அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழக நினைவுகள் :1

அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் புலம் பெயரும் முன்பாக, தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த  அகதி முகாம்களில் மூன்று வருடங்கள் சுகாதார, மருத்துவ  மற்றும் கல்விச் சேவைகளைச் செய்திருந்த  அனுபவத்தால், எனது ஓய்வு நேரங்களில் இந்த நாட்டிலும் பிரயோசனமாக ஏதாவது எமது சமூகத்திற்குச் செய்யவேண்டும் என்ற விருப்பம் எனக்கிருந்தது.

இலங்கையில்  இப்படியான பொது  வேலைகளில் ஈடுபட்டதால்   அங்கே பல விதமான தொல்லைகளை எதிர்நோக்க நேரிட்டது.   மதவாச்சியில் மிருக வைத்தியராக வேலை செய்த காலத்தில், அங்கும் பதவியாவிலும் பால் சேகரிக்கும்  நிலையத்தை அமைக்க முன்னின்று உழைத்தேன்.

அந்த முயற்சியில் வெற்றி கண்டபின்னர், அங்கிருந்த ஊழியர்கள்  பாலில் தண்ணீர் கலப்பதையிட்டு நான் பால்சபைக்குச்   செய்த முறைப்பாட்டினால்,  பால் சேகரிப்புக்கு பொறுப்பாகவிருந்த ஒரு  சிங்கள மனேஜர்,   என்னை எதிரியாகப் பார்த்தார்.  அத்துடன்  என்னை  ‘ கொட்டியா ‘ எனவும்  ஊர் எங்கும் சொல்லித் திரிந்தார்.

அதனால் பெரிதாக எனக்கு அப்போது பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோன்று 1984 காலப்பகுதியில்   றாகலையிலும் எனது பெயர்,  சித்திரையில்  அப்பத்துக்கு வைத்த கள்ளாகப் புளித்ததால் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வெளியேறும் நிலை வந்தது.  ஆனாலும் தேசம் விட்டுத் தேசம் மாறியபோதிலும் எனது குணம் மாறவில்லை. இந்தியாவிலும் அப்படியான வேலைகளில் முடிந்தவரையில்  ஈடுபட்டேன்

நமது குணங்கள் நாடு விட்டு நாடு போனாலும் மாறுவதில்லைத்தானே?   

மெல்பனுக்கு வந்ததும் சென்னையிலிருந்த காலத்தில் நான் செய்த செயல்கள் பற்றிய விபரங்களுடன்  இங்குள்ள உலக கிறிஸ்தவர்களது நிறுவனத்திற்குப் (world council of churches) போனேன். அவர்கள் எனது அனுபவத்தைக் கவனமாகக் கேட்டு விட்டு அனுப்பினார்கள்.

பதில் எதுவும் அவர்களிடமிருந்து வரவில்லை. நமது முயற்சியால்  ஏதாவது செய்யும் நோக்கத்தில் அலைந்த எனக்கு அக்காலத்திலே எழுத்தாளர்  முருகபூபதி,   மெல்பன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பில் ஈடுபட்டிருந்த திவ்வியநாதன்,  சூரி நல்லையா  ஆகியோர்  அறிமுகமானார்கள்.

அக்காலப்பகுதியில் 300  இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் பல காரணங்களால் அவுஸ்திரேலியாவுக்கு   வந்து , அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்திருந்தார்கள். அதில் இரு வருடங்களாக அகதி அந்தஸ்து கிடைக்காத சிலரும் இலவு காத்த கிளியாக  அலைந்தார்கள்.  

அவர்களுக்குச் சார்பாக மத்திய அரசிடம் இலங்கையின் தற்போதைய நிலைமையை எடுத்துச் சொல்லி லொபி செய்வதற்கு ஒரு நிறுவனம் வேண்டும் என்ற விருப்பம்  பலருக்கும்  இருந்தது. அதனையிட்டு ஒரு கூட்டம் கூட திட்டமிட்டார்கள்.  அவர்களுடன் நானும் சேர்ந்து முதல் கூட்டத்திற்குச் சமுகமளித்தாலும் மேற்படிப்பிற்கு சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்ததால் அங்கு  போய்விட்டேன். 

இரு வருடங்கள் சிட்னியில் வசித்துவிட்டு, இடையில்  வார்ணம்பூல் என்ற ஊரிலும்  இருந்துவிட்டு  மீண்டும்  மெல்பன் வந்ததும் இங்கு உருவாக்கப்பட்டிருந்த தமிழ் அகதிகள்  கழகத்தில் அங்கத்தினராகச் சேர்ந்தேன்.

