அப்புஹாமியும்      அப்புக்குட்டியும்

“””””””””””””””””””””””””””””””””””””””””

    ஒரு வாரத்துக்கும் மேலாகி விட்டது.

    ப்புக்குட்டியை அந்தக் காபெற் வீதியில் காணமுடியவில்லை அப்புஹாமிக்கு. அவருக்குக் கடமைநேரம் இரவு – பகலென ஒழுங்கமைக்கப்பட்டதினால், அவரால் அப்புக்குட்டியைக் காண முடியாமல் போய் விட்டது. இன்று அப்புஹாமிக்குப் பகல் கடமை. காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு மணிவரைக்கும் அந்த முகாம் வாசலில் வாயிற்காப்பாளராக கடமை புரிய வேண்டும். 

    ‘ன்றைய பொழுதில் எப்படியும் அப்புக்குட்டி மாடுகளை மேய்த்துக்கொண்டு வருவார். மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பும்போது,  அவரோடு மனம் விட்டுக் கதைக்கலாம்… துயரப்பட்டு நிற்கும் அவரை ஆறுதல் படுத்தலாம்… அவரின் பார்வையிலும் எண்ணங்களிலும் ஆழமாய் அருவருப்பாய் ஊன்றி நிற்கும், படைச்சிப்பாய்கள் எல்லோரும் ஒரேமாதிரியானவர்கள் எனும் கருத்தை நீக்க வேண்டும். இதன்மூலம் அவரின் மனதை வெல்ல முடியாவிட்டாலும், ஒரு இன ஐக்கியத்தை, ஒரு புரிந்துணர்வை  ஏற்படுத்த முயற்சிக்கலாம்…’ என்ற பலவிதமான சிந்தனைகளுடன்,  முகாம் வாசலில் குறுக்கும் நெடுக்குமாய் மெல்ல நடந்து கொண்டிருந்தார் அப்புஹாமி.

    ப்புஹாமி நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு சிங்களக் கிராமத்தில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் இளைஞனாக இருந்த காலத்தில் தொடர்ந்தும் பாடசாலையில் கல்வி கற்க முடியாத சூழ்நிலையில், இராணுவத்தில் இணைந்து கொண்டவர். இன்று பல வருடங்கள் கழிந்துவிட்ட பின்பும், அவர் ஒரு சாதாரண சிப்பாயாகவே கடமையாற்றிக் கொண்டிருந்தார். 

    இனவாத சிந்தனைகளுக்கு அப்பால், மனித நேயத்தோடு தனது கடமையின் பெரும்பாலான காலங்களை நாட்டின் தென்பகுதியிலேயே கழித்தவர். அவர் ஒரு பொதுவுடைமைவாதி.மார்க்சிஸ சிந்தனைகளோடு ஒன்றி நடப்பவர். தனது கொள்கைக்கும் சிந்தனைக்கும், தான் மேற்கொள்ளும் படைத்தொழில், கொஞ்சம்கூடப் பொருத்தப்பாடானதல்ல… என்பதையறிந்தும், தனது படிப்புக்கேற்ற தொழில் இதுதான் எனத் தெரிந்து கொண்டவர். 

    சில சமயங்களில் மேலதிகாரிகளின் அராஜகச் செயற்பாடுகளை, அத்துமீறல்களை நிறைவேற்ற அல்லது தாமதப்படுத்துவதன் மூலம் தண்டனைக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் வேளைகளில், படைத்துறையை விட்டு விலகும் எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பிக்கும். மறுகணம்

னது குடும்பம் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகிவிடும் நிலையை உணர்ந்து, தன் மன உணர்வுகளை இறுக்கமாக்கி தனக்குரிய கடமைகளைச் செய்ய ஆரம்பிப்பார். 

    நாட்டுக்குள்ளே ஒரு விடுதலை அமைப்போடு அவர் நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது. வயது வித்தியாசமின்றி, தென்பகுதியில் கடமையாற்றிய பல இராணுவத்தினரை தலைமைப்பீடம் வடபகுதிக்குச் செல்லும்படி பணிக்கப்பட்டபோது, கடமையின் நிமித்தம் பல இடங்களில் அவர் போராளிகளுடன் போர் புரிய வேண்டியிருந்தது. சில இடங்களில் அவர்களின் துல்லியமான தாக்குதல்களில் இருந்தும் உயிர் தப்பவும் முடிந்திருக்கிறது.

