அலெக்ஸ்பரந்தாமன்

” என்ன மச்சாள் இனித்தானே சமையல்…?”
மதிய உணவுக்காக சுளகினில் அரிசியைப் போட்டுப் புடைத்துக் கொண்டிருந்த இராசம்மா, கேள்வி கேட்டவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, திரும்பவும் அரிசியைப் புடைக்கத் தொடங்கினாள்.
அங்கு வந்த வள்ளிப்பிள்ளைக்கு மச்சாள் தன்னோடு முகம் கொடுத்துக் கதைக்காதது மனதை ஏதோ குடைவதுபோல் இருந்தது.
‘ம்… ஆர் கண்டது…? இந்தக்குடும்பம் இப்படி முன்னுக்கு வருமெண்டு. ‘அ’ னாக்கு அடிவளம் தெரியாததுகள் எல்லாம் அந்நிய நாட்டுக்குப்போய், சொத்துப்பத்துக்களைத் தேடிக்கொண்டு வருமெண்டு தெரிஞ்சிருந்தால், உதுகளை அப்பவே அண்டி, அணைச்சு வைச்சிருந்திருக்கலாம். இப்ப அதுகள் எங்களை மிஞ்சின நிலையில, ஏனெண்டும் கேக்காதுகளாம், முகம் குடுத்தும் கதைக்காதுகளாம்…’
அவள் வந்த நோக்கமும், பேசவந்த பேச்சுகளும் என்னவென்பது இராசம்மாக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அவளாகவே பேச்சைத் தொடங்கட்டுமெனப் பேசாமல் இருந்தாள்.
” என்ன மச்சாள்… நான் அண்டைக்குச் சொன் விசயம் என்னமாதிரி…? தம்பியோடை ஏதும் கதைச்சனியே?”
இராசம்மாவுக்கு எரிச்சலாக இருந்தது அவளது வார்த்தைகளைக் கேட்டு.
“இப்பத்தானே எங்கட இனம் சனத்துக்கு நாங்கள் மனிசர்மாதிரித் தெரியுது…”
” என்ன மச்சாள் இப்படிக் கதைக்கிறாய்…? எங்கள்மேலை இன்னும் கோவம் தணியேல்லைப்போல கிடக்குது. அந்தநேரம் ஏதோ அப்படிப் பேசிப்போட்டம். அதை மனசிலை வைச்சுக் கொண்டு இப்ப பெரிசுபடுத்தாதையுங்கோ. இனியாவது எங்கட உறவு அற்றுப்போகாமல் இருக்கவேணுமெண்டுதான் நான் விரும்புறன்.”
“உந்த யோசினை அந்த நேரமல்லோ வந்திருக்க வேணும். இரத்த உறவெண்டு உதவி கேட்டு வந்தபோது, நீயும் உன்ர மனுசனும் என்ன கதைச்சனிங்கள்? பெடியனுக்கு நடக்க வேண்டிய நேரத்தில எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும். நீ போட்டு வா…” கூறிக்கொண்டே சுளகையும், அரிசிப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு குசினுக்குள் அடைக்கலமானாள் இராசம்மா.
மத்தியான வெயிலின் வெப்பத்துக்கு எதிராக… மெதுவாக… இதமாக வீசிக்கொண்டிருந்தது காற்று. ஏதோ அவசர அலுவல் காரணமாக வெளியே சென்ற அகிலன் அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான்.
“எட தம்பி எங்கையடா போட்டுவாறாய்? இன்னும் பசிக்கேல்லையே? வாவன் சாப்பிட…”
தாய் கூறியபடி.. குசினுக்குள் செல்ல, அவனும் கிணற்றடிக்குச் சென்று கைகால்களை அலம்பித் துடைத்துக்கொண்டு வந்து, சாப்பாட்டுக்கு முன்பாக அமர்ந்தான்
” காலமை வள்ளிப்பிள்ளை மாமி வந்திட்டுப் போனவ…” சோற்றைப் பரிமாறிக்கொண்டே இராசம்மா மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.
“அவ கிடக்கிறா விசர் மனிசி. நீங்கள் சோத்தைப் போடுங்கோ…”
பசிக்களையில் வந்த அவன் அரைவாசிச் சோற்றை உண்டு முடித்ததும்,
“அந்தநேரம் கஷ்டப்பட்டமெண்டு ஒதுக்கித் தள்ளிப்போட்டு, இப்ப காசு பணத்தைக் கண்டதும் ஓடிவந்து ஒட்டுகினம்; உறவு கொண்டாடுகினம். மாமி சொல்லுறா… அப்ப தெரியாத்தனமா தாங்கள் வாயில வந்தபடி பேசிப்போட்டமாம். இப்ப அதையெல்லாம் மனசில வைச்சிராமல், மறந்திட்டு தங்கட உறவு அற்றுப்போகாமலிருக்க, மல்லிகாவை உனக்குச் செய்து வைக்க விரும்புகினமாம்.”
