புதிய தலைமுறையினரும் இணையும்

இலங்கை மாணவர் கல்வி நிதியம்


அவுஸ்திரேலியாவிலிருந்து
கடந்த
36 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில்,  இளம்தலைமுறையினரையும் இணைக்கும் தகவல் அமர்வு கடந்த
04 ஆம் திகதி மெல்பனில் வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கையில் முன்னர் நீடித்த
போரினால், பெரிதும் பாதிக்கப்பட்ட , வறுமைக் கோட்டின் கீழ் வதியும் தமிழ் மாணவர்களின்
கல்வித் தேவைகளுக்கு உதவும் நோக்கத்துடன்
1988 ஆம் ஆண்டில் மெல்பனில்  தொடங்கப்பட்ட கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர்
திருமதி விதுஷினி விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த குறிப்பிட்ட தகவல் அமர்வில்,  அண்மைக்காலங்களில் மறைந்த நிதியத்தின் முன்னாள்
உறுப்பினர்களுக்காகவும், உலகெங்கும் போர் அநர்த்தங்களினால், உயிர் நீத்தவர்களுக்காகவும்
ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைமையுரையைத் தொடர்ந்து
கல்வி நிதியத்தின் பணிகளை சித்திரிக்கும் ஆவணப்படக்காட்சி இடம்பெற்றது.

கல்வி நிதியத்தினால் பயனடைந்து
பல்கலைக்கழகம் பிரவேசித்த மாணவர்கள், மற்றும் வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும்,
தென்னிலங்கையிலும்  சமகாலத்தில் பயனடைந்துவரும்
மாணவர்கள் பற்றிய விபரங்களும் இந்த ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்டன.

இந்த ஆவணப்படத்தை கல்வி
நிதியத்திற்காக தயாரித்து வழங்கியவர்கள் கன்பராவில் வதியும் ரகுபதி –  ஆழியாள் மதுபாஷினி தம்பதியர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

கொவிட் பெருந்தொற்றுக்குப்பின்னர்,
இலங்கையில் நீடித்த பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டிருக்கும் கல்வி நிதியம்,
 மாணவர்களுக்கான மாதாந்த நிதிக்கொடுப்பனவையும்
அதிகரித்துள்ளது.

தற்போது ஒரு மாணவருக்கு
மாதம் தலா நான்காயிரம் இலங்கை ரூபா வீதம்  நிதியத்தினால்
வழங்கப்படுகிறது.

உதவிபெறும் மாணவர்களின்
கடிதங்கள், மற்றும் கல்வி முன்னேற்ற அறிக்கைகளை உதவும் அன்பர்களுக்கு உடனுக்குடன் அனுப்பிவைப்பதில்
எதிர்நோக்கப்படும்  சிரமங்கள் குறித்து, நிதியத்தின்
துணைத்தலைவர் திரு. லெ. முருகபூபதி விளக்கினார்.

உதவும் அன்பர்களின் மின்னஞ்சல்களின்
ஊடாகவும், நிதியத்திற்கான இணையத்தளத்தின் ஊடாகவும், மாணவர்களின் கடிதங்களையும் கல்வி
முன்னேற்ற அறிக்கைகளையும் அனுப்புவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்தப்பணிகளை முன்னெடுப்பதற்கு
இளம் தலைமுறையினரையும் நிதியத்தில் இணைத்துக்கொள்ளும் நடைமுறையின் பிரகாரம், அவுஸ்திரேலியாவில்,  இந்நிதியம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பின்னர் பிறந்து
வளர்ந்து தற்போது தொழில் வாய்ப்புகளை பெற்றிருப்பவர்களும்  தமது பங்களிப்பினை வழங்கி வருகிறார்கள்.

கல்வி நிதியத்தின் நிதிச்செயலாளர்
திருமதி திவானா அஜந்தன், நிதி நிலைமை பற்றி விளக்கினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின்
கருத்துக்களைத் தொடர்ந்து , செயலாளர் திரு. கே. கிருஷ்ணகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நடைபெற்ற தகவல் அமர்வினையடுத்து,
மேலும் பல இளம் தலைமுறையினர் நிதியத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

இணைந்துகொள்ள விரும்பும்
அன்பர்கள் தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்:
csefund@membershipworks.org

செயலாளர் – திரு. கே. கிருஷ்ணகுமார் :    0425 741 843

துணைத்தலைவர்திரு. லெ. முருகபூபதி : 0416 625 766



—0—-



 



 



பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.