இமாலயக்கடன்:சிறுகதை 

 நடேசன்

நான் ஒரு கொலையை மறைத்தேனா  ? இல்லை , தொடர்ந்து மனைவியைத் துன்புறுத்திய ஆணைக் கருணைக் கொலை செய்ய உதவினேனா ? என்ற கேள்விக்கான விடையை ஓய்வு பெற்ற பின்னரும் காணமுடியவில்லை.

பல வருடங்களுக்கு  முன்பு, அதாவது  எனது ஐம்பது வயதான காலத்தில்  நடந்த சம்பவம் இது. அந்தச்  சந்தேகம் கைகளுக்குள் பிடிக்க முடியாத பட்டாம்பூச்சியாக அங்கும் இங்கும் பறந்தது. சம்பவம்  நடந்த  வருடம்,  மாதம்,  நாள், நேரம்  என  இன்னமும் என் மனதில் ஆழமாக உள்ளது. இறுதியில்  அதற்கான விடை கிடைத்தது. அது கதையின் முடிவில் உள்ளது.

 அவுஸ்திரேலிய  குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் , நூறாண்டுகள் கழிந்த பின்னரும்  ஒரு கொலை வழக்கை ஆழமாகத்  தேடி, சாட்சிகளை அழைத்து விசாரிக்கலாம் என்பதால் இங்கு பெயர்களைச்  சொல்ல முடியாது. புனைபெயர்களுடன் உண்மை , பொய் இரண்டும் கலந்தே இந்தக்கதை நெசவாகிறது.

நான் ஒரு மிருக வைத்தியர். ஒரு சிறிய வைத்தியசாலையை எனது வீட்டருகே நடத்தி வந்தேன். இங்கு நான் சொல்ல வருவது  எனது மிருகங்கள் பற்றிய கதையில்லை. நான் சந்தித்த மனிதர்களது கதை.

 எனது மிருக வைத்தியசாலையில்  பணியாற்றிய  பழைய நேர்ஸ் ஒருவர், மூன்று மாதத்தில் விலகுவதாக இருந்ததால், பதினெட்டு வயதான ஜெனி என்ற பன்னிரண்டாம்  வகுப்பு படித்தவள்,  பாடசாலையிலிருந்து நேராக  நேர்ஸ்  வேலைக்கு வந்து சேர்ந்தாள்.

துருதுருப்பான  பெண் .  ஆனால்,  அவளது பாட்டியின் நாயுடன் விளையாடிய  முன்னனுபவத்துடன் மட்டும் சேர்ந்ததால்,  பல விடயங்களில்  நான் சிரமமெடுத்து சிற்பியாகச் செயற்பட்டு, ஒவ்வொன்றாகச்  செதுக்கி,   அவளை நேர்சாக்க வேண்டும்.  

ஆரம்பத்தில் எனது கேள்வி ஒவ்வொன்றுக்கும்  தனது  அழகான கண்களைச் சுழற்றியவாறு விழிப்பாள். எனக்கு சினம் வந்தாலும், அக்காலத்தில் எனது மகளும் அந்த வயதானதால் அவளுக்கு பொறுமையாக கற்பித்தேன். மேலும் அவளுக்கு எனது பேச்சின்  தொனியை புரிந்து கொள்ள காலம் எடுக்கும் என்ற நினைவும் அடிமனதில் இருந்தது.

ஆரம்பத்தில் அவள் ஐந்து நாட்கள் மாலை நேரங்களில், நான்கு மணி நேரம் மட்டுமே வேலை செய்தாள். அவளுக்கு  வேலை குறைவு. ஏற்கனவே அறுவை சிகிச்சை , எக்ஸ்ரே எடுத்த செல்லப்பிராணிகளை சுத்தப்படுத்தி வீட்டுக்கு  அனுப்பும்போது பதற்றப்படும்  உரிமையாளர்களுடன் சில வார்த்தைகள் ஆறுதலாக பேசவேண்டும். மருந்துகளை எடுத்துக்  கொடுக்கவேண்டும். செல்லப்பிராணிகளின் கூடுகளை சுத்தப்படுத்த வேண்டும்.   

அவளது தாயார்  தனது காரில் அவளை அழைத்து  வந்து எனது வைத்தியசாலையில் மதியத்தின் பின்னர்  விடுவதும்,  மீண்டும் அவளது வேலை முடியும்போது  மீண்டும் வந்து காரில் ஏற்றிக் கொண்டு போவதுமாக இருந்தாள்.  தாய்,   வைத்தியசாலையின் கார் தரிப்பிடத்தில்  மகளை இறக்கி விட்டுச் செல்வதால்  அந்தத் தாயை நான் பல மாதங்களாகச்  சந்தித்ததில்லை.