    நாட்டில் போர்ச்சூழல் தளர்வடைந்து சுமுகமான நிலை தோன்ற ஆரம்பித்ததும், ஷெல்லடியில் சிதைவடைந்து தோற்றம் பெற்று நின்ற வீடுகள்… ஆங்காங்கே முறிந்து அழிந்துபோன மரங்களின் எச்சங்கள்… இவைதவிர, தெருக்களில் துயர் அப்பிய முகத்துடன் நடமாடும் மக்களில் பலரை அங்கவீனர்களாகக் காணும்போதெல்லாம் மனசாட்சி அவரை உறுத்திக்கொள்ள ஆரம்பிக்கும். 

    ‘பாவம்… இந்தச் சனங்கள்…’

    பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் தனக்குள் பரிதாபப்பட்டுக் கொள்வார். 

    காபெற் வீதியில் கண்ணிவெடியகற்றும் வாகனம் ஒன்று செல்வதை அவர் கண்டபோது, மனம் சற்று நெருடவே செய்தது. இறுதிக்கட்டப் போரின்போது, இருதரப்புகளுக்குமிடையே சமர் உச்சமாக நடைபெற்ற வேளைகளில், பதுங்குகுழி வாசலில் இருந்தபடி..  எத்தனை ஷெல்களை அவர் ஏவியிருப்பார். 

    அப்போதைய நிலையில் , இரக்கம்… மனிதம்… மனசாட்சி… என்பனவெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாததொன்றாகவே இருந்தன. படைத்தரப்பிலுள்ள மேலதிகாரிகள் பலரின் அவரவர் கெளரவப் பிரச்சினையின் நிமித்தம், தங்களில் பலர்  பகடைக்காய்களாக ஆக்கப்பட்டிருப்பதையும், இடம்பெயர்ந்து அவலத்துக்குள்ளான அகதிமக்கள் பலிக்கடா ஆக்கப்படுவதையும் உணர்ந்து, அவர் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.  

    ப்படி அன்று சிப்பாய்கள் கண்மூடித்தனமாக ஏவிய ஷெல் ஒன்று விழுந்து வெடித்ததில்தான், அப்புக்குட்டியின் செவிப்புலன் பாதிப்படைந்திருந்தது.

    ப்புக்குட்டி… அப்புஹாமியின் மனத்திரையில் வந்து நின்றார். 

    மெலிந்த உடல்வாகுடன் கருமையான தோற்றம்… உள்குழியாய்போன கண்கள்… காவி படிந்த பற்கள்… காற்றுக்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக அலையும் நரைத்துப்போன காதோரக் கேசங்கள்… வெளிறிப்போன பியாமாச் சாரம் மற்றும் அரைக்கை ரீசேட்டுடன் துயர் அப்பிய முகப் பிரதிபலிப்பு.

    அப்புக்குட்டியின் தோற்றம் அப்புஹாமிக்கு தன் கிராமத்தில் வாழும் மூத்த சகோதரனை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. 

    ஒருநாள் தன்மாடுகளை வயல்வெளிகளில் மேய்த்துவிட்டு, மாலைக்கருக்கலில் அந்தக் காபெற் வீதியூடாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அப்புக்குட்டி. வீதியில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். அதற்குள் தனது மாடுகள் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, தன்கரத்திலுள்ள மேய்ப்புக் கோலினால் வீதியின் ஓரமாக மாடுகளை வழி நடத்திக்கொண்டு வந்தார்.

    எதிரே வேகமாக வந்து கொண்டிருந்தது வாகனம். அந்த வாகன இயந்திர இரைசலில், பயந்த சுபாவமுள்ள மாடொன்று வெருண்டடித்து, பக்கத்தில் உள்ள இராணுவமுகாமின் வாயிற்கடவையின் கீழாக உள்ளே சென்றுவிட்டது.

    அப்புக்குட்டி இதை எதிர்பார்க்கவில்லை. சிறிது அச்சத்துக்கு உள்பட்டவராய் உடனே அந்த இடத்தில் நின்றுவிட்டார். ஏனைய மாடுகள் முகாம் வேலியருகோரம் பசுமையாய் படர்ந்திருந்த புல்களை மேயத் தொடங்கின.

