
“அலெக்ஸ்பரந்தாமன்
தம்பிராசா இப்போது மிகவும் வயதாளியாக இருந்தார். கிட்டத்தட்ட எண்பது வயதை அவர் தாண்டியிருந்தார். அவரைப்போலவே அவரது மனைவியும் உடல் ரீதியாக மிகவும் தளர்ந்திருந்தாள். இருப்பினும், அவர்கள் இருவரும் வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஏ.சி. பொருத்தப்பட்ட வீட்டுக்குள் மின்னியல் சாதனங்கள் ஒவ்வொரு தேவைகளுக்குமாக நிறைந்திருந்தன. அவர்கள் இருவரது தேவைகளைக் கவனிக்கும் பொருட்டு, கணவனை இழந்த ஒரு விதவைப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தாள்.
தம்பிராசாவின் பிள்ளைகள் ஐவரும் லண்டன், கனடா, அவுஸ்திரேலியா என தங்கள் குடும்பத்தோடு நிரந்தரமாகி, அந்தந்த நாட்டின் கலாசாரங்களுக்கேற்ப மாறிவிட்டிருந்தனர். மாதாமாதம் பிள்ளைகள் அனுப்பும் பணத்தோடு, அவர்கள் இருவரது ஓய்வூதியப் பணமும் சேர்ந்து எதுவித குறைகளுமற்ற வாழ்வாய் பொழுதுகள் நகர்ந்து கொண்டிருந்தன.
இத்தனை வசதி வாய்ப்புகளுக்குக் காரணம்…?
தம்பிராசாவுக்கு இப்பொழுதுதான் அறிவு விரிவு கொள்ள ஆரம்பிக்கிறது.
” அண்ணை… என்னை மன்னிச்சிடண்ணை…”
நித்திரைத் தூக்கத்தில்கூட அவரது வாய், தன் அண்ணனை நினைத்துப் புலம்ப ஆரம்பிக்கும்.
எத்தனை வசதிகள் இருந்தும் என்ன பயன்…? பெற்ற பிள்ளைகளில் அல்லது இரத்த உறவுமுறைகளில் ஒரு நபராவது பக்கத்தில் இருந்து கவனிக்குமாப்போல் வருமா?
தம்பிராசாவின் மனதுக்குள் கிடந்து குமைச்சல் எடுக்கின்றன காலம் தப்பிய சிந்தனைகள்.
தன்மனைவியின் முன், பயந்த சுபாவத்தோடு… அவள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் கட்டுப்பட்டு, தனது சொந்தங்களின் உறவுமுறைகளை ஒதுக்கியதன் விளைவு… இன்று தானும் தன்மனைவியும் தனித்து நிற்பதை உணர்ந்து கொள்கிறார் அவர்.
தன் அண்ணனின் பிள்ளைகள் இப்போது எங்கு இருக்கிறார்கள்… தனது சகோதர உறவுகளின் குடும்ப விருத்தி எந்தநிலையில் உள்ளது… என்பது குறித்துவரின் மனம் அவதிப்படத் தொடங்கியது.
தான் வகித்த அரச உத்தியோகமும், தன் மனைவி புரிந்த ஆசிரியைத் தொழிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விவசாயக் கிராமத்தில் தோட்டத்தொழில் புரியும் அண்ணனையும், மற்றைய சகோதரங்களையும் அந்நியப்படுத்தி வைத்து விட்டதை நினைத்து, தனக்குள் அழத்தொடங்கினார் தம்பிராசா.
கொழும்பு நகரத்தினுள் மேட்டிமையான வாழ்வின் பிரதிபலிப்புக்களோடு இருந்த கணத்தில், கிராமத்தில் வசித்து வந்த உடன் பிறப்புக்களோடு சொந்தம் கொண்டாடுவது… கொழும்பு உத்தியோகத்திற்கான கெளரவக் குறைவு… என எல்லோரையும் ஒதுக்கித் தள்ளியதன் விளைவு… இன்று தாங்கள் இருவருமே தனிமைப்பட்டு ஒதுங்கிப்போனதற்குக் காரணம் என்பதைத் தம்பிராசாவால் புரிந்துகொள்ள முடிந்தது.
எத்தனை வசதிகள் இருந்தென்ன.. ? எவ்வளவு பணம் குவிந்தென்ன. ?