ஒரு நாள் மதியத்தில், நான் உள்ளே எனது அறையுள் இருந்தபோது,  வரவேற்பு அறைக்கு  வெளியே ஜெனி,  யாரோ ஒருவருடன் சிறிது கார சாரமாக   குரலை  உயர்த்திப் பேசியது கேட்டது. வழக்கமாக அமைதியாகப் பேசும் ஜெனியின் குரல் உயர்ந்து வந்ததால், நான் எனது அறையின் வரவேற்பறையில்  உள்ள கெமராவை பிரதிபலிக்கும்  கம்பியூட்டரைப் பார்த்தேன். அதில் மார்கிரட் தட்சரின்  முகத் தோற்றத்துடன் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க   ஒரு பெண் தென்பட்டாள்.

சில மாதங்களுக்கு முன்னர் நான் கனடாவுக்குச்  செல்ல நேர்ந்தபோது,  எனது நண்பியான பெண் வைத்தியர் ஒருவரை  எனக்குப் பதிலாக  எனது வைத்தியசாலையில் வேலை செய்யுமாறு  சொல்லியிருந்தேன். அச்சந்தர்ப்பத்தில்  போதை வஸ்துவுக்கு  அடிமையான ஒருவன், ஒருநாள்  குளிர்கால  மாலை நேரத்தில்,   அங்கு வேலை செய்துகொண்டிருந்த  பெண்கள் இருவரையும் கத்தியை காட்டி பயமுறுத்தி பணத்தை எடுத்துச்  சென்றான்.  அவன் எடுத்துச் சென்றது  அதிக பணமில்லை.  ஆனாலும் அப்படியான ஒரு சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது என்பதால் இந்த  கண்காணிப்பு கெமராக்களை பொருத்தியிருந்தேன். இப்பொழுது எது விதமான ஓசை கேட்டாலும் அந்த கெமராக்களைப் பார்த்து விட்டுத்தான் எழுந்து வெளியில்  வருவேன்.

நான் வெளியே வந்தபோது,  அந்த பெண் என்னிடம்   “  நான் ஜெனியின் அம்மா  “   என்றாள் .  அந்தத் தாய் கவர்ச்சியாக ஜெனியின் பழைய பதிப்பாக   இருந்தாள் . கதிரையில் கால் இரண்டையும் நீட்டியவாறு அமர்ந்திருந்த அவளது இடது காலில் மட்டும் வெள்ளைத்தோல்  காலணி அணிந்திருந்தாள். வலது காலின் காலணி கழற்றப்பட்டு  பக்கத்தில் வெறுமையாக இருந்தது. உன்னிப்பாகப்  பார்த்தபோது அவளது பெருவிரல் நகத்தருகே இரத்தம் குங்குமப் பொட்டாகக் குடியிருந்தது.

அருகில் சென்று பார்த்தபோது,   அவளது பெருவிரல் நகம் இரண்டாகக்  கிழிந்து தோல் அற்று இருந்த இடத்தில் இரத்தம் கசிந்திருந்து

  “ என்ன நடந்தது?  “ அந்தக்  கால் விரலை சுட்டிக்காட்டிக் கேட்டேன்.  

  “ செங்கல் காலில்  பட்டு நகம் கிழிந்தது  “ என்றாள்.

 “ செங்கல்லுக்கு என்ன நடந்தது?  “  என நகைச்சுவையாகக் கேட்டவாறு   உள்ளே சென்று எனது முதலுதவி  மருந்துகள் கொண்ட பெட்டியைக் கொண்டு வந்தேன்.

  “ இல்லை பரவாயில்லை . நான் வீட்டில் போட்டுக்கொள்கிறேன் “  என  அவள் எழுந்தபோது தடுத்துநிறுத்தி,  அவள் முன்பாக தரையில்  அமர்ந்துவிட்டேன்.

வேறு வழியில்லாது அவள்  மீண்டும் இருக்கையில் அமர்ந்தாள்.

 பெற்றடின் என்ற நுண்ணுயிர் கொல்லியால்  இரத்தத்தைத்  துடைத்து விட்டுப் பார்த்தபோது,  நகம் முற்றாகக் கிழியவில்லை.  அதன் நுனி மட்டுமே இரண்டாக பிரிந்திருந்தது. 

 “ பண்டேஜ் போட்டுவிட்டால் இரண்டு கிழமையில் சரியாகிவிடும் “ என்ற போது  அவளது மகள் ஜெனி  பண்டேஜை  எடுத்துத் தந்ததும் அதை அவளது கால் விரலில்  சுற்றிவிட்டு எழுந்தேன்.

