போர்த்தழும்புகள்

– அலெக்ஸ்பரந்தாமன்.

“””””””””””””””””””””””””””””””””

    பரமன் சோற்றை உண்டு கொண்டிருந்தான். சோற்றின் அரைப்பகுதி இலையில் கிடந்தது. பசி உணர்வைவிட, தண்ணீர்த் தாகமே அவனுள் மேலோங்கியிருந்தது. தண்ணீரைக் குடித்தால், சோறு சாப்பிட முடியாது… என்ற சிந்தனை மேலிட , குவளையில் இருந்து நீரையெடுத்து ஒருமிடறு குடித்துவிட்டு, குவளையை மீண்டும் மேசையில் வைத்தான். பசி அவதியில் அவசரம் அவசரமாகச் சாப்பிட்டதில், களைப்பு ஏற்பட்டிருந்தது அவனில். 

    ” வாங்கோ… வாங்கோ… உள்ள வாங்கோ…” உணவகப் பணியாளரின் குரல் அடிக்கொருதடவை ஒலித்தபடி… இருந்தது. 

    உணவகத்துக்குள் வந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். வயதுக்கு வந்த  மொத்தம் எட்டு உறுப்பினர்களைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த உடைகளும் மீசை மழிக்கப்பட்ட ஆண்களின் முகத்தோற்றங்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தி நின்றன. உணவகத்தின் உள்ளே ஒரு மேசையும் நான்கு கதிரைகளும் காலியாக இருந்தன. அக்குடும்பத்தில் உள்ளவர்கள் நான்குபேர் அக்கதிரைகளை நோக்கிச் சென்று அமர்ந்து கொண்டார்கள். மிகுதி நான்குபேரும் ஒன்றாக இருந்து உணவருந்துவதற்கு, காலியான கதிரைகள் இருக்கின்றனவா? எனச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். பரமன் இருக்கும் இடத்தில் மூன்று கதிரைகள் காலியாகக் கிடந்தன. அவர்கள் நால்வரும் அவனது மேசைக்கு அருகில் வந்து, மூவர் மட்டும் அமர்ந்து கொள்ள,  ஒருவர்  இருக்க இடமின்றி செய்வதறியாது நின்று கொண்டிருந்தார்.

    பரமன் தனக்கு முன்பாகவும் பக்கத்திலும்  வந்திருப்பவர்களைக் கண்டும் காணாததுபோன்று, தனது உணவை உண்டு கொண்டிருந்தான். அச்சமயத்தில் உணவு பரிமாறுபவர் ஒருவர் அவர்களிடத்துக்கு வந்தார். அவனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருப்பவரிடம் நிற்பதற்கான காரணத்தை வினாவ, அவர் சிங்களமொழியில் பதிலளித்தார். 

    பரமனைத் திரும்பிப் பார்த்தார் உணவு பரிமாறுபவர். 

    ” தம்பி! நீர் உம்முடைய சோத்தை அப்படியே தூக்கிக்கொண்டுபோய் அடுத்த மேசைக்குப் பக்கத்தில கதிரை கிடக்குது. அதில இருந்து தின்னும்.” 

    பரமனுக்குச் சினம் பொங்கியது.  இருப்பினும், அதை வெளிக்காட்டாமல் சோற்றை உண்பதில் கவனமாக இருந்தான். 

    சோறு பரிமாறுபவர் தொடர்ந்தும் இரண்டு தடவை அவனிடம் சொன்னார். அவன் அவரது பேச்சைக் கவனத்தில் எடுக்கவில்லை. தொடர்ந்தும் சோற்றை உண்டுகொண்டிருந்தான். 

    மறுவிநாடி, சோற்றைப் பரிமாறுபவர் அவனது சோற்றிலையை அப்படியே தூக்கி மறுமேசைக்கு நகர்த்த முற்பட்டபோது, பரமன் தன் கதிரையை விட்டெழுந்தான்.

    ” ஹலோ! என்ன வேலையிது. சோத்திலையை மேசையில வையும்.”

