– அலெக்ஸ்பரந்தாமன்.

நீண்டநாள்களாக மனதினுள் கிடந்து துருத்திக்கொண்டிருந்த விருப்பொன்று இன்று நிறைவேற இருப்பதையிட்டு, பரமலிங்கத்துக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் அவர் அந்தக் கிராமத்தைவிட்டு வெளிக்கிடும் வரைக்கும் அந்தக்கிராமமே அவருக்கு உயிர்நாடியாக இருந்தது என்னவோ உண்மைதான். சிறுவயது தொடக்கம் வாலிபவயதுவரை அந்தக்கிராமத்தில் வாழ்ந்தவருக்கு, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று, பின்பு எண்பத்துமூன்று ஆடிக்கலவரத்தோடு வன்னிக்கு அழைத்து வந்து விட்டன. அவர் இப்போது வன்னிவாசி. வன்னிமண்ணிலே தனக்கென ஓர் இணையைத் தேடிக்கொண்டவர், பிற்பாடு வன்னிமண்ணே அவருக்கு வாழ்வாதாரத்துக்கான மூலதனமாகப் போய்விட்டது.
இருப்பினும் தான் பிறந்து வளர்ந்த கிராமத்தையும் அதன் நினைவுகளையும் பரமலிங்கத்தால் தன்மனதில் இருந்து அகற்ற முடியவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய தன்சமூகம் சார்ந்த உரித்துறவுகள்…கல்வி கற்ற பாடசாலை… நடமாடித்திரிந்த ஒழுங்கைகள்… தார்வீதிகள்… வழிபாட்டிடங்கள்… கல்வி கற்பித்த ஆசிரியர்கள்… இப்படிப் பலதையும் அவர் தன்நினைவினில் கொண்டு வரும்போதெல்லாம், புளித்துப்போன கோதுமைமாவைக் கைகளால் பிசைந்தெடுப்பது போன்றதொரு கடுமையானவலி இதயத்தில் எழுந்து அலைக்கழித்து… பின் மெல்லத் தணிந்து கொள்ளும்.
வாழ்வின் பயணம் நேரானதல்ல… என்பதை அவர் தனது வாழ்வனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டார். கர்மவினைக்கான கடன்கழிப்பு ஓரளவு நிறைவடைந்துவிட்டதை அவர் உணர்ந்தார். சிலகாலம், தான் வாழ்ந்திருந்த கிராமத்தையும் அங்குள்ள இப்போதைய தலைமுறைகளையும் எஞ்சியிருக்கும் தனது காலத்தோடொத்த சில நண்பர்களையும் சந்திப்பதன்மூலம் பழைய நினைவுகளை மீட்டுக்கொள்ள முடியும் எனவும் நம்பினார்.
அதிகாலைவேளை வன்னிப்பெருநிலப்பரப்பிலிருந்து புறப்படும் அரசபேருந்து ஒன்றில் அமர்ந்திருந்தார் பரமலிங்கம். நேரநகர்வில் கிழக்கு வான்பரப்பில் மெல்லச் சிவக்கத்தொடங்கின மேகங்கள். போகும் வழியிடையே பரந்து கிடந்தது உப்புத்தரவைக்கடல். நீர்குறைந்த பரப்பில் வெண்பறவைகள் மோனநிலையில் நின்று கொண்டிருந்தன. பேருந்தின் யன்னலூடாக மெலிதான குளிர்காற்று வந்து கொண்டிருந்தது. பரமருக்கு காற்றின் ஸ்பரிசம் ஒருவித சுகத்தைக் கொடுத்தது. கூடவே பேருந்தினுள் ஒலித்துக்கொண்டிருந்தது அவருக்குப் பிடித்தமான பக்திப்பாடல் ஒன்று.