தாய் சொன்னதைக் கேட்டு, அகிலன் எதுவும் கூறவில்லை. மெளனமாக சோற்றைப் பிசைந்தபடி இருந்தான்.
அன்றும்… இதேபோலத்தான், அவன் சாப்பிட அமர்ந்திருக்கையில்…
“தம்பி! உங்கை ஊருலகத்தில வெளிநாடென்று போய் வந்ததுகளெல்லாம் கடன்தனி இல்லாமலும், கஷ்டப்படாமலும் சீவிக்குதுகள். நீயும் ஒருக்கா முயற்சி செய்து பாரன் தம்பி.”
தாயை நிமிர்ந்து பார்த்த அகிலன், சிலவிநாடி எதுவும் பேசமுடியாமல் மெளனமாக இருக்க, அவள் மீண்டும் கூறுகிறாள்.
” அண்ணற்ர கடைசிப்பொடியனும் வெளியில போய் சேர்ந்திட்டானாம். இத்தாலியாம். நீயும் ஒருக்காப் போனியெண்டால், இருக்கிற கடனெல்லாம் ஒதுங்கியிடும். கொப்பர் செத்த கையோட நாங்கள் கஷ்டப்பட்டுப்போக, எங்கட இனம் சனம் எல்லாம் எங்களை ஒதுக்கிப்போட்டுதுகள். உதுகள் பார்க்கத்தக்கதாக நாங்களும் ஏதோ ஒருவகையில முன்னுக்கு வரவேணுமடா.. “
பெற்றதாயின் ஏக்க உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சகல வசதிகளையும் கொண்ட தனது மாமன் குடும்பமும், அயலவர்களும் செல்வச் செழிப்பில் திளைக்க, தனது தாய் மட்டும் ஏழ்மை நிலையில் கிடந்து உழலுவதை நினைத்து அவன் மனம் வருந்தினான்.
” அது சரியம்மா! வெளிநாடென்பது இலேசான காரியமல்ல. கொஞ்ச நஞ்சக் காசே வேணும். அதுக்கு நாங்கள் ஆரிட்டை போறது?”
நீ காசைப்பற்றி யோசியாதை. நான் இது விடயமா அண்ணரிட்டை போய் ஒருக்காக் கதைச்சுப் பார்க்கிறன். அப்படி அவர் காசேதும் இல்லையெண்டால், அவற்ர கடைசிப்பொடியன் மூலமாவது உன்னைக் கூப்பிடச் சொல்லுறன்.”
தாய் கூறியதைக் கேட்டு, திடுக்குற்றுப் போனான் அகிலன்.
“என்னது…? உங்கட கொண்ணரிட்ட காசு கேட்கப் போறியளோ? உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் ரோசம் இருக்கா? ஐயா செத்தாப் பிறகு அவையள் எங்களை ஒதுக்கி வைச்சிருக்கிறது உங்களுக்குத் தெரியாதா?”
தனது மகனின் கோபத்தில் தொனித்த கேள்வி நியாயமானது என்பதை இராசம்மா புரிந்து கொண்டாலும், அவளிடமிருந்து வார்த்தைகள் மிகவும் நிதானமாக வெளிவந்தன.
” ஏழையாய் பிறந்தவன் நெடுகிலும் ஏழையாய்த்தான் இருக்க வேணுமா? அண்ணரும் நானும் அந்தநேரம் அப்பு ஆச்சியோடை இருக்கேக்கை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்தனாங்கள். இண்டைக்கு அண்ணருக்கு எந்தக்குறையும் இல்லை. இரண்டு பொடியளும் வெளியில. இருக்கிற ஒரேஒரு பெட்டை மல்லிகாவுக்கும் வேண்டியளவு சொத்துப்பத்து தாராளமாய்க் கிடக்குது. இப்படி அவையள் இருக்க, எனக்கு மட்டும் ஏன் இந்தத் தலையெழுத்து? நாங்களும் காசு பணத்தோடை புழங்கினால்தான் எங்களையும் இந்த ஊரில நாலுமனிசர் மதிக்குங்கள்.”