    பலத்த குரலில் கத்தினான் பரமன்.

    உணவகத்தின்  நடுப்பகுதியில் ஏற்பட்ட சத்தத்தைத் தொடர்ந்து, மறுகணம் ஏற்படவிருக்கும் களேபரத்தை உணர்ந்து கொண்டார் உணவக முதலாளி.  உடனை தனது காசுலாச்சியை உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டு, திறப்புக்கோர்வையுடன் நடுப்பகுதிக்கு விரைந்து வந்தார். 

    பரமனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அந்தத் தென்பகுதி மனிதர், தங்களால் சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதை விரும்பாதவராக வேறு ஒரு காலியான கதிரையில்போய் அமர்ந்து கொண்டார். 

    சிக்கலுக்குரிய மூலகாரணத்தை அறிந்த உணவக முதலாளி,  சோறு பரிமாறியவரைக் கண்டித்தார். நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார். விடயம் சிங்களவர்களோடு சம்பந்தப்பட்டது. சிக்கல் பெரிதாகி வெளியே போனால், பத்திரிகைக்காரர்களுக்குச் செய்தியாகப் போய்விடும். பிறகு அது இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு மேடைக்குப் பேசு பொருளாகி விடும். இதனால் தனது தொழில் பாதிக்கப்படும்… என்ற அச்சத்தில், அந்த நிகழ்வை அப்படியே உணவகத்துக்குள் அமுக்கி விட்டார்.

    பரமன் தனக்கு இடப்பக்கமாக அமர்ந்திருக்கும் அந்தச் சிங்கள இன மனிதரைத் திரும்பிப் பார்த்தான். அவரிடமிருந்து மென்மையான சிறுசிரிப்பொன்று  அவனை நோக்கி வெளிப்பட்டது. முன்னால் இருக்கும் பெண்மணிகள் இருவரும், தன்னைக் கூர்ந்து அவதானிப்பதாகவும் அவனுக்குத் தென்பட்டது.

    நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்தன. 

    சற்றுமுன் பரமனிடத்தில் குடிகொண்டிருந்த சினம் மற்றும் ஆவேசம் அனைத்தும் இப்பொழுது முற்றாகவே அடங்கியிருந்தன. வெகு அமைதியாக தங்கள் தாய்மொழியில் உரையாடியபடி… உணவருந்திக் கொண்டிருக்கும் அந்த மூவர்மீதும் அவனது கண்ணோட்டம் அதிகரித்தது. 

    “வணக்கம் தம்பி…”

    பரமன் திகைத்துப்போய் விட்டான். தனக்குப் பக்கத்தில் இருப்பவர், தன்பக்கம் திரும்பி தமிழ்மொழியில் உரையாடலைத் தொடங்குவார்… என அவன் எதிர்பார்க்கவில்லை. பதிலுக்கு வணக்கம் சொல்லாவிட்டால், மதிப்பற்ற நிலை ஏற்படும் என்ற நினைப்பில், அவரைப் பார்த்து அவனும் பதில் வணக்கம் கூறினான்.

    பதிலுக்கு அவன் வணக்கம் சொன்னதும், உணவருந்திக்கொண்டிருந்த மூவரது முகங்களிலும் தென்பட்டன சந்தோஷமான வெளிப்பாடுகள். 

    அவனுக்குப் பக்கத்தில் இருந்தவர், அவன் கேட்காமலேயே தங்களைப்பற்றிய விபரங்களை அரைகுறைத் தமிழாகத் தெரிவிக்கத் தொடங்கினார். 

    ” என்பெயர் சிறிசேன. இவ என் மனைவி. மற்றவ மகள். மொரட்டுவையிலிருந்து சுற்றுலாவாக வந்திருக்கிறோம்…” என் கூறியவர்  ” நீங்கள் கோபப்பட்டது நியாயம்தான். அந்தாள் உங்கட சோற்றை அப்படித் தூக்கியிருக்கக் கூடாது…” என்றார். 