பரமலிங்கம் வலிகாமம் வடக்குப்பகுதியைச் சேர்ந்தவர். அவரது தந்தை இராசையா கடினமானதொரு உழைப்பாளி மட்டுமல்ல, விவசாயியும்கூட. எண்பதுகளுக்கு முற்பட்ட காலநிலைபரத்தில் வடக்குப்பகுதியில் இருந்த வீடுவளவு, தோட்டம்துரவு யாவற்றையும் விற்றுவிட்டு, தென்பகுதியில் இருந்த தனது தம்பியின் பேச்சைக்கேட்டு, அங்கு குடியேறச் சென்றவர், ஆடிக்கலவரத்துக்கு முன்பாக நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அதன்பின் ஏற்பட்ட கலவரத்தின் நிமித்தம் பரமர் தனது தாய் சகோதரிகளுடன் ஊருக்குச் செல்ல விரும்பாது, வன்னிப்பக்கம் சென்று குடியேறிக் கொண்டார். அதன்பின் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளின் நிமித்தம், வன்னியில் நிலவிய
‘பாஸ் நடைமுறை’ மற்றும் வடபகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றினால் அவர் ஊருக்குச் செல்வதற்கான சூழ்நிலைகள் சரிவர அமையவில்லை. ஆயினும், ஊரினதும் அங்குள்ளவர்களினது நினைவுகளும் மனப்பதிவேட்டில் காலப்பதிவுகளாக நிரம்பிக் கிடந்தன. அதிலும், யோகலிங்கத்தின் நினைவுகள்…
பரமலிங்கம் சிறுவனாக இருந்த காலத்தில், யோகலிங்கம் அவருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர். அவரது சகபாடிகள் குடி கூத்து, கொத்து வெட்டு… என இளவயதுத் திமிர்த்தனத்தோடு திரிந்த வேளைகளில், அவர்மட்டும் அவர்களிடத்தில் இருந்து வேறுபட்டு, வித்தியாசமாக வாழ்ந்து கொண்டிருந்தவர். வெள்ளை நிறத்தினாலான வேட்டி சாரமும் அரைக்கைச் சேட்டும் அணிந்திருப்பார். கரபந்தாட்டத்தில் மிகவும் ஈடுபாடுடையவர். பரமர் சிறுவனாக இருந்தபோதும், அவரோடும் அவரோடொத்த சிறுவர்களோடும் அவர்களில் ஒருவராகவே மாறிவிடுவார். பகிடிக்கதைகளை நாகரிகமாக வெளிப்படுத்துவார். இதனால்தான் என்னவோ பரமருக்கு யோகலிங்கத்தைப் பிடித்துப் போயிற்று. ஊரிலே பழைய தலைமுறையாக அவர் ஒருவரே எஞ்சியிருந்தார்.
வன்னிப்போர்க்கள நிலைபரம்… ஊரையும் அங்குள்ள மனிதர்களின் நினைவுகளையும் பரமருக்கு ஞாபகத்தில் கொண்டுவர விடவில்லை. எந்தநேரமும் உயிரச்சத்தோடு வாழ்ந்ததான வாழ்வு அது. இறுதியில் போர்க்கள நிலைமைகள் நன்கு இறுகி, வெடித்துச் சிதறி ஓய்ந்தபோது, எல்லாமுமே அடங்கிப் போயின. அதன்பின்பு வருடங்கள் பத்துக்கு மேலாகி விட்டன. பரமருக்கும் வயது அறுபதைக் கடந்து விட்டது. பிள்ளைகளும் வாழ்க்கைப்பட்டு, ஆங்காங்கே தனிக்குடித்தனமாகப் போய்விட்டார்கள்.
என்னவோ தெரியவில்லை. சிலநாள்களாக பரமருக்கு ஊரின் நினைவுகள் வந்து மனதுள் மோதிக்கொண்டிருந்தன. அதிலும், யோகலிங்கத்தின் நினைவுகள் அதிகமாக இருந்தன. இது தவிர, சொப்பனங்களிலும் கடந்தகால நிகழ்வுகள் அவ்வப்போது படம் காட்டிவிட்டு, மறைந்து கொண்டிருந்தன. பரமரின் மனதுக்குள் ஒரே குழப்பம். ‘ ஒருக்கா ஊர்ப்பக்கம் போயிட்டு வந்தாலென்ன…?’ என்ற சிந்தனை அவருள் உருவாக்கம்பெற, அதை அவர் தன் மனைவியிடம் கூறினார்.
