‘கரையில் மோதும் நினைவலைகள்’

தர்மினி- பிரான்ஸ்

தமிழ்நாட்டில் பயணம் செய்யும்போது ஏதாவது ஒரு சொல்லில் கண்டுபிடித்து விடுவார்கள். ‘நீங்க சிலோனா?இலங்கையா? ஈழமா?’ என்று கேட்டு அடுத்துக் கேட்பது ‘நாட்டு நிலமைகள் எப்படியிருக்கு?’ உரையாடல் தொடரும். பொது மக்கள் கவலையோடும் அக்கறையோடும் விசாரிப்பது உண்மை. ஓலா ஓட்டுனர் ஒருவர் சொன்ன விடயம் மறக்க முடியாதது, படிக்கும் காலத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி பின் தன் படிப்பு இடையில் நின்று தன்னுடைய வாழ்வு எப்படிப் பாதிக்கப்பட்டதென்று கவலையாகப் பேசினார். இப்படிப் பலர் உண்மையாகவே உறவுகளின் துன்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று களமிறங்கியதும் உதவியதும் பதவிகள் இழந்ததும் அறிவோம்.

பக்கத்திலிருந்து ஆயுதப்பயிற்சி கொடுத்து இச்சிறு தீவில் விளையாடியவர்களின் அரசியலும் நோக்கங்களும் வேறு. இனவாதம் எப்போதும் அருவருப்பானது, பயங்கரமானது. ஈழத்தமிழர், ஈழம் என்று சாதாரண மக்கள் கொண்ட பற்று இந்த அரசியல் சூதுக்களை அறியாத நிலை. ஆனால், அப்போது பயிற்சிகளை எடுத்த இயக்கங்களின் மத்திய குழுக்களும் தலைவர்களும் இதையெல்லாம் அறிந்திருக்க வாய்ப்புண்டு. இல்லையென்றால் அந்த அரசியலும் தெரியாமல் தான் தனி நாடு கேட்டுப் போராடியிருக்கிறார்கள் என்பது அவலமானது. ரோவும் கியு பிராஞ்சும் இயக்க அலுவலகங்களுக்குப் போய் வந்து எல்லாவற்றையும் பார்த்து நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் எழுதிய நுால்களும் கட்டுரைகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆயுதங்களை நம்பி நீதியைப் பெற முடியாது என்ற பாடத்தை அடுத்த சந்ததியினர் கற்றுக் கொள்ள இது உதவும்.

அவ்வாறான பாடங்களைப் படிக்க ஆயுதப் போராட்டங்களைப் பார்த்த, ஈடுபட்ட, பாதிக்கப்பட்ட, அகதியான… ஒவ்வொருவரும் தத்தம் கதைகளை எழுத வேண்டும். போரும் அகதிப் புலம்பலும் போதும் என்பவர்கள் படிக்காமல் விடலாம், எழுதும் திறமையுள்ளவர்கள் எழுதட்டும்.

நான் சமீபத்தில் படித்து மனம் கலங்கிய ‘கரையில் மோதும் நினைவலைகள்’ என்ற புத்தகம் நோயல் நடேசன் இணையத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இது நுாறு வீதம் உண்மைகள் என்ற குறிப்புடன் நுாலாக்கப்பட்டுள்ளது

1983 ஆடி மாதம் நடந்த தமிழர் மீதான வன்முறைகளைத் தொடர்ந்து நாட்டை விட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார் நோயல் நடேசன். எந்த இயக்கத்தின் உறுப்பினரும் இல்லாத இவர் தன் அரசாங்க வைத்திய வேலையை விட்டுவிட்டுப் போகிறார். அங்கே மருத்துவ நிலையமொன்றை அமைத்து மூன்று ஆண்டுகள் அகதி முகாம்களுக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் உதவிகள் வழங்குவது என தன் மனைவியோடும் நண்பர்களோடும் இணைந்து இயங்கினார். பின்பு அவுஸ்திரேலியா சென்றவர்; படிப்பு, அகதி வாழ்வு, வேலை தேடுதல் எனத் தன் நேரத்தைச் செலவழித்துக் கொண்டு சற்றும் சோராது தன்னை அந்நிய நாட்டில் நிலைநிறுத்தியபடி … ‘உதயம் என்ற மாத இதழையும் 13 ஆண்டுகளாக வெளியிட்டு வந்தார். மாற்றுக்கருத்தாளன், துரோகி…போன்ற பட்டங்களும் அங்கு மேலதிகமாகக் கிடைக்கிறது.

62 வயது வரையான அவரது நினைவுக் குறிப்புகளும் அனுபவங்களும் நிறைந்த இந்நுாலில் ஆங்காங்கே இயக்கத் தலைவர்கள் பற்றியும் இந்திய அரசாங்கம் செய்த நரித் தந்திரங்கள் (எனக்கு அப்படித்தான் விளங்கியது) ,புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்த குளறுபடிகள், மோசமான அரசியல்கள்…இப்படிப் பலவுமாகத் தான் கண்டவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் முன் வைத்து சில உண்மைகளை நமக்குக் காண்பிக்கிறார்.யாரைக் கேட்டு மக்களைப் பலி கொடுத்தார்கள் இவர்கள் என்று கோபப்படாமல் இருக்க முடியவில்லை.