    பரமன் தனது செயல் குறித்து வெட்கப்பட்டான். 

    சிறிசேன தொடர்ந்து அவனுடன் கதைக்க ஆரம்பித்தார். 

    ” தம்பி எங்கை வேலை பார்க்கிறீர்?”

    ” நான் ஒரு பத்திரிகையாளன்…” என்று கூறியவன் ரவுணுக்குள், தான் பணிபுரியும் ஊடகத்தின் பெயரைக் குறிப்பிட்டான். 

    “மெத்தச் சந்தோஷம்…” என்று கூறிய சிறிசேன, அவனது ஊர்பற்றி விசாரித்தார். 

    அவன் “வன்னி.. ” என்றான்.

    வன்னி என்று சொன்னதும், சிறிசேனவிடம் மட்டுமல்ல, அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த அந்த இருபெண்களின் முகங்களிலும் சிறு சலனம் தென்பட்டது.

    ” யுத்தம் அகோரமாக நடந்த இடம்.. “

    சிறிசேன கூறினார். பதிலுக்கு அவனும் தலையாட்டி ஆமோதித்தான்.

    ” நம்மட, உங்கட சகோதரங்கள் நிறையச் செத்த இடம்… மிகுந்த அவலம் நடந்த இடம்… மேற்குநாடுகளின் குண்டுகளைப் பரீட்சித்துப் பார்த்த இடம்.. ” சிறிசேன கூறிக்கொண்டே இருந்தார். 

    அவனும் கேட்டுக்கொண்டே இருந்தான்.

    சோறு பரிமாறுபவர் இரண்டாவது தடவையாக வந்து, சிறிசேனவின் இலையில் சிறிய அளவில் சோற்றைப் பரிமாறிவிட்டுப் போனார். 

    ” நாட்டிலே நடந்த முடிந்த யுத்தத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

    சிறிசேனவைப் பார்த்துச் சடுதியாகக் கேட்டான் பரமன். 

    சில விநாடிகள்வரை மெளனித்திருந்தார் சிறிசேன. பின்பு பரமனது கேள்விக்கான பதிலைக் கூறத் தொடங்கினார். 

    ” ஒருகாலம் எவ்வளவு அழகான தீவாக இருந்தது இந்த நாடு. பதவி சுகத்துக்காக இந்த அரசியல்வாதிகள் என்றைக்கு மக்களைப் பகடைக்காய்களாக்க வெளிக்கிட்டார்களோ அன்றிலிருந்து சபித்தலும் அழுகையும் அவலமுமாகவே ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் மாறிப்போய் இருக்கிறது. எய்தவர்கள் அக்கரைக்குப்போய்ச் சேர்ந்து விட்டார்கள். இருப்பவர்கள் இன்னமும் அதேவழியில் எய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் வெறும் அம்புகள். எங்களால் என்ன செய்ய முடியும்?” 

    கூறும்போதே சிறிசேனவின் விழிகளில் நீர்த்துளிகள் திரண்டதை அவதானித்தான் பரமன். 

    “நாங்கள் போரை விரும்பியவர்கள் அல்ல. காலமும் சூழ்நிலையும் சில அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற வழிநடத்தல்களும்தான் நாம் ஆயுதம் தூக்கவும் அரசுக்கு எதிராகப் போராடவும் வேண்டிய தேவை ஏற்பட்டது. நடந்து முடிந்த யுத்தம் எங்கள்மனதில் என்றுமே நீங்காத தழும்புகள். அதே சமயம், அந்தத் தழும்புகளையும்மீறி  எங்களின் மனதை வெல்வது என்பது இனி எவராலுமே முடியாத காரியம்…”

    பரமனது கூற்றைச் செவிமடுத்துக் கேட்டார். சிறிசேன. பின் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். 

    ” அது முற்றிலும் உண்மை. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் உள்பட எங்கட பக்கத்தில் உள்ள இன்னும் பலபேருக்கு இது இன்னமும் விளங்காமல் இருப்பதுதான் வேதனை தரும் விடயம்… ” என்றார்.