“போகிலிப் போட்டு வாங்கோவன். இப்ப அங்கை ஆர்… எவர்… இருக்கினமோ தெரியாது. எல்லாரும் போய்ச் சேர்ந்திருப்பினம்…” மனைவி கூறிய அந்த வார்த்தையில் யதார்த்தம் தொக்கி நிற்பதை பரமரால் உணர முடிந்தது. பரமன் இளைஞனாக ஊரைவிட்டு வெளிக்கிடும்போது, அவருக்கு இருபத்தி மூன்று வயது. இப்போது அறுபத்து மூன்று வயது. இந்த இடைப்பட்ட நாற்பது வருட காலத்திற்குள் ஊரினுள் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதையும் அவரால் அனுமானிக்க முடிந்தது. மனைவி கூறிய ” இப்ப அங்கை ஆர் இருப்பினமோ தெரியாது…?” என்ற வார்த்தை… அவருக்குள் பல சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.
போர்க்காலச் சூழலும் அதன் நிமித்தம் எழுந்த புலம்பெயர் பயணங்களும் தனதூரிலும் பொருளாதார ரீதியாகப் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும்… என்பதைப் பரமர் நம்பினார்.
ஆனால் , மனிதர்கள்…? பொருளாதாரநிலை மாற்றமடைந்ததுபோன்று, மனிதர்களின் மனங்களிலும் ஏதாவது ஒரு சிறுமாற்றம் ஏற்பட்டிருக்குமா? அப்படி ஏற்பட்டிருப்பினும், அவர்கள் இப்போதும் வாழக்கூடிய அகவையில் உள்ளனரா?
பரமருக்குக் குழப்பமாக இருந்தது. ‘ சரி எதற்கும் நேரபோய் பார்த்தால் ஆயிற்று…’ என்று சமாதானம் கூறிக்கொண்டார். அவரது மனநினைவில் பலரது முகங்கள் வந்து தரிசனம் காட்டிவிட்டு மறைந்து கொண்டிருந்தன.
அவரது ஊர் பல சமூகத்தவர்களையும் உள்ளடக்கியிருந்தது. பலரைத் தொழில்ரீதியாகப் பிரித்தும், அத்தொழில்மூலம் மனிதர்களைச் சாதிரீதியாக வகுத்தும் தனக்குள் வைத்திருந்தது. இதன்நிமித்தம், சாதீய சண்டைகளும் சாதீய சமூகங்களுக்குள் பணத்தால், புஜபலத்தால் யார் பெரியவன்…? என்ற குழுமோதல்களும் உறைந்து கிடந்தன. ஊர் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு… பிரிவுகளென உள்ளடக்கியிருந்தது. அந்தப்பிரிவுகளுக்குள் சகல சமூகத்தவர்களும் பரம்பலாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
விவசாயம், சந்தை வியாபாரம், சீவல்தொழில், சலவைத்தொழில், சிகை அலங்கரிப்பு, பறை அடித்தல், மீன் வணிகம், மரக்கறிவாணிபம், பலசரக்கு விற்பனை, வாடகைக்கார் ஓட்டுதல், சோதிடம் பார்த்தல், மேசன் தொழில், தினக்கூலி, தச்சுத்தொழில்… போன்ற தொழில்களைக் கொண்டோர் வாழ்ந்த அக்கிராமத்தில் வடக்குப்பகுதியில் உள்ள ஒருசிலரின் நடவடிக்கைகள்… அவர்களது முகங்கள்… பரமரின் நினைவுகளில் தங்கி விடுகின்றன.
