வாழும் சுவடுகள்:இரண்டாம் பதிப்பு.

பெருமாள் முருகன்.

டாக்டர் நோயல் நடேசன் கால்நடை மருத்துவர். இலங்கையைச் சேர்ந்த இவர் அங்கும் தமிழ்நாட்டிலும் ஆஸ்திரேலியாவிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தவர். இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். நாவல், சிறுகதை முதலியவற்றை எழுதும் புனைகதை ஆசிரியர். அவர் எழுதிய அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு ‘வாழும் சுவடுகள்.’  மார்ச் 2024இல் ஆஸ்திரேலியா சென்ற போது அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். கடந்த சில ஆண்டுகளாக வளர்ப்பு விலங்குகளை மையப்படுத்திக் கதைகள் எழுதிக் கொண்டிருப்பதால் அவற்றைப் பற்றிய நூல்களை ஓரளவு வாசித்திருக்கிறேன். ‘வாழும் சுவடுகள்’ நூலையும் அப்படித்தான் வாசித்தேன். அவரை நேரில் சந்தித்தபோது இந்நூலைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசவும் முடிந்தது.  

ஐம்பத்தாறு கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் மனித வாழ்வின் இன்னொரு பகுதியைக் காட்டுகிறது. அவர் விவரிக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு கதைதான். அதில் முதன்மை இடம்பெறுவது விலங்குகளா மனிதரா என்பதைத் தீர்மானிப்பது அத்தனை எளிதல்ல. விலங்குகளுக்குத் தம் பிரச்சினையைச் சொல்லத் தெரியாது. வளர்ப்பவர்களே அதைப் புரிந்துகொண்டு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். தம் வாழ்வின் ஒருபகுதியை இட்டு நிரப்புபவை வளர்ப்பு விலங்குகள் எனக் கருதும் மனிதர்கள் அவற்றைக் கையாள்வதில் விதவிதமான மனோபாவங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுச் சூழலும் ஒவ்வொரு மாதிரி. ஆஸ்திரேலியச் சம்பவங்கள் மிகுதியும் இடம்பெற்றுள்ளன. 

கால்நடை மருத்துவம் பயின்றவர் தம் பணியனுபவத்தில் மனிதர்களைப் பயிலும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். கட்டுரைகளிலும் மருந்து வாடை நிரம்ப அடிக்கவில்லை. சிகிச்சை முறைகள் பற்றியும் மருந்துகள் பற்றியும் எழுத வாய்ப்புள்ள இடங்களிலும் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார் டாக்டர்.  போகிறபோக்கில் சில வரிகளில் எளிதாகச் சொல்லிச் செல்வதோடு சரி.  அவர் எழுதும் முறையில் விலங்குகளைவிட மனிதர்கள் மீது இரக்கம் தோன்றும் சந்தர்ப்பங்கள் பல. நாய்களையோ பூனைகளையோ வளர்ப்போர் மனப்பாங்கை அறிந்துணர்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்பத் தம் அணுகுமுறையை வைத்துக் கொள்கிறார். அச்சுறுத்தும் சூழலைக்கூடத் தம் அணுகுமுறையால் மாற்றிவிட முடிகிறது.

‘வார்த்தைகளால் இரத்தம் வராமல் கொலைகூடச் செய்ய முடியும்’ என்று ஓரிடத்தில் சொல்கிறார். சொற்களின் பயன்பாட்டை அந்த அளவு அறிந்திருப்பதால் டாக்டர் குறைவான சொற்களையே பேசுகிறார். அது எதிரில் இருப்பவருக்கு எதை உணர்த்த வேண்டுமே அதை உணர்த்திவிடுகிறது. பரபரப்பான நிலையிலும் பொறுமை காக்கும் மருத்துவருக்கான மனநிலையிலிருந்து பிறழ்வதில்லை. அதனால் தான் மாபியாக்காரர்களையே மன்னிப்பு கேட்க வைக்க முடிந்திருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் தம் பேச்சு செய்ய முடியாத மாற்றத்தைச் செயல் நிறைவேற்றித் தருகிறது. ஆகவே செயல் முடியும்வரை பேசுவதையும் விளக்கம் சொல்வதையும் தவிர்க்கிறார்.

தம் தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிவும் வெளிப்படைத் தன்மையும் டாக்டருக்கு இருக்கிறது. எருமை ஒன்றுக்கு அறுவை செய்து கன்றை எடுக்க வேண்டிய இக்கட்டான நேரத்தில் இடப்பக்கத்திற்குப் பதிலாக வலப்பக்கம் மாற்றி அறுத்துவிட்ட சம்பவத்தைச் சொல்கிறார். நடந்த தவறைப் பிறர் கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ மருத்துவருக்கு ஏற்படும் குற்றவுணர்வு நிலைத்திருக்குமே, அதற்கு என்ன செய்வது? என்ன நடந்தாலும் சரி, அதை வெளிப்படுத்திவிடுவது நல்லது. முடியாத போது இப்படி எழுத்தையாவது தேர்ந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம்தான்.

விலங்குகளுக்கு வரும் நோய்கள் பற்றிப் பொதுவாகவே விழிப்புணர்வு இல்லை. பலவிதமான அறியாமைகள் நிலவுகின்றன. சிலவற்றையேனும் மாற்றி இக்கட்டுரைகள் அறிவைத் தருகின்றன. ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’ என்று ஒரு கவிதை நூலில் வைரமுத்து எழுதியிருக்கும் வரியை எடுத்துக் கொண்டு ‘நாய்க்கும் நீரிழிவு வரும்’ என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நாய்களுக்கு வரும் புற்றுநோய்கள் பற்றிப் பல கட்டுரைகள் பேசுகின்றன.

இளவயதிலிருந்து கால்நடைகளோடு பழக்கம் உள்ளவன் நான். அவற்றுக்கு நோய்கள் வரும் என்பதை அறிவேன். மழைக்கால நோய்கள் பற்றிய அறிதல் உண்டு. அவற்றைப் போக்கக் கொஞ்சம் மூலிகை மருத்துவம் எங்களுக்குத் தெரியும். ஊரில் சில அனுபவ வைத்தியர்கள் உண்டு. பாடம் போட்டுப் பச்சிலை மருந்தும் தருவார்கள். அவற்றுக்குக் கட்டுப்படாது இறந்து போன ஆடுமாடுகள், நாய்கள் என எத்தனையோ உயிர்களை இக்கட்டுரைகள் நினைவுக்கு வரவைத்தன. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டதால் சகதுணை தேடி அலையும் வழிகளில் உயிர் துறக்க நேர்ந்த பூனைகள் எத்தனையோ.

இவற்றுக்கும் நீரிழிவு நோய் வரும் என்றோ புற்றுநோய்கள் வரும் என்றோ எனக்கும் தெரியாது. தொடர்ந்து வளர்ப்பு விலங்குகளோடு வாழும் எனக்கு இந்நூல் அறிவைப் புகட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நாய்களுக்கு நோய் முற்றிய நிலையில் கருணைக் கொலையைப் பரிந்துரைக்கிறார் டாக்டர். சிலர் அதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். சிலர் ஏற்பதில்லை. தன் வளர்ப்பு நாயையே கருணைக் கொலை செய்ததைப் பற்றி சமீபத்தில் ஒருகட்டுரை எழுதியிருந்தார். நியாயமான காரணங்கள் இருந்தாலும் ஏனோ என் மனதுக்கு அதுமட்டும் ஒப்பவில்லை.

நோயல் நடேசன், வாழும் சுவடுகள், 2023, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், இரண்டாம் பதிப்பு, விலை ரூ.300.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.