எந்தவொரு இயக்கமும் சாராத பொதுவான ஒரு ஆளாக இயங்கிய நோயல் நடேசன் எழுதிய சின்னச் சின்னத் தகவல்கள் கூட, நமக்கு நிறையத் விசயங்களை அங்குமிங்குமாக ஒன்று சேர்த்து யோசிக்கவும் பதறவும் வைக்கின்றன. இப்படியான அனுபவங்களையும் கண்டவற்றையும் உறுதியாக அறிந்தவற்றையும் இயக்க இரகசியம் பேணுகிறோமென்று பூதங்களாகக் காவல் காக்காமல் உயிரோடு இருப்பவர்கள் வெளிப்படையாக எழுதி சுயபரிசோதனையைச் செய்யவேண்டும். சில ஆண்டுகளின் முன்னர் சுவிஸ் ரவி எழுதி வெளியாகிய ‘குமிழி’, கோவிந்தன் எழுதிய ‘புதியதோர் உலகம்’ ஆகிய புத்தகங்கள் இதைப் படித்த போது நினைவுக்கு வந்தன.

நடேசன் எழுதியவற்றிலிருந்து இரண்டு சம்பவங்கள் படித்தபோது இந்தப் போராட்டங்கள் என்ன மாதிரியாக நடந்தது என்று நினைத்து மிகுந்த வேதனை ஏற்பட்டது. திருகோணமலையிலும் கொழும்பிலும் அழிவுகளைச் செய்ய அமெரிக்காவிலிருந்து நான்கு தமிழர்களும் இந்திய உளவுத்துறையும் கட்டளையோ வேண்டுகோளோ இடுகின்றன. அவை நடக்கின்றன. அழிவுகள் தொடர்ந்தன.இதைத் தான் அவர்கள் விரும்பினார்கள்!

ஆளையாள் கொன்று கொன்று பெற்றது ஒன்றுமில்லை. பயங்கரவாதிகளென்று தடைசெய்யப்பட்ட இயக்கம்; இதோ… அரசியல் வழி, தேர்தல் நெறி என நாம் வாழும் காலத்திலேயே மக்கள் மனங்களை வென்றிருக்கிறது.

சனங்கள் சமத்துவமான நீதியான நாட்டை /ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள் என்பது இன்றைய நிம்மதி !

வாசித்து ஒரு கிழமையாகி விட்டது. நினைவில் வைத்து அப்படியே எழுதிவிட்டேன். சின்ன வயது ஊர் ,பள்ளிக்கூடம், தங்கும் விடுதி, அப்பாவின் சுபாவம்,அம்மாவின் பாசம், யாழ் நகர், ரியூட்டரி , காதல், பல்கலைக்கழகம்… என்று சுவராசியமான நினைவுகளும் இதிலுள்ளன. அக்காலத்தின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அவுஸ்திரேலியா, இந்தியா, எழுவைதீவு, பேராதனை, யாழ்ப்பாணம் … அத்தியாயங்கள் எழுத்தாளரின் நினைவோட்டத்தில் காலவரிசைப்படி அல்லாது தொகுக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு அது கொஞ்சம் குழப்பத்தைக் கொடுத்தாலும் இடங்களையும் சம்பவங்களையும் அறிந்தவர்களுக்கு இடைஞ்சலாயிருக்காது.

. வெளியீடு மகிழ் பதிப்பகம்( கிளிநொச்சி) டிசம்பர் 2023

15.11.2024

“‘கரையில் மோதும் நினைவலைகள்’” அதற்கு 2 மறுமொழிகள்

  1. அலெக்ஸ்பரந்தாமன் அவதார்
    அலெக்ஸ்பரந்தாமன்

    இந்நூல் குறித்த தர்மினி அவர்களின் பார்வையும் கருத்துகளும் மறுதலிக்க முடியாதவையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையாகவும் இருக்கின்றன.

    2009இற்கு முன் வன்னிப் பெருநிலப்பரப்பில் கணிசமான படைப்பாளிகளும், போராட்ட அமைப்புக்குள்ளும் பல படைப்பாளிகளும் இருந்தனர் என்பது மறுதலிக்க முடியாத உண்மை. அதேவேளை, இவர்களில்உயிர் தப்பி இருக்கும் பலரும்(ஒரு சிலரைத் தவிர) போர் அவலம் குறித்த பதிவுகளை உண்மைத்தன்மையோடு எழுத முன்வராமையானது இவர்களது எழுத்தின்மீதும், கொள்கைமீதும் சந்தேகம் கொள்ளவே வைக்கிறது.

    இங்கே // ஆயுதப்போராட்டங்களைப் பார்த்த, ஈடுபட்ட, பாதிக்கப்பட்ட, அகதியான… ஒவ்வொருவரும் தத்தம் கதைகளை எழுத வேண்டும். போரும் அகதிப் புலம்பலும் போதும் என்பவர்கள், படிக்காமல் விடலாம். எழுதும் திறமையுள்ளவர்கள் எழுதட்டும்// என்று தர்மினி அவர்கள் பதிவு செய்திருப்பதை, போருக்குள் அகப்பட்ட போராளிகள் மற்றும் படைப்பாளிகள் கவனத்தில் கொண்டு பக்க சார்பற்று எழுதுவார்களேயானால், கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மாயை என்பது தெளிவாகப் புலப்படும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.