வாழ்க்கையில் பட்டுக்களைத்த அனுபவங்களில் இருந்து, தெளிவு பெறத் தொடங்குகிறது அவரது அறிவு.
“அண்ணை… என்னை மன்னிச்சிடண்ணை.. “
விழிகள் இரண்டும் நீரை உகுக்க, மீண்டும் புலம்புகிறது வாய்.
அறுபதுகளின் ஆரம்ப காலம்…
யாழ். குடாநாட்டிலுள்ள வலிகாமம் பகுதியில் ஒரு விவசாயக் கிராமத்தின் மத்தியில், தம்பிராசாவின் மூத்த அண்ணன் முருகுப்பிள்ளை நல்லதோர் பெயர் பெற்ற விவசாயி. தம்பிராசா சிறுவயதில் பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது, தோட்டத்தில் வெங்காயப் பயிர்களுக்கு கிருமி நாசனி தெளித்துவிட்டு, வீட்டிற்கு வந்த முருகுப்பிள்ளையின் தந்தை, சில நிடங்களின் பின் மயக்கமடைந்து… பின் மரணித்துப் போனார். அவரது திடீர் மரணம் அவரின் மனைவியை வெகுவாகப் பாதித்ததோடு, அவளும் அந்த ஏக்கத்தோடு இருமாதங்கள் இருந்துவிட்டு இறந்துபோனாள்.
தனித்து நின்று அழுது கொண்டிருந்த தம்பிராசாவுக்கு, மூத்த அண்ணன் முருகுப்பிள்ளையின் அன்பும் ஆறுதலும் தாய் தந்தையை இழந்த கவலையை மறக்க வைத்ததோடு, பத்தாம் வகுப்புக்கு மேற்பட்ட படிப்பையும் தொடரச் செய்தது.
காலநகர்வில் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்த தம்பிராசாவுக்கு, கொழும்பில் அரச உத்தியோகத்துக்கான அனுமதி கிடைத்ததும், முருகுப்பிள்ளை மனம் குளிர்ந்து போனார்.
‘ இனி அவன் நிமிர்ந்திடுவான்…’ என்ற எண்ணப் பூரிப்பு அவருள் முகிழ்ந்து கொண்டிருந்தது நிதம் நிதமாய்.
இரண்டுமாதத்திற்கு ஒருதடவை விடுப்பு எடுத்துக்கொண்டு அண்ணனிடம் வருவார் தம்பிராசா. தம்பியைக் கண்டதும், அண்ணனுக்கு சந்தோஷம் முகத்தில் பிரதிபலிக்கும். அவர் தம்பியை விசேடமாகக் கவனித்துக் கொள்வார்.
அவரது பிள்ளைகளும் “சின்னையா…” என்றழைத்தபடி தம்பிராசாவுடன் ஒட்டிக் கொள்வார்கள்.
தம்பிராசா ஊரிலை நிற்கும் நாள்களில் தம்பிமீதான கரிசனையில் முருகுப்பிள்ளை காட்டும் தீவிரம் குறித்து அவருக்கும் அவரது மனைவிக்கும்இடையை கருத்து வேற்றுமை எழுவதுண்டு. அத்துடன், ஏனைய சகோதரங்களுக்கும் ஒருவித பகை உணர்வையும் வளரச் செய்து கொண்டிருந்தது.
” ஊரோடை இருக்கிற எங்களை அண்ணர் உப்பிடிக் கவனிக்கிறாரில்லை. உதென்ன தடல்புடலான விருந்துபசாரங்கள்.. ”
தம்பிராசாவின் மூத்த சகோதரி, முருகுப்பிள்ளையின் மனைவிக்குக் கூறிக் கொள்கிறாள்.
அண்ணன் முருகுப்பிள்ளை இதொன்றையும் அறியாதவரல்ல!
” அவன் என்ர தம்பி. அதுவும் கடைசித்தம்பி. அவனுக்கு நான்தான் எல்லாம். நீங்கள் குடும்பம் குட்டியள் எண்டு போன பிற்பாடு, நான் அவனுக்குச் செய்யிறதொண்டையும் நீங்கள் கதைக்கத் தேவையில்லை. வாயைப் பொத்திக்கொண்டு எல்லாரும் உங்கடபாட்டில பேசாமல் இருங்கோ…”
அண்ணன் கூறுவதைக் கேட்டு, அவருடைய மனைவி உள்பட, சகோதரங்கள் அனைவரும் முகம் சுழித்துக் கொள்வார்கள். அவர் இல்லாத சமயங்களில் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கதைப்பார்கள்.