அவளது கண்கள் கண்ணீரோடு… குரலும் கரகரத்துக் கொள்கிறது.
“அம்மா! நீங்கள் நினைக்கிற மாதிரி உங்கட அண்ணர் எங்களுக்கு உதவுவார் எண்டு நான் நினைக்கேல்லை. இரத்த உறவெண்டு நீங்கள் அங்கை போறியள். ஆனால், அவையள் எங்களை அப்படி நினைக்கேல்லை. எதற்கும் முயற்சி செய்து பாருங்கோ. நான் தடுக்கேல்லை.
நிரை நிரையாக, விதம்விதமான வண்ணங்களில் குரோட்டன் செடிகள், செம்பரைத்தை மரங்கள் யாவும் நன்கு செழித்து வளர்ந்து… கண்ணுக்குக் குளிர்ச்சியாக நின்ற நிலையில், அதற்குக் கீழே செவ்வந்தி, மணிவாழை, யப்பான் ரோசா போன்றவற்றில் பல பூக்களும் அழகாக மலர்ந்து நிற்க, அந்தக் கல்வீட்டின் முன்பாக இருந்த இரும்புக் கதவைத் திறந்து கொண்டு, ஒருவித தயக்கத்துடன் உள்ளே சென்றாள் இராசம்மா.
” அண்ணை… அண்ணை…”
“ஆரது…?”
உள்ளேயிருந்து கேட்டவாறு வெளியே வந்த அவளது அண்ணர், பயத்துடன் திரும்பி குனிசி அறைப்பக்கமாகப் பார்த்தார். அவரது புருவங்கள் சுருங்கி விரிந்தன.
” என்ன இராசம்மா…?”
” அண்ணை! உங்களோடை ஒரு விசயம் கதைக்க வேணும். என்ர குடும்ப நிலைமை உங்களுக்குத் தெரியும்தானே. அவர் செத்தாப்பிறகு நான் எவ்வளவு கடன் தனியோட இருக்கிறன். இவன் என்ர பொடியனும் வெளியில போக விரும்புறான். உங்கட பொடியள் மூலமாக எண்டாலும் அகிலனை ஒருக்கா வெளியிலை அனுப்பி வையுங்கோவன்.”
இராசம்மா கூறியதை வீட்டுக்குள் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எரிச்சலுடன் வெளியே வந்தாள் வள்ளிப்பிள்ளை.
“இஞ்சருங்கோ! வெளிநாட்டுக்குப் போறதெண்டால் சும்மா லேசுப்பட்ட காரியமில்லை. நாங்கள் எங்கட பொடியள் இரண்டையும் வெளியில அனுப்புறதுக்கே ஊரில எவ்வளவு கடனைப்பட்டுப் போட்டு இருக்கிறம். இந்த நேரத்திலை நீங்களும் வந்து எங்கட பிள்ளைக்கும் உதவி செய்யுங்கோ எண்டு கேட்டால், நாங்கள் என்ன செய்யுறது?”
முகத்திலடித்தாற்போல் கூறி முடிக்கிறாள் வள்ளிப்பிள்ளை.
” ஏன் இராசம்மா… உனக்குத்தான் உன்ர மனிசன்ர தோட்டக்காணி ஆலடிப்பக்கம் கிடக்குதே. அதுக்குள்ள ஏதாவது பயிர்பத்தாடையைச் செய்யுறதுக்கு ஏன் இப்படி வெளிநாடென்று ஆசைப்படுகிறான் உன்ர மகன்…?”
வள்ளிப்பிள்ளை கூறிய வார்த்தைகள்… இராசம்மாவுக்கு அவளது மனநிலையைப் புரிய வைத்து விட்டது.
இரத்த உறவெண்டு இரந்து கேட்க வந்தவளுக்கு அழுகையும் ஆத்திரமும் ஒருங்கே சேர்ந்து கொள்ள, உதவி கேட்க வந்த நிலையையும் மறந்து, அந்த இடத்திலேயே அண்ணணையும் மச்சாளையும் எதிர்த்துக் கதைத்துவிட்டுத் திரும்புகையில்…
” ஒன்றை மட்டும் நல்லா ஞாபகத்திலை வைச்சிருங்கோ. இண்டைக்கு நான் கெட்டு நொந்து நிற்க, என்னைக் கீழ்த்தரமாப் பார்க்கிற நீங்களும் என்றைக்காவது ஒருநாள் என்னட்டையும் என்ர வீடுதேடி உதவி கேட்டு வருவியள். அப்ப அந்தநேரம் மிச்சத்தைக் கதைச்சுக் கொள்ளுறன்.”