ஊரின் பொதுச்சந்தையின் உள்ளே மீன் விற்கும் பகுதியில் மீன்வியாபாரம் செய்துகொண்டிருந்த சின்னவன்…
ஒற்றைத் திருக்கல் மாட்டுவண்டி வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த செல்லையன்…
பைரவர் கோவில் ஒன்றை ஆதரித்துக்கொண்டு, சலவைத் தொழிலாளர் சமூகத்தில், தன்னையொரு ‘நாட்டாண்மைக்காரன்’ஆக நிலைநிறுத்த நிறுத்த முயன்ற செல்லப்பா…
சாந்தமே உருவான முகத்தைக் கொண்ட சலூன்கார சின்னத்தம்பி…
சாவீடுகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் பறைமேளம் அடிக்க வரும் நல்லான்…
தயாளமனம் கொண்ட மரக்கறிகள் விற்கும் தங்கம்மாக்கா…
ஊரின் மத்தியில் பேருந்துத் தரிப்பிடத்துக்கு முன்பாக சமூகத்தில் பின்நிலைப்படுத்தப்பட்டவர்களுக்கென தகரமூக்குப்பேணிகளிலும், உயர்சமூகமென அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு சில்வர் மூக்குப்பேணிகளிலும் தேநீர் வழங்கிய தேநீர்க்கடை உரிமையாளர் தேவசகாயம்…
இப்படிப் பலரக மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நேரத்தில்தான், பரமர் தனது பெற்றோருடன் ஊரை விட்டுப் புறப்பட வேண்டியதாயிற்று. காலச்சுழற்சியுள் சிக்கிய அவரது வாழ்வு, ஒருவாறாக ஓரிடத்தில் கரையொதிங்கியபோது, அவர் முதுமை நிலைக்கு வந்துவிட்டார். இருப்பினும், ஊர்நினைவுகள் அவரை விட்டபாடில்லை. தனக்கு ‘ஏதாவது’ ஆகிவிடமுன்பு ஊருக்கு ஒரு தரிசனம் செய்துவிட வேண்டுமென்ற அவாவில் அவர் இன்று புறப்பட்டு விட்டார்.
சுமார் இரண்டரை மணித்தியால ஓட்டத்தின் பின்பு, பேருந்து வடபகுதின் பிரதான பட்டினத்தை வந்தடைந்தது. பட்டணத்துக்கான காலைநேரச் சுறுசுறுப்பு மெல்ல வியாபிக்கத் தொடங்கியிருந்தது. பரமர் பேருந்தை விட்டிறங்கினார். அருகில் உள்ள உணவகம் ஒன்றுக்குச் சென்று, பால்தேநீர் அருந்திவிட்டு, திரும்பவும் பேருந்து தரிப்பிடத்துக்கு வந்தார். வடமராட்சி நோக்கிப் புறப்படும் பேருந்து ஒன்றில் ஏறி, வசதியாக அமர்ந்து கொண்டார். போய் இறங்கவேண்டிய இடத்தையும் அதற்குரிய பணத்தையும் கொடுத்துவிட்டு நிற்கையில், பேருந்து புறப்படத் தொடங்கியது.