தம்பிராசா அரச உத்தியோகத்தில் இணைந்து, சுமார் நான்கு வருடங்களின்பின், கொழும்பிலிருந்து வந்த தூரத்து உறவுமுறையான ஒருவரிடமிருந்து, அண்ணன் முருகுப்பிள்ளை ஒரு தகவலை அறிய முடிந்தது. ஆயினும், அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. குறிப்பாக, தனது சகோதரங்களுடன் பிரஸ்தாபிக்கவில்லை. மலிந்தால் சந்தைக்கு வரும்… வரட்டும்! என அவர் தன் மனதுக்குள்ளே வைத்துக்கொண்டு, தானும் தன் தோட்ட வேலைகளுமாய் அமைதியாக இருந்து விட்டார்.
வழக்கம்போல மாத விடுப்பு எடுத்துக்கொண்டு, தம்பிராசா தனது அண்ணனிடம் வந்தார். அண்ணனும் தம்பியிடம் எதுவித மன, முகமாறுதல்களையும் காட்டிக் கொள்ளாது இயல்பாகவே நடந்து கொண்டார்.
தம்பி வந்த இரண்டாம் நாள் பிற்பகல் மூன்று மணியளவில் தோட்டத்தில் உள்ள மிளகாய்ப் பாத்திகளைச் சாறுவதற்காக மண்வெட்டியை எடுத்துக் கொண்டு, புறப்பட ஆயத்தமானார் முருகுப்பிள்ளை. அவரது பிள்ளைகளும் மனைவியும் அவரின் சகோதரி வீட்டிற்குப் போய்விட்டார்கள்.
முற்றத்து மாமரத்து நிழலின்கீழ் கதிரையில் அமர்ந்திருந்தவாறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த தம்பிராசாவின் முகத்தில், பல சிந்தனைகளின் வெளிப்பாடுகள்.
அண்ணன் இதைக் கவனித்து விட்டார்.
” என்னடா தம்பி… உடம்பேதும் சுகயீனம…?” வினாவுகிறார் அண்ணன்.
“இல்லையண்ணை…”
பதில் கூறும் தம்பியின் முகத்தில் பல சங்கட உணர்வுகள்.
அண்ணன் முருகுப்பிள்ளை இதைக் கவனிக்கத் தவறவில்லை.
தம்பி தன்னிடம் ஏதோ கூற விரும்புவதையும், அந்த விருப்பத்தைத் தயக்கமானது தடுத்து நிறுத்த முற்படுவதையும் அவதானித்துக்கொண்ட அண்ணன், தம்பியைஅன்போடு தன்னருகில் அழைத்தார்.
” உன்ர மனசில ஏதோ பிரச்சினை இருக்கிறமாதிரித் தெரியுது. பிரச்சினையளை மனசுக்குள்ள வைச்சுக் குமைஞ்சு கொண்டிருந்தால், வெளியில இருக்கிறவையளுக்கு அதொண்டும் தெரியாது. வாய் விட்டுக் கதைக்க வேணும்.அப்பதான் பிரச்சினை என்னெண்டு தெரிய வரும். அதற்குப் பரிகாரமும் தேடலாம்…”
அண்ணன் கூறியதைக் கேட்டதும், தம்பியின் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. தன்னுள் இருக்கும் விடயத்தை அண்ணனிடம் கூறிவிடுகிறார் தம்பிராசா. தம்பி கூறியதை அமைதியாகக் கேட்ட அண்ணன், அவரிடம் மேலும் சில விடயங்களைத் தெரிந்து கொண்டு, மறுநாளே தம்பியை வேலைக்குச் செல்லுமாறு பணித்துக் கொண்டார்.
தம்பியிடமிருந்து உள்வாங்கிய தகவலோடு, தம்பி குறிப்பிட்ட ஊருக்குச்சென்று, சகலதையும் விசாரித்தறிந்து கொண்டு வந்தார் முருகுப்பிள்ளை. அவரது மனம் சமநிலையின்றித் தவித்தது. இக்காரியத்துக்கு உடன்படுவமா வேண்டாமா என்ற மனப் போராட்டமும் அவருக்குள் எழுந்து கொண்டது.
நீண்ட நேரத்துக்குப்பின்பு… ஒரு முடிவுக்கு வந்தார் முருகுப்பிள்ளை.
