நதியில் நகரும் பயணம்-1

அந்த புடாபெஸ்ட் ஹொட்டேல் அறையில் நடு நிசியில் படுக்கையிலிருந்து  எழுந்தபோது பசியில் வயிறு குடைந்தது. அவசரமாக எழுந்து குளித்துவிட்டு  நாங்கள் வெளியே வந்தபோது மூடிய உணவுக் கடைகள் எங்களை வரவேற்றது. கடந்த ஆறு மாதங்களாக மெல்போனில்,  இஸ்ரேல் பாலஸ்தீன் போரினால்  நான் புறக்கணித்திருந்த மெக்டொனாலாட் மட்டுமே இரவில் எங்களுக்கு அமுதசுரபியாகியது. நடு இரவு கடந்துவிட்டது  என்பதை  தொலைபேசி  காட்டியபோதும்  அந்த நகர்ப்பகுதி மின்சார வெளிச்சத்தில் அமோகமாக  குளித்ததால் இரவு பகலாகத் தெரிந்தது. எங்கள் மேலோட்டமான பார்வைக்கு  ஹங்கேரியின் தலைநகர்  புடாபெஸ்ட் பாதுகாப்பான நகராகவும் தெரிந்தது.

சியாமளா என்னை விட்டு விலகி கடைகளின் கண்ணாடியூடாக காட்சிக்கு வைத்த பொருட்களைப் பார்த்துக்கொண்டு சென்றார். எந்த நேரத்திலும் சொப்பிங்குக்கு நான்  ரெடி என்பதான ஆயுத்தம் ,  பல தடவைகள் என் பொறுமையைச் சோதிக்கும். நான் தயங்கியபடியே சியாமளாவைப்  பின்தொடர, சிறிது இருளான பாதை வேலைகள் நடந்த இடத்தில் மூன்று அழகிய இளம் பெண்கள்  ‘ஹலோ’ சொல்லியபடி கண்களால் சிரித்தார்கள். அதில் ஒருத்தி சிவப்பு உதட்டு சாயம்,  குறைந்த உடை,  தெரியும் அங்கங்களுடன் அருகில் வந்து அன்னியோன்னியமாக சிரித்தபடி கையில் சினேகமாக இடித்தாள்.  இந்த வயதிலும் பெண்கள் என்னை ‘ஹலோ’ சொல்வதும் இடிப்பதும் உள்ளூர மகிழ்வைக் கொடுத்தாலும்,  பக்கத்து நாடு உக்ரைன்  என்ற நினைவு வந்தது.   ரஸ்ய-உக்ரேனிய போரில் அகதியாகிய பெண்கள் அவர்கள் எனக் கருதினேன்.   அவர்களுக்கு உக்ரேனிய  மொழியுடன் உடல் மொழியைத் தவிர  எதுவும் தெரியாது  என நினைத்தபோது இதயத்தில் முள்ளாக ஆழமாக இறங்கியது. ஆண்கள் நடத்தும் போரில் பெண்களதும் குழந்தைகளதும் வாழ்வு சிதைவது, காலம் காலமாக நடக்கிறது.

தூரத்தில் அந்த பெண் நெருங்கியதைப் பார்த்த சியாமளா என்னருகே வந்து  ‘என்னவாம்? ‘ என்றபோது என்னால் சிரிக்க மட்டுமே முடிந்தது.

மீண்டும் நாங்கள்  எங்கள் ஹோட்டலுக்கு நடு இரவில் நுழைந்தபோது வாசலில் ஒரு அழகிய இளம் பெண் அவசரமாக எங்களைப் பார்த்தபடி வெளியேறினாள். இலங்கையின் யுத்தத்தின் விளைவுகளை நேரில் பார்த்த எனக்கு அந்த  ஹோட்டலில் என்ன நடந்தது என்பது புரிய அதிக நேரம் எடுக்கவில்லை.