பட்டணத்தில் இருந்து பத்துமைல் வித்தியாசத்தில் இருந்தது அவரது ஊர். பேருந்து ஊரை நெருங்கி விட்டது. பரமர் பேருந்தைவிட்டு இறங்கிக் கொண்டார். அவர் கண்களில் ஆச்சரியம்! அவரால் நம்ப முடியவில்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்த ஊரின் மத்தியபகுதி வெகுவாக மாறிவிட்டிருந்தது. முன்னைய காலத்தில் சுடலைமடமாகக் காட்சியளித்த ‘பஸ்தரிப்பு நிலையம்’ இன்று நவீன கட்டிடமாக எழுந்து நின்றது. கிராமத்துக்கே உரித்தான பழைய சந்தையும் ‘நியூமார்க்கெட்’ என்ற பெயரில், அதன் வனப்பும் மாறி இருந்தது. அவர் வாழ்ந்த கிராமம் விவசாயச் செய்கைக்குப் பெயர்பெற்ற ஒரு கிராமமாகும். ஆனால், சந்தைக்குள் மரக்கறிவியாபாரிகள் மிகக் குறைந்தளவிலும், மரக்கறிவகைகள் மிகச் சொற்பமான அளவிலுமே காணப்பட்டன. மீன் வியாபாரத்துக்கெனப் புறம்பாக ஒதுக்கப்பட்ட பழைய கட்டிடத்தைக் காணவில்லை. தற்காலச் சந்தையோடு பொருத்தப்பட்ட ஒரு தகரக்கொட்டகைக்குள் இரண்டொரு வியாபாரிகளே தங்கள் வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
பரமர் தனது காலத்தில் மீன் வியாபாரம் செய்த சின்னக்கண்ணன் என்பவரை நினைத்துப் பார்க்கிறார். படிப்பறிவற்ற, பகுத்தறிவற்ற ஊருக்குள் சண்டித்தனமான ஒரு மனப்போக்கைக் கொண்ட சின்னக்கண்ணனைக் காணவில்லை. அவர் சந்தைப்பகுதியைவிட்டு வெளியே வந்தார். பேருந்து நிலையத்துக்கு முன்பாக தேநீர்க்கடை வைத்து நடாத்திய கண்ணபிரானையும் காணவில்லை. தேநீர்க்கடை இருந்த இடத்தில் ஒரு பலசரக்குக்கடை ஸ்தாபிதமாகி இருந்தது. கண்ணபிரானின் கடைக்கு எதிரே இன்னொரு தேநீர்க்கடை பாழடைந்து கிடந்தது. பற்றைகளும் சிமெந்துக்கற்களுமாய் அது காட்சியளித்தது. அக்கடையை வைத்து நடத்திய முகிலம்மா பரமரின் நினைவில் வந்து நின்றாள்.
பருத்த சரீரம்! எந்நேரமும் கடவாயில் இருந்து ஒழுகும் வெற்றிலைச்சாறு. சாதீயத்தை கிஞ்சித்தும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை அவளிடமிருந்தது. அவள் நடத்திய தேநீர்க்கடைக்குள் சமூகத்தில் சாதியெனும் பெயரால் பின்நிலைப்படுத்தப்பட்ட மக்கள் எவரையும் அவள் அனுமதிப்பதில்லை. சாதி கேட்டறிந்து, சாதிக்கேற்றவகையில் தகரமூக்குப் பேணிகளிலும் சில்வர் மூக்குப்பேணிகளிலும் தேநீர் கொடுக்கும் அவளை, அவளது சமூகத்தில் பலர் விரும்புவதேயில்லை. அவளது கடைக்குப் பக்கத்தில் இருந்த ‘முருகையா சைக்கிள் திருத்தும் கடை’ தற்போது கால்நடைதீவனம் விற்கும் கடையாக மாறியிருப்பதைக் கண்டார். சந்தியால் திரும்பும் இடத்தில் சின்னத்தம்பி வைத்து நடத்திய சலூனையும் காணவில்லை. அங்கு வெறுந்தரையே எஞ்சியிருந்தது.
வானம் சற்று மப்பும் மந்தாரமுமாக இருந்ததில் பரமலிங்கத்தாருக்குப் பயணக்களை தெரியவில்லை. ஊர்மண்ணில் கால் வைத்த பரவசம் அவர்மனதுள். பார்வையை அக்கம் பக்கமாகச் சுழல விட்டபடி… சந்தியால் திரும்பி, கிழக்குத்திசை நோக்கிச்செல்லும் பிரதான தெரு வழியே மெல்லநடையாகச் சென்று கொண்டிருந்தார். தெருவில் எவரும் அவரை இனம் கண்டு கொள்ளவில்லை. அங்கு புதியதொரு தலைமுறை உருவாகியிருந்தது. அவருக்கும் தன்னோடொத்த வயதுக்காரரைக் காணமுடியவில்லை. ‘எல்லோரும் போய்ச் சேர்ந்திட்டினம்போல…’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டு, இடப்பக்கம் திரும்பிப் பார்த்தார். அவரது காலத்தில் தோட்டப்பயிர்ச்செய்கையாக இருந்த நிலங்களில், நவீன வசதிகளோடமைந்த மனைகள் எழுந்து நின்றன. பரமருக்கு மனது ஒருகணம் வலித்துக் கொண்டது.