அந்த முடிவு…
தம்பிராசா ஊருக்கு வந்து நான்கு நாள்களாகி விட்டன. முருகுப்பிள்ளை தன் சகோதரங்களை தன்வீட்டிற்கு அழைத்தார். தங்களது தம்பி கொழும்பிலுள்ள ஒரு தமிழ்ப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை விரும்பியிருப்பதாகவும், பெண்வீட்டார் இதற்குச் சம்மதிக்கவில்லையெனவும், தான் இதற்குச் சம்மதிப்பதாகவும் கூறியபோது… அங்கு பெரும் பிரளயமே வெடித்தது.
” இதென்ன கோதாரியில போனதடி… இந்தச் சின்ன வயசில உவருக்கு உப்புடியும் ஒரு ஆசை வந்திட்டுதாமோ? இப்ப என்ன அவசரமெண்டு கேக்கிறன். அக்கான்ர பிள்ளையளெண்டு அதுகளுக்கு ஏதேனும் ஐச்சைப் பத்தை உழைச்சுக் குடுக்க வேணுமெண்டு நினைப்பமில்லை. அதுக்குள்ள கலியாணம் கட்ட ஆசை வந்திட்டுதோ…?”
தம்பிராசாவின் பெரியக்கா தன்கரங்களால் தலையில் அடித்துக் குளறாத ஒரு குறையாக கத்த ஆரம்பித்தாள். அவளது கத்தல் அண்ணன் முருகுப்பிள்ளைக்கு எரிச்சலைக் கொடுத்தது.
என்னதான் ஒருதாயின் வயிற்றில் பிறந்தவர்களாக இருந்தாலும், குடும்ப பந்தமென்று பிரிந்தபின், எப்படிப்பட்ட சுயநல உணர்வுகள் அவர்களுக்குள் தோற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன… என்பதை முருகுப்பிள்ளையால் உணர்ந்துகொள்ள முடிகிறது. போதாக்குறைக்கு அவளது மனைவியும் கேட்டுக் கொள்கிறாள்.
” இஞ்சரப்பா… இப்ப என்ன அவசரமெண்டு நீங்கள் இதில தலைப்போடுறியள். தோட்ட வெய்யிலுக்கை நிண்டு, மண்கொத்திப் பாடுபட்டு, பயிர் நட்டு வித்துத்தான் உங்கட தம்பியைப் படிப்பிச்சு உத்தியோகமாக்கி விட்டிருக்கிறியள். படிப்புச்செலவுக்கெண்டு செலவழிச்ச காசில அரைவாசியைத் தன்னும் உழைச்சுத் தந்திட்டு, பிறகு கலியாணம் கட்டட்டுமன்…”
அருக்களிப்புடன் தன் மனைவியை நோக்கிய முருகுப்பிள்ளை, அங்கு நின்ற எல்லோருக்கும் பொதுவாக தன்கருத்தை முன்வைத்தார்.
” நான் சொல்லுறதை எல்லாரும் கவனமாக் கேளுங்கோ. தம்பியும் எங்களுக்கு ஒரு சகோதரன். அதுவும் கடைசிப்பிள்ளை. நாங்கள்தான் வெய்யிலத்துக்குள்ளை நிண்டு கஷ்டப்பட வேண்டியதாப் போச்சுது. ஆனால், தம்பி படிச்சு ஒரு கவுண்மேந்து உத்தியோகத்தில இருக்கிறது எங்களுக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விசயம் எண்டதை நினையுங்கோ. வாழப்போறது அவன். அவன்ர வாழ்க்கையை ஒருத்தரும் குழப்ப வேண்டாம். அவன் விரும்பின பெண்ணையே அவனுக்குக் கலியாணம் முடிச்சு வைப்பம்.”
” உந்தக் கலியாணத்துக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. உதுக்கு நாங்கள் ஒருத்தரும் வரப்போறதில்லை. நீங்களே நடாத்தி முடியுங்கோ.”
கூறிவிட்டு, எழுந்து போய்விட்டாள் மூத்த சகோதரி.
கூடப்பிறந்த சகோதரங்கள் எவரும் உடன்படாத நிலையில், பெண்வீட்டாரும் மணமகளைப் புறந்தள்ளிவிட, தம்பியின் திருமணத்தைத் தனக்குத் தெரிந்தவர்களின் உதவியுடன் ‘பிள்ளையார் பூசை’யோடு நடத்தி முடித்தி விட்டார் அண்ணன் முருகுப்பிள்ளை.
