அலெக்ஸ்பரந்தாமன்.

நிலமெங்கும் பரவியிருந்தது கார்த்திகை மாதத்துக்குரிய கடுங்குளிர். மண்ணின் வரட்சியைப் போக்கிவிட்டதில், இன்னும் திருப்தி கொள்ளாத மனோபாவமாக வானமும் கொட்டித் தீர்த்திருந்தது மழைத்துளிகளை. நீண்ட நாள்களாக முழுக்கற்று இருந்த வான்பயிர்களும் அகம் குளிர்ந்தனவாய் பச்சைப் பசேலெனக் காட்சியளித்தவண்ணம் இருந்தன.
வருடத்தின் இறுதியில் மலரும் பூக்களும் தம் இதழ்களைவிரித்து புன்னகை பூத்தன. தொடர்ந்து நான்கு நாள்கள் இடைவிடாது தன் திமிர்த்தனத்தைக்காட்டிய கனமழை மனந்திருந்தியதுபோன்று, தனது ஆங்காரத்தனத்தைக் குறைத்துக் கொண்டதும் வானம் மெல்ல மெல்ல தன் வெளிப்புக் குணத்தைக் காட்டத்தொடங்கியது.
அத்தநாயக்கா தனது அறையைவிட்டு வெளியேவந்து ஆகாயத்தைப் பார்த்தார். வானம் வெளிப்பது அவருக்கு மகிழ்வாக இருந்தது. தொடர்ந்த குளிர்கால நிலையைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை அவரால். தடித்த சீருடைகளை அணிந்தும், அவ்வப்போது மதுபானத்தைக் குறைவாக அருந்தியும் குளிரைச் சமாளித்துக் கொண்டவருக்கு வானம் வெளிப்பது மன உவகையைக் கொடுத்தது.
அந்த உவகையின்மீது முள்கள் குத்தி வேதனைப்படுத்துவது போன்று, ஆளும்வர்க்கத்தினரின் அரசியல் செயல்பாடுகள்… அவர் மனதுக்குள் அருக்களிப்புக் கொள்ள வைக்கின்றன. அவரைப்போன்று பதவியில் இருப்பவர்கள் எழுந்தமானமாக அரசியல் கதைக்க முடியாது.
ஏனெனில், அவர் இரண்டாம்நிலை அதிகாரியாக இருப்பவர். நாட்டையும் அதனோடிணைந்த பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதத்தில் கடமையாற்ற வேண்டும். அவரோ தன்கடமையில் இருந்து இம்மியளவும் பிசகவில்லை. மேலதிகாரியின் ஆணைக்குட்பட்டே அந்த இடத்துக்குப் பணிபுரிய வந்திருந்தார் அத்தநாயக்கா.
அவரதுபணி அந்தச்சிறகய முகாம் அமைக்கப்பட்டுள்ள இடத்தை, வெளித்தலையீடுகள் எவையும் உள்நுழைந்து, கையகப்படுத்தல் செய்யாதபடிக்கு பாதுகாத்தல் வேண்டும் என்பதே. ஆயினும், அது அவரால் மனசாட்சியைப் பொறுத்து முடியாத ஒருகாரியமாகவே இருந்தது. தனது கனத்த சப்பாத்தின் அழுத்தம் தாங்க முடியாமல், தன்னைத் தாங்கி நிற்கும் மண்ணுக்குள்ளே பல ஆத்மாக்கள் அலறித்துடிப்பதான மனப்பிரமை அவருக்கு நெடுகிலும் ஏற்பட்டவண்ணம் இருந்தது.
அதுமட்டுமன்றி, சிலவேளைகளில் உயிர்நீர்த்த பல்லாயிரக்கானவர்கள் தன்னைச்சுற்றிலும் நின்று கதறுவதும், ஆவேசம்கொண்டு அலறித்துடிப்பதுமான எண்ணங்கள் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன.