அந்தநேரம் ஆடுமாடுகளுக்குப் புல்லுப் பிடுங்கிக்கொண்டு போன இடம். எப்படியான பசுமையுள்ள நிலம் அது! பரமரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. பிரதான சாலையில் இருந்து வலதுபக்கம் திரும்பும் ஒழுங்கைக்குள் இறங்கி நடந்தார். ஒழுங்கைக்குள் ஆள்களின் நடமாட்டம் அரிதாக இருந்தது. ‘எங்கே போனார்கள் இவர்கள்…?’ என்ற சிந்தனையோடு நடந்தவர், இடதுபக்கம் திரும்பி யோகலிங்கத்தின் வீட்டுக்குச் செல்லும் குச்சொழுங்கை அருகில் வந்தது. அவருக்கு சற்று தடுமாற்றமாக இருந்தது. காவோலைகள் மற்றும் கிடுவேலிகள் பலவும் தகர, மதில் மறைப்புகளாக உருமாறியிருந்தன. பரமருக்கு யோகலிங்கத்தின் வீட்டுக்குப் போவதற்கான வழி புலப்படவில்லை. தூரத்தே ஓர் இளம் யுவதி நடந்து வருவது அவருக்குத் தெரிந்தது. அவள் தன்னருகில் வந்ததும் பரமர் கேட்டார்.
” பிள்ளை தங்கச்சி… இதில யோகலிங்கத்தின் வீடு எங்கையம்மா இருக்கு..?”
“இப்படியே நேர உதால போங்கோ. இடப்பக்கம் ஒரு வாசிகசாலை இருக்கு. அதுக்கு முன்னால உள்ள வீடு…”
“ரொம்ப நன்றியம்மா…” பரமர் கூறிவிட்டு, ஒழுங்கையில் நடக்கத் தொடங்கினார். ஒரு கூப்பிடுதூரம் வந்ததும், இடப்பக்கம் வாசிகசாலை வந்தது. பரமர் திகைத்துப் போனார். ஒருகாலம் பத்திரிகை படித்த இடம்… நண்பர்களோடு அரட்டை அடித்த இடம்… இன்று அலங்கோலமாகக் கிடந்தது. வாசிகசாலைக்கு முன்பாகவுள்ள யோகலிங்கத்தின் வீடும் வடிவத்தில் சில மாற்றங்கள் பெற்றிருந்தன.
பரமர் கேற்வாசலில் நின்று யோகலிங்கத்தைக் கூப்பிட்டார்.
“யோகமண்ணை… யோகமண்ணை…”
குப்பிட்ட குரலுக்கு யோகமண்ணை வரவில்லை. நாயொன்றுதான் குரைத்தபடி… கேற்வாசலுக்கு ஓடிவந்தது.
நாயின் குரைப்பொலி கேட்டு, யோகலிங்கம் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார். பரமர் கேற்றைத் திறந்து உள்ளே போனதும், பரமலிங்கத்தை யோகலிங்கத்தாலும், யோகலிங்கத்தைப் பரமலிங்கத்தாலும் இனம்காண சிலவிநாடிகள் பிடித்தன.
“நீங்கள் பரமலிங்கம்தானே…?”
” ஓமண்ணை…”
பரமலிங்கத்தால் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்கள் பனித்து விடுகின்றன அவருக்கு. பரமரை அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார் யோகலிங்கம். அவரது மனைவி கிருசாந்தி வந்து பரமரின் வயோதிபத்தோற்றத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
யோகலிங்கம் பரமரைப்பற்றி விசாரித்தார். பரமர் தனது ஊரைவிட்டுப் போனநாளில் இருந்து, இன்றுவரையான சம்பவங்கள் அனைத்தையும் ஒருகதைபோல அங்கு ஒப்புவித்தார். யோகலிங்கத்துக்கு கவலையாக இருந்தது. ” என்னதான் இருந்தாலும், கொப்பர் அருமந்த தோட்டம் துரவுகளை விட்டிட்டுப் போயிருக்கக் கூடாது…” என்றார். பரமரும் அதை ஆமோதித்துக் கொண்டார்.