திருமணத்தின்பின் சகோதரங்களுக்கிடையேயான உறவுநிலை மெல்ல விரிசல் அடையத்தொடங்கியது. கொழும்பில் வாழத்தொடங்கிய தம்பியும் தன் குடும்ப வளர்ச்சி காரணமாகவும், திருமணத்தின்போது அண்ணனைத் தவிர, மற்றைய சகோதரங்கள் ஒத்து உடன்படாத மனஅந்தரிப்பாலும், ஊருக்கு வருவதை நாளடைவில் தவிர்த்துக்கொண்டு வந்தார். பின்பு அதுவும் நிரந்தரமாகவே நின்றுபோய் விட்டது.
அண்ணன் இப்போது தனித்துப் போனவராய் இருந்தார். தம்பியின் அலட்சியப் போக்கு… அவரை மிகவும் உளத்தாக்கத்திற்கு உட்படுத்தியிருந்த நிலையில், ஒருநாள் காலைவேளை படுக்கையில் இருந்து எழும்ப முடியாதவராய் போனார்.
ஊர்ப்பரிகாரி வந்து அவரது கைநாடித்துடிப்பைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ” இது பாரிசவாதம்… கொஞ்சம் சிரமம்…” என்று கூறியதும், முருகுப்பிள்ளை உட்பட அவரது மனைவி பிள்ளைகள் யாவரும் அழத்தொடங்கி விட்டார்கள்.
திருமணவயதில் நிற்கும் தனது இரண்டு பெண்பிள்ளைகளின் நிலைமை குறித்து அவர் தன் மனைவியிடம் குறிக் கவலைப்பட ஆரம்பித்தார்.
ஊரிலே தன்னருகில் வாழும் தன் இரு தம்பிமாரிடம் உதவி கேட்பதை விடுத்து, கொழும்பில் சற்று வசதியோடு வாழும் கடைசித்தம்பியிடம் உதவி கேட்கத் தொடங்கினார். தம்பி தம்பிராசாவிடமிருந்து மெளனமே பதிலாக வந்துகொண்டிருப்பதைக் கண்டதும், மிகவும் மனமுடைந்து போனார் அண்ணன்.
” அவன் பொண்டிலுக்குப் பயந்தவன். மனிசிக்காரி கீறின கோட்டைத் தாண்டாத மனிசன். ஆற்றைக் கடக்கும் வரைக்கும்தான் அண்ணன் தம்பி உறவு. அவனா இனி உங்களுக்கு உதவி செய்யப் போறான்? அந்தநேரம் மச்சாள் உந்தக்கலியாணத்தை ஏதோ ஒரு காரணத்தோடை தடுக்கேக்கை யோசிச்சிருக்க வேணும். அவனுக்கு ஊரோடை ஒரு பொம்புளையைப் பார்த்துக் கட்டி வைச்சிருந்தால், இப்ப உங்களுக்கு எப்பன் ஆறுதலாக இருக்கும். இனி அழுது என்னத்தைக் காணப்போறியள்? பேசாமல் இருங்கோ…”
முருகுப்பிள்ளை எதுவும் கூறவில்லை. தான் அவசரப்பட்டு விட்டதாகவே தெரிந்தது அவருக்கு. மனதை அமைதிப்படுத்தி வாழ ஆரம்பித்தார்.
காலப்போக்கில் முருகுப் பிள்ளையின் பிள்ளைகளும் தங்களுக்கான வாழ்க்கையைத் தெரிந்தெடுத்து, அவரவர் தம்வழியில் இல்லறம் நடாத்திக் கொண்டிருந்தார்கள். முருகுப்பிள்ளையோடு கூடப்பிறந்த ஆண்சகோதரர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். முத்த சகோதரி விதவையாகி தன் பேரன்பேத்திகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
தம்பிராசாவின் பிள்ளைகளும் தங்கள் பெற்றோர் வழித்தோன்றல்களின் முகங்கள் தெரியாத நிலையில், கொழும்புவாசிகளாகி அங்கேயே மும்மொழிகளையும் கற்றுத்தேறியதோடு, உரியவயதில் கடல்கடந்து அந்நிய தேசங்களில் தங்கள் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டு, அங்கேயை நிரந்தரமாகியும் விட்டார்கள்.