‘ இது…! அவர்களுடைய நிலம்! அவர்களின் உறவுகள் உறங்குகின்ற நிலம்! அந்த உறவுகள் களத்தில் எங்களோடு போராடினார்கள். தமது இனத்தின் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். மதவாத ஏகாதியபத்தியத்துக்காக எதிர்ப்புக்குரல் காட்டினார்கள். அவர்கள் உறங்குகின்ற படுக்கைகள்மீது எமது சப்பாத்துப் பாதங்கள் படிவது எங்கனம் நியாயமாகும்?
அத்தநாயக்காவுக்கு விழிகள் பனிக்கின்றன. மெல்லச்சுரக்கும் நீர்த்துளிகளை சகசிப்பாய்கள் கண்டுவிடக்கூடாதென்பதற்காக விழிகளுள் தூசி விழுந்தது போன்ற பாவனையில், இரண்டு கரங்களினாலும் விழிகளைக் கசக்கிவிட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்தார். வானத்தின் பெரும்பகுதி வெளிப்புக் கொண்டிருந்தது. அவரது பார்வை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள காணி ஒன்றின்மீது பதிகின்றது.
அங்கே ஆண்கள், பெண்கள், முதியோர், சிறுவர்கள்… எனப் பலவகையினரும் அந்த இடத்தைத் துப்புரவு செய்துவிட்டு இருந்தார்கள். உழவு இயந்திரம்மூலம் நிலம் உழுகை செய்யப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டிருந்தது. சிவப்பு, மஞ்சள்நிறக் கொடிகள் பலவும் அந்த இடமெங்கும் கட்டப்பட்டு இருந்தன. மண்ணில் நடப்பட்டிருந்த தீப்பந்தங்களின் நுனிப்பகுதி மழையில் நனைந்து விடாதபடிக்கு பொலித்தீன் உறைகளினால் போர்த்துமூடிக் கட்டப்பட்டிருந்தன.
அத்தநாயக்க தனது அறையின் வாசலில் நின்றபடி… நடைபெறும் அனைத்துச் செயல்களையும் அவதானித்துக் கொண்டிருந்தார். சுற்றிவர அடைப்பற்ற முள்ளுக்கம்பிகளாலான வேலியூடாக அவர் சகலநிகழ்வுகளையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.
‘ பாவம்! ஒரு சோலிசுரட்டு இல்லாத சனங்கள். இவர்களைப்போய் பயங்கரவாதிகள் என்று சொல்லித்தானே அடித்தார்கள்; அழித்தார்கள்.”
அந்த மக்களுக்காக அனுதாபப்பட்டார் அவர்.
இரண்டு நாள்களுக்குமுன்பு, தனது முகாம் வாசலில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அவர் தன்மனக்கண்ணுள் கொண்டுவந்தார்.
அடைமழை ஓய்ந்து தூறல்துளிகள் விழுந்துகொண்டிருந்த நேரம் அது. ஊர்ப்பெரியவர்கள் பலரோடு கிராமசேவகர், மதகுருமார் அடங்கிய குழுவொன்று அவரைச் சந்திக்க வந்துகொண்டிருந்தது.
அதில் முதன்மையான ஒருவர் அத்தநாயக்காவிடம் ஒரு வேண்டுதலை முன்வைத்தார்.
” ஐயா… நீங்கள் உங்கட ஆக்களோட முகாமடிச்சு இருக்கிற இந்த இடம், எங்கட பிள்ளையள் துயில்கின்ற இடம். வருசாவருசம் விளக்குக் கொளுத்தி, மாலைபோட்டுக் கும்பிட்டிட்டுப்போன இடம். இந்த இடத்தை இனி நீங்கள் விட்டுக் கொடுக்க வேணும். எங்கட பிள்ளையளுக்கு நாங்கள் கடமையைச் செய்ய வேணும்…”
அத்தநாயக்கா அவர்களது வேண்டுதல்களைச் செவிமடுத்துக் கேட்டார். அவர்களைப் பார்க்க அவருக்குத் தன் ஊரின் ஞாபகங்கள் வந்தன. தனது உறவுகளின் முகங்களும் தெரிந்தன.
