தேவதைகளின் பாதணிகள்.

 

‘தேவதைகளின் பாதணிகள் படித்தேன். உன் சோகம் என்னைத் தொற்றிக்கொண்டது.’ 

இது நான் சஞ்சயன் செல்வமாணிக்கத்திற்கு எழுதிய குறிப்பு.  

எழுத்தாளராக எழுதும்போது வாசிப்பவர் மனதில்  கோபம் ,  மகிழ்வு,  ஏன் வெறுப்பு என ஏதாவது ஒரு விதத்தில் அவர்களது மனநிலை பாதிக்கவேண்டும் . அப்படி இல்லாதபோது எழுதுவது வீண் விரயம் என நினைப்பவன் நான்.  சஞ்சயன், தனது பெண் குழந்தைகளை வளர்த்த விதம், பின்பு மணவிலக்கு ஏற்பட்டதால் அவர்களாகிப் பிரிந்தது,   ஒரு பெண்ணின் தந்தையான என் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.

பல விதங்களில் எந்த குறையும் ஏற்படாது   வளர்ந்தவன் நான்  என்பதால் இந்த தேவதைகளின் பாதணிகளை வாசித்தபோது எனது மனதில் சோகமும், அத்துடன் சஞ்சயன் மனைவி மீது கோபம்,   சஞ்சயனின் மேல் பொறாமை என மூன்று வகையான உணர்வுகள்  ஏற்பட்டது.

ஏன் கோபம்  ? 

மணவிலக்கில் இரண்டு பக்கமும் நியாயம்  இருக்கும் என்பது புரிந்தாலும்,  தந்தை குழந்தைகளை இழந்த உணர்வு,   தந்தையான எனக்கு கோவிட்டாகத்  தொற்றியது.

இன்னமும் எனது மனைவி,  குழந்தைகளுடன் நீங்கள் நேரம் செலவழிக்கவில்லை என்ற குறைபடுவது உண்டு: எனது குழந்தைகள் வளரும்போது இந்தியாவில் அரசியல் வேலை,  அவுஸ்திரேலியாவில் மீண்டும் மிருக வைத்தியம் படிப்பதற்கு எனக் காலங்களைச் செலவழித்தபோது குழந்தைகள் எறிந்த கொட்டையில் வளர்ந்த மாமரம்போல் வளர்ந்து  பெரியவர்களாகி விட்டார்கள். 

எனது நிலைமையுடன் ஒப்பிடும்போது சஞ்சயன்  தனது பிள்ளைகளோடு  அனுபவித்தது எனக்குப் பொறாமையானது.

ஒருவிதத்தில் சுயகழிவிரக்க வரலாறு என்ற போதிலும்  குழந்தைகளோடு எவ்வளவு இன்பம் அனுபவிக்க முடியும் என்பதுடன், ஒரு தந்தையாக எப்படி சந்தோசமாக வாழ முடியும் என்பதற்கு இந்த புத்தக வாசிப்பு உதவியாகும்.

இந்த புத்தகத்தை இளம் தந்தையருக்கு சிபாரிசு செய்வேன்.  

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.