பெருமைக்காகச் சொல்லவில்லை . அந்த  அமைப்பிலிருந்தவர்களில் நான் ஒருவன் மட்டுமே அகதியாக வரவில்லை.  சில வழக்கறிஞர்கள் அகதிகள் கழகத்துடன் தொடர்பிலிருந்தார்கள் என்பது மட்டும் உண்மை.

பெரும்பான்மையாக அகதி அந்தஸ்து கிடைத்தவுடன், அந்த கழகத்திலிருந்த அங்கத்தவர்கள் பலர்,  நமது ஊர் பேருந்து நிலையத்தில் உள்ள பொது மலசலகூடத்திலிருந்து வந்த நோக்கத்தை முடித்துவிட்டுச் செல்லும் வேகத்தில் வெளியேறினார்கள். அப்படி வெளியேறியவர்கள்  சந்தா கட்டுவதற்கே மறுத்தார்கள்.

 நான் கிட்டத்தட்ட ஏழு வருட காலம்  அவுஸ்திரேலியாவில் இயங்கிய குறிப்பிட்ட  தமிழ்  அகதிகள் கழகத்தில் ஆரம்ப அங்கத்தினராகவும் அதேவேளையில் செயலாளர்,  உபதலைவர் பதவிகளிலும் நிருவாகக் குழுவிலும்    என்னை  அவர்கள் வெளியேற்றும்வரையில்  இருந்தேன்.

 அக்காலத்தில் நடந்த  விடயங்களை ஏற்கனவே எழுதியிருந்தாலும்,  சிலவற்றை ஆழமாக எழுதவேண்டும் என நினைக்கிறேன். மேற்கு நாடுகளில்  மட்டுமல்ல,  தென்கிழக்காசிய நாடுகளிலும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகள் இப்போதும் அலைகிறார்கள். ஒரு சிலர் எதோ நம்பிக்கைகளில் என்னோடும் தொடர்பு கொண்டார்கள். மெல்பனில் அன்று உருவான  தமிழ் அகதிகள் கழகம் அழிந்துபோனதால்,  தற்பொழுதுள்ள அகதிகள்  எல்லோரும் கையறு நிலையிலேயே இருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களது அகதி நிலைமை கடந்த முப்பத்தைந்து வருடங்களாக மாறவில்லை. கடைசித் தமிழன் இலங்கையில் இருக்கும் வரை தொடரும் என்று முன்னாள் வட – கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் எப்போதோ கூறினார். அது உண்மை என நான் நினைப்பதால்,  நமக்குச்  சில விடயங்கள் தெரிந்திருக்கவேண்டும் என்பது எனது  விருப்பம். இந்த அனுபவங்கள் அவுஸ்திரேலியாவுக்கு  மட்டுமல்ல கனடா , மற்றும்  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பொருந்தும்.

இங்கு  அகதிகள் கழகம் இருப்பதை ஆரம்பத்தில் இங்கிலாந்து, ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தொழில் தகைமையோடு வந்த தமிழர்கள் விரும்பவில்லை. இங்கு வந்த அகதிகளை யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட தமிழர்களைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்.   இலங்கைத்  தமிழ்ச் சங்கம் என இயங்கிய பிரதான சங்கத்தில்  அங்கத்துவம் தர மறுத்ததால்,  இந்தத் தமிழ் அகதிகள் கழகம் உருவானது. பிற்காலத்தில் அகதியாக வந்தவரான  ஒருவரே   இலங்கைத்  தமிழ்ச்  சங்கத்திற்குத் தலைவரான வரலாறும் உள்ளது.

இங்கு எனது நினைவுகளை  மட்டுமே எழுதுகிறேன்.  இந்த அகதிகள் கழகத்திலிருந்தபோது தஞ்சம் கோரிய அகதிகளுக்கு என்னால் முடிந்தவரையில்  உதவவேண்டும் என்ற உணர்வு  எனக்கு இருந்தபோதிலும், அந்த  உதவிகளையும்  வரையறைக்குள் மட்டுமே செய்யமுடியும் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். பல தடவை தர்மசங்கடமான  சந்தர்ப்பங்கள் எனக்கு நேர்ந்துள்ளன.

அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கும்  90 வீதமானவர்களுக்கு அவுஸ்திரேலிய அகதி சட்டத்தின் கீழ் அகதி கிடைக்காது.  அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சட்டத்தின் பிரகாரம் அந்தஸ்து கிடைக்கும்.  எதோ ஒரு இயக்கத்திலும் சேர்ந்து ஆயுதம் ஏந்தினேன் எனும்போது அதை நிராகரிப்பார்கள்.