ஜெனி  சிரித்தபடி   “ அம்மாவிடம் எவ்வளவு  பணம் எடுப்பது?  “  எனக்கேட்டாள்.

  “ உனது அம்மா என்பதால் இது இலவசம்  “   என்றேன்.

  “ நன்றி,  எனது பெயர் விக்ரோரியா “  என்றாள் அந்தத் தாய்.

அவளது பார்வையிலிருந்த கம்பீரம் என்னைக் கவர்ந்தது.

மகளைப் பார்த்து   “ ஏழரை மணிக்கு வருகிறேன் “  என்று அவள் சொன்ன போது,  அவளது நடை, உடல் அசைவுகள்  என் கண்களை இழுத்தன.  அவளை  கார் நிறுத்துமிடம்வரை கூட்டிச் சென்று விட்டேன்.

அவள் சென்று   பத்து நிமிடத்தில்  ஒரு தொலைபேசி  அழைப்பு வந்தது . அந்த அழைப்பினை ஜெனி   எடுத்துவிட்டு,  அவசரமாக என்னிடம் வந்து பதறியபடி “  நான் வீடு செல்லவேண்டும்.  அப்பா மயங்கியிருப்பதால்,  அம்புலன்ஸில் மொனாஷ்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டார்கள் என்பதால்,  அம்மா உடனே என்னை வரச்சொன்னாள். நான் டாக்சியில் போவேன்.  “ என்றாள்.

 அவளிடம் காரில்லை என்பதால் அவளால் அவசரமாகப் போகமுடியாது. டாக்சி வர எவ்வளவு நேரமாகுமோ  என்பதால்,  நான் வைத்தியசாலைக் கதவில் காகிதத்தில்,   “ இன்று மாலை வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அவசரத்திற்கு எனது கைத்தொலைபேசி  இலக்கத்தை  தொடர்புகொள்ளவும் ” என எழுதி  ஒட்டிவிட்டு ஜெனியை எனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவளது  வீடு நோக்கிச்  சென்றேன்.

எனது வைத்தியசாலையிலிருந்து ஐந்து கிலோமீட்டரில் உள்ள கிளைட்டனில் அவர்களது வீடு என்பதை அன்றே அறிந்தேன். ஜெனி வழி காட்ட நான் காரைச் செலுத்தினேன்.   எங்களை எதிர்பார்த்தவாறு அந்த வீட்டு  வாசலில்  ஜெனியின் தாய் விக்டோரியா மட்டுமே நின்றாள். அவளது முகத்தில் பதற்றமோ  கவலையோ  தென்படவில்லை.

தங்கள் செல்லப்பிராணிகளை  சிகிச்சைக்காக என்னிடம்  கொண்டு வருபவர்களின்  முகங்களில் படிந்திருக்கும்  கவலையையும் பதற்றத்தையும்  என்னால்   அவதானிக்க முடியும்.    

 “ என்ன நடந்தது?   “  என நாங்கள் கேட்காமலே,    “ பூட்டிய  கராஜில் காரை ஸ்ராட் பண்ணி விட்டு,  கஞ்சா  புகைத்திருக்கிறார் . காரிலிருந்து  வந்த காபன் மொனொக்சைட்டை சுவாசித்ததால்  மயங்கியுள்ளார்.  தற்கொலை செய்ய முயன்றிருக்கலாம்.  அல்லது விபத்தாகவும்  இருக்கலாம்.

“ எந்தவொரு பொறுப்போ அல்லது  வேலை இல்லாத மனிதன்  தன்னைப்பற்றியோ தன்னைச் சார்ந்தவர்களிடமோ  எந்த அக்கறையும்  எக்காலத்திலும் இருக்கவில்லை  “   என விக்டோரியா சொன்னதும்,    “ இந்தப் பேச்சு இப்பொழுது தேவையா?  “ என கடுமையாக கண்களால்  முறைத்தபடியே ஜெனி தாயைப் பார்த்தாள்.  விக்டோரியாவின் முகத்தை மீண்டும் கூர்மையாக அவதானித்தேன்.   எதுவித சலனமும்  இல்லை.

பலரதும்  வாழ்வில் நாமறியாத அந்தரங்கமான  விடயங்கள் உள்ளதுபோன்று,  இவர்கள் மனங்களிலும் ரணங்கள் இருக்கவேண்டும். அவைகளின் தொடர்ச்சியே  இந்தச்சம்பவம்  என்ற நினைப்புடன் அந்த வீட்டைப் பார்த்தேன். 