நாங்கள் சென்ற பயணத்தில் படகு,  ஐரோப்பாவில் ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டில் ,டானியூப் (Danube) நதியில் தொடங்கி,  ஆஸ்திரியாவில் இருந்து ஓடும்  மெயின் என்ற சிறிய ஆறு வழியாக செல்லும். ஆனால், மெயின் ஆறு பல இடங்களில் படகுக்கேற்ப வாய்க்காலாகும் . இறுதியில்  வடகடலில் விழும் ரையின்(Rhine) நதியின் கழிமுகமான  ஒல்லாந்தின் முக்கிய நகரமான அம்ஸ்ரடாமில் வந்து சேரும். இந்தப் பயணத்தின் காலம்  15 நாட்களாகும். 

இரயிலிலோ  அல்லது பஸ்சிலோ பிரயாணம் செய்வதை விடக் கப்பலில் பிரயாணம் செய்யும்போது மற்றைய மனிதர்களோடு பேசி உறவாடுவது இலகு . எல்லோரும் அன்னியர்கள் என்பதால் ஒருவரிடம் மற்றவர்கள் எதையும் ஒழித்து மறைத்துப் பேசத் தேவையில்லை. உரையாடும்போது வானத்தில் சிறகடித்துப் பறப்பது போன்ற இலகுவாக  உணரமுடியும் . மேலும் என் போன்று எழுதுபவர்களுக்கு இலகுவாக மற்றவர்கள் நடத்தைகளை அவதானிக்க முடியும்.

முன்பு ஏழு நாட்கள் அலாஸ்காவிற்குக் கப்பலில் பிரயாணம் செய்தபோது தெரிந்த முக்கியமான விடயம்,  பலர் பல பிரச்சினைகளிலிருந்து தங்களைத் திசை திருப்ப அல்லது மறக்கவே பயணம்  செய்தார்கள் என்பதே நான் கண்ட விடயம். பலரால் நடக்க முடியாது: சிலர் தள்ளுவண்டிகளில் வந்தார்கள், பலர் கைத்தடிகளுடனும் வந்தார்கள் . அவர்களுக்கு குடும்ப உறவினர்கள் அல்லது நட்பான உதவியாளர்கள் என்பவர்களுடன்  வந்தார்கள். வந்தவர்கள் எல்லோரும் செல்வந்தர்கள் அல்ல,  சாதாரணமானவர்கள் தங்களது சேமிப்பில் செலவழித்து வந்தவர்கள்.

கவலைகளை மற்றும்  வலிகளை மறக்கச் செய்யும்  பயணம் ஒருவித போதை போன்றது.   இப்படியான பயணங்கள் எங்கள் சமூகத்தின் மத்தியில் அதிகம் நடப்பதில்லை. அப்படி நடந்தால் அது கோயிலுக்கான வேண்டுதலாகவோ அல்லது நேர்த்திக் கடனாகவோ இருக்கும். மதவாச்சியில் நான்  வேலை செய்த காலத்தில் பல சிங்கள கத்தோலிக்கர்கள் குடும்பங்களாக வந்து மடுக்கோவிலை அண்மிய பகுதிகளில்   கூடாரமடித்துச் சமைத்து உணவுண்டு,  பைலா பாட்டுப் பாடி மகிழ்வாகச்  செல்வதைக் கண்டுள்ளேன்.

நாங்கள்  சென்ற இந்த நதிப் படகை  நடத்துபவர்கள் பெரிய நிறுவனங்கள் சார்ந்தவர்கள்  என்ற போதிலும் அவர்களது ஊழியர்கள் எல்லா நாடுகளிலும் இருந்து வந்தவர்கள். பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பா, இந்தோனேசியா,  பிலிப்பைன்ஸ் நாட்டையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் .

இவர்கள் மிகவும் தெளிவாக தங்கள் வேலையைச் செய்வதுடன், ஒவ்வொரு பிரயாணியையும் மிகவும் மரியாதையாக நடத்துவார்கள். முக்கியமாக நான் வியந்து பார்த்தது,  வயதானவர்களை எப்படி அவதானமாக நடத்துகிறார்கள் என்பதாகும்.

தொடரும்

“நதியில் நகரும் பயணம்-1” மீது ஒரு மறுமொழி

  1. Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision Knowledge Talent etc! God is with u all always my friends! In God We Trust! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Poatri!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.