   ப்போது அந்த இராணுவமுகாமின் வாயிற் கடவையிலுள்ள காப்பரணில் கடமையில் நின்றவர்  அப்புஹாமி. மாடு உள்ளே நுழைந்ததைக் கண்டதும், உடனே அவர் தன் இருக்கையைவிட்டு எழுந்து வெளியே வந்தார். உள்ளே சென்ற மாடு திரும்பத் தெருவுக்கு வரும்வண்ணம் சிறியதொரு தடியினால் விரட்டிக் கலைத்துவிட்டு, அப்புக்குட்டியின் அருகே வந்தார். 

    “ணக்கம் ஐயா.. “

   ப்புக்குட்டி எதுவும் கூறவில்லை. தமிழ்மொழி பேசும் அந்த இராணுவச்சிப்பாயை ஏற இறக்கப் பார்த்தார்.

    ஏ. கே. 47 துப்பாக்கியுடன் பச்சைநிறச் சீருடையில் நிற்கும் அவரது தோற்றம்… தரப்பாள் வீடுகளுக்குமேல் வந்து விழுந்து வெடித்துச் சிதறிய ஐஞ்சிஞ்சிச் ஷெல்கள் மற்றும் ஆட்டிலறிக் குண்டுகளை அக்கணம் நினைவு படுத்தியது அவருக்கு. 

    அப்புக்குட்டியின் முகத்தில் தெரிந்த விகார உணர்வினை அப்புஹாமி கவனிக்கத் தவறவில்லை. அவருக்குக் குழப்பமாக இருந்தது. திரும்பி முகாம் வாசலைப் பார்த்தார். உள்ளே கட்டளை அதிகாரிகள் எவரும் கண்களில் தென்படவில்லை. இரு சிப்பாய்கள் மட்டும் சிரித்த வண்ணம் ஏதோ உரையாடியபடி… காப்பரணைச் சுற்றி வளர்ந்து நின்ற செவ்வந்தி மற்றும் சீனியாசி பூச்செடிகளுக்கு பூவாளியினால் நீர் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

    ப்புஹாமி அப்புக்குட்டியிடம் நெருங்கி வந்தார்.

    ப்புக்குட்டி வாய்க்குள் புகையிலைக் காம்பினை வைத்துக் குதப்பியபடி… அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

    “ணக்கம் ஐயா…” அப்புஹாமி திரும்பவும் கூறுகிறார். 

    அப்புக்குட்டி தன் வாய்க்குள் சுரந்திருந்த எச்சிலை, மறு ஓரமாகக் காறித் துப்பிவிட்டு, பதிலுக்குத்  தலையை ஆட்டிக் கொண்டார்.  அவரின் அச்செய்கை அப்புஹாமிக்கு மனதை சற்று நெருடவே செய்தது. 

    ப்புஹாமி கோபப்படவில்லை. 

    ‘துவொரு வஞ்சிக்கப்பட்ட மனப்பாதிப்பின் வேக்காள வெளிப்படுத்தல்…’ என அவர் தனக்குள் நினைத்தபடி… அமைதி கொண்டார். 

    ” யா…! மாடுகள் எங்க மேய்ந்து வாறது…?” அப்புஹாமி கேட்கிறார். 

    ” ன்ன…?”

    ” மாடுகள் எங்க மேய்ந்து வாறது…?”

    சில விநாடிகளின்பின், அப்புக்குட்டி கூறுகிறார்.

    ” யல்பக்கம்…”

    ” யாவுக்கு நம்மளோட கதைக்கப் பயமா? பயம் வேணாம்…”

    ப்புஹாமி சிரித்தபடி கூற, அவரை அனல் கக்கும் பார்வையுடன் நிமிர்ந்து நோக்கினார் அப்புக்குட்டி.

    ப்புக்குட்டியின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்துக் கொண்டார் அப்புஹாமி.

    “தைக்கிறதெல்லாம் நமக்குக் கேட்கும். ஆனா… சில வார்த்தைகளை விளங்கிக்கொள்ள முடியாது. 

    ” ன் ஐயா… ?”  திருப்பிக் கேட்டார் அப்புஹாமி.

    ” ஷெல் வெடிச்ச அதிர்வில செவிப்பறை பழுதாப் போச்சுது…” கூறிவிட்டு அப்புக்குட்டி அவரைப் பார்க்க விரும்பாதவராய், தன்மாடுகளையும் வீதியில் சென்றுகொண்டிருக்கும் மனிதர்களையும் வாகனங்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். 