நீண்ட பாதையின் முடிவிலுள்ள சிறிய மூன்றறைகளைக்கொண்ட  வீடு. இரும்பு கேட்டைத் தாண்டினால்  சிறிய தோட்டம். கேட் எதிரே இருந்த  கராஜின் உள்ளே சென்றேன். சிறிய கராஜ்.  அங்கு பழைய நீல நிற ஸ்போர்ட்ஸ் பென்ஸ் கார் நின்றது. காரின் கீழ் கறுப்பு நிற ரெக்சீன் படங்கு ஒன்று கிடந்தது. காரின் கீழே  படுத்தபடி வேலை செய்திருக்கவேண்டும். காரின் சுற்றுப்புறத்தில்  பியர் போத்தல், சிகரட் லைட்டர், வெள்ளைக் காகிதத்தில் இன்னமும் புகைக்காத  சுருட்டப்பட்ட கஞ்சா சிகரட்டுகள், ஸ்பானர்,  சிறிய குறடுகள் என கார் திருத்துவதற்கான கருவிகள் நிலத்தில் கிடந்தன.

பெரும்பாலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தற்கொலை செய்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  இப்படி ஸ்போர்ட்ஸ் கார் வைத்து,  அதை திருத்தம்   செய்ய நினைத்த மனிதன் எப்படி தற்கொலைக்கு முயற்சி  செய்வான்? கராஜ் கதவை முற்றாக மூடிவைத்துக்கொண்டு  ஏன் கார் திருத்த வேண்டும்? கஞ்சாவோ மற்றைய போதைப் பொருள்களது மணமோ  வெளியே கசியாமல் இருப்பதற்காகவா? கஞ்சாவும் மதுவும் அதிகமானால் மயக்கம் வருமா? பேராதனைப் பல்கலைக்கழக காலத்தில் ஒருவனுக்கு கஞ்சா குடித்ததால்  முகம் சில நாட்கள்  விறைத்திருந்த காட்சி  மனதில் வந்துபோனது.    

குழப்பத்துடன் எந்தப் பொருளையும் தொடாது  கராஜை விட்டு வெளியே வந்தபோது,  ஜெனியும்  தாயும்  மருத்துவமனை செல்லவேண்டும் என வீட்டினுள் உடைமாற்றச்  சென்று விட்டார்கள்.

உயர்ந்து சுருண்டபடி  திறக்கும் கையால் பூட்டும் கராஜ் கதவு அது.   திறந்து கிடந்த கராஜின் இடது பக்க கதவருகே சிறிது தூரத்தில் அனாதரவாக  புதிய செங்கல்லொன்று  கிடந்தது.  அந்த கல்லைக்  கையில்  எடுத்து பார்த்தபோது அக்கல்லின்  ஓரத்தில் சிறிய இரத்தப்  பொட்டை பார்த்தேன்.   சுற்றி வர எவருமில்லையென்பதை  உறுதி செய்து கொண்டு அந்தக்  கல்லை  எனது காரின் பின் சீட்டின் கீழ்  வைத்தேன்.

நான்  காரில் அமர்ந்து சீட்பெல்ட்  அணிந்து  வெளியே கிளம்பும்போது , விக்டோரிய  மாநில பொலிஸ் கார், எதிரில் வந்து எனது காரின் முன்னால் நின்றது. அதில் இருந்து  இருவர் இறங்கி வந்து என்னை கைகாட்டி  நிறுத்தினார்கள். நான் இறங்கியதும்,  அவர்கள் அன்ரூ ரோபேட்டின் தற்கொலை முயற்சியை விசாரிக்க வந்தாக கூறிவிட்டு,       “  நீங்கள் யார்?  “ எனக் கேட்டனர்.

நான் என்னைப் பற்றிக் கூறிவிட்டு,  எனது காரில் ஜெனியை  வேலையிடத்திலிருந்து  அழைத்து  வந்ததைச் சொன்னேன்.

ஜெனியின் தாய் விக்டோரியாவின் கால் நகம் பிரிந்தது  அந்த செங்கட்டியால்தான்  என்பதை  அனுமானிக்க முடிந்தது.  ஆனால் இது திட்டமிட்ட சம்பவமா?   விபத்தா ?   எனத் தெரியவில்லை. நிச்சயமாக இந்தச்  செங்கல்லும் இங்கு சாட்சிப்பொருளாக மாறும் சாத்தியம் உள்ளது என்று நினைத்தேன். 