இலங்கை அரசுடன் தொடர்ச்சியான நட்புறவை அவுஸ்திரேலியா பேணவிரும்புவதால் இந்த விடயத்தில் இறுக்கமாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

1984-87 வரையும் இந்தியா,  இலங்கையின் மனித உரிமை மீறல்களை அவுஸ்திரேலியா மட்டுமல்ல பல மேற்கு நாடுகளுக்கும்  தனது  தூதரகம் மூலமாக எடுத்துச் சென்றது. 1987  இலங்கை- இந்தியா ஒப்பந்தத்தின் பின்பு  அந்த விடயமும் நடக்கவில்லை.  ராஜீவ் காந்தியின்  கொலையின் பின்பு விடுதலைப்புலிகளது மீறல்களே உலகம் முழுவதும் சுவர்களில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டன.

ஆரம்பத்தில் குடிவரவுத் திணைக்களத்தால்  அகதியில்லை என நிராகரிக்கப்பட்ட ஒருவரை  அக்காலத்தில் சுதந்திரமான ஒரு ரிபியூனல் ( Independent Tribunal )  வைத்து அரச சேவையில் இல்லாத  ஒருவரிடம் முடிவை எடுக்க விடுவார்கள். நம்மவர்களில் பெரும்பாலானவர்கள் அக்காலத்தில் ஒரு தமிழ் வழக்குரைஞரிடம் செல்லும்போது அவர்களே இவர்களுக்குக் கதை எழுதவேண்டும். தொடர்ச்சியாகக் கதைகளை எழுதும்போது கதைகள் பல ஒரே மாதிரி நகல் எடுத்ததுபோல் இருக்கும். அவை நிராகரிக்கப்படும்

வழக்குரைஞர்களும் என்ன செய்வார்கள் ?

அவர்கள் என்ன புதுமைப்பித்தனா.  ஜெயமோகனா ?

ரிபியூனலில் நிராகரிக்கப்பட்டவர்கள் முன்னால் வேறு  வழிகள் இல்லை.  

மேல் வழக்காடு மன்றத்திற்கு மேன்முறையீடு செய்ய  வேண்டும் அதற்கு ஏராளம் பணம் செலவாகும்.   அல்லது குடியேற்ற  அமைச்சருக்கு   கருணை விண்ணப்பம் அனுப்ப முடியும் . அந்த இடங்களில் அகதிகள் கழகம் போன்ற  சமூக சேவை இயக்கங்களின் சிபார்சுகள் உதவும்

இலங்கை அரசையும்  ராணுவத்தையும் தொடர்ச்சியாக  சித்திரவதைகள், கொலைகள்,  பாலியல் துன்புறத்தல்  செய்யும் வில்லனாக  அகதிகளின் வழக்குரைஞர்கள்  சித்தரிக்க வேண்டிவரும்.

பிற்காலத்தில் இந்திய ராணுவத்தை வில்லனாக்கிய சில விண்ணப்பங்களையும்  பார்த்தேன்.  ஆனால் என்ன?  இவர்கள் விண்ணப்பித்து அது விசாரணைக்கு வரும்  காலத்தில் இந்திய ராணுவம் இலங்கையை விட்டுப் போய்விட்டது.  தமிழ்ப்பட வில்லன் இடைவேளையின் முன்பாக இறந்தால் படம் தோல்வியடைவது போன்ற நிலைமை அது !

அந்தோ விடயம் பரிதாபம்.

 அவுஸ்திரேலியர்கள் என்ன சொல்வார்கள் இனிமேல் உங்களுக்குப் பிரச்சினை இல்லைத் தானே!  நீங்கள் உங்கள் ஊருக்குப் போகலாம் என்றும் முடிவை எடுப்பார்கள். இப்படியான நேரத்தில் யாரைக் கோபிக்கமுடியும் ? பணம் வாங்கிய வழக்குரைஞர்களைப் பச்சைத் தூசண வார்த்தைகளால் திட்டிப் பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.

1990 ஆண்டின் பின்பு வந்த விடயம் மிகவும் வித்தியாசமானது .                       வட-  கிழக்கில்  விடுதலைப்புலிகள் ராமராட்சியம்  செய்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள்,  யார் துன்பப்படுத்துவதாக சொல்லி  அகதி அந்தஸ்து கேட்கமுடியும்?

உள்ளுர தயங்கினாலும் வேறு வழி இல்லாது விடுதலைப்புலிகள் தங்களைக் கட்டாயமாகப் படையில் சேர்ப்பதாகவும், வேறு இயக்கமாக  இருப்பதால் தங்களைத் தேடி கொலை செய்யவிருப்பதாக புதிய கதைகள் எழுத வேண்டியிருந்தது. அது போன்ற உண்மையான சம்பவங்கள் பல இருந்தன என்பதும் மறுக்கமுடியாது.