    ப்புஹாமிக்கு உடலெங்கும் விரவிக்கொண்டது அவமான உணர்வு. களமுனையில் ஏவப்பட்ட ஷெல்கள் அனைத்தும் அவர் கண்முன்னே ஞாபகத்துக்கு வந்தன. அதனால், அப்புக்குட்டியின் முகத்தை நேரெதிரே பார்க்க வெட்கப்பட்டார். 

    “யாவுக்குக்  குடும்பம் இருக்கா…?” அவரிடம் அடுத்த ஒரு கேள்வியைக் கேட்டார் அப்புஹாமி. 

    ” ல்லை.! கிபிர் அடிச்ச குண்டில  செத்துப்போச்சுதுகள்…” 

    திர்ச்சியாக இருந்தது அப்புஹாமிக்கு. 

   டிக்குமேல் அடி விழுந்ததனால் அப்புக்குட்டியின் முகத்தில் தெரியும் மன உணர்வின் இறுக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது அப்புஹாமியால். 

    “ங்கட குடும்பம் செத்ததுக்கும் நம்மளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லே…” கூறிவிட்டு, தன் பார்வையை வேறு எங்கோ திருப்பினார் அப்புஹாமி. 

    வியப்போடு அவரை நிமிர்ந்து பார்த்தார் அப்புக்குட்டி.

    “ண்டை முடிந்ததுதானே! எல்லோருக்கும் சந்தோஷம்தானே! ஆனா, நம்மளுக்கு சந்தோஷம் இல்லே. நம்மளுக்கும் குடும்பம் இருக்கு. மனிசி இருக்கு. புள்ளைக இருக்கு. நாம ஒரு சாதாரண சிப்பாய்…” என்று கூறிய அப்புஹாமி,  தன் பனித்த கண்களுடன் அப்புக்குட்டியை ஏறெடுத்துப் பார்த்து, மெதுவாக சற்று முறுவலித்துக் கொண்டார்.

    ப்புஹாமியின் பேச்சையும் செயற்பாட்டையும் கண்டுகொண்ட  அப்புக்குட்டிக்கு  மனம் மெல்ல சங்கடப்படத் தொடங்கியது. 

    ‘ஆமிக்காரர் எண்டாப்போல எல்லாரும் கெட்டவங்களே. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சுமாதிரி… அங்கினேக்கை ரண்டொண்டு செய்யிற ஊத்தை வேலையால எல்லாருக்கும் கெட்டபேர் வருகுது. இந்தச் சிப்பாய் ஒருவேளை நல்லவனாகவும், நல்ல குடும்பத்தில் பிறந்தவனாகவும் இருக்கக் கூடும்…’ என்ற எண்ணங்கள் பலவாய் அவருள் அலைமோதியபோதும், அப்புஹாமி மீதான ஒழுக்கம் குறித்து சற்று சந்தேகப்படவே செய்தார்.

    “ங்க கஷ்டம் துன்பம் எங்களுக்குத் தெரியும். ஆனா… நாம ஒன்னும் செய்ய முடியாது…”

    ப்புஹாமியின் கருத்தை ஆமோதித்துக் கொண்ட அப்புக்குட்டி, அவரைப் பார்த்துக் கூறினார்.

    “நாங்கள் போரை விரும்பியவர்கள் அல்ல. அது எம்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. போராட வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுப் போனோம். ஆனால், நாம் துவக்குத் தூக்கிய போராளிகள் அல்ல.”

    ” து நம்மளைப்போல ஒருசிலருக்கு மட்டுமே புரியும்.”

    “மக்கு அரசியல் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பும் இந்த மாடுகளும்தான்.” 

    “துவும் நம்மளுக்குத் தெரியும்…”

    ” நாங்கள் இழந்து நிற்பவை அளவுக்கதிகமானவை. இதை ஈடு செய்ய உங்களால் முடியாத காரியம்…”

    ” துகூட நம்மளுக்குத் தெரியும்.”

    ப்புக்குட்டி தன்பேச்சை நிறுத்திவிட்டு, அப்புஹாமியை ஆழமாகப் பார்த்தார். அப்புஹாமியின் முகத்தில் சோகம் மிதமிஞ்சி, அனுதாபப் புன்னகை வெளிப்படுவதை அவரால் அவதானிக்க முடிந்தது. 