அதேசமயம், தனது மேலதிகாரிகள், அவர்களுக்கு மேலான தீவிரப்போக்குடைய மதவாதம் கொண்ட அரசியல்வாதிகள் பலருடைய கடும்போக்கு மற்றும் இனவாத அரசியல் பின்புலங்களுக்கு முன்னால் தனது நடவடிக்கைகள், இரக்கச்செயற்பாடுகள் பலவும் பின்விளைவுகளையும் அந்தப்பின்விளைவுகள்மூலம், தான் அனுபவிக்கப்போகும் அசெளகரியங்கள், அவமானங்கள் பலவற்றையும் அவர் நினைத்துப்பார்க்கத் தவறவில்லை.
அவர் தனக்கு முன்பாக தங்களது வேண்டுதல்களை ஒப்புவித்துவிட்டு நிற்பவர்களை அமைதியாகப் பார்த்தார். பின் தனது கருத்துக்களைக் கூறினார்.
“நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையானவை. அதை நான் மறுதலிப்பதற்கில்லை. ஒருகாலம் உங்களது பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் சண்டை நடந்து, இருபகுதியிலும் சாவடைந்தது உண்மைதான். இப்போது எல்லாமே மாறிவிட்டன. ஆனால், எங்கள் பக்கத்தில் இருக்கின்றவர்களுக்கு மனம் இன்னமும் மாறவில்லை. தெளிவான சிந்தனைகள் பிறக்கவில்லை. தூரநோக்குப் பார்வைகள் இல்லை. இந்த மாவீரர் துயிலுமில்லத்துக்குமேல், முகாமடிச்சு, பூஸ்ட்கால்களால நடந்து திரியுற ஒவ்வொருகணமும் நான் எனக்குள்ளே வேதனைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறன். ஏனென்றால், நானும் உங்களைப்போல ஒரு மனிசன். எனக்கும் ஊரில குடும்பம் எண்டு ஒண்டு இருக்குது…”
அத்தநாயக்கா பேசுவதை நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கினார். வந்தவர்கள் அவரைக் குழப்பத்துடன் பார்த்தார்கள். மீண்டும்… அத்தநாயக்கா அவர்களுடன் பேச ஆரம்பித்தார்.
“இங்கு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பணி, இந்த இடத்தை வேறு எவரும் கையகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதொன்று. இந்த நிலையில், நான் உங்களுக்காக விட்டுக் கொடுத்துவிட்டு, உபத்திரவப்படவேண்டும். இது எனது தனிப்பட்ட பிரச்சினை இல்லை. இந்த நாட்டோடை, இராணுவத்தோடை சம்பந்தப்பட்டது. அதற்கும் அப்பால் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டு நிற்பது…”
“அப்ப நாங்கள் என்னதான் செய்யிறது…?”
வந்தவர்களில் ஒருவரான மதகுரு கேட்டார்.
” நீங்கள் பட்டணத்தில இருக்கிற எங்கட பெரியையாவிடம்போய் உங்கட பிரச்சினைகளைச் சொல்லுங்கோ. நீங்கள் வாக்குப்போட்டு, உங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை பெரியையாவிடம் கதைக்கச் சொல்லுங்கோ. அவர் என்ன சொல்லுகிறாரோ அதன்படிதான் என்னால் எதையும் செய்ய முடியும்….” என்று கூறிய அத்தநாயக்கா, அடுத்ததாக ஒருகேள்வியை அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
” அதுசரி… மாவீர் குடும்பத்தவர்களாகிய நீங்கள்தானே வந்துள்ளீர்கள்! நீங்கள் வாக்குப்போட்டு உங்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருத்தரும் உங்கள்கூட வரவில்லையா…?”
“அவங்கள் கிடந்தானுகள் விசரனுகள்…”
கூட்டத்துக்குள் நடுவிலிருந்து ஒலித்துக்கொள்கிறது ஒருகுரல்.
