சரவணன் மாணிக்கவாசகம்

யாழ்பாணத்திற்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத்தீவில் பிறந்தவர். கால்நடை மருத்துவர். பலகாலமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இந்தியாவிலும் சிலகாலம் வசித்திருக்கிறார். ஏற்கனவே ஐந்து நாவல்களை எழுதியுள்ள இவரது ஆறாவது நாவலிது.
எல்லோருக்கும் பிறந்து வளர்ந்த ஊர் குறித்துச் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. சிலரது கதைகளைத் தபால்தலையின் பின்னால் கொஞ்சம் நெருக்கி எழுதி விடலாம். வெகுசிலரது கதைகளே நாவலாக உருமாறுகின்றன.
அவர்களது அவதானிப்பும், நினைவுச் சேகரத்தில் அள்ளஅள்ளக் குறையாது வருவதும் முக்கிய காரணிகள். நடேசன்
தான் பிறந்த ஊருக்கு இந்த நாவலின் மூலம் இலக்கிய அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து சொந்த ஊரான எழுவைத்தீவுக்கு எப்போது வந்தாலும் இராத்தங்காது சென்று விடும் நட்சத்திரன், இம்முறை தங்குகிறான். நித்திரையில் கனவா, பாதி விழிப்பில் கனவா என்பது தெரியாது ஆரம்பிக்கும் நாவல், நினைவுக்குவியலைக் கிண்டி விடுவதே இந்த நாவல். சிறுவனின் பார்வையில், அறுபதுகளில் நடக்கும் கதையிது.
தன்னம்பிக்கை இல்லாதவர்கள், முதலில் வீட்டுப்பெண்களையே அடக்கி ஆள நினைப்பார்கள். குடும்பவன்முறை என்பது இந்த நாவலின் மையக்கரு. ஊரே மதிக்கும் தாத்தா, ஆச்சி ஏதாவது சொன்னால் கூட பேசாமல் இருந்து விடுவதைப் போல, அப்புவால் இருக்க முடிவதில்லை. அம்மாவால் அவரை விட்டு விலக முடியவில்லை. தன் வீட்டு சொந்தக்காரர்களுக்குப் பத்திரத்தைக் கொடுக்கும் அப்பா, சொந்த அக்காவிடம் திரும்பப்பெற்றுக் கொள்வதில் தாமதமான நகைக்காக பிள்ளைகள் எதிரில் அம்மாவைக் கன்னத்தில் அறைவது குடும்பவன்முறை. சிறுவனின் நெஞ்சில் அதில் ஆழமாகப் பதிகிறது. அம்மா மன்னித்தாலும் அவன் மன்னிக்கத் தயாராக இல்லை. அடுத்தது கிரிக்கெட் பேட் சம்பவம்.
அறுபதுகளில் கதை நடப்பதால் இந்தியாவில் இருந்து கள்ளத்தோணியில் வருகிறார்கள், போகிறார்கள். ஐந்து வெறிப்பிடித்த நாய்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்து விட்டுவிட்டுத் தீவின் அமைதியைக் குலைப்பது உருவகம் போலிருக்கிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து அவர்களும், இந்திய மீனவர்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று தமிழ்நாட்டின் ஆபத்பாந்தக அரசியல்வாதிகளும் சொல்ல, உண்மை நடுவில் நிற்கிறது.
நாவலின் நிகழ்வுகள் எதுவுமே வலியத் திணிக்கப்படாது, இயல்பாக ஓடும் நதியின் ஓட்டத்தைக் கொண்டிருக்கின்றன. கதாபாத்திரங்கள், குறிப்பாக தாத்தா, ராணி, சமரசம், ராமலிங்கம், வேலம்மா ஆகியோர் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.
தன்காலில் நிற்கும் தைரியமான பெண், தெருவில் யாரோ ஒருவன் எங்கே படுக்கிறாய் என்பதற்கு முதலில் புரியாது முழித்து, பின் அர்த்தம் தெரிந்ததும் வீட்டுக்கு அழுது கொண்டே வருவது போல, வெகு இயல்பான சம்பவங்களின் அடுக்கு. தாத்தா கொஞ்சம் கொஞ்சமாய் கம்பீரம் தேய்வது என்று இந்த நாவலில் நுணுக்கமான இடங்கள் பல இருக்கின்றன. A five-star read, don’t miss this.
பிரதிக்கு:
வேரல் புக்ஸ் 95787 64322
முதல்பதிப்பு பிப்ரவரி 2023
விலை ரூ. 275
பின்னூட்டமொன்றை இடுக