அண்ணர் முருகுப்பிள்ளை இப்போதும் படுத்த படுக்கையில்…
அவருக்குப் பக்கத்தில் அவரது பிள்ளைகள்… பேரப்பிள்ளைகள்… எப்போதும் உதவி ஒத்தாசையாக செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். பாரிசவாதம்வந்து படுக்கையில் விழுந்த நாள்தொடக்கம்இன்றுவரையிலும், தன்னை வந்து நோக்காத தன் தம்பியின் முகத்தை தன்மனதில் இருந்து அகற்றிவிட்டார் முருகுப்பிள்ளை.
” நான் இருக்கும் வரைக்கும்தான் எல்லாம். நான் இல்லாத காலம் என்ரை புள்ளையள் தம்பிராசாவையோ அவன்ர புள்ளையளையோ நாடாதுகள்…” என்று கூறிக்கொண்டிருந்த முருகுப்பிள்ளை, ஒருநாள் மாலைக்கருக்கலில் படுக்கையிலேயே மெளனித்துப் போனார்.
” ஐயா… இந்தாங்கோ கஞ்சி.. “
நிமிர்ந்து பார்க்கிறார் தம்பிராசா.
எதிரே பணிப்பெண். அவளது கரங்களில் சில்வர் கோப்பையில் சிறிய தேக்கரண்டியுடன் சவ்வரிசிக்கஞ்சி.
நடுங்கும் கரங்களால் அவளிடமிருந்து சில்வரை வாங்கும்போது கை தவறிவிடுகிறது தம்பிராசாவிற்கு.
பணிப்பெண் ஏதோ முணுமுணுத்தபடி… நிலத்தில் விழுந்து கிடக்கும் சில்வர்கோப்பையை எடுத்துக்கொண்டு செல்கிறாள்.
அவளின் அந்த முணுமுணுப்பு…தம்பிராசாவிற்கு மனதைச் சுள்ளெனச் சினம் தாக்கியது. ஆயினும், அடக்கிக் கொண்டார்.
அந்த முணுமுணுப்புக் குறித்து விசாரிக்கப்போய், அவள் வேலையைவிட்டு விலகிக்கொண்டால்…?
பக்கத்து அறையில் தம்பிராசாவின் மனைவி பலமாக இருமும் ஒலி கேட்கிறது. அவருக்கு தன்பிள்ளைகள் அருகில் இல்லாத நிலைமை புரிகிறது. அதற்கும் மேலாக அண்ணன் முருகுப்பிள்ளையின் முகமும், அவரது பிள்ளைகளின் சிறுவயது உருவமும் மனத்திரையில் நிழலாடுகின்றது.
” அண்ணை… என்னை மன்னிச்சிடண்ணை. பட்டணத்து வாழ்க்கையும் படிச்சதெண்ட திமிரும் உன்னை விட்டு என்னைப் பிரிச்சுப் போட்டுது. அந்தநேரம் என்ர பெண்டாட்டியின்ர சொல்லைக்கேட்டு நடக்காமல் விட்டிருந்தால், எனக்கு இண்டைக்கு இந்தநிலை வந்திருக்காது. என்னதான் வேலைக்காரி ஒழுங்காகக் கவனிச்சாலும், உரித்துடைய உறவுகள் பிள்ளைகளைப்போல வருமா…?” என அழுதழுது கூறியபடி… தற்செயலாக அறையின் வாசலை நிமிர்ந்து பார்த்த தம்பிராசா, திடுக்கிட்டுப் போனார்.
என்னதான் வேலைக்காரி ஒழுங்காகக் கவனிச்சாலும், உரித்துடைய உறவுகள் பிள்ளைகளைப்போல வருமா…? என்ற அவரது வார்த்தைகளின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொண்ட பணிப்பெண், ஒருநாளையவிடுப்பில் ஊருக்குப் போய்விட்டு வருவதாகக் கூறிச் சென்றவள், அதன்பின் திரும்பி வரவே இல்லை.
இப்போதெல்லாம் பக்கத்து அறையில் இருமல் சத்தம் பலமாகக் கேட்கிறது.
தம்பிராசாவின் வாயும் அடிக்கடி புலம்பிக்கொண்டிருக்கிறது.
“அண்ணை… என்னை மன்னிச்சிடண்ணை…”
●
(ஞாயிறு தினக்குரல் : 10 – 01 – 2016)
பின்னூட்டமொன்றை இடுக