    நேரம் கடந்து விட்டிருந்தது. இருவரது இலைகளிலும் சோறு தீர்ந்திருந்தது. 

    பரமன் எழுந்து தன்இலையை உரிய இடத்தில்போட்டுவிட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு, திரும்பவும் கதிரையில் வந்து அமர்ந்தான். சிறிசேன தனது இலையையும் முன்னால் அமர்ந்திருந்த இருபெண்களின் இலைகளையும் ஒருங்கு சேர்த்து, எல்லோருமாக இலைகள் போடும் இடத்துக்குச் சென்றார்கள். அங்கு கழிவுத்தொட்டியில் இட்டுவிட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு மேசைக்கு வந்தார்கள்.

    பரமன் தன் கதிரையை விட்டெழுந்து முன்பகுதிக்கு வந்தான். அவனுக்குப் பின்னால், சிறிசேனவோடு வந்தவர்களும் எழுந்து வெளியே வந்து, தமது வாகனத்தின் அருகில் நின்றார்கள். 

    “இந்தாரும் தம்பி…” பரமன் திரும்பிப் பார்த்தான். 

    தனது கையில் ரொபிகள் சகிதம் சிறிசேன அவன்முன்பாக வந்து, கைகளை நீட்டியவண்ணம் நின்றார். 

    பரமன் மெலிதான ஒரு புன்முறுவலுடன் ஒன்றை எடுத்துக்கொண்டு, அவருக்கு நன்றி கூறினான்.

    ” தம்பி! நாங்களும் போரை விரும்பியவர்கள் அல்ல. உங்களைப் போன்றவர்களின் நிலைமைதான் எங்களுக்கும். இது வெளியே தெரிய வருகுதில்லை. வருவதற்கும் பலம்மிக்க இருதரப்பு அரசியல்வாதிகளும் விடுவதாக இல்லை. நீங்கள் போரினால் நன்றாகவே பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அது எனக்குத் தெளிவாகவே விளங்குது. அந்தப் பாதிப்பின் தழும்புகள்தான் உங்களையும் உங்களைப் போன்றவர்களையும் சினம் கொள்ள வைக்கின்றன. உங்கள் சினம் நியாயமானதே.அதேசமயம், எங்களுக்கும் போர்த்தழும்புகள் உண்டு. தழும்பு மனதில் மட்டுமல்ல உடலிலும் உண்டு…” என்று கூறிய சிறிசேன, தனது செயற்கைக்கால் ஒன்றை அவனுக்குத் தெரியும்படி காட்டினார். 

    திகைத்துப்போன பரமன், சிறிசேனவை நிமிர்ந்து பார்த்தான். 

    “இது எப்படி… உங்களுக்கு…?” 

    சிறிசேன மென்மையாகச் சிரித்துவிட்டுக் கூறினார். 

    “90களின் நடுப்பகுதியில் புலிகளுடன் போரிடும்போது, ஏற்பட்டது…”

    சிறிசேனவின் பதில் அவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    “அப்ப நீங்கள்…?” 

    “சிறிலங்கா இராணுவப்படையிலிருந்து விலகிய  ஒரு முன்னாள் சிப்பாய்…” 

    பரமனால் நம்ப முடியவில்லை. 

    ‘போரின் கனதியைத் தெரிந்தவர்களால்தான், எங்கள் இழப்பின்வலி புரிந்து கொள்ளப்படுகிறது…’ என்பதை அவன் உணர்ந்தான். 

    தூரத்தே சிறிசேனவின் வாகனம் சென்று கொண்டிருந்தது. 

    அவர் கொடுத்த ரொபி, இப்போது உள்ளங்கையில் ஒரு விலைமதிப்புள்ள ஓர் உயர்ந்த பொருளாகத் தெரிந்தது அவனுக்கு.

            (எதிரொலி : 15 – 08 – 2018)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.