    ” யா! இந்த நாட்டில் இருக்கிற அரசியல்வாதிகளுக்கு இனவாத சிந்தனைகள் இருக்கிறதுதானே! அதால பிரச்சினைகள் தீரப்போறதில்லே.  நாம சுடுகிறது… நீங்க சாகிறது. நீங்க சுடுகிறது… நாம சாகிறதுதானே! இதுதான் நடந்தது. இனியும் நடக்கப்போறது!”

   ண்டை இனியும் நடக்கப்போறதாக ஒரு படைச் சிப்பாயின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டதும்,  அப்புக்குட்டி ஒருகணம் திகைத்துப் போனார். 

    ” ன்னது.. ? சண்டை இனியும் நடக்கப் போகுதா?” 

    வரது பதற்றத்தைக் கவனித்த அப்புஹாமி, மெல்லச் சிரித்துவிட்டுக் கூறினார். 

    “யம் வேணாம்… நம்மட பக்கமும் சரி, உங்கட பக்கமும் சரி… ஒற்றுமையைச் சீர் குலைக்கிறதான பேச்சுகள்தானே பேசுறது. இந்தப் பேச்சுகள் ஒரு குழப்ப நிலையை உண்டுபண்ணும்தானே. இரண்டு பகுதிக்கும் ஒரு அடிபாட்டைக் கொண்டு வரும்தானே…”

    ” ப்படி இன்னொரு அடிபாடு வந்தால், இனியும் எங்களால தாங்கேலாது . அந்தளவுக்கு நாங்கள் ரொம்பக் களைச்சுப்போனம். ஆரெண்டாலும் எவையெண்டாலும் இனியாவது எங்களைக் கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடட்டும்.”

    ” துவும் நம்மளுக்குத் தெரியும். நம்மட தரப்பிலும் யாரும் சாக விரும்பேல்ல. ஆனா… நாம சாதாரண சிப்பாய்கள். கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்கள்.”

    “ண்மைதான்! நான் அதை ஒப்புக்கொள்கிறேன். அதுக்காக ஒரு இனத்தின்மீது வன்முறையைப் பிரயோகிப்பது, அழிக்கவும் ஒடுக்கவும் நினைப்பது மனிதத் தன்மையற்ற செயல். ஒரு துண்டு நிலத்துக்கா எத்தனை உயிர்ப்பலிகள்?! இனியும் இது தேவையா? ஒவ்வொரு இடங்களிலையும் சாவை நேருக்கு நேராய் தரிசித்த எங்களுக்கு, எங்களின் மனங்களை வெல்வது என்பது இனி எவராலும் முடியாத காரியம்…”

    ப்புக்குட்டி கடைசி வார்த்தையை சற்று அழுத்தமாகவே உரைத்ததை அப்புஹாமியால் விளங்கிக் கொள்ள முடிந்தது. 

    ருள் மெல்லப் பரவத் தொடங்கியது. 

    மாடுகள் தம்பாட்டிற்கு முகாம் வேலிக்கு முன்பாக உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. அப்புக்குட்டி பொழுதின் தன்மையைப் புரிந்து கொண்டார். 

    ” ரி… இருளுதையா! நான் வரப்போறன்…”  கூறிக்கொண்டே அவர் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த தன்மாடுகளை ஒன்று சேர்த்தார். 

    ” ங்களோடு கதைச்சதில மெத்தச் சந்தோஷம்…” அப்புஹாமி கூறுகிறார்.

    ப்புக்குட்டி அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு, மாடுகளின் பின்னால் நடக்க ஆரம்பித்தார்.

    தூரத்தே காபெற் வீதியில் மாடுகள் பல கும்பலாக வயல்வெளி நோக்கி வந்து கொண்டிருந்தன.

    மாடுகள் மெல்ல… மெல்ல முகாம் வாசலுக்கு வந்து விட்டன. ஆனால், மாடுகளை மேய்த்து வரும் அப்புக்குட்டிக்குப் பதிலாக, வேறோரு நடுத்தர வயதுடைய ஒருவர் மேய்த்து வருவதைக் கண்டதும், அப்புஹாமி மனக் குழப்பத்திற்கு ஆளானார்.