உள்ளத்தில் ஆத்திரம் கொப்பளிக்க… ஆவேசமாகக் கூறியவள், திரும்பிப் பார்க்காமல், தன்வீட்டை நோக்கி விரைவாக நடக்கத் தொடங்கினாள்.
அகிலனுக்கு நினைக்க… நினைக்க தாய்மீது ஆத்திரம் வந்தது.
” நான் ஏற்கனவே சொன்னனான் அங்கை போக வேண்டாமெண்டு. பொண்டிலுக்குப் பயந்த உங்கட கொண்ணற்ர குணம் எப்படிப்பட்டதெண்டு எனக்குத் தெரியாதே…”
சொத்துடைமை வர்க்கத்துக்கு முன்னால் ஏழ்மை தலை நிமிர முடியாது என்பதை, மாமி வள்ளிப்பிள்ளை தனது தாய்க்குக் காட்டிவிட்டதை நினைக்க, அவனால் தனது கோப உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே மாமனிடம் விளக்கம் கேட்கப் புறப்பட்ட அவனைத் தடுத்து நிறுத்தினாள் தாய்.
“வேண்டாம் தம்பி. அதுகள் கிடக்குதுகள் எளிய தட்டிக் குத்திகள். கேடுகெட்ட பிறப்புகள். அவையளும் அவையளின்ர பணமும். நீ பேசாமல் இரு.”
அண்ணன் குடும்பத்தின் உறவுகளை அந்தக்கணமே மனதிலிருந்து அகற்றிவிட்டாள் இராசம்மா.
அகிலனும் இராசம்மாவும் வீட்டு முற்றத்தில் நின்று தர்க்கப்பட்டுக் கொண்டிருக்க, தெருவோரக் கதவடியில் மிதிவண்டியொன்று வந்து நின்றது.
அகிலனின் தந்தை அப்புக்குட்டி உயிரோடு இருந்த காலத்திலிருந்தே அந்த வீட்டில் உள்ள பனை மற்றும் தென்னைமரங்களில் கள்ளு எடுப்பதற்கு வந்துபோகும் சீவல்கார மாரிமுத்து உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் வழக்கமாக உதிர்க்கும் புன்னகையை உதிர்த்துவிட்டுக் கேட்டார்.
” என்ன தாயும் மோனும் அமளி துமளிப்படுகிறியள்…?”
நடந்த விடயத்தைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தான் அகிலன்.
மாரிமுத்து எதுவும் கூறவில்லை. மெளனமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, தான் வழக்கமாக ஏறும் தென்னைமரத்தை நோக்கிச் சென்றார்.
‘ பாவம்… என்னமாதிரி இருந்த குடும்பம். அந்தாள் சாக இப்படியாய் போயிட்டுது.”
அவர் தனக்குள் கூறிக்கொண்டே மரத்தில் ஏறியவர், தனது தொழிலை முடித்துக் கொண்டு, மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்தார். கடந்தகால வாழ்வில் அந்தக் குடும்பம் மேன்மையாக வாழ்ந்த நிலையை ஒருகணம் நினைவு படுத்திக் கொள்கிறார் தன்மனதில்.
” தம்பி! உமக்கு வெளியில போக மனதார விருப்பமா…?”
“………………..”
” தம்பி! உமக்கு விருப்பமெண்டால், நானே உம்மை வெளியில அனுப்பி வைக்கிறன்.
“என்னது…?! என்னது…!?”
” நான் பகிடிக்குச் சொல்லேல்லை. உண்மையாத்தான் சொல்லுறன். நான் இந்த வீட்டு வளவிலுள்ள மரங்களிலை கள்ளு எடுக்கிறதுக்கு இன்று நேற்று வந்தவனில்லை. இந்தக் குடும்பம் இருந்த நிலைக்கும், இப்ப இருக்கிற நிலைமைக்கும்… அதை நினைச்சுப் பார்க்க மனசுக்கு எவ்வளவோ கஷ்டமாகத்தான் இருக்குது. அப்புக்குட்டி அண்ணர் உயிரோடு இருந்த காலத்திலை அவர் எனக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கின்றார். இது அடுத்தவனுக்கும் இன்றுவரை தெரியாது. இப்ப அந்தாளின்ர குடும்பம் இப்படிக் கடன்தனியில கிடந்து கஷ்டப்பட, என்னால பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் கிடக்குது. ஏதோ என்னாலை இயன்றதை இப்ப செய்யிறன். எங்கட பகுதிக்கை ஒரு பொடியன் வெளியிலை இருக்கிறான். நீங்கள் விரும்பினால் அவன் மூலமாக தம்பியைக் கூப்பிடுவிக்கலாம்.”