ஜெனி அடுத்த சில நாட்கள்  வேலைக்கு வரவில்லை.  இரண்டு நாட்களின் பின்னர், அவளது  தந்தை  மருத்துவமனையில்  இறந்துவிட்டதாக தகவல் வந்தது .    அந்த மரணத்திற்காக  மயானத்திற்குச்  சென்றேன்.   நான் அன்று ஜெனியின் வீட்டில் சந்தித்த இரண்டு பொலிசாரும் அங்கே  வந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் விக்டோரியாவை பார்த்தபடி மரத்தின் கீழே  நின்றுவிட்டு,  எனக்கு ஹலோ சொல்லிவிட்டு  அகன்றார்கள்.  அங்கே எஞ்சி நின்றது பத்துப் பேராக  இருக்கலாம்.   நான் வழக்கமாகச் செல்லும்  மரண நிகழ்வுகளில்    மிகவும் குறைந்தவர்கள் வந்த மரண நிகழ்வு அதுவாகும்.

 விக்டோரியாவின் வீட்டில் எடுத்த இரத்தம் படிந்த அந்தச் செங்கல்லை எனது வைத்தியசாலையில்,  எனது கார் நிறுத்துமிடத்தில் சுவருக்கு முன்பாக  ஒரு அடி தூரத்தில்  வைத்திருந்தேன். முன்னொரு முறை எனது காரை  நிறுத்தும்போது சுவருக்கு அருகில் சென்று கார்  உராய்ந்தது. அந்தக்  கல் இடது பக்க சக்கரத்தில் முட்டும்வகையில் இப்பொழுது   எனது காரை  நிறுத்த முடியும்.

அந்தச்சம்பவத்தின் பின்னர்,  ஜெனி வேறு  ஒரு முழுநேர வேலைக்குப் போய்விட்டாள். ஜெனியையும்  அவளது தாய் விக்டோரியாவையும் எனது  மனதிலிருந்து புறம்  தள்ளிவைத்துவிட்டேன்.  ஆனால், அந்தச்  சம்பவத்தை  மறக்கமுடியுமா?  மனதில் கறையானாக அரித்தபடி பல வருடங்கள் இருந்தது.

அந்தச்  சம்பவம் நடந்து பதினைந்து வருடங்களுக்குப்பின்னர்  நான் ஓய்வு பெற்றதுடன், எனது வைத்தியசாலையையும் விற்றுவிட்டேன். ஆனால்,   பல வருடங்களுக்கு முன்னர்  நடந்த  எந்தச் சம்பவங்களையும்  விற்க முடியாது. வேண்டுபவரும் இல்லை. அவற்றோடு சீவித்தேன் . முக்கியமாக கொரோனா காலத்தில் வீட்டில்  முடங்கியிருந்தபோது   அவையெல்லாம் என்னால் சீராக இரை மீட்கப்படும்.

கொரோனா  முடிவுக்கு வந்து  ஒரு சில மாதங்கள்  என நினைக்கிறேன்.  கோடைகால  மாதமொன்று வந்தது.  அவுஸ்திரேலியாவின்  கோடை கால  உடைகளை  அணிந்தவாறு பெண்கள்,  பூங்காவில் பறக்கும்  பட்டாம்பூச்சிகளாக அலையும் காலத்தில் ஒரு நாள் வழக்கமாக நான் மதிய உணவு உண்ணும்  சுப்பர் மார்கட் உணவகத்தில் தனித்திருந்து  உணவருந்திக்கொண்டிருந்தேன்.

சிவப்பு உடையணிந்த பெண் ஒருவர் எதிரே வந்தமர்ந்தார்.  ஓரளவு கிட்டப் பார்வைக்கு மத்திய வயது எனத் தெரிந்தாலும் யார் என இனம் காண முடியவில்லை.

எதிரே  அமர்ந்தவாறு,    “ என்னைத் தெரிகிறதா?  “  எனக் கேட்ட போது மார்கிரட் தட்சரின் குவிந்த கீழ் உதடுகள் மெதுவாக எனது நினைவில் வந்தது.

  “ விக்டோரியாதானே..?  ஜெனியின் அம்மாதானே ? எப்படி ஜெனி ? வித்தியாசமாகத்  தெரிகிறீர்கள். காலம் எல்லாவற்றையும் எல்லோரையும் மாற்றுமல்லவா?  பார்த்து  பதினைந்து வருடங்களிருக்கும் அல்லவா?  “  என்றேன்.

  “அவள் சுப்பர் மார்கட்டில் சுப்பவைசராக முழு நேர வேலை செய்கிறாள் அவளுக்கு  திருமணமாகி இரண்டு பிள்ளைகள்.   நான் இப்பொழுது  தனிமையாக ஆனால் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறேன் . அதற்கு உங்களுக்கு நான் இமாலய கடன் பட்டுள்ளேன்.  “  என்றாள்.

