியில் வாழ்ந்திருக்கிறார்கள். அக்கால ஹங்கேரி, நாஜி ஜேர்மனியோடு சேர்ந்திருந்ததால் ஐந்து லட்சம் யூதர்கள் இங்கு கொலை செய்யப்பட்டார்கள் என அறிந்தேன். பலர் வீடுகளை விட்டு பொது இடங்களில் உணவின்றி வாழ்வதற்குத் தள்ளப்பட்டு பட்டினியால் இறந்தார்கள். மிகுதியானவர்கள் கொலை முகாம்களுக்குக் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஹங்கேரியில் யூதர்களை கொன்றொழித்த காரணத்தால் தற்பொழுது ஹங்கேரி இஸ்ரேலைப் பல வழிகளில் நேசிப்பதோடு கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதோடு, பாலஸ்தீன் உருவாகுவதை இஸ்ரேலுடன் சேர்ந்து எதிர்கிறார்கள்.
டானியுப் நதியில், மாலையில் இருமணி நேரம் படகில் செல்லும் பயணத்தில் அழகான நகரமாகத் தெரிந்தது. நதியை அண்டி ஒரு பக்கத்தில் தெரிந்த பாராளுமன்றம் உலகத்திலே சிறந்த கட்டிட வடிவமைப்பாக பலராலும் கணிக்கப்படுகிறது. இரவில் அந்தக் கட்டிடம் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்களைக் கொள்ளை கொண்டது. ஆற்றின் மறுகரையில் நவீன ஹோட்டல்கள் அமைக்கப்பட்ட புதிய நகரமாக தெரிந்தது. நதியின் குறுக்கே அழகிய பாலங்கள் நடந்தோ, வாகனத்திலோ போவதற்கு வசதியாக அமைந்துள்ளது.
ஹங்கேரியின் வரலாறு இந்திய வரலாறுபோல் சிக்கலானது. மற்றைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து மாறுபட்டது. ஐரோப்யியர், சிலாவிக்கோ அல்லது ஜேர்மன் இனமோ என அடையாளப்படுத்துவார்கள். ஆனால், பல வித்தியாசமான இன மக்கள் ஆதிகாலத்தில் இருந்தபோதும் தற்போதையவர்கள் (Magyars)சைபீரியாவின் பகுதியிலிருந்து குதிரையில் வந்தவர்கள். இவர்களது மொழியும், இவர்களைத் தவிர மற்றவர்கள் பேசுவதில்லை.
ஹங்கேரி கத்தோலிக்க நாடு. ஆரம்பத்திலிருந்தே பாப்பரசரின் ஆசீர்வாதத்தோடு ஐரோப்பாவில் 1000 ஆண்டில் உருவாகிய நாடு. பாப்பரசர் நியமித்த பிஷப்புகளாலே அரசர்கள் முடி சூடப்பட்டு, மன்னர்களால் நிர்வகிக்கப்பட்ட நாடு. இது மேற்கு ஐரோப்பாவில் ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகள் உருவாகுவதற்கு முன்பாக நடந்த விடயம்.
அரசனாக ஸரீவன்1 என்பவன் முடிசூடி, முதலாவது அரசு உருவாகிறது. அப்போதைய ஹங்கேரி, இப்போதைய சிலோவாக்கியா, உக்ரேனின் பகுதி, குரேசியா, சேபியாவின் பெரும்பகுதி மற்றும் ருமேனியானியாவை அடங்கிய பெரிய நிலபரப்பைக் கொண்ட அரசாகும்.
12ஆம் நூற்றாண்டில் கிழக்கிலிருந்து மங்கோலியர்கள் படை எடுப்பு, அதன் பின் துருக்கிய (ஓட்டமான்)அரசு சில நூற்றாண்டுகளும் பின் இறுதியில் அவுஸ்திரியர்களால், அவுஸ்திரியா -ஹங்கேரி என இணைத்து ஆண்டார்கள். முதலாம் உலக யுத்தத்தில் அவுஸ்திரிய- ஹங்கேரி தோற்க, யுத்தத்தின் பின்பாக ஹங்கேரியின் பல பகுதிகள் உடைகின்றன. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிபட்டதுபோல் பல நாடுகள் உருவாகியது. – இது ஹங்கேரியின் சோக வரலாறு.