யோகலிங்கம் ஊரில் நிகழ்ந்த கடந்தகால சம்பவங்களைக் கூறினார். ஆட்டம் போட்டவர்கள், அதிகாரம் செய்தவர்கள் பலரும் பாடையில் சென்றுவிட்டதாகத் தெரிவித்தார். ஒவ்வொருவருடைய சாவும் இருப்பவர்களுக்குப் படிப்பினையாக அமைந்திருந்தது என்பதையும், இருப்பவர்கள் சிலர் இன்னமும் தங்களது கொள்கைகளைச் சீர்செய்யாது வாழுவதாகவும், காலப்போக்கில் இவர்களும் மரித்துப்போக, அந்த வரட்டுப் பெருமைகளும் காலாவதியாகிக் காணாமல் போய்விடும்… என்றும் அவர் கூறிக்கொண்டிருந்தார்.
நாற்பது வருடங்களுக்கு முந்தைய சாதீயக் குறியீடுகளாக விளங்கிய பலதும் பெரும்பாலும் அழிந்து விட்டிருந்தன. இந்த அழிவுக்குப் பெரும்பங்காற்றிய காரணிகள்… உள்நாட்டுப்போர், புலம்பெயர் பயணம், கடின உழைப்பு, பொருள் ஈட்டல்… போன்றனவாகும். சலவைத் தொழிலாளர்களது வீட்டில் இருந்த ‘வெள்ளாவிகள்’, சீவல் தொழிலில் பயன்படுத்தும் இணையக்கூடு, பாளைக்கத்திகள் மற்றும் ஒற்றைத் திருக்கல், இரட்டைத் திருக்கல் வண்டிகள் போன்றன இப்போது ஊரில் இல்லையென்றும், இத்தொழில் புரிந்தவர்களின் பிள்ளைகள் புலம்பெயர் தேசத்தில் நிரந்தரவதிவுரிமை பெற்றுக்கொண்டு விட்டதாலும், தொழிலுக்குரியவர்கள் மண்ணாக சாம்பலாக மாறிவிட்டதாலும் ஊரில் யார் எவர் என்ன சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை இப்போது கண்டுபிடிப்பது சிரமம் என்றும் யோகலிங்கம் கூறியபோது, பரமருக்கு மனதுள் உள்ளூர மகிழ்வாக இருந்தது.
“இழிசனர் என்ற குறியீட்டோடு வாழ்ந்த ஒரு தலைமுறை மரித்து விட்டது. அதிலிருந்து தோன்றிய விழுதுகள் இப்போது நாகரிகத்திலும், பொருளாதார ரீதியிலும் நன்கு முன்னேறி விட்டதில், ஊருக்குள் சாதி காணாமல் போயிருந்தது. செய்யும் தொழிலால் சாதியெனும் பிரிவினைகளைச் சுமந்த ஒரு தலைமுறையின் வேர்கள் மண்ணோடு மண்ணாக உக்கிப்போய் விட்டன. அதிலிருந்து உருவான ஒரு தலைமுறையிலிருந்து, இப்போது புதிய தலைமுறைகள் உருவாகி விட்டன. இனி அதிலிருந்து வேறு ஒரு தலைமுறை உருவாகத் தொடங்கும்… காலநகர்வில் இந்தச் சாதி, சமயம், பணம், படிப்பு… எல்லாமே அவர்கள் முன்பாக அடிபட்டுப் போய்விடும்… ”
யோகலிங்கம் கூறிக் கொண்டிருந்தார். பரமரும் கேட்டுக்கொண்டிருந்தார். பொழுதும் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
(உள்ளம் : ஜனவரி – மார்ச், 2023)
பின்னூட்டமொன்றை இடுக