விக்டோரியாவின் பேச்சும் உடல் மொழியும் வித்தியாசமாக இருந்தது. முடி நரைத்திருந்தபோதும் மயிர்கள் இடைக்கிடையே  பொன்னிறமாக இருந்தது . உதட்டில் மெதுவான சாயம் . வயதானாலும் அவளது புதுத்தோற்றம் கண்ணுக்கு இதமாக இருந்தது.

  “ புரியவில்லை.  “ என்றேன்.

 “ அன்று அந்த செங்கல்லை நீங்கள் எதற்காக எடுத்தீர்களோ தெரியாது.  ஆனால், அது  என்னை  பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றியது.  “ என்றாள்.

மீண்டும் எதுவும் புரியாது,   “ அப்படியா! ?  “ என்றேன்.

    “ அன்று மறக்க முடியாத நாள்.  எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும்தான்.   அன்ரூ மதியத்தில் பியர் குடித்தவாறு  தொடர்ந்தும்   கஞ்சா குடித்தபடியிருந்ததை பார்த்து, கோபத்தில் கடுமையாக பேசி  விட்டு,  காராஜுக்கு  வெளியே நின்ற எனது காரை எடுக்க வரும்போது,  வெளியே வரும் கஞ்சா வாசனை  அடுத்த வீட்டார்களுக்கு  செல்வதை தடுக்க,   ஆத்திரத்தில் காராஜ் கதவுக்குத்  தடுப்பாக  வைக்கப்பட்டிருந்த  அந்தச்  செங்கல்லைக் காலால்  ஓங்கியடிக்கவும்  கதவு மூடிக்கொண்டது.

அன்ரூ எழுந்து மீண்டும் கராஜ் கதவைத் திறக்கக் கூடுமென நினைத்தேன்.  ஆனால்,  அதைச் செய்யாது, தொடர்ந்தும்  கஞ்சாவையும் புகைத்து,  பியரையும்  குடித்து  அப்படியே நித்திரை செய்திருக்கலாம்.  அல்லது மயங்கியிருக்கவேண்டும்.  ரியூன் பண்ணுவதற்காக கார் தொடர்ந்தும்  வேலை செய்ததால் கசிந்த புகை ஏற்கனவே மூடிய கராஜ் உள்ளே நிறைந்திருந்தது. அதை சுவாசித்திருக்கவேண்டும். போஸ்ட்மோட்டத்தில்  காபன் மொனொக்ஸ்சைட்டால் வந்த இறப்பென்றார்கள்.

பல தடவை பொலிஸ் துருவித் துருவி என்னிடம் விசாரித்தார்கள்.  நல்ல வேளையாக சம்பவம் நடந்தபோது  நான் அங்கில்லை. ஜெனியை அன்று  உங்களிடத்தில் வேலையில் விட்டு விட்டு, சுப்பர் மார்க்கட்டில் மாளிகை பொருட்கள் வாங்கிய பின்பு அங்கே மதிய  உணவருந்திவிட்டு மீண்டும் உங்கள் வைத்தியசாலைக்கு வந்தேன்.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் வீட்டில் நான் இல்லை.   சகலதும் உண்மை என , சுப்பர் மார்க்கட்,  நான் சாப்பிட்ட கடை என உறுதிப்படுத்தியதால்  மேலதிகமாக எதுவும் நடக்கவில்லை . அந்தச் செங்கல் இருந்திருந்தால் எனது கால் காயத்தையும் அவர்கள் வைத்து நான் திட்டமிட்டுச் செய்ததாக நினைத்திருப்பார்கள்.  “  என்றாள் 

அதனைக்கேட்டு நான் சிரித்தவாறு,  “   உண்மையில் நீங்கள் அப்படிச்  செய்திருக்கலாம் என்றுதான் நான்  அன்று நினைத்தேன்.  ஆனால்,  ஜெனிக்கு  தந்தையும் தாயும் ஒரே  சமயத்தில் இல்லாது போவதை நான் விரும்பவில்லை என்பதாலேயே  அந்த செங்கல்லை நான் எடுத்துவந்தேன்  “ என்றேன்

  “ நீங்கள் என்னை நம்பவில்லை . உண்மையில் பல தடவை அன்ரூவை  கொலை செய்ய நினைத்தாலும் அதற்கு எனக்குத் துணிவில்லை. திருமணமான  ஒரு வருடத்திலேயே  கொலை செய்யும்  ஆசை எனக்கு வந்தது என்பதை நான் வெட்கமற்று ஒத்துக்கொள்கிறேன்.  “ என்றாள் விக்டோரியா.

 “ ஏன் விலகி இருந்திருக்க முடியாது?  “ எனக் கேட்டேன்.