பழைய நிலத்தை மீண்டும் பெற இவர்கள் ஹிட்லரையும் நாஜி ஜேர்மனியை நம்பி அவர்களுடன் சேர்ந்தார்கள். அதன் விளைவே ஐந்து லட்சம் யூதர்கள், பல்லாயிரக்கணக்கான ரோமானிய நாடோடி மக்கள் கொல்லப்பட்டு , ஹங்கேரி ஜேர்மனியர்களின் கொலைகளின் களமாகியது. புடாபெஸ்ட்,பிற்காலத்தில் நாசிகளுக்கெதிராக மாறினாலும் அது தோல்வியில் முடிய, இறுதியில் சோவியத் படைகளால் விடுதலையாகிய ஹங்கேரியை கமியூனிஸ்டுகள் ஆட்சி செய்தார்கள். கமியூனிஸ்டுகளுக்கு எதிராக 1956இல் ஹங்கேரி சோவியத் யூனியனை எதிர்க்க, அந்தப் போராட்டம் மிகவும் கடுமையாக சோவியத் ஒன்றியத்தினால் அடக்கப்பட்டது. இறுதியில் சோவியத்தின் சரிவே ஹங்கேரிக்குச் சுதந்திரம் அளித்தது.
புடாபெஸ்ட் நகரத்தின் உள்ளே நாங்கள் சென்றபோது இந்த வரலாற்றுச் சிக்கல்கள் மெதுவாக அவிழ்ந்தன. நாங்கள் சென்ற சுதந்திர சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதிகளான டொனால்ட் ரீகன் , ஜோர்ச் புஷ் போன்றவர்களது சிலையை பார்க்க கூடியதாக இருந்தது. இதற்குக் காரணம் கம்யூனிசத்திலிருந்த தங்களை விடுவித்ததால் ஏற்பட்ட நன்றிக் கடன். அதேபோல் சோவியத் ரஸ்யாவின் வெற்றிச் சின்னமும் அருகே அங்குள்ளது.
எங்கள் வழிகாட்டி ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி ‘இது கம்யூனிச காலத்தின் முன்பாக பங்குச் சந்தைக்கான கட்டிடம், பின்பு கம்யூனிஸ்ட்டுகள் பிரசார நிலையமாக இருந்தது. தற்போது வெறும் கட்டிடமாக இருக்கிறது’ என்றார்.
ஹங்கேரியின் புராதன தலைநகரம் (Esztergom) புடாபெஸ்டின் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் டான்யூம் நதிக்கரையில் உள்ளது. அங்குள்ள மலைக்குன்றில் மேரி மாதாவின் அழகிய தேவாலயம் உள்ளது. இதுவே ஹங்கேரியின் பெரிய தேவாலயம் . ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டாலும் மங்கோலியர்களால் அழிக்கப்பட்டது. துருக்கியர்கள் இதை தங்களது பள்ளிவாசலாக்கிப் பாவித்தார்கள். மீண்டும் 1800 களில் இத்தாலியக் கட்டிடக் கலைஞர்களால் புதுப்பிக்கப்பட்டது. விலகி வந்தபோது மிகவும் பிரமாண்டமான ஒரு கட்டிடம். இது பல மணிநேரம் செலவழித்துப் பார்க்க வேண்டியது என ஆதங்கமாக இருந்தது
ஹங்கேரியை நாங்கள் நினைப்பதற்கு பல விடயங்கள் இருந்தாலும் சிலவற்றைத் தருகிறேன்: பலகாலம் நாங்கள் எழுதிய குமிழ் முனைப் பேனை ஹங்கேரி தந்தது. அதேபோல் குயுப் (Cube Block) பொருளும் அவர்களுடையது . மிளகாய் தூளுக்கான பப்பரிக்கா என்ற சொல்லும் அவர்களுடையதே .

உங்களுக்கு தெரியாதது ஆனால், எனக்குப் பிடித்தது ஹங்கேரியில் பாவிக்கப்பட்ட வேட்டைநாய் (Hungarian vizsla) அழகானது மட்டுமல்ல, மிகவும் ஒழுக்கமானது : நம்பிக்கைக்குரிய நாயாகும்.
பின்னூட்டமொன்றை இடுக