அத்தநாயக்காவின் முகத்தில் அர்த்தம் பொதிந்ததொரு புன்னகை!
” ஐயா! இது எங்களது ரண்டாவது வேண்டுதல்…” இப்போது கிராமசேவகரின் குரல் ஒலிக்கிறது.
“என்ன சொல்லுங்கோ…”
“உங்களது நிலைமை எங்களுக்குப் புரிகிறது. நாங்கள் எங்கட பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தேயாக வேண்டும். அதனால இந்தத் துயிலுமில்லத்துக்குப் பக்கத்தில இருக்கிற காணியைத் துப்புரவு செய்துபோட்டு, எமது வழிபாடுகளைச் செய்ய அனுமதிப்பீர்களா..?”
வந்தவர்களது முகங்களில் ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்புத் தென்படுவதை அத்தநாயக்காவால் புரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து மறுதலிப்பதற்கான வெளிப்படுத்தல்களைக் காண்பித்தால், இந்த மக்களால் நான் வெறுக்கப்பட்டு விடுவேன். இதன் நிமித்தம் எல்லா இராணுவத்தினரும் ஒரே மாதிரியானவர்கள், ஒரே குட்டையிலூறிய மட்டைகள்… எனும் தவறான அபிப்பிராயங்கள் அவர்கள் மனதிலே வேருன்றும். அதுவே நாளடைவில் வன்ம விருட்சமாகி வளரும்போது, இன ஐக்கியம் சிதைவுறும்… என்பதை உணர்ந்துகொண்ட அத்தநாயக்கா, கிராமசேவகரின் வேண்டுதலுக்குச் சம்மதம் தெரிவித்தார்.
மாவீரர் குடும்பத்தவர்களின் மனம் ஆனந்தப்பூரிப்பால் அந்த இடம் அமர்க்களப்பட்டது.
இரண்டு நாள்களின் பின்பு…
“தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனைப் பேழைகளே…!”
ஒலிக்கத் தொடங்குகிறது மாவீரர் தினப்பாடல்!
அத்தநாயக்கா பாடல்வரும் திக்கைப் பார்க்கிறார். பெருமளவான மக்கள் குழுமிநிற்பது, அவருக்குத் தெரிகிறது. தொடர்ந்தும்… வாகனங்களில் பலர் வந்திறங்கி, அந்தத் தற்காலிக துயிலுமில்லத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் பூமாலைப்பொதிகள்… படையலுக்கான தின்பண்டச் சரைகள்…
மாலைநேரம் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
அவரவர் தங்கள் நினைவுப்பந்தங்களுக்கு முன்னால் நின்று சுடரேற்றுகிறார்கள்.
” எங்கே… எங்கே… ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்…
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்…”
பாடலின் வரிகள்… பலரது உணர்வுகளை, நினைவுகளைக் கிளறி விடுகின்றன.
அவர்கள் தங்கள் மனதுக்குள் பொத்தி வைத்திருந்த மனக்குமுறல்களைத் தாங்க முடியாதவர்களாய் ஓ…வென்று கத்திக் குளறி அழத்தொடங்கினார்கள்.
அத்தநாயக்கா… இவர்களுக்குச் சற்று தூரத்தில் நின்றவாறு, எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தார். அவரோடு கூடவந்த சிப்பாய்கள், நடைபெறும் மாவீரர் தினநிகழ்வினைத் தங்கள்
‘போன் கமெரா’வினால் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.
‘அவர்கள் கேட்ட இரண்டாவது வேண்டுதலை நான் நிராகரித்து விட்டிருந்தால்…’
போரில் இறந்துபோன எல்லாருக்காகவும் இப்போது அத்தநாயக்காவும் அழத்தொடங்கினார் தனக்குள்ளே.
●
(தமிழர் தளம் : 16- 11 – 2018)
——————————
08)
●
பின்னூட்டமொன்றை இடுக