 “ நானும் ஜெனியும்  தெருவில் நிற்போம் என்ற பயம். அடிப்படையில் எனக்கு  பயந்த சுபாவம்.  அத்துடன் படிப்பில்லை – வேலையில்லை. இவை எல்லாம் சேர்ந்து எங்களை ஒன்றாக கட்டி  வைத்தது.  ஆனாலும் பல வருடங்களாக எமக்கிடையே  எந்த உறவுமில்லை.  “

 “  இக்காலத்திலும்  இப்படியா? உறவற்று வருடக்கணக்காக இருந்தீர்களா?  ஆச்சரியமாக இருக்கிறது!   “ என்றேன்.

  “ எங்கள் கதை பெரிய கதை.   அதை இந்த நேரத்தில் சொல்லி உங்களை      கஷ்டப்படுத்த  மனமில்லை . “ அவள் தணிந்த குரலில் சொன்னாள்.

 “ பரவாயில்லை.   நான் ஓய்வு பெற்றவன். உங்கள் விருப்பப்படி சொல்லுங்கள்.  “ என்றேன்.

 “ நான் இதுவரையும் நடந்ததை  சொல்லிவிட்டு,  மற்றையதை மறைப்பதில் என்ன பயன்? இருக்கிறது.  அன்ரூவை நான் திருமணம் செய்தது அவசரமானது. திருமணத்தின் முன்பே நான் கர்ப்பமாகியதால் அன்ரூவின் வீட்டில் தங்கினேன். எனது வீட்டில் பெற்றோர்கள்  என்னை புறந்தள்ளிவிட்டார்கள். அன்ரூ மெக்கானிக்காக இருந்ததால் வீடு,  கார்,  விடுமுறை என  எல்லாம் வைத்து வசதியாக இருந்தான்.  அந்தக்  காலத்தில் அவை எனக்குப் பெரிதாகப்  பட்டது. ஜெனி பிறந்த பின்பும்  நண்பர்களுடன் தாய்லாந்து செல்வதும் வருவதுமாக இருந்த காலத்தில் எனக்கு கிலமிடியா என்ற பாலியல்  தொற்றுநோய் வந்தது. தாய்லாந்தில் வேறு பெண்களோடு தொடர்பிலிருந்து வந்ததென்பதால் அன்ரூவுடன் எனது முதல் சண்டை தொடங்கியது. ஆனால்,  அன்ரூ எனது விருப்பத்தை உதாசீனம் செய்தபடி,  தொடர்ந்து நண்பர்களுடன் போய் வந்தபோது, நான்  அவனுடனான  எனது தாம்பத்திய உறவை  நிறுத்தினேன்.  எங்களது  சண்டை,  சச்சரவு வெளியே தெரியாது  இருந்தது . அக்காலத்தில் ஜெனி சின்னப் பிள்ளை தானே?  எங்களுக்குள்   மனப்பிரிவு இருந்தபோதிலும் ஜெனியை கவனிப்பதிலோ அவளை பாடசாலைக்கு  கொண்டு செல்வதிலோ அன்ரூவை ஒரு தந்தையாக என்னால் குறை சொல்லமுடியாது.

ஜெனிக்கு எட்டு வயதாகிய காலத்தில் ஒரு நாள்,  அன்ரூ இல்லாதபோது வந்த தொலைபேசி அழைப்பை எடுத்தபோது,  அதில் வந்த ஒரு வீடியோவை பார்க்க நேர்ந்தது.   அக்காலத்தில் சிமாட் போன்கள் வந்த காலம்.  சிறு பிள்ளைகளுடன் பெரியவர்கள் உடல் உறவு வைத்திருப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில்  இருந்தது. அதை உறுதிப்படுத்த அன்ரூவின் கடன் அட்டையின் பத்திரத்தைப் பார்த்தபோது இப்படியான  ஏதோ ஒரு இடத்திலிருந்து வீடியோவை பணம் கொடுத்து தரவிறக்குகிறார்கள். அந்தக் கூட்டத்தில்  அன்ரூ இருப்பதைப் புரிந்துகொண்டேன்.

அப்பொழுது எனது நெஞ்சம் பயத்தால் அதிர்ந்தது.   என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கை எப்படிப் போனாலும் சரி, மகள் ஜெனியை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வே முக்கியமாக இருந்தது . நான் பிரிந்து போயிருந்தாலும் அன்ரூ,  தகப்பனாக ஜெனியை சந்திப்பதைத் தடை செய்யமுடியாது. பல தடவைகள் யோசித்தேன்.

