நிலக்கிளி: நாவல்.

அ. பால மனோகரனின் நிலக்கிளி.

ஒரு கதையை, அதைப் படிப்பவர்களின் மனதில் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறு எழுதுவது என்பது பல எழுத்தாளர்களுக்குச் சவாலான விடயம். அதை மொழியில் காட்சிப்படுத்துவது எனலாம் . அதற்காக எழுத்தாளர்களான நாம் சில யுக்திகளைக் கையாள்வோம்.

ஒரு பெண் நடந்து போனாள் என்பதைவிட அவளது கறுப்பு நிறமான காலணிகளின் ஓசை என்னை விட்டு விலகிச் சென்றது என்போம் – இங்கே ஒலி , காட்சி என்பவற்றின் மூலம் வாசிப்பவரின் மனதில் ஒரு குறித்தசம்பவத்தை நிறுத்த முனைகிறோம் .

அதே போல் மேடையில் திரை விழுந்தது என்பதற்குப் பதிலாக சிவப்புக்கோடுகளைக் கொண்ட திரை, நாடகத்தின் முடிவில் மெதுவாக இறங்கி நாடகத்திலிருந்து பார்வையாளர்களைப் பிரித்தது என்று எழுதினால், இங்கே அந்தக் காட்சியை இவ்வாறு விவரிப்பதன் மூலம் மனதில் நிறுத்த முயல்கிறோம்.

அவளது பின்அசைவுகள் எனது இதயத்தை வேகமாகச் சுருங்கி விரியப் பண்ணின எனும்போது – இங்கே இரண்டு செயற்பாடுகளை நாம் காட்ட முயல்வதும் வாசகரின் மனதில் காட்சிப்படுத்தும் முயற்சியே ஆகும்.

கருமேகங்களாகக் கூந்தல் இருந்தது – எனும்போது மேகம், கூந்தல் ஆகிய இரண்டு பொருட்களை ஒப்பிடுகிறோம்.

இப்படியான உத்திகளைக் காளிதாசனிலிருந்து, கம்பன், பாரதி எனப் பலர் எடுத்தாண்டிருக்கிறார்கள். அவற்றையே  நாமும் பின்பற்றுகின்றோம்.

இத்தகைய காட்சி மொழியில் நம் நாட்டில் எழுதப்பட்ட நாவல்கள் மிகவும் குறைவாகும். பெரும்பாலான நாவல்கள் வார்த்தைகளால் மட்டுமே கதை சொல்பவையாக உள்ளன.

இலங்கைத் தமிழில் 50 வருடங்கள் முன்பு எழுதப்பட்ட, அ. பாலமனோகரனின் நிலக்கிளியை அக்காலத்தில் வாசிக்கும்போது,  அந்த இளம் வயதிலும் என் மனதில் நின்றது “நிலக்கிளி” என்ற பெயர் மட்டுமே. அதுவே ஒரு பெரிய விடயந்தான்!

“கனவுச் சிறை” , “மோகமுள்”,  மற்றும் எனது நாவலான “கானல்தேசம்” என்பன பெயரிலேயே முழு நாவலின் உள்ளடக்கத்தையும் கூறிவிடுகின்றன. ஒருவிதத்தில் திருக்குறள் இரண்டு வசனங்களில் ஒரு தத்துவத்தைப் புகுத்துவதுபோல் என்று சொல்லலாம்.

நிலக்கிளியைப் பற்றி வெளிவந்திருக்கும் எல்லாப் பதிவுகளிலும்  அது வன்னி நிலப்பரப்பைச் சொல்லும் கதை என்றே எழுதி இருப்பதை நான் படித்தபோது அவதானித்துள்ளேன். அவ்வாறு எழுதியவர்களுள் பெரும்பாலானோர்,  இலக்கியத்தில் அதிகம் புரிதலில்லாது, ஒருவர் கூறிய வார்த்தைகளை மற்றவர்களும் பிரதி பண்ணியிருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. சற்று ஆழமாகப் பார்த்தால் இது வன்னியை அவமதிக்கும் ஒரு தவறான கருத்தாகும். மேலும், இதை விட வன்னியைப்பற்றி கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மூலம் அந்த நிலப்பரப்பைக் கண் முன்னே துல்லியமாகக் காட்சிப்படுத்தலாம். வன்னி என்பது, முன்னர் முல்லை நிலத்திற்குரிய நில அமைப்போடு விளங்கிப் பின்னர், காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் குடியேறிய இடமாகும்.