வெளிநாடுகளில் ஈபி ஆர் எல் எஃப், ,  புளட் ஏன் இலங்கைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர்களாகவும்  ஏராளம் பேர் இருந்தார்கள். சில அகதிகளுக்கு  தமிழ் கட்சியினர் தங்கள் அங்கத்தினர் எனவும் கடிதமும் கொடுத்திருந்தார்கள். 

இக்காலம்தான்   தமிழ் இயக்கங்களும் மற்றும்  தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் பெருமைப் படக்கூடிய காலம்.   அது தமிழர்களுக்கு  ராஜேந்திர சோழன்  காலம்போல்,  வெளிநாட்டில் அகதி அந்தஸ்து கேட்பதற்கு மகோன்னதமான பொற்காலம்.

ஓடையில் ஓடும் தண்ணீரை அண்ணன் , தம்பி அள்ளிக் குடிப்பதுபோல் சில தென் இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களாக அகதி அந்தஸ்து பெற்றார்கள்.  அக்காலம் பலருக்கு வெற்றியையே தந்தது. பெரும்பாலானோர் தங்கள் கதைகளை  விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே எழுதினார்கள். அந்த விதத்தில் விடுதலைப்புலிகளின் சேவையை இன்றும் பலர் நினைவு கூருவார்கள்.  

பூமியில் ஒரு பகுதியில் விடியும்போது மறு பகுதியில் அஸ்தமனம் தோன்றுவதுபோல் எக்காலத்திலும் ஒரு பகுதியில்  ஒரு நன்மை ஏற்படும்போது மறு பகுதி   பாதிக்கப்படும். இது தவிர்க்க முடியாத விடயம்.

இங்குள்ள அகதிகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக  எழுதி, அகதி அந்தஸ்து பெறுவது  விடுதலைப்புலிகளுக்குப் பணம் சேர்க்கும் இங்குள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பிடிக்கவில்லை. அது நியாயமானதே.

 எழுதிய  கதைகளின் சாரம் வெளிவரும்போது , அவர்கள்,    “அண்ணை,  லோயர் அப்படி எழுதினால்தான் அகதி அந்தஸ்துக்  கிடைக்கும்  “  என்றார். அவர் சொன்னதைச் செய்தோம் என்று வழக்குரைஞர்களில் தலையில்  பழியைப் போடுவார்கள்.  அதற்குப் பாவ மன்னிப்பாக  அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு வீடு வீடாகச் சென்று   பணம் சேர்க்கும் குழுவில் இணைந்து இயங்கி தாங்களும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள்தான் எனத் தங்கள் கன்னிமையை  நிரூபித்தார்கள்.

ஆனால்,  இது விடுதலைப்புலி ஆதரவாளர்களை மட்டுமல்ல விடுதலைப்புலிகளையும் மிகவும் பாதித்தது . விடுதலைப்புலிகளின்  மனித உரிமை மீறல்களை அவுஸ்திரேலிய அரசு புரிந்து கொண்டதும் இலங்கை அரசுக்கு ஆதரவு பெருக்கியது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களது கவனத்திற்கு  இவை வந்தன. இங்குள்ள வழக்குரைஞர்கள் தமிழ்த் துரோகிகளாகவும் எட்டப்பன்களாகவும் பார்க்கப்பட்டார்கள்.  அவர்களுக்கு எதிராகப் பிரசாரங்கள் நடந்தது . அகதிகளுக்காக  வேலை செய்யாது,   காணிப் பத்திரம் மட்டும் எழுதும் வழக்குரைஞர்கள் மட்டும் விடுதலைப்புலி ஆதரவாளர்களாகவும் அவர்களின்  நெருங்கிய நண்பர்களாகவும் இயங்கினர்.

அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி தொடர்ச்சியாகப் பல காலம் ஆட்சியில் இருந்து, புதிதாக நாட்டுக்குள்  வருபவர்களை அரவணைத்துச் சென்றது.  அதற்கு முக்கிய காரணம் புதிதாக நாட்டுக்குள் வந்தவர்களது வாக்குகள் தொழிற்கட்சிக்கே சென்றது . அக்காலத்தில் குடிவரவு அமைச்சர், வெளி விவகார அமைச்சர் போன்றவர்களை இலகுவாக எங்களது அகதிகள் கழக  நிகழ்வுகளுக்கு அழைக்க முடியும். 

அடுத்து வரவிருக்கும்  அத்தியாயங்களில்  எனது தனிப்பட்ட அனுபவத்தை எழுதுகிறேன். 

—0—

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.