இறுதியாக எனது வீட்டிற்குச்  சென்று எனது பெற்றோருக்குச் சொல்லாது, நேரே  பெண்டிகோவில் பொலிசாக இருக்கும் எனது தம்பியிடத்தில்  விடயத்தைச் சொன்னேன்.  அவன் அதை சைபர் கிரைம் பொலிசிடம்  விசாரிக்க வைத்தான்.   அன்ரூவோடு பத்துப்பேர்   அவுஸ்திரேலியாவிலும் நூற்றுக்கணக்கானவர்கள் அமெரிக்கா,  பிரித்தானியா என உலகளாவிய பீடோபைல் (paedophile ring)  செய்வோர் வட்டமாக  சிக்கினார்கள் .

அன்ரூவும் எட்டு வருடம் சிறைக்குச் செல்லவேண்டியிருந்து. ஆனால்,  இதில் எனது பங்கும்  இருக்குமென எனது தம்பியை விட வேறு எவருக்கும் தெரியாது. அன்ரூ கூட இறுதி வரையும் சந்தேகப்படவில்லை. இன்று உங்களுக்கு அதைச் சொல்கிறேன்.  அன்ரூ சிறையில் இருந்த அந்த எட்டு வருடங்கள் எனக்கு நிம்மதியான காலங்கள். ஆனால்,  அதன்பின்னர்  அன்ரூ வீடு வந்தபோது ஜெனியை அணுகுவதில்லை.   அத்துடன் அவள் பெரியவளாகிவிட்டாள் என்பதால் எனக்குப் பயமில்லை.   ஆனால்,  சிறையிலிருந்து  வந்த அன்ரூ நித்தம்  குடியுடன் கஞ்சாவும் மற்றைய சகல போதை வஸ்துக்களுக்கும்  அடிமையாகிய ஒரு மனிதனாக   உருமாறியிருந்தான்.

ஆன்ரூ வேலைக்குச்  செல்வதில்லை. நண்பர்கள் சிலரது  கார்களைத்  திருத்துவதன் மூலம் பெறும் பணம் அவனது தேவைகளுக்கு போதுமானது.  அன்ரூவால் எனக்கு  எந்த பிரச்சினையும் இல்லை. அத்துடன் அன்ரூவை இந்த நிலைக்கு கொண்டு வந்த குற்ற உணர்வு,  அன்ரூவின் வீட்டிலே நாங்கள் இருக்கிறோம் என்பதும் சேர்ந்து மூன்று வேளையும்   அவனுக்கு  உணவு கொடுப்பதை  எனது கடமையாகச் செய்வேன். போதையும் குடியுமாக இருந்தான்.  பல தடவைகள் வீட்டுக்கு  உள்ளே வராது  அந்த கராஜ்ஜிலே  அவன் படுத்து விடுவது வழக்கம்.  எனக்கு அன்ரூவிடம் அன்பில்லையென்றபோதும் பரிதாபம் இருந்தது என்பதால் நான் அன்ரூவைக் கொலை செய்ய எந்தக் காரணமும்  இல்லை. ஆனால்,  பொலிசில் உள்ளவர்களுக்கு அன்ரூவின் வரலாற்றோடு தொடர்பு படுத்தி என்னில் சந்தேகம் வரலாம்தானே?    என்று  சொன்ன போது விக்டோரியாவின் நெஞ்சு மேலெழுந்து கீழிறங்கியது.

மிகப்பெரிய பாரத்தை அந்த உணவருந்தும்  மேசையில் இறக்கி வைத்த உணர்வு அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். இதுவரையும் குற்ற உணர்வற்று தனது பக்க நியாயத்தை அவளால் யாருக்குச்   சொல்லமுடியும்?

  “ எனக்கு,  உங்கள் வாழ்க்கைப் பயணம்  இப்பொழுது புரிகிறது. ஏதோ மனதில் குமிழிவிட்ட உணர்வால் அந்தக் கல்லை எடுத்துவர நினைத்தேன்.  ஆனால்,  இப்பொழுது நான் செய்தது  நல்ல செயல்தான் என  நினைக்கிறேன்.

 “ நன்றி,  என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி  “ என சொல்லியபடி எழுந்து தனது குவிந்த கீழ் உதடுகளை எனது நெற்றியில் பதித்துவிட்டுச் சென்றாள் விக்டோரியா.

வாழ்நாளில் பல  துன்பங்களை சுமந்த பெண்,   என நினைத்தபடி அவளது மெதுவான ஓசை எழுப்பியபடி செல்லும்  வெள்ளைப் பாத அணிகளை பார்த்தபடியிருந்தேன். அன்று ஒருநாள்  நான் பார்த்த அதே  பாத அணியாக இருக்குமோ என்ற  எண்ணமும்  மனதில்  எழுந்து மறைந்தது.

—0—

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.