“…………..”
” என்ன யோசிக்கிறியள்? உங்களுக்கு விருப்பமில்லையெண்டால் விடுங்கோ…”
“சீச்சி… அப்படியில்லை மாரிமுத்து. காசு விசயம்தான்… அதுக்கு இப்ப என்ன செய்யிறதெண்டுதான் யோசிக்க வேண்டியிருக்கு.”
இராசம்மா மெல்லத் தயங்கியபடி கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்டு, சிலவிநாடிகள் யோசித்தார் மாரிமுத்து.
“என்னட்டை கொஞ்சக்காசு கிடக்குது.என்ரை ஒரே ஒரு பெட்டை மாலினிக்கெண்டு சேர்த்து வைச்சிருக்கிறன். அதை இப்ப தரலாம். பிறகு தம்பி வெளியில போன பிற்பாடு அனுப்பி வையுமன்.”
அவர் கூறிவிட்டு, தெருவோரக்கதவடியில், சாத்திக்கிடந்த தனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
மாரிமுத்து கூறியதை மீண்டும் நம்பமுடியாதவர்களாக… அவர் போகும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அகிலனும் இராசம்மாவும்.
” தம்பி! என்னடா சோத்தைப் பார்த்தபடி யோசிச்சுக் கொண்டிருக்கிறாய்? கறியேதும் போடட்டே…?”
தாயின் குரல்கேட்டு தலை நிமிர்ந்த அகிலன், தற்போதைய நிஜத்துக்கு வந்தான். ஒன்றும் கூறாது மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.
சம்பந்தக்கதையை ஆரம்பித்ததும், மகன் சாப்பாட்டைப் பிசைந்தபடி யோசித்ததைக் கண்ட இராசம்மாவுக்கு, மனதில் ஆயிரம் எண்ணங்கள் உருவாக ஆரம்பித்தன.
‘ஒருவேளை இவனுக்கும் மல்லிகாவிலை விருப்பம் இருக்குதோ.. ?’
” ஏன்தம்பி… உனக்கு இதிலை ஏதும் விருப்பம் இருக்குதே…”
மகன் விறுக்கென நிமிர்ந்து பார்த்ததும், தாய் பயந்து போனாள்.
” என்ர அப்பர் அப்புக்குட்டி அவ்வளவு ரோசம் கெட்ட மனிசர் இல்லை. என்ன துணிவிலை நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பியள்?”
அவன் போட்ட சத்தத்தில் ஆடிப்போனாள் தாய்.
” நான் வெளிநாடு போக வேணுமெண்டதுக்காக உங்கட கொண்ணரிட்டை உதவி கேட்கப்போய், அவமானப்பட்டுக்கொண்டு வந்ததை நீங்கள் மறந்தாலும், நான் இன்னமும் மறக்கேல்லை. உங்களுக்குக் கூடப்பிறந்த அண்ணணாக இருந்தும், இரத்த உறவாக இருந்தும் ஐயா செத்துப்போக, எங்களையெல்லாம் ஒதுக்கி வைச்ச உங்கட அண்ணர் குடும்பத்துக்கைபோய், இனி எப்படி நான் அவருக்கு மருமகனாக இருக்க முடியும்? கஷ்டப்பட்ட நேரத்திலை, எங்களைக் கைகழுவி விட்ட எங்கட இனம் சனத்தோடை இனி நான் எந்தவிதமான ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ளப் போறதில்லை. இனி அவையளை என்ர வீட்டு முற்றத்துக்கே வராதபடி செய்யப்போறன். அதற்கு ஒரே ஒருவழிதான் இருக்கு…” என்று கூறியவன், நிமிர்ந்து தாயின் முகத்தை ஊடுருவிப் பார்த்தான்.
” என்ன வழியடா.. ?”
தாய் மிகவும் பதற்றத்தோடு கேட்டாள்.
” சீவல்கார மாரிமுத்துவின் ஒரே மகள் மாலினியை நான் மணம் முடிக்கப் போறன்.”
“என்னது…!?!”
இராசம்மா அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க, அவன் கைகழுவுவதற்காக எழுந்து வெளியே சென்றான்.
●
(ஞாயிறு தினக்குரல் : 14 – 10 – 2001)
பின்னூட்டமொன்றை இடுக