    ‘ருவேளை இது வேறோருவருடைய பட்டி மாடுகளோ…’ எனத் தன்னுள் சந்தேகித்தவர், தனக்கு மிக அண்மையாக வீதியில் வந்துகொண்டிருக்கும் அந்தப் பசுமாட்டை உற்றுப் பார்த்தார். 

    ‘ …! இது அன்றைக்கு முகாமுக்குள் வந்த மாடு! அதே வெள்ளைநிறம்!  வால்குஞ்சம்மட்டும் கறுப்பு! இது அப்புக்குட்டியின் மாடுகள்தான். அப்படியானால் அவர் எங்கே?’

    அந்த மாடுகளை ஒழுங்குபடுத்திக்கொண்டு  வருபவரைத் தன்னருகில் வரும்படி மெல்லக் கூப்பிட்டார். 

    வர் அப்படிக் கூப்பிட்டதும், அந்த மனிதர் சற்று மிரட்சியடைந்தார். 

    “து உங்க மாடுதானே…?” அப்புஹாமி கேட்டார். 

    “மோம்…”

    ப்புஹாமி அவரையும் மாடுகளையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, திரும்பவும் கேட்டார்.

    “ந்த மாடுகளை ஒரு ஐயா கொண்டு வாறதுதானே…?”

    “ந்த மாடுகள் அவருடையதுதான்…”

    “ப்ப அந்த ஐயா எங்க.. ?  அவர் வரல்ல…?”

    ” ந்த ஐயா இனி வரமாட்டார். செத்துப் போயிட்டார்.. ?”

    ” ன்ன… செத்துப் போயிட்டாரா…?!”

    ப்புஹாமி அதிர்ந்தே போயிட்டார். அவரால் நம்ப முடியவில்லை அந்த வார்த்தையை.

    மாடுகளுடன் வந்தவர், நடந்த விபரத்தைக் கூறினார். 

    ழக்கம்போல அப்புக்குட்டி மாடுகளை மேய்த்துக்கொண்டு வயல் வெளிக்குப் போயிருக்கிறார். சிலமாடுகள் கூட்டத்திலிருந்து மெல்ல விலகி, புல்லுள்ள இடங்களில் நின்று மேய்ந்து கொண்டிருந்தன. மாடுகளை அதன் போக்கில் போகவிட்டால், மாலைநேரம் அவைகளை ஒழுங்குபடுத்துவது கடினம்… என்ற நினைப்பில், மேய்புக்கோலை எடுத்துக்கொண்டு, மாடுகளை நோக்கிச் சென்றபோதுதான், அந்த விபரீதம் நிகழ்ந்தது 

    போர் நிகழ்ந்தவேளை இராணுவத்தால்  ஏவப்பட்ட வெடிக்காத ஷெல்லொன்று, மண்ணுள் புதையுண்டு புல்களுக்குள் மறைந்து கிடந்த நிலையில்… அப்புக்குட்டி அதன்மேல் தன் பாதத்தை வைத்து நடந்தபோது… அது அமுக்கம் காரணமாக வெடித்துச் சிதறியதில், அதனோடு சேர்ந்து அப்புக்குட்டியும் இரண்டு மாடுகளும்…

    மாடுகளுடன் வந்தவர் மேற்கொண்டு கூற முடியாமல், கலங்கிய கண்களுடன் மாடுகளின் பின்னே நடக்க ஆரம்பித்தார்.

   ஒரு போராட்ட அமைப்பிடமிருந்து ஒரு துண்டு நிலத்தைக் கைப்பற்ற வேண்டும்… என்ற இராணுவ மேலிடத்தின் கட்டளைக்கிணங்க, ஷெல்களைக் கண்மூடித்தனமாக ஏவிய அந்த நாள்கள்… அப்புஹாமியின் மனத்திரையில் மெல்லெனவாய் விரிகின்றன.

    கூடவே அப்புக்குட்டி கூறிய அந்த வார்த்தைகளும்…

    ” ங்களின் மனங்களை வெல்வது இனி எவராலும் முடியாத காரியம்…”

    போரில் வென்றுவிட்டதான பலருடைய புளுகத்துக்கு மத்தியில், அப்புக்குட்டிக்கு முன்னால், தான் தோற்றுப்போய் நிற்பதை உணர்ந்து கொள்கிறார் அப்புஹாமி.

                (ஞாயிறு தினக்குரல் : 08 – 11 – 2015)  

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.