நிலக்கிளியில் நமக்குக் கிடைப்பது பதஞ்சலி என்ற பெண்ணை வைத்து எழுதப்பட்ட கதை . அதில் கணவனில்லாத நேரத்தில் அந்த கிராமத்திற்கு வரும் ஆசிரியர் சுந்தரத்துடன் இணைந்த ஒரு பெண் மீண்டும் எப்படிச் சுயத்துடன் வெளிவருகிறாள் என்பதே  கதையின் உச்சமாக உள்ளது.

இதற்கு மாறாக, அவளது குழந்தை சுந்தரத்தைப் போல் இருந்திருந்தாலோ, அல்லது அவள் கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டேன் எனத் தற்கொலை செய்திருந்தாலோ இந்தக் கதை கந்தலாகி இருக்கும்.

பதஞ்சலி என்ற பெண்ணின் பாத்திரப்படைப்பு அவள் சிறுமியாக இருந்த  பருவத்திலிருந்து தாயாகும் வரையான காலப்பகுதியைக் கொண்டிருப்பதாக உருவாக்கப்பட்டிருப்பதே,  இந்தக் கதையின் முக்கியத்துவமாகும். மகாபாரதத்தில் பாஞ்சாலி அந்தக் கதையை நகர்த்துவது போல, இங்கே பதஞ்சலி இந்தக் கதையை அவள் போகுமிடமெல்லாம் உருட்டிக்கொண்டு செல்கிறாள். இங்கே  பாத்திரங்களாக உள்ள கதிராமன், கோணமலையர் போன்றவர்கள் தங்கள் புறச்செயல்களால் மட்டுமே கதையில் இடம் பெறுகிறார்கள்.

ஆனால் சுந்தரத்தின் பாத்திரம் ஒரு தேவைக்காக இங்கு அழைத்து வரப்பட்டபோதிலும் சுந்தரத்தின் அகமோதல்களை வெளிக்காட்டுவதில், கதாசிரியர் வெற்றியடைகிறார். இந்த நாவலின் புற, அகக் காட்சிகள் ஒரு நல்ல சினிமாவுக்கு உகந்தவகையில் உள்ளன. மேலும்,  சிக்கல்கள் நிறைந்த மனித வாழ்விற்கு சாட்சியமாக,  எக்காலத்திலும் நலிவடையாது, நித்தியமாகப் பேசப்படத்தக்க ஒரு நாவல் என்றும் இதனைச் சொல்ல முடியும்.

நாவலுக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் எஸ் பொன்னுத்துரை “நிலக்கிளி காலத்தால் மருவியது. முல்லை நிலம் மருவிய கழனி நில வாழ்க்கையைச் சித்தரிக்கிறது!” என்றுவிழிப்பிசைக் குறி (exclamation mark) போட்டுத் தனது வார்த்தையை உறுதிப்படுத்தி எழுதியிருப்பது மிகத் தவறானது. ‘நிலக்கிளி’ நாவலின் கதை முல்லை நிலத்திற்கு மட்டும் உரியதல்ல. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நிலத்திலும் நடக்கும் விடயமது!

செல்வா கனகநாயகம் வேறு நாவலையும் இந்த நாவலில் சேர்த்து எழுதிய குறிப்புகள் அவலை நினைத்து உரலை இடிப்பது போன்றது. ஆனால் மீளப் பதிப்பித்த எம். பௌசர் இந்த நாவலை நன்கு புரிந்துகொண்டுள்ளார் என்பது அவரது குறிப்பில் இருந்து தெரிகிறது.

நாவலின் பதிப்பாளர்கள், இறுதிப் பகுதியில் பக்கங்கள் மாறித் தவறாகப் பதிப்பித்து விட்டார்கள். நல்லவேளையாகப் பக்க எண்கள் சரியாக உள்ளதால் தேடிப் பிடித்துப் படிக்கக்கூடியதாக இருந்தது. இப்படியான வேளையில் மனச்சோர்வை ஏற்படுத்தாததற்கு நாவலின் சிறப்பே காரணம்.

இலங்கை நாவல்களில் சில நாவல்கள் மட்டுமே செவ்வியல் தகுதி பெற்றவை. அவைகளில் முக்கிய இடத்தில் அ. பாலமனோகரனின் நிலக்கிளி இடம் பெறும் என்பது என் நம்பிக்கை.

———   ——— ———

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.